புதன், 7 ஜூன், 2017

சுயசித்திரம் எனும் நீரில் கலங்கும் முகம்



கொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்கள் சலிப்பூட்டத் தொடங்கிவிட்டது என்ற  எண்ணம்  நீண்டகாலமாகவே மனதில்  கசிந்துகொண்டிருந்தது. நிலக் காட்சிகளே மனசை ஆசுவாசப்படுத்துவதாக இருக்கிறது. எங்கும் விரியும் நிறங்களும் உலகமும் காலின் கீழேயும் கண்ணின் முன்னேயும் விரிவது தான் எஞ்சியிருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனித முகங்களையிட்டு அஞ்சுகிறேன். அவற்றில் உள்ள வெறுப்பும் அன்பற்ற புன்னகையும் நச்சுப் புகையை முகத்திலெறிவது போலிருக்கிறது. ஒரு சில மனிதர்களதும் குழந்தைகளின் முகங்களும் மட்டுமே முகம் என்றால் நினைவில் மேலெழுந்து வருகிறது. 

இந்த நேரத்தில் தான் "ஞான் (Self portrait)" என்ற மலையாளத் திரைப்படத்தை பார்த்தேன். தமிழில் யாரும் அதை அறிமுகம் செய்ததாக வாசிக்கவில்லை என்பதால் மட்டுமே இதை எழுதுகிறேன்.



ஒரு கவிஞனின் சுதந்திர வேட்கை, அக்டிவிஸ்ட்டின் சமூக நெருக்கடி, காமத்தின் பெரும் அல்லாடுதல், பெண்களின் முடிவற்ற உருவங்கள் நிகழ்த்தும் ஆணின் இருப்பு, இருட்டில் கசிந்து கொண்டேயிருக்கும் பெண்களின் கண்ணீர், கவிதையின் ஒத்தடம், இயற்கையின் முடிவற்ற காட்சிகள், தனிமனித அகத்தின் சிக்கல்களும் சமூக விடுதலை என்ற கனவும் எதிர்கொள்ளும் முரண், மாந்திரீகமும் தர்க்கமும் கலந்து புரளும் வாழ்க்கையும் என்று படத்தின் பின் நினைத்துக்கொண்டேயிருக்க ஏராளம் இருந்ததன. 

கே டி என் கோட்டூர் என்ற இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த ஒருவரைத் தேடும் நவீன இளைஞன் ரவி சந்திரசேகரன் என்ற கதாபாத்திரம் கோட்டூரின் கதையைத் தேடி கோட்டூருக்குச்  செல்வதும் ஒரு நாடகப்பிரதியை தயாரிப்பதும் தான் ஒரு வரிக்கதை.

ஆனால் காலமும் நிலமும் மாற மாற கதைகள் விரியும் அற்புதம் ரஞ்சித்தால் திரையில் சாத்தியமாகியிருக்கிறது. டி. பி. ரஜீவனின் " கே டி என் கோட்டூர் எழுதும் ஜீவிதம் " என்ற மலையாள நாவலை அடிப்படியாகக் கொண்டே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் நாவலுக்கேயுண்டான அக தரிசனமும் மௌனமும் வாய்ந்த பகுதிகளை வெட்டி எடுக்கலாம்.  சில பகுதிகளைக் கீழே தருகிறேன்.



நகுலன் என்ற கதாபாத்திரம். கோட்டூர் பிறந்தவுடன்  கோட்டூரின் தாய்க்கு முலைப்பால் சுரக்கவில்லை. ஆகவே அந்த ஊரிலிருந்த குறத்தி ஒருவரிடம் முலைப்பால் குடிக்க கொடுக்கப்படுகிறார். குறத்திக்கு இன்னொரு மகனுண்டு, அது தான் நகுலன். இருவரும் அடுத்தடுத்த வயதுள்ளவர்கள். சிறுவயதுமுதல் ஒன்றாகவே திரிகிறார்கள். அவர்களின் சினேகம் வளரும் விதம் அப்படியானது. ஒரே தாயின் முலையில் பால் குடித்தவர்கள். நதியும் வயலுமாய் ஓடித்திரிந்து  விளையாடுகிறார்கள். கோட்டூரின் தகப்பனுக்கும் குறத்திக்குமிடையில் முன்னேரே தொடர்பிருக்கிறது, இருவருக்கும் பிறந்தவன் தான் நகுலன். கோட்டூரின் தகப்பன் இறந்த போது குறத்தி மரணவீட்டில் தலைவிரி கோலமாய் கிடந்தது அழுகிறாள். அதன் போது உறவுக்காரரினால் தலையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று மகனும் தாயுமாய் தள்ளிவிடப்படுகிறார்கள். பிறகவர்களின் வீடும் எரிக்கப்படுகிறது. அதன் பின் வளர்ந்து இளைஞனாகும் வரையிலும் நகுலனும் கோட்டூரும் சந்தித்துக் கொள்ளவில்லை. வளர்ந்த நகுலனை டவுனில் சென்று படித்துவிட்டு சமூகத்தை மாற்ற நினைக்கும் இளைஞனான கோட்டூர் வழியில் சந்திக்கிறார். தனக்கு முலைப்பால் தந்த தாயைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார். அவர் மனம் பேதலித்த நிலையில் வீட்டிலிருக்கிறார். அவரைக் காணும் பொழுது " என்னை உங்களுக்குத் தெரிகிறதா?" என்று கோட்டூர் கேட்கிறார். அதற்கு குறத்தி தகப்பனிடம் முன்னொருதடவை அவள் சொல்லிய பதிலான," உங்களைத் தெரியும், ஆனால் அதை மற்றவர்களிடம் சொல்ல முடியாது" என்று சொல்கிறாள். 

இடையில் ஊரில் இருந்த பணக்காரன் ஒருவன் ஆட்களை வைத்து கோட்டூருக்கு அடிக்க வைக்க முனைந்த போது, இடைவெளியில் வந்து நகுலன் கோட்டூரைச் சந்தித்து அழைத்துச் செல்கிறான். "உனக்கெப்படி அவர்கள் என்னை அடிக்க வந்தது தெரியுமென்று" கேட்கும் போது  ' நான் முக்காலமும் உணர்ந்த குறத்தியின் மகனல்லே ' என்று கூறிச் சிரிப்பான். பின்னர் கோட்டூர் உறவு வைத்திருந்த ஜானு என்ற தாழ்த்தப்பட்ட  பெண்ணுக்கு கோட்டூரினுடன் இருந்த உறவில் குழந்தை கருக்கொள்கிறது. கோட்டூர் ஊரில் இல்லாத நேரத்தில் நடக்கும் பொழுது. தாய்க்கு நிகராக இருந்து கோட்டூரினை வளர்த்த பெண் அந்த கர்ப்பத்தை கலைக்கும் ஏற்பாட்டினை செய்கிறாள். அந்த காட்சி மிகவும் தீவிரமானது. அந்தப் பெரும் வீட்டில்  கடும் இருட்டின் மௌனம் இடிந்து விழ ஜானு கதறும் சத்தம் ஒரு மாபெரும் கேவல். பின் அவள் வீட்டை நீங்கி வெளியில் சென்று குளத்தடியில் விழும்போது நகுலன் தான் அவளைக் கொண்டு சென்று மனைவியாக்குவான். பின்னர் கோட்டூர் திரும்பி வந்த பொழுது மனம் பேதலித்த குறத்திக்கு பக்கத்தில் வைத்து ஜானு நடந்ததைச் சொல்லுவாள் அதற்குக் கோட்டூர் " எல்லா மகாபாவமும் என்னால் தான் உண்டானது" என்று சொல்ல ஜானு " அப்படி அல்ல, எங்கிருந்தோ ஒருவர் தீர்மானிக்க எல்லாம் நடக்கிறது என்று சொல்வாள். அதற்கு மனம் பேதலித்த குறத்தி " எல்லாமே முட்டாள்களின் நாடகம். அவ்வளவு தான் மக்களே" என்பாள்.

பின்னர் கோட்டூரை வளர்த்த பெண்ணுடன் இறுதி வாக்குவாதத்தில் கோட்டூர் நிகழ்ந்தவற்றுக்கு நீ தான் பொறுப்பு என்பதைச் சொல்லுவான். தனது சொத்துக்களையெல்லாம் நகுலனுக்கு எழுதுவதாக கோட்டூர் அறிவித்த வேளை அந்த பெண் கேட்பதற்கு " நான் என் அப்பன் செய்த பாவங்களையும் தன்னுடைய  பாவங்களையும் போக்கவே இதைச் செய்வதாகவும். இந்த வீட்டின் இருட்டில் உள்ள பாவங்களெல்லாம் நீங்களே பாதுக்காக்கிறீர்கள் என்றும் நகுலன் தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்தவன் அவனுக்குச் சொத்தில் உரிமை உண்டெனவும் கூறுவான். 



