புதன், 28 செப்டம்பர், 2016

தடை செய்யப்பட்ட புத்தகம்நண்பா ,
தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்
ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்
சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றி
நீ அறிந்து வைத்திருந்தால்
அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்
நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்
கவிஞனை நீ சந்தித்திருந்தால்
யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்
பாட்டிகள் ,எங்கேனும் இன்னுமிருந்தால்
இறந்து போன காதலிகளின் நினைவாக வைத்திருக்கும்
பரிசுப் பொருட்கள் எதையாவது
தற்செயலாய் நீ தொட நேர்ந்தால்
அலையும் கடலிலிருந்தோ அல்லது
அக் காட்டிலிருந்தோ,ஏதோ ஒரு வாசனை
உன்னை அதனுள் இழுத்திருந்தால்
அழிக்கப்பட்டவர்களின் நினைவாக நீ ஏற்றிய தீபத்தில்
யாரேனும் சிறு நீர் கழிப்பதை
'கைகளை மட்டும் கட்டியபடி நீ பார்த்திருந்தால்
நாளை ,உனது கைகளிலும் ஒரு தடை செய்யப்பட்ட புத்தகம்
இருக்கலாம் .அல்லது
நாளை கழித்து .


கிரிஷாந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக