சனி, 12 ஜனவரி, 2019

கைப்பிடியளவு வெளிச்சத்தில் ஒரு மேய்ச்சல் நிலம்




விரிந்து பெருகிக்கொண்டேயிருக்கும் புற்களின் நிலம் ஓலான் புலாக். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் மாவோவின் கலாசார புரட்சியின் விதைகள் ஓலான் புலாக் எனும் மங்கோலிய நாடோடி நிலத்திலும் விழுந்தன. அந்த விதைகள் நிலத்திற்கொவ்வாத விதைகள்.  பனி பெய்யும் ராத்திரிகளிலும், ஓநாய்களும் மான்களும் வாழும் காடுகளிலும் நிகழும் இந்த நாடோடி வாழ்க்கையை மாவோவின் புரட்சி என்ன செய்தது என்று எழுத்தில் பதிவு செய்த நகரும் காட்சி ஆவணம் தான் ஓநாய் குலச்சின்னம். 

பில்ஜி, அந்த நாடோடிகளில் மூத்த கிழவர், அந்த நிலத்தின் வாழும் வேட்கையின் ஞானம் அவருடையது. மங்கோலிய நாடோடியினம் ஆட்டையோ அல்லது குதிரையையோ தாக்கவரும் ஓநாய்க் கூட்டத்துடன் உக்கிரமாக மோதுகிறார்கள்; என்றாலும், அதே நேரத்தில் ஓநாய்கள் தங்களைக் காப்பதற்காக டென்ஞ்சர் கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் என்று நம்புகிறார்கள். மங்கோலியர்கள் இறந்தபின்பு அவர்களைப் புதைக்காமல் ஓநாய்கள் தின்பதற்காக அடர்ந்த புல்வெளிகளில் சடலங்கள் வைக்கப்படுகின்றன. ஓநாய்கள் அந்தச் சடலத்தைத் தின்பதன் வழியேதான் அதற்குரிய ஆன்மா டென்ஞ்சர் கடவுளை அடைய முடியுமென அம்மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். உலகில் எல்லாமும் மற்றொன்றுடன் பின்னியிணைந்துள்ளது. வாழ்வின் முடிவில்லாத அழகே அந்தப் பிணைதலும் விலகலும் உருவாக்குவது தான். இந்தப் பேரியக்கத்தின் பிரமாண்டத்தை எளிய ஒற்றைப்படையான விவாதத்திற்கிடமற்ற அரசியல் போக்கு காலத்திற்குக் காலம் அழித்து வருகிறது. பூமியை அதனியல்பிலிருந்து நீக்கிவருவது தான் நவீன அரசியல், அதன் வளங்களை தனக்குத் தனக்கென்று மொத்தமும் ஆளும் மனிதப் பேராசைகளின் காலத்தில் இந்த நாடோடி மக்களின் கதை நமக்கு வாழ்வை  ஒரே கணத்தில் பிரமாண்ட வெளியாகவும் அதே கணத்தில் கைக்குள் பொத்திவைத்திருக்கும் பனித்துளியாகவும் உணரவைக்கிறது.

சென் ஜென், முதலாளித்துவ மனநிலையிலிருக்கும் இளைஞர்களை கிராமங்களை நோக்கி அனுப்பி மக்களின் வாழ்வை அறிந்துக்கொள்ளச் செய்யும் நடவடிக்கையின் ஒருபகுதியாக ஓலான் புலாக்கிற்கு வரும் இளைஞர். அவன் பில்ஜிக்கு நெருக்கமாகிறான். அவனுடைய இதயம் அந்த முதுகிழவரின் இதயத்துடிப்புடன் இணைந்துகொள்கிறது, பின் அதுவொரு ஓநாயின் இதயச் சூடாக மாறாமல் எப்படியிருக்கமுடியும். முதுகிழவர் ஒரு ஓநாய். அவருடைய மூளையும் இதயமும் தான் வாழும் கூட்டத்தையும் வாழ்வியலையும்  காப்பாற்றுவதிலேயே துடிக்கிறது. இவ்விளைஞன் அந்த ஓநாய்களின் நுட்பங்களை வாழ்வின் தந்திரங்களை கிழவரிடமிருந்து அறிந்துகொண்டு ஒநாய்க்குட்டியொன்றை வளர்க்குமளவிற்கு செல்கிறான். ஆனால் இயற்கையில் எல்லாம் சேர்ந்திருக்க முடியாது; ஒநாயையும் மனிதரையும் போல. 

கிழவருக்கும் இளைஞனுக்கும் இடையில் ஓலான்புலாக் வெளி பனியாகவும் புல்லாகவும்  மாறி மாறி முளைக்கிறது. தன்னைத்  திருப்பித் திருப்பிப் போடும் ஒரு நீலத் திமிங்கலத்தைப் போல அந்த நிலம் பிரமாண்டமாக உருள்கிறது. 

ஓநாய்களின் கூட்டத்தையும், அதன் தந்திரம் நிறைந்த வேட்டை முறையையும் கிழவர் சென் ஜென்னுக்குக் காட்டுகிறார். ஒரு நள்ளிரவில் அவர்கள் அதனை ஒரு ஓநாயின் நிதானத்துடன் பார்க்கிறார்கள். ஒரு இனம் தான் பிழைப்பதற்காக நிகழ்த்தும் இயற்கை விதிகளையும் அதன் அறங்களையும் அது தானாகவே தான் உருவாக்கிக் கொள்கிறது. ஓநாய்களும் அப்படித்தான். மான்களை ஓநாய்கள் வேட்டையாடுகின்றன. அதில் பொறிகள் மூலம் மனிதர்களும் அதனை அடைகிறார்கள். பின்னொரு சந்தர்ப்பத்தில் பெருகும் ஓநாய்களை மனிதர்கள் வேட்டையாடுவதனுடாக அந்த நிலத்தின் சமநிலையை பேணுகின்றனர். இதுவொரு சக்கரம். இயற்கையிலிருந்து மனிதன் தனியாக மாறி நிலைத்திருக்கும் கிராமங்களையும் வாழ்க்கையையும் ஆரம்பிக்க முன்னர் இருந்த கடைசி வாழ்தல் முறை நாடோடி வாழ்க்கை. முன்முடிவுள்ள, உரையாடலுக்குத் தயாரில்லாத, வாழ்வின் முழுமை பற்றிய நோக்கில்லாத அரசியல் நகர்வுகளுக்கும் இந்தப் பேரியக்கத்துடன் அலைந்து மனிதர்கள் வாழ்ந்து கற்றுக்கொள்ளும் ஞானத்திற்குமிடையிலான மோதலே இந்த நாவல். 

நாம் எப்பொழுதும் உட் சுருங்கியவர்களாகச் சிந்திக்கிறோம், இயற்கை முடிவில்லாமல் விரிந்துகொண்டே செல்கிறது. நாம், நமது தரப்பை மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறோம், இந்த பூமி எல்லாவற்றிற்கும் மற்றொன்றின் இருப்பின் மீதான தொடர்பை நமக்கு முன் நிகழ்த்திக்காட்டியபடியிருக்கிறது. இந்த வினோதமான உறவைப் புரிந்துகொள்வது தான் அரசியல் செயல்பாடு. நாம் நமது நியாயங்களிலிருந்து மட்டும் அறம் என்ற ஒன்றை உருவாக்கமுடியாது. இங்கு எல்லா அறங்களுமே கூட்டுவாழ்வின் நிமித்தம் உருவாக்கிக்கொண்ட கற்பிதங்கள் தான். ஆனால் அவையும் நமக்குத் தேவை. அதனைக் காலத்துக்கு காலம் மனித அறிவு மாற்றியபடியிருக்கிறது. அந்த அறங்களின் இயல்பு தான் அரசியல் பார்வைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.   

மனிதருடன் சேர்ந்து வாழமுடியாத ஓநாயுடன் சென் ஜென் உருவாக்க நினைக்கும் பிணைப்பைத் தான் ஒவ்வொரு முறையும் மனிதர்கள் உருவாக்க நினைக்கிறார்கள். மனிதரை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த சிந்தனைகள் அழிவிலேயே சென்று முடிகிறது. நாவலின் இன்னொரு முக்கியமான பகுதி இது தான். ஓநாயை சென் ஜென் யாருக்கும் தெரியாமல் வளர்க்க நினைக்கிறான். தன்னுடைய இருப்பிடத்தில் அதனை வளர்க்க ஆரம்பிக்கிறான். குட்டியான ஓநாயை  ஒரு நாயைப்போல கருதுகிறான். ஆனால் விலங்குகள் அதனியல்பில் தான் வளரும். எனது அனுபவத்தில் வீட்டில் நாய்க்குட்டியொன்றை வளர்த்த காலங்களைத்  திரும்பிப் பார்க்கிறேன். அது எதையோ ஒன்றைக் கற்பனையில் உருவாக்கிக்கொண்டு தீவிரமாக மோதிக்கொண்டிருக்கும். பாய்ந்து நகரும், பின்வாங்கும், கால்களைக் கீறி, முன்னே பாய்ந்து தாக்கிவிட்டு மறுபடியும் பதுங்கும். அதுவொரு வளர்ப்பு விலங்காக மனிதருடன் அலைந்தாலும் அதன் ஆதி நினைவில் அதுவொரு வேட்டை விலங்கு. அதற்கு யாரும் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. அதுவொரு உயிரியல்பு. அது போன்று ஓநாய் இன்னும் நினைவில் விலங்கு தான். அதனை வளர்க்க நினைக்கும் சென் ஜென் ஒரு கட்டத்திற்குப் பின் அது குரலெடுத்து ஊளையிடும் நாள் வரை அதனை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் ஓநாய் ஊளையிடும் நாளில் கலவரமாகி விடுகிறது. ஒநாய்க் கூட்டம் அதனை கேட்டுவிடுகிறது. ஓநாயை வெளியேற்ற வேண்டியேற்படுகிறது.   

'காட்சியின்பம்' என்ற வார்த்தையின் மொழியர்த்தத்தை இந்த நாவல் தான் துலக்கி நெட்டுயிர்க்கவைத்திருக்கிறது. அதன் எளிய கதை இவ்வளவு தான். அந்த நிலத்தில் நாடோடிகள் அலைகிறார்கள், அலைவது தான் அந்த நிலத்தின் உயிர்த்தன்மை - வாழும் ஞானம். நிற்பது எதுவும் நிலைக்காது. அப்படியான அந்த நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் திட்டம் அமுலாகிறது. நாடோடிகள் தம் அலைச்சல் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இந்தக் கதையை பக்கத்துக்குப்பக்கம் விபரித்திருக்கும் முறை தான் இந்த நாவலை அழியாத மாபெரும் சித்திரமாய் மானுட ஞாபகத்தில் மாற்றியிருக்கிறது. அந்த மண்ணின் ஒவ்வொரு புல்லையும் முழங்கால் வரைக்கும் உணரலாம், வேட்டையிரவுகளில் பனியில் சிதறும் இரத்தத்தின் வெப்பத்தை பனியாகவிருந்து தொட்டுப்பார்க்கலாம், வாசித்துக்கொண்டு நகரும்போது நமது வீட்டின் ஏதோவொரு மூலையில் ஒநாய்க்குட்டியொன்று வளர்ந்துகொண்டிருக்கும் மணத்தை நாசியுணரலாம்.  நுட்பமான விபரிப்புகளினாலும் கவித்துவ நடையை அடைந்திருக்கும் மொழியினாலும்  புரண்டு புரண்டு மடியில் படுத்திருக்கும் ஒரு ஒநாய்க்குட்டியாகவே நாவலை மாற்றியிருக்கிறார் ஜியாங் ரோங்.

ஒற்றைப்படையான நம்பிக்கைகளைக் கொண்ட மாவோவின் கலாசாரப் புரட்சி எப்படி நாடோடிகள் ஞானத்தையும் நிலத்தில் மண்போலவிருந்த அவர்களின் இருப்பையும் அலைத்து விரட்டியதோ அது போன்று தான் எப்பொழுதும் ஒற்றை நம்பிக்கைகள் மனிதக் குழுக்களைச் சிதைக்கின்றன. ஓநாய் குலச்சின்னம் என்ற படிமம் இனக்குழுவிற்குரிய அடையாளம், அந்த வாழ்க்கையின் மைய இழை. அது அறும் பொழுது எப்படி அந்த நிலமே உருவழிந்து மீள முடியாத சிதைவிற்குள் செல்கின்றதென்பதை ஜியாங் ரோங் கதையாக்கினார்.  ஓநாய்கள் மான்களை வேட்டையாடுகின்றன. இதனால் மான்களின் இனப்பெருக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மான்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளதால் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. புல்வெளிகள் காப்பாற்றப்படுவதினால் ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றை நம்பிவாழும் மனித சமூகம் பிழைக்கிறது. இதுவொரு தொடர்ச்சி. இயற்கையின் இந்த ஒன்றுடன் மற்றொன்றுடனான தொடர்பென்பது எளிய தர்க்கமல்ல.அதுவொரு புதிர்வழிப்பாதை.

இயற்கையைப் பற்றிய அக்கறை கொஞ்சமுமில்லாமல், அதனை பெருமளவில் நுகர்ந்துகொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் சந்ததிகள் நாம். கண்முன்னே ஒரு பேரழிவை ஏன் ஒருவர் இவ்வளவு விரிவாக சொல்லியிருக்கிறார் என்றால் அது நமக்காகத் தான், நாம் அசலில் குதிரைகளின் வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான கரட்டை கட்டி வைத்திருக்கிறார்கள். நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். கலையும் இலக்கியமும் இதிலிருந்து வாழ்வை வேறொரு பரிமாணத்திலிருந்து அணுகுகிறது. மானுட வாழ்விற்கான எல்லா ஞானமும் ஏற்கனவே பரிமாறப்பட்டு விட்டது. அதனை அந்ததந்த காலத்திற்கும் நிலத்திற்கும் மனிதர்களுக்குமேற்ப கலையும் இலக்கியமும் உரையாட ஆரம்பிக்கிறது. அதனாலேயே எல்லா அரசியல் தத்துவங்களையும் விட கலையிலக்கியத்தின் மையம் மானுட விடுதலையின் குரலாய் மட்டுமல்ல இந்த பூமியில் உள்ள வாழும் அனைத்தின்  குரலாயுமிருக்கிறது. 



கலையும் இலக்கியமும் அழிவை மறுபடியும் மறுபடியும்  பேசுவதென்பது அழிவு எவ்வளவு கொடூரமானதென்பதை வன்முறையின் நிழல் படிந்த மானுட மனங்களிற்கு திரும்பத் திரும்பிச் சொல்வதற்காக.  அன்பை அதன் எல்லாப் புதிர் நிறைந்த பாதைகளிலும் உடனழைத்துச் செல்வதென்பது  நாம் எவ்வளவுக்கு அன்பின் கைப்பிடியளவு வெளிச்சத்தை நம்பி மட்டுமே வாழ்கிறோம் என்பதை காட்டுவதற்காக.

கிரிசாந்

(புதிய சொல் 07)