இங்கு கதையை நான் கத்தரித்து கத்தரித்து நகுலனின் கதையை மட்டுமே தந்திருக்கிறேன். திரைக்கதை நிகழ்காலத்துக்கு கடந்தகாலத்துக்குமாக நகர்ந்து மீண்டபடியிருக்கும் தொடர்ச்சியான ஒரு நிகழ்த்துகையாக இருக்கிறது. இதனை வெளிப்படுத்திய முறையிலும் கதாபாத்திரங்களின் தன்மையிலும் " நூற்றாண்டுகளின் தனிமை " நாவலின் இயல்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு கோட்டூர் இறுதியாக மணம் முடிக்கும் பெண் பார்வையற்றவள். அவள் சொல்லுவாள் என்னால் பார்க்க முடியும். என்னுடைய பார்வை என்பது அறிவு. அதை என்னால் விளக்க முடியாதென்று.



நகுலன் ஊரிற்கு பக்கத்தில் உள்ள கிணற்றில் விழுந்து விட்டதாக அவள் சொல்லும் போது நகுலன் கைது செய்யப்படுகிறான். அப்படி காட்சிகள் குறியீடுகளாக அவளுக்குத் தெரிகிறது. திருமணம் முடிந்து முதல் முதலாக வீட்டுக்கு வரும்போது அண்ணார்ந்து மேல் மாடியை பார்த்து சிரிப்பாள். கோட்டூர் ஏன் அப்படி சிரித்தாய் என்று கேட்பார். அங்கே உங்களது அம்மாவையும் அப்பாவையும் கண்டேன், அவர்கள் என்னை வாழ்த்தினார்கள் என்பாள். கோட்டூர் சிரிப்பார். நீங்கள் நம்பவில்லையா, என்னால் பார்க்க முடியும் என்று அவள் சொல்லுவாள். அவளுக்கு ஒருவித மாய சக்தியுண்டென்பது போன்ற தோற்றமிருக்கும். இதில் அசாத்தியமான வகையில் எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் இயக்குனர் ரஞ்சித் அவற்றை அதன் போக்கில் விட்டுவிடுகிறார். இதனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனளவில் இருட்டில் தனித்திருக்கும் ஆழ் கிணறுகளாகவும்  அதில் விழும் கற்களாக நினைவுகளையும் மாற்றுகிறது. 

இறுதியாக கோட்டூர் வீட்டை விட்டு வெளியேற முதல் இரண்டு காட்சிகளைச் சொல்லி முடிக்கிறேன். 

ஒன்று, தாய்க்கு நிகராக தன்னை வளர்த்த பெண்ணுடன் கோட்டூர் விவாதித்த இரவில் அந்தப் பெண் ஜானுவுக்கு கருக்கலைத்த இடத்திற்குச் சென்று அதனைத் தொட்டுப்பார்க்கிறார் கையெல்லாம் இரத்தம் பெருகி நிலத்திலிருந்து இரத்தம் பீறிடுவது போன்று பிரமையேற்படுகிறது. அந்த இடத்தில் அவர் இறந்து போகிறார். கோட்டூர் அவரது உடலைக் கூட பார்க்க வராமல் அறைக்குள் நின்று கொண்டிருப்பார். அப்பொழுது கண்ணாடியில் அந்தப் பெண்ணின் ஆத்மா பேசுவது போன்றொரு காட்சி, அதில் அந்தப் பெண் தனது தரப்பைச் சொல்லுவாள்." உனக்கு எந்தச் சங்கடமும் வேண்டாம், மரணத்தின் மூலம் நான் சுதந்திரமாகி விட்டேன். நீ சொன்னது போல இந்த வீட்டின் இருட்டை நான் பாதுகாத்தேன், ஆனால் அந்த இருட்டில் தான் எனது வாழ்க்கையும்  சங்கிலியிடப்பட்டிருந்தது. உருவமோ நிழலோ இல்லாத,  வராந்தாக்களின் மூலையில் இருட்டில் வாழும் தாய்மார்களை பற்றி நீங்கள் என்றாவது புரிந்து கொண்டீர்களா? மகன்களே, அவர்களின் கண்ணீரைப் பார்த்ததுண்டா நீங்கள்? அவர்களுடைய அழுகைகள், வெளிச்சம் விழுகின்ற அந்த வீடுகளில் அவை இல்லை. ஆண்களின் பாவங்கள் அவர்கள் உடம்பிலும் மனசிலும் அந்தக் காயங்கள் அவர்களை பாதித்ததும் இருக்கிறது. உன்னாலும் அதனை மாற்ற முடியாமல் போகலாம். ஏனென்றால், நீ இன்னொன்றின்  தொடர்ச்சி. மூன்று காலங்களிலும் நீ இன்னொன்றின் தொடர்ச்சி. நீ தொடர்ச்சி மட்டுமே. " 



இரண்டாவது, இறுதிக் காட்சியில், பார்வையில்லாத தன் மனைவியுடன் கோட்டூர் உடலுறவு கொண்டு முடித்த வேளை அவளின் முகத்தில் ஜானுவையும் குறத்தியையும் தாயிற்கிணையான அந்தப்பெண்ணையும் காண்பான். அவன் திடுக்கிட்டெழுந்து ஓடி வெளியில் வருவான். வியர்த்து நிற்கும் அவனிடம் அவனது தந்தையின் ஆன்மா நெருங்கி வரும், "  அப்பா, தவறான செயல்களை மனதில் நினைத்து, சுயமைதுனம் செய்து கழிந்த என் இளமை, கண்களை மூடி காம சுகத்தை அனுபவித்தது, இப்பொழுதுள்ள முகத்தை மறக்க வேறொரு முகத்தை நினைத்து, என்னுடைய இளமை காமத்தின் பாவத்தில் கழிந்து போனது. இப்பொழுது மனசிலுள்ள கெட்டது அழிஞ்சு, ரூபங்கள் கண்ணில் தெளிவாகத் தெரியும் பொழுது, மோகத்தின் சுகம், அப்பா, அதனால் தான் இந்த வீடெனக்கு நரகத்தைப் போலிருக்கிறது. துன்புறுத்துகிறது. உங்களிடமிருந்து, உங்களின் விந்திலிருந்து,  பரம்பரை பரப்பாரையான தந்தைகளின் நோயை நான் பெற்றிருக்கிறேன். காலம் எனக்கு மீளப் பிறப்பதற்கொரு வாய்ப்பைத் தந்திருக்கிறது. பால்யத்தில் கண்டது போலே, தெளிந்த பகல்களிலே வானத்தில் பயணம், மரக்கிளைகளில் தொட்டு ஆகாயத்தை பிடித்து, மேகத்தை சீவி விட்டு இன்னொரு கிளைக்குத் தாவி... என்ற என்னுடைய சொப்பனங்கள் எனக்குத் திரும்பவும் தேவை. எனக்கு இந்த வீட்டின் சுவர்களுக்குள் அலையவும், விளக்கின் வெளிச்சத்தின் கீழ் சாகவும் விருப்பமில்லை. என்னை யாத்திரைக்கு விடுங்கள்"

இந்த காட்சிகளை துண்டங்களாக்கி தொகுத்திருக்கிறேன். படத்தில் இன்னும் விரிவாக வரும்.  பின்னனியில் அழுதுகொண்டேயிருக்கும் தீவிரப்படுத்திக்கொண்டேயிருக்கும் வயலின் இசையும் இடையிடையில் வரும் சாஸ்திரிய சங்கீதமும், கவிதைப் பாடல்களும் இன்னொரு வகையான அனுபவத்தை தந்தன.



விடுதலை அனுபவம் என்பது என்ன?, ஒரு பெண்ணுக்கு மரணத்தில் கிடைக்கிறது இன்னொருத்திக்கு மனம் பேதலித்து விடுகிறது. ஒருத்தி கைவிடப்படுகிறாள், இன்னொருத்தி குருட்டுக் கண்களுடன் தனித்து விடப்படுகிறாள். ஆண் வீட்டை விட்டு வெளியேறுதலையே விடுதலை என்கிறான். தன்னால் இந்தச் சுவர்களுக்குள் அலைந்துகொண்டிருக்க முடியாது. இந்த விளக்கின் ஒளியில் ஒரு பூச்சியைப் போல மடிய முடியாதென்று சொல்கிறான். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நாம் இதுபோன்ற அலைந்துகொண்டேயிருக்கும் முகங்களை நீரில் விழுத்திப் பார்த்துக்கொண்டேயிருக்கப் போகிறோம். தன்னை அறிதலென்பது என்ன ? தானே தன்னை அழிப்பது மட்டும் தானா? 

இதனை எழுதிக்கொண்டிருக்கும் போது அச்சமும் தெளிவற்றதுமான அந்த ஆயிரக்கணக்கான முகங்களாலான உடலை எனக்குள் உணர்கிறேன். 

கிரிஷாந்