புதன், 28 செப்டம்பர், 2016

காதலின் சங்கீதம்





மலைகளின் பாதையை நதிகள் உருவாக்குகிறது, நனைந்து அலையும் இந்த உயிர் உன்னை அணைக்க ஓடி வருகிறது , சங்கீதத்தின் புலம்பல், காற்றின் நடு நடுங்குதலுடன் கண்ணீரைப் பெய்கிறது, வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், சிறகுகள், இலைகளின் பச்சை வாசம், பறக்கும் இதயம், எனினும் குளிரின் பற்கள்- கால்களை விரட்டுகிறது, கரைந்து ஒழுகும் பாதையை வானம் அடைகிறது. வெண்ணிற உயிரைப் பறித்துக் கொண்டு மழைக் கதவு, கடல்களின் வெளியை உடலுக்குள் விடுகிறது. சங்கீதம், நரம்பென விரிந்த மௌனத்தைப் பரப்புகிறது, காலம் வெடித்து மீண்டும் சேருமிடத்தில், நானோ நீயோ தோன்றிக் கொண்டேயிருக்கிறோம்.


பாலைவனம்

மரணத்தைக் கொண்டாடவென இருவரும் நதியின் இருளில், பாலைவனம் -கால்களின் கீழே அலைந்து கொண்டிருக்கிறது. நட்சத்திரங்களை திரும்பவும் நீருக்குள் விடுகிறாய், கால காலக் கடல் சேருமிடத்தில், வெளிகளை நிரப்பினோம், இந்த ஒட்டகத்தை, பனி பெய்யும் நகரங்களுக்கு இழுத்துச் செல்லாதே, அதன் கண்களைப் பார், முதுகில் மணல் வளர்ந்து மலைகளாய் முளைத்திருக்கிறது, மலைகளின் இடையில் நீயும் நானும் பயணிக்கிறோம். நம்மைப் பின் தொடரும் இவன் என்றும் திரும்ப வராத பறவைகளை நமக்குள் மிதக்க விடுகிறான்.

அலையும் கலைஞனே பார் - வெளியோ கண்களின் எல்லை, எல்லாமே நீ வாசித்து முடித்த பறையின் அதிர்வு. எனினும் - பாலைவனத்தை விபரித்து விட முடிவதில்லை. அதன் மணல் இந்த எழுத்துகளில் ஒட்டியிருக்கிறது, இதோ உனது கண் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுப் போகிறது.

பாடிக் கொண்டிருப்பவனின் குரல்

அழ அழ ஊறும் குறிப்புகளை உனது நரம்புகள் வாசித்துக் கொண்டிருக்கிறது. கனவின் ஒற்றைக் கைப்பிடியை நழுவவிட்டு இந்தப் பரந்த இருளில் முதலாவது கண்ணீரை ஒளிர விடுகிறேன். சுவடுகளில் வெப்பம் தளும்பிக் கொண்டிருக்கிறது. கரையில் இரண்டு சித்தார் வாசிப்பவர்கள் இந்த மணல் நதியை நெய்கின்றனர். நிலவை நிரப்பிக் கொண்டுவந்து கைகளில் தருகிறாய், போதை ஊறிடும் திராட்சைக் குலைகளை உன் குரல் ஞாபகப்படுத்துகிறது. அதோ - ஒரு பெண் இந்தப் பூமியில் வந்து கொண்டிருக்கிறாள், கனவே, திறந்துவிடு உன் கதவை.

மலரும் அறை

ஊதா நிறத்தில் ஒரு அறையைப் பரிசளித்தேன் .மஞ்சள் நிற மலர்களை அதற்குள் வளர்த்தாள்.அறைக்குள் நுழையும் கருப்பும் வெள்ளையுமான பூனைக் குட்டிகளைக் கண்டு பயந்தாள். வெண்ணிறப் படுக்கையில் இரண்டு மண்ணிறத் தடங்களைக் கால்கள் பரவுகிறது, கோபத்தில் சிவந்து முறைக்கிறாள். நிறங்கள் இருள்கிறது . சூரியனின் திசையில் பச்சை வாழைகள் குலையீனுகின்றன, போதை பொங்கும் பியரை வார்த்துக் கொண்டிருக்கிறேன்,சிகரெட் வெண்ணிறப் புகையையும் சாம்பலையும் கக்குகிறது .சிறிது சிவப்புக் கரைந்த பின், மயில் பற்றிய பாடலொன்றைப் பாடுகிறாள், நனைந்து ஒட்டியிருக்கும் பறவைக் குஞ்சின் சிறகை உலர்த்தி விடுகிறது அவளது குரல் - காலங்களைத் திறக்கும் வர்ணத்தைத் தேர்வு செய்யச் சொன்னேன். கண்களைப் பொத்திக் கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு மலரை எனக்குத் தருகிறாள். அந்த மலரை வளரவைக்கிறாள். கால
த்தின் கடலில் நுரைக்கும் மலர், நீல இதழ்.


நன்றி - ஆக்கட்டி (09)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக