புதன், 28 டிசம்பர், 2016

உருக்கும் நெருப்பின் கண்ணீர்



வரலாற்றின் பேராற்றில் லட்சம் கவிஞர்கள் வரலாம் போகலாம் . எஞ்சப்போவது சில வாழ்க்கைகள் தான்  , சில வாழ்க்கைகளிற்கு அர்த்தம் புதிரானது . ஏன் இந்த முட்டாள் வீணாகச்செத்துப்போனான் ? என்று சாதாரண மனத்துக் தோன்றிக்கொண்டேயிருக்கும். சில்வியா பிளாத்தும் , வின்சண்ட் வான்கோவும் சிவரமணியும் சாதாரண மனத்துக்கு  பைத்தியக்காரர்கள்தான். உண்மையில் அவர்கள் தங்களைக்கொன்று கொள்ளவில்லை. தங்களை அவர்கள் ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டார்கள். அவர்களுடைய உயிர்  இந்த உலகத்தின் மடமைகளை எதிர்கொண்டு விட்டது தூரிகைத்   தீற்றலாகவும் , நெருப்பெரியும் வரிகளாகவும்  அவை வாழ்வு பெற்றுவிட்டன.  இதில் இன்னொரு வகை உண்டு . உண்மையில் அவர்கள் கொல்லப் பட்டு  விடுவார்கள் என்று தெரிந்தும் , எதிர்த்து நிற்பது பாரதியைப்போல் ,  எஸ்போசைப்போல். இந்த மனங்களைக் காலம் தான் வாழும் காலத்தில் புரிந்து கொண்டதேயில்லை. இவர்கள் எல்லோரும் மனிதப்பெருக்கின் நெருப்பு நதிகள் .

எஸ்போஸ்


என்னுடைய தலைமுறைக்கும் எனக்கடுத்த தலைமுறைகளுக்கும் இருக்கப்போகின்ற பிரச்சினைகளைப்பற்றி ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன்.  சேரனைப்பற்றிய குறிப்பில்  அதன் பிரச்சாரமான மொழியைப்பற்றி  குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடுகள்  சரியானவையே . எப்பொழுதும் அது யார் செத்தாலும் அழுதது. ஆனால் அது கவிதையா இல்லையா என்பதுதான் பிரச்சினை. அதனை என்னால் தர்க்க ரீதியாக விளங்கப்படுத்த முடியவில்லை . எது கவிதை எது கவிதையில்லை என்பதை . உதாரணங்களால் தான் காட்ட
முடியும். பா. அகிலனும் , எஸ்போசும் , நட்சத்திரன் செவ்விந்தியனும் தான் எனக்கு உதாரணங்கள். வாசித்தே நீங்கள் வேறுபாடுகளை உணர முடியும்.

உலகின் மகத்தான கவிஞர்களில் பலரும் ,  எரிந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமில்லாதது . அவர்களுடைய குரல் எப்பொழுதும் ஒன்றுதான் .  அது அதிகாரத்திற்கு எதிரானது .  எஸ் போஸ் தமிழில் மிகவும் நூதனமான இன்னுமொரு மொழியடுக்கைத்திறந்தவர் .

பிரச்சாரத்திற்கும் கலைக்கும் உள்ள இடைவெளியை அவரது கவிதைகள் கடந்துவிடுகின்றன , .ஒவ்வொரு தடவையும் சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம் என்ற  அந்தக் கவிதையை வாசிக்கும் போதெல்லாம்  , மூச்சு நின்றும்  கண்ணீர் கெட்டித்தும் உறைந்துவிடுவதையும் இப்பொழுதுவரை தடுக்க முடியவில்லை.

சூரியனை கவர்ந்து சென்ற மிருகம்

-----------------------------------

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்ன இழுத்துச்சென்றுவிட்டது
கடைசியாக நான் அவழுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களின் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது
கடைசிவரை நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்கு சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றை காணவில்லை
என்ன ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்.
இனிமேல்
எனது சித்திரவதை காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்த முடியாது
எனவே தோழர்களே
நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவா அஞ்சிய ஒருகாலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கயைற்ற இந்த வார்த்தைகள்
நான் அவளுக்கு பரிசளிப்பது
இதுவே முதற்தடவை எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டர்கள்
மூளைய நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லலை.
_________________________________________

இவ்வளவு உக்கிரமாக  இந்தத்தருணங்களைப் பதிவு செய்த கவிதை தமிழிலேயே இல்லை எனலாம்.  குறிப்பாக ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில்  மொழியை , அதன் காட்சியமைப்பை , உணர்வுத்தளத்தை   இவ்வளவு நேர்த்தியாகக் கையாண்டதோர் கவிதையை நான் படித்ததேயில்லை . அதுதான் எஸ்போசின் தனித்துவம் . நெருங்கிச்செல்ல நெருங்கிச்செல்ல  ”மொழி”,  உறைந்த மெழுகைப்போல  நித்தியமான இரண்டு கண்ணீர்
துளியைப்போல வரலாற்றில் மாறிவிட்டதை இந்தக்கவிதையைப்படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் உணர்கிறேன்.

யுத்தம் அலைச்சலின் வெளி அதில் வாழ்ந்து கொண்டிருப்பதும்  பைத்தியத்தின் உச்சம் . நாளை நானிருப்பேனா ? , நாமிருப்போமா ? , யாருமிருப்போமா ?  என்ற நிச்சயமற்ற அந்த நாட்களின்  உள்ளுணர்வுகளை  எனக்கு ஓரளவு கடத்தியது எஸ்போசின் கவிதை வரிகள். விந்தையான படிமங்களும் இதயத்தை நோக்கி உரையாடும் மொழியும் கண்ணீரைத் தேக்கிவைத்த உடலின் தொடுகையும் எப்படியிருக்குமோ  அப்படி என்முன்  எஸ்போஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

எஸ்போசின் மொழி ஒரு பழஞ்சுரங்கத்தைப்போன்றது , அதற்குளிருந்து  மந்திரம் நிறைந்த வார்த்தைகளை எடுத்துவைத்து  ஓர் பிரமாண்டமான வாழ்க்கையை அவர் நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறார்.

பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல்

அழிவு காலத்தில் நீ புலம்பித் தீர்க்கிறாய்
என்றாலும்
கண்களைக் குருடாக்கிக் கொண்டு
நிலவையும் நட்சத்திரங்களையும்
தனது தீராத வலியால் அணைத்தபடி
அழிவுகாலம் தொடர்கிறது
உனக்கும் எனக்குமாக நாங்கள் விதைத்த
நெல்மணிகளை
உனக்கு மட்டுமே பூர்விகமான குடிசையை
நூறு வருடங்களின் பின்பும் எஞ்சியிருந்த மிகப் பழைய
தங்க வளையல்களை
தீராத எல்லைச் சண்டையில்
யாருக்குமற்றிருந்த நிலத்துண்டை;
எல்லாவற்றையும் நாங்கள் இழந்தோம்
நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும்
அழிவின் துயரம் வன்மத்தோடிருக்கிறது
யாருக்குத் தெரியும்
நீ வாழ்ந்து கொண்டிருந்த கடவுளரின் நம்பிக்கை
உன்னைச் சபித்துவிடுமென்று
நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா?
இப்படியொரு சாபக்கேட்டை
உனது குழந்தைகளுக்கு
நினைவுறுத்த வேண்டியிருக்குமென்று,
என்றாலும் அது நடந்தே விட்டது; நடந்தே விட்டது;
அவர்கள் வந்து விட்டார்கள்
நீயே சொல்
சாத்தானின் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்தலற்று வாழ்தல்
சாத்தியமா?

--------------------------

இது இந்த நிலத்தின் உள்ளூறும் இரத்தப்பெருக்கை  நினைவு ததும்பும் சொல்லடுக்குகளால்  மீளக்கிளறும் இதயத்தின் ஓலம் .  எளிமையாக அன்பு செத்துவிடப்போகிறது என்ற அச்சம் .

அதிகாரம்  எப்பொழுதும் எல்லாவற்றுக்கும் எதிரானதாகவே இருந்து வருகின்றது . நாம் வழங்கிய அதிகாரம்  எம்மை ஆண்டு விடுகின்றது . அதே போன்று எம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அதிகாரமும் எம்மை ஆண்டு விடுகிறது . ஒரு கவிஞரின் குரலென்பது எப்பொழுதும் அடக்கு முறைக்கு எதிரானது  ,எப்பொழுதும்  எந்தவொரு  அப்பாவிகளின் கொல்லப்படுதலையும் ஏற்றுக்கொள்ளாததது.  அதுதான் இலக்கியத்தின் நீதியுணர்ச்சி இரத்தத்தின் விளறை யாரும் ரசிக்க முடியாது .  கொண்டாட முடியாது .  இரத்தம் இரத்தம் தான் . யுத்தம் யுத்தம் தான் .

விடுதலைப்போராட்டம்  ஒரு இராணுவக்கட்டமைப்பாக மாறிய பின் அது தனது சுரத்தை இழந்து விட்டது . விடுதலைப்போராளிகளுக்கு
அதிகாரிகளின் குரல் வாய்த்தது . தலைவர்கள்கடவுள்களானார்கள்.கடவுள்களிடம் எப்பொழுதும் மண்டியிட்டே பிரார்த்திக்க முடியும் எதிர்த்தொரு கேள்வி எப்படியெழுப்புவாய் . உனக்காக நான் செத்துப்போவேன் என்றால் நான் என்ன செய்தாலும் நீ பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் . இது அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது . அதை எதிர்ப்பதில் சாமானியனுக்கு இருக்கும் தைரியம்  கவிஞருக்கும் இருக்க வேண்டும். போர் வெற்றிகளைப் புழுகி , கடவுளை வாழ்த்தி அவர்கள் பாட்டுப்பாட மாட்டார்கள்.  முருகனுக்கு அடுத்தவர் நீர்தான் , எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக  என்று  கால் நக்க மாட்டார்கள். அவர்கள் சாமனியர்கள் : அவர்கள் கவிஞர்கள். ”தப்பிப்பிழைத்தலற்று வாழ்தல் சாத்தியமா  இந்த சாத்தானின்
தோட்டத்தில்” என்ற எஸ்போசின் குரல் அதுதான்.

தமிழ்ச்சமூகமே பெரும்பாலும் சுயநலமும் தாழ்வுச்சிக்கலும் உள்ளதுதான் அதன் மத்திய தர வர்க்கம் , மேல் தட்டு வர்க்கம் அதனது அரசியல் அபிலாசைகளை அதிகார நிறுவுகையை மேற்கொள்வதற்கு சாதாரண மக்கள்தான் பலியாடுகள் . வெகு சாதாரணமாக பார்த்தாலே தெரியும் , யார் எப்பொழுதும் ஆண்டுகொண்டேயிருக்கிறார்கள் ? யார் கவிதை பாடி விட்டு பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளிலும் சொகுசாக
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .

 ஏன்  சிவரமணியும்  எஸ்போசும் செத்துப்போனார்கள்?

ஒன்று தன்னையழித்துக்கொள்ளும் அல்லது தனது சொற்களுக்கு பதில் வேட்டுகளை  வாங்கிக்கொள்ளும்.  எஸ்போஸ் இரண்டாவது வகை .  அவனது குழந்தையின் முன் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது கவிதைகளின் தீர்க்க தரிசனம் வாழ்க்கைக்குமிருந்தது. அதனால் தான் அவன் எழுப்பிய அந்த முடிவற்ற கேள்விதமிழ்ப்பரப்பில்இருந்து கொண்டேயிருக்கப்போகிறது.

“அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
அதிகாரத்திற்கெதிரான நமது இருதயங்களைச்
சிலுவையிலறைவதா”

-கிரிஷாந்-

இணைப்புகள் - http://esposh.blogspot.com/2008/06/blog-post_8231.html  

திங்கள், 26 டிசம்பர், 2016

ஒரு காட்டுமிராண்டியின் கவிதைகள்



நெருக்கமான நண்பனின் பதைபதைப்பைப் போல் எப்பொழுதும் என்னுடன் கதைத்துக் கொண்டும் அவனது அன்றாட வாழ்க்கையை அத்தனை வெளிச்சமாய் திறந்து வைத்துக்கொண்டுமிருக்கிறது மனுஷ்ய புத்திரனது கவிதைகள்.

மனுஷ்யபுத்திரன் 


கவிதையை வாசிக்கின்ற யாருக்கும் மிக எளிமையாக மனுஷ்யபுத்திரன் அணுக்கமாகிவிடுகிறார். ஒரு குழந்தையைப் போல அவரது புத்தகங்களை மடியில் தூக்கி வைத்துக் கொண்டால் அந்தக் குழந்தை சில நேரம் நம்மைக் கிள்ளுகிறது , அழுது நடித்து தனக்கு விரும்பியது எதுவெனக் காட்டுகிறது , சிரித்துக்கொண்டே முத்தமொன்றைத் தருகிறது ,  முத்தமிட்டால் சில நேரம் கன்னத்தைத் துடைத்துக் கொண்டு  உவ்வே என்கிறது, சில நேரம் தேவதைக் கனவுகள் வந்து புன்னகைத்துக் கொண்டே உறங்குவது போலிருக்கிறது , சில நேரங்களில் யாரையோ பற்றி முறையிடுகிறது , சில நேரங்களில் கட்டியணைத்துக் கொண்டு வேறு யாரிடமும் போக மாட்டேன் என்கிறது , சில நேரங்களில் சிறகு முளைத்துப் பறந்து விடுகிறது, நான் அவதானித்த வரை "குழந்தை" தான் மனுஷியபுத்திரன் கவிதைகளின் இயல்பு. அதன் எளிமையான உணர்வாக வாழ்வின் பசி அடிவயிற்றில் கிடக்கிறது. அதற்காகவே அது ஓயாமல் அழுதுகொண்டிருக்கிறது.

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் "பொதுத்தன்மை" மிக முக்கியமான ஒரு அம்சம். அது கால தேசங்களுக்குள் கட்டுப்படுவது குறைவு.ஆனால் சில வேளைகளில்  அப்படி நிகழ்வதுமுண்டு. பெரும்பாலான கவிதைகளுக்கிருக்கின்ற சொற் தேர்வுமுறையும்  வாழ்க்கையின் அன்றாடக் கணங்களின் நுட்பமான அவதானிப்பும் இன்று நாம் அதிகம் பார்க்க மறந்திருக்கும் தருணங்கள்,

யாரோ கவனிக்கும்போது

யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
காதலர்கள் அந்த இடத்திலிருந்து
நகர்கிறார்கள்

ஒரு இளம் பெண் தனது உடலில்
குறுகுறுப்பை உணர்கிறாள்

பேருந்தில் ஒருவன் செல்போனை
அணைத்துவிடுகிறான்

இரண்டு பேர் மிகவும் தாழ்ந்த குரலில்
சண்டையிடத் தொடங்குகிறார்கள்

குழந்தைகளின்  இயல்பு
திடீரென மாறி விடுகிறது

அழகற்ற ஒருத்தி
மனம் உடைந்து அழுகிறாள்

ஒரு சிறு பையன்
சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்

மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்

இளைஞர்கள் மிகவும் உயரமான
இடத்திலிருந்து குதிக்கிறார்கள்

ஒரு மூதாட்டி மீண்டும்
அதே கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்

பூச்சாடியில் மலர்கள்
சரி செய்யப்படுகின்றன

கலைந்த முகங்கள்
நேர்த்தியாக்கப்படுகின்றன

பத்திரிகையில் ஒரு திருத்தம்
வெளியிடப்படுகிறது

மருந்துக்கடையில் ஒருத்தி
எதையோ வாங்க மிகவும் நாணமடைகிறாள்

அரவமற்ற சாலையில்
ஒருவன் வேகமாக நடக்கத் தொடங்குகிறான்

குடிபோதையில் நிராதரவாய் கிடந்த யாரோ
முனகத் தொடங்குகிறான்

மதிய வெயிலில் தியானித்த காகம்
சட்டென எழுந்து பறக்கிறது

ரயிலில் குருட்டுப் பிச்சைக்காரி
இன்னும் உருக்கமாகப் பாடுகிறாள்

யாரோ பாதிப் புணர்ச்சியில்
திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார்கள்

ஒரு கொலைகாரன் தன்கத்தியை
மறைத்து வைக்கிறான்

கோமாளிகள் இன்னும் சிரிக்கவைக்கப்
போராடுகிறார்கள்

சொற்பொழிவாளன் மேலும்
குரலை உயர்த்துகிறான்

ஒரு தவம்
கலைகிறது

குடியரசு தின அணிவகுப்பில்
நாட்டின் தலைவர்
கொட்டாவியை அடக்கிக்கொள்கிறார்

ஒரு வேசி
மெலிதாகப் புன்னகைக்கிறாள்

ஏழ்மையை மறைக்க
ஒருவன் வீணே  பொய் சொல்கிறான்

மைதானத்தில் அவசர அவசரமாக
ரத்தக்கறைகள் கழுவப்படுகின்றன

கடையில் அவ்வளவு மெலிதான
ஆடையை ஒருத்தி தேர்ந்தெடுக்கிறாள்

சிலர் பணத்தைப்
பத்திரப்படுத்துகிறார்கள்

சரித்திரத்தில் இடம்பெறுவதற்கான
தீவிரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன

முற்றாக நம்பிக்கையிழந்தவர்கள்
ஏதேனும் உதவி கிடைக்கலாம்
என்று மீண்டும் நம்பத் தொடங்குகிறார்கள்

யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
எல்லோருமே தங்கள் சுதந்திரத்தைக்
கொஞ்சம் இழக்கிறார்கள்.

இந்தக் கவிதையின் நேரடியாக உரையாடும் தன்மையிலும் கூட அதிகளவான கவனிப்பின் தருணங்கள் தோன்றி ஒருவரை ஒருவர் எப்படி அணுகுகிறோம் வெளிப்படுத்துகிறோம் என்பதை இந்தக்  கவிதை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது , மேலும் அதைப் பார் இதைப் பார் என்று நடந்து சென்று ஊரைச் சுற்றும் போது ஒரு நண்பர் காட்டும் உலகத்தைப் போல் அது இந்த உலகத்தின் பல காட்சிகளையும் காட்டிக் கொண்டிருக்கிறது, கேள்வி கேட்கிறது.

 மனுஷ்யபுத்திரன்  உலகத்தின் மீது எழுப்பும் எளிமையான கேள்விகள் முக்கியமானது. ஒரு உரையில் அவர் கேட்கிறார் " என்னைப் பற்றிச் சொல்லும் போது இந்த மேடையில் சொன்னார்கள் , மனுஷ்யபுத்திரன் மிகவும் துணிச்சலானவர் என்று , எனக்கு ஒரு கேள்வி மனதில் வருகிறது , துணிச்சலாக இருப்பது தானே மனிதனுடைய இயல்பு.மனுஷ்ய புத்திரன் ரொம்ப நேர்மையாய் பேசுகிறார் என்று , நேர்மையாக இருப்பது தானே மனிதனுடைய இயல்பு. அது எப்படி ஒருவருடைய பாராட்டுக்குரிய இயல்பாக மாறிவிடுகிறது.  அப்படியென்றால் எங்கே  நாம் செல்கிறோம்  , ஒட்டுமொத்தமாக  நாம் இழக்கிறோமா? எனக்கு அது மிக மிக இயல்பான ஒன்று , ஒரு மனுஷனுக்கு கோபம் வந்தால் ஒரு கல்லெடுத்து ஏறியிறாங்க , அந்த மாதிரியானது தான் எழுத்து. ஆனால் நாம் ஏன் கல்லை எடுத்து எறியத் தயங்குகிறோம். நமக்கு கோபம் வந்தால் அதிகாரத்தைப் பார்த்து திட்டுகிறோமே, நாம் ஏன் கெட்ட வார்த்தைகளை மறைத்துக் கொண்டு அவ்வளவு நாகரீகமாகப் பேசக் கற்றுக் கொண்டோம் . இது தான் என்னுடைய கேள்வி "

இது தான் அடிப்படையான இன்றைய உலகப் போக்கின் அபத்தங்களில் ஒன்றாகப் பார்க்கிறேன். அன்பு மறைந்து அந்த இடத்தில் ஒரு சடங்கான புன்னகையும் நலன் விசாரிப்பும் கிடக்கிறது, இருவருக்குமே தெரிகிறது அது போலியானதென்று , ஆனால் செய்கிறோம் , திரும்பத் திரும்ப, ஒவ்வொரு நாளும். இதன் மீது தான் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் கேள்விகளை எழுப்புகின்றன. அதன் தார்மீகம் அது தான் , ஒரு காட்டுமிராண்டியாக நின்று கொண்டு அது  கேள்வியெழுப்புகிறது  . ஒரு கைவிடப் பட்டவனாக , ஒடுக்கப்பட்டவனாக.

அது தான் உண்மையாகவுமிருக்கிறது, தமிழ்க் கவிதைகளின் நேரடியான உரையாடல் தன்மையின் சாதனைகளில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உருவாக்கியிருக்கும் உரையாடல் தான் ஆகப்பெரியது.

அது எல்லவற்றையும் உரையாடுகிறது. மொழியடுக்குகளுக்குள் ஒளிந்திருந்த ஒரு சொல் முறையை மனுஷ்யபுத்திரன் தீண்டியிருக்கிறார், அதன் தொடுகை ஒவ்வொரு கவிதையிலும் இடைவிடாது தொடர்கிறது. ஒரு நெருக்கமானவனின் குரல் போல.

காதலில், அன்பில் இருந்து தான் இந்த வாழ்வை மீட்டெடுக்கமுடியுமென்பது  இந்தக் கவிதைகளின் நம்பிக்கையாயிருக்கிறது. ஆனால் அது நம்மை நேரடியாக வெறுப்பை நோக்கி நம்பிக்கையின்மையை நோக்கி அழைத்துச் செல்வது போல் சென்று  ஏமாற்றி விட்டு இன்னொரு வாசலால் நம்மை அன்பிடமே அழைத்துவந்துகொண்டிருக்கிறது.

...

நீ எப்போது  வருவாய்


*
நீ எப்போது
வருவாய்?

அந்தப் பெண்
கண்களில் நீர் தளும்ப
யாரிடமோ
தொலைபேசியில்
இந்தக் கேள்வியைத்
திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்

நான் கவனிப்பதைப் பற்றி
கவலைப்பட அவளுக்கு
எந்த அவகாசமும் இல்லை

எப்போது வருவாய்
என்பதைக் கேட்பதைத் தவிர
அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவும் இல்லை

அவள் பிடிவாதமாக இருந்தாள்
மன்றாடுதலுடன் இருந்தாள்
தனிமையாக இருந்தாள்
எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்

எத்தனை யுகங்களாய்
இதே குரலில்
இதே கண்ணீருடன்
இதே கேள்வி கேட்கப்படும்
என்று தெரியவில்லை

வர வேண்டிய யாரோ ஒருவர்
இன்னும் வராமலேயே
இருந்துகொண்டிருக்கிறார்
 

இந்தக் கவிதை எனது வாழ்வின் நிழல் போல என்னுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நான் எனது காதலியைக் கண்டது நான்கு வருடங்களுக்கு முன், அதற்குப் பின் "நீ எப்போது வருவாய் " என்ற வாக்கியத்தை எனது காதுகளும் கண்களும் எத்தனை தடவை கேட்டிருக்கும் படித்திருக்கும் என்பதற்கு எந்தக் கணக்குமில்லை. அவளின் ஆழமான ஒரு கேள்வி அது , இடைவிடாமல் அவள் அந்தக் கேள்வியுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறாள், எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாள்.

அவளது சந்திப்பு ஒரு வகுப்பில் நிகழ்ந்தது, இரவுகளில் அவளை வீடுவரை அழைத்துச் சென்று விடுவேன். எப்பொழுதும் "வெண்ணிற  இரவுகள் " குறுநாவலின் இரவுகள் தான் ஞாபகம் வந்து கொண்டிருக்கும். அவளது அருகாமை ஒரு தாமரைக்குளத்தின் அருகிருந்து முடிவற்று போதையிலும் கவிதையிலும் மூழ்குவதை போன்றிருக்கும்.

பின்னர் , அவளை காதலிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய நாளாகவே திறக்கவேண்டியிருக்கிறது. இன்று மறைத்துவைத்திருக்கும் சண்டைகளை நேசங்களை கோபங்களை முத்தங்களை என்றைக்குமே நான்கண்டுபிடித்ததில்லை. அதனை கண்டுபிடிப்பதில் நேரத்தை செலவிடுவதை இப்பொழுது கைவிட்டு விட்டேன் .

இன்று எப்படிக் காதலிப்பதென்பது தான் எனது ஆதாரமான தீவிரம்.

இந்தப் பைத்தியக்காரக் கவிஞன் அதனை எப்படி சொல்கிறான் என்றால் ,

திசையறிதல்

எல்லா நன்றியறிதல்களும்
பதிலுபசாரங்களும்
உன்னைக் கொஞ்சம்
சிறுமைப்படுத்தவே செய்கின்றன

இன்றிலிருந்து உனது
எல்லாப் பரிசுகளையும்
நான் தரையில் விட்டுவிடுகிறேன்
ஈரம் காயாத நாய்குட்டிகளைப்போல
தம் திசைகளை
தாமே அறியட்டுமென்று

அப்படித் தான் நாட்கள் இவ்வளவு வண்ணங்களாகி விட்டன. மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைப் படித்துத் தான் அவளிடம் கோபம் கொள்ள சண்டை பிடிக்கக் கற்றுக் கொண்டேன், அதே போல் திரும்பிப் போய் அவளிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவும் , நீ தான் எனது காதல் என்றும் சத்தமாகச் சொல்லவும்.

அறியும் வழி

உன்னைப்
பற்றிக்கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக்கொண்டிருந்தேன்
என்பது

இழக்கவே முடியாதது
எதுவென தெரிந்துகொள்ள
அதை
இவ்வளவு
இழக்க வேண்டுமா?

இன்னும் நான் உடைக்க வேண்டிய எனது அகங்காரம் மீதமிருக்கிறது. அது ஒரு கவிதைக்காக காத்திருக்கிறது.
 ஒவ்வொரு தடவையும் கவிதை என்னை ஏசுகிறது . மடையா உனக்கு காதலிக்கத் தெரியாதா என்று கன்னத்திலறைந்து கேட்கிறது, சில நேரம் எவ்வளவு சொன்னாலும் உனக்கு விளங்கவில்லையா என்று ஆறுதலாக தனது மடியில்  படுக்க வைத்து நெற்றியில் தடவிக் கொடுத்த படி கேட்கிறது.

...

வேறொன்றும் வேண்டியதில்லை

கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்

வேறொன்றும் வேண்டியதில்லை

இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம்

...

என்று என்னை அது ஆறுதல்படுத்துகிறது. நீ தைரியமாகச் சென்று காதலி ,இவர்கள் இப்படித் தான் என்று எனக்குச் சொல்லித் தருகிறது.

நான் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் கவிஞர்கள் இரண்டு பேர் தான் ஒன்று நட்சத்திரன் செவ்விந்தியன் இன்னொன்று மனுஷ்ய புத்திரன். இந்த இரண்டு பேரிடம் மட்டும் தான் என்னால் சாதாரணமாக உரையாட முடியும் போல் தோன்றுகிறது , அவ்வளவு அறிவுரீதியாகப் பேச வேண்டியதில்லை. அவ்வளவு இறுக்கமாக கவிதை பற்றி வாழ்க்கையின் தத்துவங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. கள்ளோ அல்லது மதுவோ அருந்திவிட்டு நாம்  வானத்தை நோக்கி இறக்கைகளைச் செய்துகொண்டிருக்கும்  போது இவர்கள் ஏன் நமக்கு சங்கிலிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேட்க வேண்டும்போலுள்ளது.

கிரிஷாந்-

ஒளிப்படம் - பிரபு காளிதாஸ்

சில இணைப்புகள் - http://uyirmmai.blogspot.com/2005/02/8.html
                                                 http://maruthanayagamboyz.blogspot.com/2010/10/blog-post.html
                                                 http://visumbi.blogspot.com/2012/01/blog-post.html
                                                 http://andhimazhai.com/news/view/selvaraj-jegadesan.html


சனி, 24 டிசம்பர், 2016

இரண்டு காதல் கவிதைகள்



கவிதையின் இருப்பென்பதற்கும் காலத்திற்குமுள்ள உறவென்பது மிகத் தெளிவானது. சில கவிதைகள் சில கால கட்டங்களில் கொண்டாடப்படலாம். பாடல்களாக மக்கள் பாடிக் கொண்டு திரியலாம். ஆனால் கவிதையென்பது அந் நேரக் கிறக்கம் மட்டுமல்ல. புதுவை ரத்தினத்துரையின் கவிதைகளை உதாரணத்திற்கு பார்க்கலாம். ஒரு வரிக்குக்  கூட அதன் காலம் கடந்து எந்தப் பெறுமதியுமல்ல, அவர் எழுதிய  பாடல்களும் ஒரு கால கட்டத்தின் இளைய தலைமுறைக்குக் கொடுத்த எழுச்சியை அதன் தீவிரத்தை தொடர்ந்து கடத்த முடியாமல் போனவை , வெறும் ஆட் சேர்க்கும் கோஷப் பாடல்கள். "எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது , இங்கிருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேட்காது" போன்ற வரிகளுக்குள் ஒளிந்திருந்து ஒலிக்கும் குரல் நாங்கள் கடும் தியாகிகள் , எங்களையெல்லாம் நீங்கள் எங்கே கவனிக்கப் போகிறீர்கள் என்ற குற்ற உணர்ச்சியை கேட்கும் மக்களுக்கு உருவாக்கி விட்டு அதனை ஒரு தீவிர மன நிலை போல் காட்டிக் கொள்வது போன்று தான் எனக்குப் படுகிறது. வருகிற தலைமுறைகளில் இலக்கியம் சார்ந்து எந்தப் பயன்மதிப்புமற்ற வரிகளாக அவை போய்விடும்,கேட்காத குரலாகவே போய்விடும்.ஏனெனில் அதற்கு அந்தக் கால கட்டம் கடந்து பேசும் குரல் இல்லை , உள்ளுணர்வில்லை.
சேரன் 

விடுதலைப் போராட்ட காலங்களில் நம்பிக்கையுடன் எழுத வந்த பலரின் ஏராளமான கவிதைத் தொகுப்புக்களை வாசித்திருக்கிறேன். பெரும்பாலானவை உரையாடல் தன்மை வாய்ந்தவை , ஒரு பெருந் தொகுதி மக்கள் கூட்டத்தின் முன் ஆவேசமாக குரலெழுப்பி கைவீசி  முகம் சிவக்கப் படிக்கப்படக் கூடியவை, பிரச்சாரம் தான் அதன் மைய நோக்கம் , நீங்கள் "போரிடவே வருக " என்ற கோஷமும் விடுதலை என்பது  காதலை  விட நட்பை விட ஏன் நமது வாழ்வை விடவும் உயர்ந்தது என்று கனவு கண்ட ஒரு தலைமுறையைத் தான் நாம் இழந்திருக்கிறோம் , அந்தக் கால கட்டத்தில் இப்பொழுதிருப்பதை விட இலக்கியத்தின் குரலுக்கு ஒரு மதிப்பிருந்தது , இப்பொழுதைய விட அதை வாசிப்பதற்கொரு காலமிருந்தது , மக்களிருந்தனர். ஆகவே எழுந்து வரும் கவிதைகள் பெருங் குரலெடுத்து அழவும் போராடவும் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருந்தன. இதற்கு மாற்றான குரல்கள் தனியே ஒலித்தன. ஆனால் மக்களிடம் பெருமளவில் கவிஞர்கள் என்று சென்றவர்கள் காசி ஆனந்தனும் புதுவை ரத்தினதுரை போன்றவர்களே. இந்த மாதிரியான கொடுமைகளும் நடந்து யுத்தம் மேலும் கொடியதாகிவிடுகின்றது.சரி  போகட்டும்.

சேரனின் கவிதைகளை நான் சிறு வயதில் பெரும் ஆவலுடன் படித்திருக்கிறேன். சேரனைப் படிக்கவில்லையென்றால் நீயெல்லாம் கவிஞனே இல்லையென்று ம் நீயெல்லாம் கவிதை யை வாசிக்க வில்லை எனும் ஒரு தலைமுறையிருந்தது. நான் வாசிக்கத்தொடங்கிய காலமென்பது பெருமளவில் நான் மேற்சொன்ன எழுச்சிகள் வடியத்தொடங்கிய காலம் , சமாதானத்தின் பறவை எரிந்த பிறகு வாசிப்புப் பற்றிஎனக்குள் இருக்கும் பிரதான சிக்கல்களில் இதுவும் ஒன்று. ஒரு பெருந்தொகுதி மக்கள் கூட்டமும் மூன்று தலை முறைகளும் வாழ்ந்து உயிர் கொடுத்த வரிகள் எனக்கேன்  அந்த வாழ்வைக்கடத்தவில்லை .  அதன் உயிரின் நடுநடுங்குதலை எனது கைகளுக்குள் இரத்தம் தோய்ந்த  துடிக்கும் இதயம் போல் கையளிக்க முடியவில்லை. இது எனது குறையாகவும் இருக்கலாம் , ஆனாலிது எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்படக்கூடிய ஒரு சிக்கல் என்றே நான் கருதுகின்றேன் .நாம் நமது கடந்த தலைமுறைகளை அதன் பாடுகளை , சொல்லி முடித்து விட மாட்டோமா ? அதனைச்சொல்லுகின்ற , சரியான கவிதைக்குரல்களை  இந்தப்பிரச்சாரம் எனும் பெரும் இருண்ட பள்ளத்தாக்குகளில் இருந்து மீட்டெடுத்து விட்டோமா ?  இதற்குத்தான் கறாறான இலக்கம் சார்ந்த விமர்சன முன் வைப்புகள் நமது போராட்ட காலப்பாடல்கள் (அனைத்து ஆயுதக்குழுக்களதும் , பிற இயக்கங்களினதும்), கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள்

போன்றவற்றின் மீது வைக்கப்பட வேண்டும் இதனை ஒரு தனி மனிதனோ அல்லது சிறு குழுவோ செய்யும் பொழுது குறுகிய பார்வை தோன்றிவிடக்கூடிய வாய்புகளும் உண்டு . ஆனால் எல்லோரும் மெளனமாயிருக்கின்ற காலங்களில் யாரேனும் பேசத்தான்  வேண்டியிருக்கிறது.

சேரனின் மேல் உருவாக்கப்பட்டிருக்கும் மிகையான பிம்பம் , அவரை வாசிப்பதற்கு தடையாக இருக்கின்ற ஒன்று  “சாம்பல் பூத்த தெருக்களில்

இருந்து எழுந்துவருக ” என்ற சேரனின் குரல்  புதிதான ஒன்றல்ல , அது அந்தக்காலத்தின் கூட்டு வாக்கியம். அதனைத்தான் எல்லா இயக்கங்களும் வேறு வார்த்தைகளில் சொல்லின . ஈழத்தின் கடந்த முப்பது வருட இலக்கியப்போக்கைப்பொறுத்த வரை அரசியல் நிலைப்பாடு என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது ,   போரிட வரச்சொன்னவர்கள் சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு பயணம் போய்விட்டார்கள் அதைக்கேட்டுப் போராடப்போனவர்கள் செத்துப்போனார்கள்.  அதன் குற்ற உணர்ச்சி  இன்று எழுதும் யுத்தத்தின் கவிஞர்களின் எல்லோரது வரிகளுக்குள்ளும்

இழைந்திருக்கின்றது. இதுதான் எனது சிக்கல் , இப்பொழுது நான் கவிதைக்குரல்களை அதன் அரசியல் நிலைப்பாடுகளில் வைத்து மதிப்பிட முடியுமா ? நான் மதிப்பிட வேண்டும் என்றே சொல்லுவேன். அது அவர்களைக் குற்றம் சாட்டுவதல்ல , இந்த மாதிரியான தீவிர
உணர்ச்சிப்போக்குகளை  புரிந்துகொள்ளுவதும் அதனைப்பற்றிய அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பது பற்றியுமாகும்.

சேரனின் ஆரம்பகாலக் கவிதைகள்  தனது தந்தை மகாகவியின் தொடர்ச்சியாக மரபுக்கும்  நவீனத்துக்கும் இடையிலான சொற்களஞ்சியங்களைப் பரஸ்பரம்  பரிமாறிக்கொண்டு எழுந்து வந்தவை.  அதன் பின் சேரன்  இன்று வரை அந்தத் தொடுகையினை கவிதைகள் எங்கும்உருவாக்கியிருக்கிறார் , என்னைக்கேட்டால் அவர் எழுதியது இரண்டே கவிதைகள் என்றுதான் சொல்லுவேன் , அல்லது எனக்குப்பிடித்தது .அந்த இரண்டும் தான்   “ஜே .யுடனான  உறவு முறிந்து மூன்று நிமிடங்கள் ஆகின்றன””சே.யுடனான  உறவு முறிந்த போது” என்ற இரண்டு காதல் கவிதைகளும் தான் அவை  .

அவர் ஒரு பொதுக்குரலாக மிகையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.  அவர் பெரும்பாலும் எழுதிக்குவித்தவை பல்வேறு போராட்ட காலச்சம்பவங்களைக் கவிதையாக்க முனைந்தமைதான். அந்த வகையான கவிதைகளுக்கு  பத்திரிக்கைகளில் வேண்டுமானால்  முக்கியத்துவம் இருக்கலாம் , உலக மொழிகளிலும் அவை மொழிபெயர்க்கப்படலாம் .  எல்லாம் கொஞ்சக்காலம் தான் . விடுதலைப்போராட்டத்தின் நெருப்புக்கங்குகளை  இதயத்தில் சுமந்தவர்களை இது மட்டுமல்ல ஒரு சிறு சொல் கூட பற்றியெரிய வைத்திருக்கும் அந்தக்காலகட்டம் அப்படியானது.  அந்த அனல் காற்றின்  காலத்துக்குப் பின் அதற்கு பத்திரிக்கைச் செய்திகளுக்குண்டான மதிப்புத்தான் உருவாகும் .

சேரன் தீபச்செல்வன் அல்ல ஆனால் சேரனும் தீபச்செல்வனும் ஒரே மாதிரித்தான்  வாசிக்கப்படப்போகின்றார்கள் இந்த அச்சம்தான்  என்னைக்

கவலைகொள்ளச்செய்கிறது.  இந்த இடத்தில் நிலாந்தனால்   இந்தச்செய்திகளை   நெடுங்கவிதைக்கு  உரிய தன்மைகளோடு உருவாக்க முடிகிறது.அவர் தன்னுடைய எழுத்துக்களை  கவிதைகள் என்று சொல்லவில்லை , அவை பரிசோதனை முயற்சிகள் தான்  என்று அவர் கூறுகின்றார்.

 சேரனுடைய கடந்தகால எழுத்துகளை நான் வாசித்த போது மனக்கிளச்சியாகவும் இவை நல்ல கவிதைகள் என்றும் தான் நினைத்திருந்தேன்

ஆனால் முதலிலே சொன்னது போல அனல் காற்றின் பெயர்வுக்குப்பின்   அவை இரண்டு காதல் கவிதைகாளாக மட்டுமே நெஞ்சில் மீதமிருக்கின்றன.

-கிரிஷாந்-











வியாழன், 22 டிசம்பர், 2016

கூழாங்கற்கள் மின்னுகின்றன



கவிதைகளில் சொற்களை அமர்த்துதலென்பது ஒரு நிகழ்தல். குறைந்தது ஐந்தாயிரம் வருட மொழிப்பரம்பரியம் கொண்ட மொழியில் நாம் எழுதுவதென்பது மிகவும் சிக்கலானது, ஆனால் புத்துயிரளிக்கக் கூடியது. தமிழ்க் கவிதைகளின் சொற்சுருக்கமும் கருத்து விரிவும் ,மொழியடைந்த சிகரம். சங்ககாலக் கவிதைகளோ அல்லது அதற்குப் பிறகான கவிதைகளிலோ சொற்களைக் கையாளுதல் என்பது கூழாங்கற்களை மந்திரம் வாய்ந்த இடங்களில் பொருத்துதல் போன்றது.

இந்த நெடும்பரப்பில் பா.அகிலனின் கவிதைகளுக்கு அதற்கேயுரியதான சொல்லமைப்பும் காட்சிப் படிமங்களும் புதிய உலகங்களையும், பழைய உலகத்தின் நித்திய சித்திரங்களையும் தொடர்ந்து அளித்துக்கொண்டிருப்பவை.  

பா.அகிலன் 


அவருடைய "பதுங்குகுழி நாட்கள்" என்ற தொகுப்பை ரமணன் அண்ணா தான் தந்தார். அகிலனுடைய கவிதைகளை பற்றிச் சொல்லி அதனை வாசிக்கும் படி தூண்டியவரும் அவரே. அகிலனுடைய முதலாவது தொகுப்பு அது. பத்துவருடங்களாக எழுதியவை என்று சொன்னார்கள்.

யுத்தகாலத்து யாழ்ப்பாணத்தின் அல்லது இந்த நிலப்பரப்பின் வாழ்வின் கொடு நாட்களை நினைவுறுத்தும் ஆழமான விபரிப்புகளாலும் நுண்மையான சொல் அடுக்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் அகிலனின் கவிதைகள் , ஞாபகங்களின் புதைகிடங்கு போல் என்னை வசீகரிப்பவை. பல கவிதைகளையும் வரிகளையும்  பல தருணங்களில்  உச்சரித்து வியந்துகொண்டிருப்பேன்.

முதிரா என்னுடைய மனம் எப்பொழுதும் கவிதைகளைக் குடித்துக் கொண்டிருந்த காலம். நான் யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரியில் ஆறாம் வகுப்புக்குப் பின் படித்தேன் , அதற்கு முதல் சென்ட் .ஜோன் பொஸ்கோ. சிறிய வயதில் கிறிஸ்தவ பிரார்தனைகளைக் கேட்டும் கிறிஸ்தவ சூழலிலும் படித்ததால் பைபிளின் படிமங்களை என்னவென்றே தெரியாமல் ஞாபகம் வைத்துக் கொண்டேன்.

"நானே உண்மையும் வழியும் சத்தியமும் ஆனேன் " என்னுள் ஆழமாய் நிகழ்ந்த வாக்கியம்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி  சைவத்தை பின்பற்றும் ஒரு பள்ளி. காலையில் பிரார்த்தனை என்பது ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு இடத்தில் நிகழும். அநேகமாக ஐந்து தேவாரங்கள், ஒரு சிறிய பிரசங்கம் , ஏதாவது தகவலிருந்தால் ஒரு குறிப்பு. இவ்வளவு தான். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பழைய பிரார்த்தனை மண்டபத்தில் பிரார்த்தனைகள் நடக்கும். அப்பொழுது தியானமும் இருந்தது.

தேவாரங்கள் , திருமுறைகள் , கோளறு பதிகம் , சிவபுராணம் என்று சைவம் சார்ந்த பாடல்கள் இசைக்கப்பட்டாலும் என்னவென்றே தெரியாமல் குருட்டுத்தனமாக பாடிக்கொண்டிருந்தாலும் அதன் ஓசை , தமிழ் என்பன ஆழ்மனத்தினடியில் சேர்ந்துவிட்டதொன்று, சிவபுராணத்தின் கவித்துவமும் தேவாரங்களின் நெக்குருகலும் என்னை கவிதையின் மெல்லிய அடுக்குகளுக்குள் நுழைய வைத்தன.

" இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் ... " "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க ".. போன்ற தேவாரங்கள் இது வரை வரிவடிவமாகப் பார்த்ததேயில்லை ஆனால் எல்லா வரிகளும் மனதிலோடும். இன்னும் இந்தப் பாடலும் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.

"ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே"

-அருணகிரிநாதரின் திருப்புகழ்-

இதையெல்லாம் நெஞ்சுருகிப் பாடும் பக்தியுள்ள நண்பர்களிருந்தார்கள். எனக்கு சிறிய வயது முதல் (பத்துவயத்துக்குப் பின் ) கடவுள் நம்பிக்கை துளியும் கிடையாது. ஆனால் மொழியின் அழகினால் அதன் சொல் முறையினால் சொல்வைப்பு ஒழுகினால் இசையினால் இந்தவகையான பாடல்கள் எனக்குள் மொழிசார்ந்த புரிதலில் மாற்றங்களை ஏற்படுத்தின. மொழி கத்தி போல் அறுக்கவும் சிலவேளை நறுங்காற்றுப் போல் வீசவும் செய்யும் என்பதை அப்படித்தானுணர்ந்தேன்.

திருவாசகத்தின் இன்னொரு பாடல் மொழியின் துள்ளலும் கனிவும் கொண்டது ,

" முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்."

இப்படி மொழியின் வசீரகம் நிறைந்த பகுதியை பாடசாலைக்கு காலங்களில் பிரார்த்தனை நேரங்களில் பெற்றுக் கொண்டேன். பத்து , பதினோராம் வகுப்பில் குணசிங்கம் என்ற ஒரு ஆசிரியர் காலையில் கூடப்பிரார்த்தனை நிகழ்த்துவார். பஜனை போல் கைகளைத் தட்டி இசையுடன் சேர்ந்து அனைவரும் பாடும் அந்த நிமிடங்கள் நக்கலும் நளினங்களும் விட்டாலும் ஒருவகை கூட்டுணர்வை சேர்ந்து பாடுதலென்பதினூடாக உருவாக்கமுடிந்தது. அது மொழியின் மன அடுக்குகள் எப்படி உள்ளுறையும் மனிதர்களுக்கிடையிலான தொடுப்பினால் கூட்டு நனவிலி பற்றிய ஒரு பிரக்ஞயை நானே உணரக் கூடியதாகவிருந்தது.

மொழியின் இந்த கூட்டு நனவிலித்தன்மை எல்லோருக்குமானதாக இருக்குமா என்று தெரியவில்லை . ஆனால் சிறிய குழுவுக்கோ அல்லது பெரிய அளவிலென்றாலும் மொழி ரீதியிலான பண்பாட்டு ரீதியிலான தொடர்ச்சிக்குள்ளும் இயங்கக் கூடியதொன்றாகவே உணர்கிறேன்.

என்னால் இந்த உணர்வின் விஞானத் தன்மை தொடர்பாக வரட்டுத் தனமாக தர்க்கிக்க முடியும் , ஆனால் அது இருப்பதை உணரமுடிகிறது. அறிந்த ஒன்றிலிருந்து விலகமுடியாதல்லவா.

அகிலனின் கவிதைச் சம்பவங்கள் சொல்லுபவற்றையும் சொல்லாமல் விடுபவற்றையும் இணைத்துக் கோர்க்கும் நுட்பமான மன உணர்வைக் கோருபவை .

அவர் உருவாக்கும் காட்சிப் படிமங்கள் , ஒருகணம் உறைந்து நின்று, பின்  விடுபட்டு மறையும் காலம் போன்றவை,

..
பதுங்குகுழி நாட்கள் - 3

பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்
அனற்காற்று
கடலுக்கும், தரைக்குமாய் வீசிக்கொண்டிருந்தது,
ஒன்றோ இரண்டோ கடற்காக்கைகள்
நிர்மல வானிற் பறந்தன.
காற்று பனைமரங்களை உரசியவொலி
விவரிக்க முடியாத பீதியைக் கிளப்பிற்று
அன்றைக்குத்தான் ஊரிற் கடைசி நாள்

கரைக்கு வந்தோம்,
அலை மட்டும் திரும்பிப் போயிற்று.
சூரியன் கடலுள் வீழ்ந்தபோது
மண்டியிட்டழுதோம்

ஒரு கரீய ஊளை எழுந்து
இரவென ஆயிற்று.

தொலைவில்
மயான வெளியில் ஒற்றைப் பிணமென
எரிந்து கொண்டிருந்தது எங்களூர்,

பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்.

...

மண்டியிட்டு நிற்கும் இந்தக் கணங்களை சொற்களின் மிகக் கொஞ்ச அளவுடன் உருவாக்கியிருப்பது, வரலாற்றின் கொடும்பக்கங்களை நிரப்பும் எல்லையற்ற துரத்துதல்களதும் விட்டு நீங்குதலினதும் சாட்சியாகவே நான் பார்க்கிறேன்.

மரபிலிருந்து தொன்மங்களையும் படிமங்களையும் மீட்டெடுக்கும் இவரது கவிதை வரிகள் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திக்குமிடையில் ஒரு கையிறென நீண்டு செல்கிறது,

குறிப்பாகக் காதல் கவிதைகளில் சொற்  பாவனையில் உள்ள சங்கக் கவிதைகளின் சொல்லாட்சி,

ஆயர்பாடி

நெடிய
நீல இரவுகளின்
கழிமுகம் வரையிலும்
அழுதிருந்தாள் அவள்,
அசைவற்ற மலைகளிலிருந்து
பாய்ந்தோடுகிறது நித்திய நதி
அவளிற்கு
ஆறுதல் கூறத்தான் யாருமில்லை.

கார்த்திகைப் பிறைபோல
நீ வந்தநாளோ
அவள் நினைவுகளின் தொலைவில்.
மேகம் கறுத்த வானிடை
நட்சத்திரங்கள் விழிமலர
குழலெடுத்து ஊதும் காற்று

இமைப்பொழுதே கண்ணா,
உன் நினைவு நீளப் பொற்கயிற்றின் அந்தத்தில்
கைவிடப்பட்ட பாடலின் பொருளாய்
உணர்வூறுவாள்,
ஒரு தாமரை மொட்டுப்போல
மனம் கூம்பி

மழைபொழியும் புலரியொன்றில்
விழிநீள சாளரத்தண்டை நிற்கின்றாள்,
பொழிமழைப் பெருக்கின்
நூறு கபாடங்கள் தாழ்திறப்ப
அதோ
அங்கு வருவது யார்?

சித்திரை 1992


பெரும்பாலும் காதல் கவிதைகளில் சங்க வரிகளுக்குள் நுழையும் கவிதைகள், மக்களின்  துயரைப் பாடுகையில் பைபிளின் படிமங்களுக்கிடையில் அலைவது ஒருவகையில் நெஞ்சுக்கு நெருக்கமானதாகவே இருக்கிறது.

எப்பொழுதும் துயருறுபவர்களின் பக்கமிருந்த அந்த தச்சனின் மகனின் சொற்களே அவனுக்குப் பின் தோன்றிய துன்பத்திலுள்ளோருக்கு மலை போன்ற ஆறுதலாயும் நதிக் கரை  போன்று குளுமையாகவுமிருக்கிறது.

பைபிளின் தாக்கம் யுத்தத்தின் போது எப்படியிருந்ததென்பதைப் பற்றி தனியான ஒரு ஆய்வு செய்யப்பட வேண்டும், ஒரு கட்டுரை கலைமுகத்தில் படித்ததாக ஞாபகம். ஆனால் இன்னும் ஆழமாக செய்யப்பட வேண்டும். நிலாந்தன், கருணாகரன், எஸ்போஸ் , சித்தாந்தன் ஆகியோர் இதனை வலிமையான அளவில் தமது கவிதைகளில் கொண்டுவந்திருந்தனர்.

ஆறுமுகநாவலர் பற்றிய பல்வேறு விமர்சனங்களில் எனக்கு உடன்பாடிருக்கிறது. ஆனால் பைபிளுக்கு அவர் செய்த தமிழாக்கம் என்பது இன்று எவ்வளவு பெரிய தாக்கத்தினை ஒட்டுமொத்த கவிதைப்பரப்பு மற்றும் புனைவுப்பரப்புக்குச் செய்திருக்கிறதென்பது என்னளவில் மிக முக்கியமானதொன்று.

எளிய மக்களின் பிரார்த்தனையாக வழிந்து நிறையும் மெழுகுவர்த்தியின்  பிசுபிசுப்புடன்  உருவாக்கியிருக்கும் அவரின்  தமிழ் , தமிழின் உரைநடை மரபில் ஒரு சாதனை என்றே கருதுகிறேன்.

அகிலனின் கவிதைகளுக்கு இருக்கும் பிரார்த்தனைக் குணமும் , வாழ்வு அழிதல் பற்றிய பெருந்துக்கமும் எனது தலைமுறைக்கு ஒரு வராலற்றுக் குறிப்பே.

உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்

1
எனக்குத் தெரியாது.
ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ
அல்லது
வனத்தின் புறமொன்றிலோ
உன் கிராமம் இருந்திருக்கும்
பெரிய கூழாமரங்கள் நிற்கின்ற
செம்மண் தெருக்களை,
வஸந்தத்தில் வந்தமர்ந்து பாடும்
உன் கிராமத்துக் குருவிகளை
எனக்குத் தெரியாது.
மாரிகளில்
தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை
நீள இரவுகளில்
உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை
நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்.

2
காற்றும் துயரப்படுத்தும்
இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம்;
ஒரு சிறிய
அல்லது பெரிய
சுடுகாட்டு மேடு போலாயின
எமது கிராமங்கள்.
அலைபாடும் எங்கள் கடலெல்லாம்
மனிதக் குருதி படர்ந்து மூடியது
விண்தொடவென மரமெழுந்த வனமெல்லாம்
மனிதக் குரல்கள் சிதறி அலைய,
சதைகள் தொங்கும் நிலையாயிற்று...
முற்றுகையிடப்பட்ட இரவுகளில்
தனித்து விடப்பட்ட நாய்கள்
ஊளையிட
முந்தையர் ஆயிரம் காலடி பரவிய
தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது,
நானும் நீயும் இவையறிவோம்.
இறந்து போன பூக்களை,
கைவிடப்பட்டுப்போன பாடலடிகளை...
நினைவு கூரப்படாத கணங்களை
அறிவோம்.

3
ஆனால்,
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை.
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்களின் தொன்மைச் சுடர்கள் மோனத்திருப்பதை
நீயும் அறியாது விடின்
இன்றறிக,
'ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்'
ஓர் நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.

மாசி 1993


..............

தேர்ந்தெடுத்த சொற்களின் கைத்தொடுத்தலில் சொற்கள் மந்திரம் பெறுகின்றன. கூழாங்கற்கள் மின்னுகின்றன.

கவிதைகளை பற்றி அதிகம் சொல்வதை விட அவற்றை வாசிப்பதே முக்கியமானதென்று நினைக்கிறேன் , கீழே தொகுப்பின் இணைப்பை இணைக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

பதுங்குகுழி நாட்கள் -http://www.noolaham.net/project/01/22/22.txt -

கிரிஷாந்-

புதன், 21 டிசம்பர், 2016

"அலைமுறியும் கடற்காற்றில்"



நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச  ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள்.

நட்சத்திரன் செவ்விந்தியன்  


செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல் தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது.

*

ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் , கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள் , கட்டுரைகள் , தத்துவ நூல்கள் , பழைய இலக்கிய சஞ்சிகைகள் . இவ்வளவுக்கும் மேல் அவரது மரபும் நவீனமும் பற்றிய அறிவு.இரவும் பகலும்  உரையாடிக் கொண்டே இருப்போம்.

சிறிய வயதில் (ஒரு பன்னிரண்டு வயது இருக்கலாம் ) அவருடைய புத்தகங்களை அடுக்கிக் கொடுக்கும் வேலைகளை நானும் எனது சகோதரர்களும் ஊர்ப் பெடியளும் செய்வோம் , அவர் வீட்டில் மீன்கள் வளர்த்தார். ரெஸ்லிங்க் பார்ப்போம். பாதி பொழுது போக்கு நேரம் அங்கேயே. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பமிருக்கும். ரெஸ்லிங்க் பார்க்க ஒரு கூட்டம் வரும் , மீன் பார்க்க இன்னொன்று . நான் மூன்று இடங்களிலும் நின்றேன். புத்தகங்களை அடுக்கிக் கொடுத்தால் சில சஞ்சிகைகளை , இரண்டுக்கு மேலிருக்கும் சில புத்தகங்களை அவர் எங்களுக்குத் தருவார். அவற்றைச்  சேர்த்தும் அங்கே இங்கே பொறுக்கியும் , நானும் ஒரு நூலகம் எனது வீட்டில் நடத்தினேன். புத்தகங்களை ஒரு பழைய கபேர்ட்டில் வைத்து புத்தகங்களை எடுத்து வாசிப்பவர்களின் பெயரை ஒரு கொப்பியில் எழுதி வைப்பேன்  . சில மாதங்கள் அந்த  நூலகம் நன்றாக ஓடியது என்று ஞாபகமிருக்கிறது.

பின்னர் பதின்னாலு வயதில் அவர் எனக்கு வாசிக்கத் தந்த புத்தகமொன்றைத் தொலைத்து விட்டேன் . அவர் என்னை கோபத்துடன்  பேசியதுடன்  நான்கு வருடங்கள் வேறு  புத்தகங்கள் தரவேயில்லை. அதன் பிறகு தான் நான் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

நான் புத்தகத்தை தொலைத்தது சண்டைக் காலமென்பதால் அதனை மீளவும் வாங்க முடியாது ,அது போக ஏற்கனவே அவருக்கு குடும்ப கஷ்டமும் இருந்த காலம் . அதனால் தான் தான் அவர்  கோபமாக இருந்தார், பின் அது சரியாகி விட்டது.நான்கு வருடங்களின் பின், நான் இலக்கியத்தில் இவ்வளவு ஆர்வமாயிருக்கிறேன் என்பதை அறிந்து அவர் மீண்டும் எனக்கு புத்தகங்களைத் தந்தார். அது ஒரு நீண்ட இடைவெளியில் நான் கண்டபடி வாசித்துத் தள்ளிய ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒழுங்கு படுத்தும் செயலாக இருந்தது. அதற்குப் பிறகு தான் ஒரு நாள் , இது தான் நட்சத்திரன் செவ்விந்தியனின் தொகுப்பு முக்கியமானதொன்று என்று எனக்குத் தந்தார்.

*

எனக்கு பதினெட்டு வயதிருக்கும் போது வீட்டில் ஒழுங்காக சாப்பாடு இருக்காது. அம்மா இல்லையென்பதால் அங்கே இங்கே என்று அலைந்து விட்டு வீட்டுக்கு வருவேன். இரவு பத்து மணிக்குத் தான் வேலை முடித்து  அப்பா இரவுச் சாப்பாடு கொண்டு வருவார். அது வரை பசி வயிற்றைக் கிள்ள புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பேன். அம்மாவின் மரணத்தின் பின் நாங்கள் ரீவி பார்ப்பது குறைவு, எனக்கு மிகவும் சலிப்பூட்டும் செயல். நான் ,தம்பி , தங்கச்சி மூன்று பேரும் கதைத்துக் கொண்டிருப்போம். எப்பொழுதும் எதையாவது நக்கலடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டிருக்கவும் நாங்கள் பழகிக் கொண்டோம்.எனது தங்கச்சியின் கதைகளைக் கேட்டால் "பூஷ்கின் நகரத்தில் பிறந்த குறும்புக்காரியே" என்ற அக்மத்தோவாவின் வரி தான் ஞாபகத்திற்கு வரும் . அப்படித் தான் நாங்கள் வளர்ந்தவர்களாயினோம்.

அப்பா வரும் வரை நாவல்கள் படித்துக் கொண்டிருப்பேன் . அநேகம் ரஷ்ய நாவல்கள் தான். நட் ஹம்சனின் " பசி " நாவல் எனக்குப் பிடித்தமான ஒன்று. மூண்டு நான்கு பக்கத்திற்கு ஒரு தடவையாவது பசி என்ற சொல்லோ  உணர்வோ கசிந்து கொண்டேயிருக்கும். எனக்கும் பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும்.

இன்னொரு புத்தகம்  சேகுவாராவின் "மோட்டார் சைக்கிள் டயரிக் குறிப்புகள்" எல்லோரும் ஒரு விடுதலை வீரரின் புத்தகமாக அதை படித்துக் கொண்டிருக்க சேகுவேராவும் அவரது நண்பரும் சாப்பாட்டிற்காக பொய் சொல்லி என்னென்ன வகையான பொய்கள்  சொன்னார்கள் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

செவ்விந்தியனின் இந்த வரிகளை நான் இப்படியான காலத்தில் தான் வாசித்தேன்.

...
நான் இறந்திருந்த நாட்களில்
மப்புக்கொட்டி துக்கும் சொரிந்தது எனக்காக
மழை தகரத்தில் அடித்துக்கொண்டு பெய்து
என் அறையில் சில புத்தகங்களையும் நனைத்து
நிலம் முழுவதும் தண்ணி கசிந்தும் ஓடியது.

சோவியத் ருஷ்ய
நாவல்களைப் படித்துக் கொண்டிருப்பேன்
மரணத்துக்குப் போகும்வழியில்
நித்திரை கொள்ள வைக்கும்
நேரகாலம்
சும்மா போனது துளிர்த்து வருத்தும்
இரவுகளில் வாய்திறந்து ஒரு வார்த்தையேனும் கூடபேச
சோம்பலுற்றுக் கிடந்தேன்
எல்லாம் ஆகிவிட்டது இனி என்ன
என்வாய் முணுமுணுக்கிறது.
.....
(உயிர்த்தெழுதல்)

 செவ்விந்தியனின் கவிதைகளின் இயல்பான விட்டேற்றித் தனமும் அன்றாட அற்புத வாழ்வை இழக்கும் துயரும் அது கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் பருவங்களை பற்றிய நினைவும்  எனக்கு ஒரு கால கட்ட நான் வாழும் மண்ணின் ஞாபகங்களை தருவதாக இருந்தது. மிக நுட்பமான புற வாழ்வின் சித்திரம் அவரது எல்லாக் கவிதைகளிலும் இருந்தது.

எளிமையான எதிர்ப்பு அது. யுத்தம் எனது வாழ்வை குலைத்துக் கொண்டிருப்பதின் கோபம் அது.

நண்பர்களை இழத்தல், வாழ்வை இழத்தல், வாழ்வின் கொண்டாட்டங்களை அனுபவிக்க முடியாமல் போதலைப் பற்றியே தொடர்ந்து பேசும் இக் கவிதைகள் விவரிக்க முடியாத சோகத்தை எனக்குள் ஏற்படுத்தின. நான் கவிதைகளுக்குள்ளாலேயே யுத்தத்தின் வரலாற்றை விளங்கி கொண்டவன். எனக்கு ஒரு வரலாற்றாசிரியரின் குரலை விட கவிஞரின் குரலில் அதிகம் உண்மையிருப்பதாய்ப் பட்டது.

பளீரிடும் படிமங்களாலும் சொற்களின் நுட்பமான ஒழுங்கு படுத்துதலாலும் சிறிய கதைகளுக்குரிய சம்பவச் சோகங்களை, உரையாடலை  கவிதைப் பிரதியின் உள்ளே நிகழ்த்துவதாலும் இந்தக் கவிதைகளை நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு சிநேகிதனின் குரலைப் போல என்னால் உணர முடிந்தது.

"பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது"

......

"நடந்து வருகிற கிழவன்
'கொப்பவைப் போல'
'கனகாலத்துக்குப் பிறகு'
சொல்லிக்கொண்டு போகிறான்
பாதையை மறித்துக்கொண்டு நிற்கும்
ஒரு ஊர்மாடு
உதிரி உதிரியாய்
பெருமணல் முற்றத்தில் வீடுகள்"

....

இன்னும் , இது எனக்கு மிகப் பிடித்த கவிதைகளில் ஒன்று ,

Nostalgia

ஒரு மாரிப்பனிக்கால
விடியலில் நான் எழும்புகிறேன்
அப்படியொரு, யாழ்ப்பாணத்தில் படுத்த நினைவு
முருங்கைமர இலைகளும் பூக்களும்
கிளைகளுக்குத் தாவுகிற அணில்களும்
புல் நுனிகளில் பனித்துளி
நான் இரைச்சல் சத்தம்வர புல்லில் சலம் அடித்தேன்.

ச்சா ச்சா ச்தோ
அது என்ன காலமப்பா
வீடுமுழுக்க பூவரசமரம் நிற்கிறது
எங்கள் வீட்டுப் பின்பக்கத்துக் குளம்
இப்போது அது ஒரு நதி
செத்துப்போன அப்பா. வெளிநாடுகளில் இருக்கிற மாமாக்கள்
எல்லாம் நதியில் ஒருக்கா படகோட்டிவிட்டு
வந்து இறங்குகிறார்கள்
நதியோரம் நமது வீடு
படகுகூட ஒரு பூவரசில் கட்டி வருகிறார்கள்
வெய்யில் ஏறுகிறது; அவர்கள் தங்களுக்குள்
கனக்கக் கதைத்து கள்ளுக் குடித்தார்கள்

பறந்துவிட்ட வசந்த காலங்கள்
நிலாமுன்றில் கால்கழுவி
ஒழுங்கையால் போன சைக்கிளையும் மனிதனையும் பார்த்து
பனங்காய் விழுகிற சத்தம் கேட்டு
துயிலுக்குப் போனோம்

- 1993

இந்த நினைவுகளின் அடுக்குகளை நான் மெல்லியதாக உணர முடிகிறது, எங்களது வீட்டின் முன்னால் ஒரு கிரவுண்ட் உண்டு அங்கே தான் கிரிக்கெட்  முதல் பட்டம் வரை விளையாடினோம், பொன்வண்டு முதல் மின்மினிப் பூச்சிகள் வரை அங்கே தான் அறிமுகமாயின. காலையிலும் மாலையிலும் வயலில் புல்லு வெட்டி தலையில் சுமந்து செல்லும் அந்த வயதான பெண்களை நினைத்துப் பார்க்கிறேன், பனி நிறைந்த யாழ்ப்பாணத்தின் பெப்பிரவரி காலைகளில் மாடுகளுடன் நடந்து செல்லும் மனிதர்களின் ஓசையை உணர முடிகிறது. அவர்கள் இந்தக் கவிதைக்குள்  விடுபட்ட சொற்களாயிருக்கிறார்கள்.

இறுதிக்கு கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் 2008 பகுதியில் அல்லது அதற்கு முன்னர் சில மாதங்களின் முன்பிருந்து கேர்பியூ போட்டிருந்தார்கள். நாங்கள் விளையாடிக் கொண்டே இருந்தோம். அப்போது எனக்கு Chees  அறிமுகமாயிருந்தது.

எனது பக்கத்து வீட்டில் சஞ்சி அண்ணையென்று ஒருவர் வந்து செல்வார். அவர்  ஒரு சிறிய இளைஞர் அமைப்பொன்றில் இருந்தார். அது சாரணர் போன்றவொரு அமைப்பு.குறும்பான புன்னகையும் , கீழ்ப் பார்வையில் மற்றவரை எடை போடும் முகமும் அவருக்கிருந்தன. அவருக்கு செஸ் விளையாட ஓரளவு தான் தெரியும் எவ்வளவென்றால் செக் வைத்தாலே செக் மேற் என்று துள்ளியாடுமளவு. அவருக்கு அது மேற் இல்லை என்று சொல்லி விளங்க வைப்பது கடினம். பள்ளிக்கூடத்தில் விளையாடி ஓரளவு நன்றாகவே விளையாட்டாக கூடியவனாக நான்இருந்தேன்.

அநேகமான அந்த கேர்பியூ மாலைகளில் அவருடன் செஸ் விளையாடிக் கொண்டிருப்பேன்,நான் வென்றால்,  நான் அலாப்புவதாக சொல்லி விட்டு எழுந்து சென்று விடுவார். நாங்கள் சின்னப் பெடியள் என்பதால் அவரை நக்கலடித்துக் கொண்டிருப்போம். ஒரு மழை நாள் பின்னேரம் நானும் எனது பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பெடியனும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம், கிட்டத் தட்ட நான் வெல்லும் நிலைமையில் இருந்த போது தான் சஞ்சி அண்ணையை சுட்டு விட்டார்கள் என்ற தகவல் மழையோடு வந்தது. இரத்தம் தார் வீதியில் வழிய அவர் இறந்து கிடந்தாராம் , யாரோ மழையில் நனையாக் கூடாதென்று தென்னோலை ஒன்றை எடுத்து அவர் மேல் போட்டு விட்டார்களாம்.

இப்படி எத்தனையோ வீதியோர மரணங்களையும் நண்பர்களையும் நான் தொடர்ச்சியாக இழந்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் வயதில் பெரியவர்கள் தான். எல்லோரும் விளையாட்டில் கூட்டாளிகள். செவ்விந்தியனின் நண்பர்கள் இயக்கத்துக்குச் செல்வதை பற்றிச் சொல்லும் வரிகளை நான் இப்படிப் பட்ட வாழ்வோடு இணைத்துத் தான் விளங்கி கொண்டேன்.

...
இன்று மீண்டும் புத்துயிர்த்தேன்
கொஞ்ச நேரம்
பின்னேரம் 2 ஆட்டம் Chess விளையாடினேன்
தார்றோட்டும் தெரியாமல்
இருண்ட பிறகு
இயக்கத்துக்குப் போன நண்பர்களைத் தெரிந்து கொண்டு
திரும்பினேன்.
.....
(உயிர்த்தெழுதல்)

.....
பிரிந்து போனவர்கள்

1
நமக்கான காலம்
போய்விட்டதைப்போலுள்ளது
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது.

2
போன ஆண்டிலும் முன்பனிக்காலத்தில்
யுத்தம் வந்து போனது
கடந்த காலத்திற்காக
பத்தாம் வகுப்பு பள்ளிக்கூடத்திற்காக
அறுவடைசெய்த
வயல்வெளிகளுக்காக
அது ஏங்கவைக்கவில்லை.

3
நான்
இனி நெடுகலும் தனித்துத்தான் போனேன்
வயல்காட்டு எல்லைப் பூவரச மரங்களுக்கு
தெரியும்
நிலம் இருண்ட பிறகு
கருங்கல் துருத்தும் தார் றோட்டில்
உழவு முடிந்த கடா மாடுகளைச்
சாய்த்துக் கொண்டு போனான் ஒருதன்
தனித்த பட்டமரத்தில்
அது மேலும் வாழ விரும்பி
இறப்புக்காக முதிய அனுபவங்களுடன் நின்ற
பட்ட மரத்தில்
கொட்டுக்காகம் உச்சிக் கிளையில் வந்திருந்தது
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன்
இயக்கத்துக்குப் போனவர்களில்
ஆனையிறவிலும் மணலாற்றிலும் செத்துப்போக
நான் மட்டும்
ஒரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.

-1991.

......
இந்தக் கவிதையின் பின்னணியில் நண்பர்களாகவும் உறவினர்களாகவுமிருந்த ஏராளம் இளைஞர்கள் , மிகவும் நல்லவர்கள் , ஒவ்வொரு உயிரையும் நேசித்த பலரையும் இந்த நிலத்தின் எல்லோரையும் போல சிறிய வயதில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் பிரிவும் இழப்பும் தான் இந்த யுத்தத்தின் கொடிய பக்கமாயிருக்கிறது.

இந்த வசந்தம்

அன்றைக்கு மாலை
நானும் ரூபனும் கடலுக்குச் சென்றோம்
அவன் வீடுக்குப் போகும்
குறுக்கு வழியில் அவனைச் சந்தித்தேன்
யுத்தம் நடந்துகொண்டிருக்கிற காலம்

வீதியை விட்டு மணலுக்குள் புகுந்து
எருக்கலையருகில்
கடலைப்பார்த்திருந்தோம்
கனத்த உப்பங்காற்று வீசுகிறது
என் முகமெல்லாம்
நெஞ்சுரப்பான மசமசப்பூட்டுகிறது.

சோதினை நடக்கவில்லை
ஒரு பருவகாலம் முழுவதுமே Mood குழம்பிக்கொண்டிருக்கிறது
கன நண்பர்கள் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள்
அவர்களின் போகுதலின் முன்
இந்தக் கடற்கரையில் இப்போ நாங்கள் முகருகின்ற சோகத்தை
முகர்ந்துகொண்டுதான் போனார்கள்
பரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும் ஆகாவிட்டாலும்
இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும்
'யுத்தத்தில் நாங்கள் வெல்லத்தானே வேணும்'

மனச்சாட்சி உறுத்துகிறது
அலைமுறியும் கடற்காற்றில்
பருத்த மணல்கள் கால்களில் விழுகிறது.

- 1991

.....

செவ்விந்தியனின் கவிதைகளில் இன்னுமொரு முக்கிய அம்சம் அதன் சொற்களின் உள்ளூர்த்தனம். மேலும் நேரடியான நடைமுறை வாழ்க்கையில் உள்ள சொற்களை கையாள்தல்,

"காலில் வியர்த்தது
ரௌசரோடு நடக்கக் கஷ்டமாய் இருந்தது
கடற்கரை ஒழுங்கைக்குள் தள்ளாடித் தள்ளாடி
அறைக்குள் போனேன்"  

இன்னும் பல சொற்களை பெரும்பாலான  கவிதைகளுக்குள்ளும் காணலாம்.

*

எனது  டியர் கவிஞனைப் பற்றி எவ்வளவும் சொல்லலாம் , ஒரு கால கட்டத்தின் குரல் அவன். நெருப்பெரிந்த காலங்களில் அதன் வெப்பக் காற்றில்  அலைந்த இக்கவிஞனின் "காடு " என்ற கவிதை உக்கிரமான  ஒன்று. இன்றும் அந்தக் காடுகளுக்கு நான் செல்லும் போது இந்த வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வேன் ,

"பூனை அழுகிறமாதிரி
மயில்கள் அகவுகின்றன."

முழுக்கவிதையும் ,

...
காடு

நடுக்காட்டுக் கோவிலிலிருந்து
பறை அழைத்தது
ஆடுகுத்துகிற மீசைக்காரக் கறுவல்
தன்முகம் சோகத்தோடு நீண்டு அடிக்கிறான்
பறை ஓய்வுக்குப் பின்னாலும்
நெடுநேரம் அவன் முகத்திலிருந்து
கடந்தகாலம் துயரத்துடன் இசைந்தது
இனி அனைத்தையும் கழுவிக் கொண்டுபோக
சத்தமில்லாத மழை
நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து தூறியது
மருதமரங்கள், காயா, வஞ்சூரன், பனிச்சமரங்கள், கொய்யா
இவற்றில் வெண்மை படிந்தது
பழங்காலக் காவில் மணியும்
சனங்களுக்காகவும் கனகாலம் இருந்த தனிமைக்காகவும்
சிணுங்கியது

தோளிலிருந்து பறையை இறக்கி
கொஞ்சம் புக்கைக்காக பறையன் இருந்துவிட்டு
பறையை எடுத்துக்கொண்டு குனிந்து போனான்
கிறவல் பாதையில்
மண்ணில் புதைந்து வந்தேன் நான்
இக்கங்குல்காலத்தில்
ஈனஸ்வரத்தில் பூனை அழுகிறமாதிரி
மயில்கள் அகவுகின்றன.

- 1991

இந்தக் கவிதையோடு ,  செவ்விந்தியனின் தொகுப்பின் இணைப்பை கீழே இணைத்துள்ளேன் நீங்களும் வாசித்துப் பார்க்கலாம் .

கிரிஷாந்.

http://www.noolaham.net/project/02/105/105.htm

செவ்வாய், 20 டிசம்பர், 2016

கடலின் கைப்பிடியளவு உப்பு



( சுகுமாரனும் எனது வாழ்க்கையின் சில பக்கங்களும்)

"சொல்லித் தந்ததோ
கற்றுக் கொண்டதோ போல இல்லை
வாழ்க்கை - அது
குழந்தைக் கதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த
உயிர்"

வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஒரே கவிதை வரிகள் வேறு வேறு அர்த்தங்களை நிகழ்த்துகின்றன. விரிந்து கொண்டே செல்கின்றன. சொற்களின் பளிங்கு மலையிலிருந்து கிளர்ந்து பறக்கின்றன பறவைகள் போன்ற கவிதைகள் , சில தனிமையில் அலைந்து கொண்டிருக்கும் , சில உயர்ந்து மிதந்து கொண்டே செல்லும் , சில நம்முடன் உரையாடும் .. இப்படி அலைந்து கொண்டிருக்கும் பறவைகளில் சுகுமாரனை இன்றைய கிளையில் அமர்த்தினேன்.

"எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல."

*

இந்தப் பறவையின் தனிமை பெரியது. அதன் வானம் என்பது எப்பொழுதும் சிறுத்துக் கொண்டே சென்ற காலத்தில் வெளிவந்த "கோடை காலக் குறிப்புகள் ' எனது தனிமைகளின் போது அருகே இருந்து அழும் ஒரு குரலை எனக்கு தந்துகொண்டே இருந்த காலமொன்றுண்டு. எனது பதினைந்து வயதில் எனது அம்மா இறந்த பின் எனது இருபது வயது வரை ஒரு பெருந்தனிமை என்னுடன் நிழல் போல் குடியிருந்தது. அப்பொழுது தான் கவிதைகளின் பறவைகள் எனக்குத் துணையிருந்தன.சுகுமாரனின் வார்த்தைகளில் சொல்வதானால் "சரணாலயத்துக்கு வரும் பறவை போல ". பிறகு. எனது காதலியை சந்திக்கும் வரை இது பெரிய அலைச்சலாகவே இருந்தது.

சுகுமாரன் 


கவிதைகளை ஒரு "கடப்பு நிலை" என்றே நான் கருதுகிறேன். துக்கங்களை சொற்களின் "சவரக்கத்தி" முனையில் அணுகும் சுகுமாரனின் குரல் எனக்குள் இன்று வரை ஒலித்துக் கொண்டேயிருக்கும் குரல். வாழ்வில் சில கால கட்டங்களில் ஏற்படும் பெருந் தனிமைக் காலங்கள் இலக்கியத்தை விட்டால் எனக்கு ஆறுதல் தர வேறு யாருமில்லை என்ற நிலையை உருவாக்கின . நான் அலைந்து திரிந்தவனல்ல. எப்பொழுதும் வீட்டுக்குள் அல்லது அறைகளுக்குள் மோதி மோதித் திரும்பும் கிளி.

சுகுமாரனின்,
" பூக்களில்  வழியும் ரத்தத்துக்கு
துடைக்க நீளும் சுட்டுவிரலுக்கும்
இடையில்
பறந்து தடுமாறுகிறது கிளி "



அந்தக் கிளியாகவே நானிருந்தேன் , இன்னொரு கவிதையில்,

சுவர்கள்

"வந்த வழிகளெல்லாம் அடைபட்டன
புறங்கள் நிமிர்ந்து சுவர்களாயின
விவரங்களற்று
அகப்பட்டேன் நான்

வானம் சதுரமாய்ச் சிறுத்தது
இரண்டு எட்டில் கால்கள் திரும்ப
என் உலகம்
நொடியில் சுருங்கியது
மீண்டும் மீண்டும் நானே சுவாசித்துக்
காற்று விஷமாயிற்று

வெளியேற வழியற்றுத் திகைத்தேன்
பறவை நிழல் தரையைக் கடக்க
அண்ணாந்தால்
நீல வெறுமை  

ஆதரவுக்காய் அனுப்பிய குரல்
சுவர்களில் மோதிச் சரியும்
வீணாகும் யத்தனங்கள்

தளிர்ப்பச்சைக்கோ
சிரிப்பொலிக்கோ
மழைத்துளிக்கோ
பூக்களுக்கோ ஏங்கும் புலன்கள்

நாள்தோறும் சுவர்கள் வளரக்
கையளவாகும் வானம்
சுதந்திரம் நகர்ந்து போகும்

கதவுகள் இல்லையெனினும்
வெளியைக் காண
சுவருக்கொரு ஜன்னலாவது அனுமதி-
நிச்சயம் வெளியேறிவிடுவேன்."

எனது ஜன்னலாக இருந்தவை இந்தக் கவிதைகளும் , இலக்கியங்களும் தான். எனது அம்மாவின் மரணம் நோயினால் நிகழ்ந்தது. பொதுவாக ஈழத்தின் பிள்ளைகள் என்று கூறிக் கொண்டு வரும் வாழ்க்கையில் , இலக்கியங்களில் வெளியிலிருப்பவர்களின் பார்வை ." யுத்தம் யுத்தம் யுத்தம் " அவ்வளவு தான் , ஏதோ ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சண்டை நடந்து கொண்டிருந்ததாகத் தான் இங்கிருக்கும் சிலர் உருவாக்கியிருக்கும் சித்திரம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவ்வளவு யுத்தத்திற்குள்ளும் எனது வாழ்க்கை வேறொன்றாய் இருந்தது. அது உறவின் சுழல்களுக்குள் சிக்கிக் கொண்டும் , மரணத்தின் மெல்லிய வலியை இரவின் தடிப்பளவிற்கு காவிக்கொண்டும் திரிந்த காலங்களாய் இருந்தது.

எனக்கு நினைவு தெரிந்தது முதல் அம்மா மட்டும் தான் ஆழமான படிமமாக உள்ளாள். அம்மாவின் வாசனை, கருணை நிறைந்த புன்னகை , மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு அலையும் குணம் , தான் நேசிப்பவர்களுக்கான அவரின் பரிவு என்பது எனது இரத்தத்தின் ஒவ்வொரு துளியின் இடையிலும் கலந்திருப்பது, அந்தக் குங்கும முகமும் வீபூதி வாசமும் நிலைத்து நெஞ்சுக்குள் மிதந்து  கொண்டிருப்பது. அவரின் கதையில் சில பகுதிகளை இப்போது உங்களுக்குத் சொல்கிறேன்.

அப்பாவும் அம்மாவும் (எங்களுடைய வீட்டிற்கு முன் உள்ள வெறுங் காணியில் உள்ள கிணற்றுக்கு கட்டில் )


அம்மா எங்களுக்காகத் தான் செத்துப்போனார்,கிட்டத் தட்ட  அது ஒரு தற்கொலை. அப்பாவிற்கு கிட்டத் தட்ட முப்பத்தைந்து லட்ஷம் கடன் இருந்திருக்கும். யாரோ நண்பர்கள் வெளிநாடு செல்வதற்கு பிணைக்கு நின்று ஒரு தொகை ,சண்டைக்காலத்தில் பல குடும்பங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தன , பக்கத்து வீட்டில் கணவன் குடித்து விட்டு அடித்தால் ஆறு மாத்திற்கு அந்த அம்மாவும் ஐந்து பிள்ளைகளும் எங்கள் வீட்டில் தான் வாழ்வார்கள் , இப்படி பல செலவுகள் , எங்கள் அப்பாவிற்கே உரிய கண்டபடி செலவழிக்கும் தனம் என்பவை அந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டன. பன்னிரண்டு வயது அல்லது அதற்கு முன் என்று நினைக்கிறேன், நாங்கள் ரீவியில் சக்திமான் பார்த்துக் கொண்டிருக்கும் போது கடன்காரர்கள் வந்து ரீவியை கழற்றிக் கொண்டு போனார்கள் , இன்னொரு நாள் தொடர்ந்து வீட்டுக்கு வந்து பேசும் கடன்காரர்களில் ஒருவர் , மிகக் கடுமையாக பேசியிருக்கிறார் , நான் அப்போது வீட்டிலில்லை , ஊரே திரண்டு நின்று அதை பார்த்தது. அப்பா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொன்னார்கள். தடுத்து விட்டார்கள்.நான் வீட்டிற்குத் திரும்பிய போது அம்மா பாயில் படுத்திருந்தார், அப்பா உள்ளே பொலித்தீன் பைகளை ஒட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது  மிக்சர்  செய்யும் தொழிலை செய்துகொண்டிருந்தோம். அம்மாவின் உடலோடு ஒட்டி நான் அவரைப் பார்த்தேன் , அழுதுகொண்டிருந்தார் சத்தம் வெளியே வரவில்லை , மூச்சு மட்டும் ஒரு கொடும் வேதனையில் சுருண்டிருக்கும் பாம்பின் சீறலைப் போலிருந்தது. அதன் சூட்டை என்னுடல் உணர்ந்தது.

அதன் பின்னர் , காலை முதல் இரவு பன்னிரண்டு மணி வரை அம்மா நின்று கொண்டோ இருந்து கொண்டோ வேலை செய்தபடியே இருந்தாள். மிக்ஸர் ,மரவள்ளிப் பொரியல், பால்கோவா, மஸ்கற் , பூந்திலட்டு என்று ஒரு பெரிய தொழிற் சாலை  போல் வெறும் ஐந்து பேரை வைத்துக் கொண்டு இயங்கிய அந்த வேளையில் அம்மா ஒரு இயந்திரம் போலிருந்தாள். சமையல் வேலை , பக்கிங் வேலை , சீட்டுப் போடுதல் அது இதென்று அவள் அத்தனை வேலைகளையும் செய்வதற்கு எங்கிருந்து சக்தி கிடைத்ததென்று தெரியவில்லை . சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு , அது பெண்ணுக்குரிய சக்தி.

இப்படி மூன்று வருடங்கள் உழைத்து ஆறு லட்ஷம் மட்டும் தெரிந்த ஒரு உறவினருக்கு கொடுக்க வேண்டியிருக்க , நிம்மதியாய் மூச்சு விட கொஞ்சக்காலமிருக்க , அம்மா நோயில் விழுந்தாள் , நேற்று ஆஸ்பத்திரிக்குச் சென்றது போலிருக்கும் , 2009  இறுதிக் கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்தது ,யுத்தம் தொடர்பில்  எனக்கு எந்த அக்கறையுமிருக்கவில்லை , அம்மா நோயாளியாய் ஒரு மாதமிருந்தாள் . அந்த ஒரு மாதம் நான் பிறப்பதற்கு முன்பிருந்த அப்பாவையும் அம்மாவையும் நான் பார்த்தேன் , அம்மாவால் எழவே முடியாது. குளிக்க வார்ப்பதிலிருந்து அனைத்து வேலைகளும் அப்பா தான் செய்தார் , அம்மாவை விட்டு அவர் எங்கும் சென்றதாக ஞாபகமில்லை. ஒரு தாயைப் போலவிருந்தார்.

திடீரன்று ஒரு நாள் , மிகச் சாதாரணமாக அம்மா செத்துப் போனாள் , நான் பள்ளிக்கூடம்  விட்டு வந்துகொண்டிருந்தேன்," அம்மாவுக்கு சீரியஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிட்டினம்" என்று பக்கத்து வீட்டு அங்கிள் ஒரு ஆட்டோவில் வந்து சொன்னார் , எங்களது வீட்டின் ஒழுங்கைக்குள் நுழைந்ததும் எல்லாம் தெளிவாயிற்று நீளத்திற்கு வாகனங்கள் , ஊரே கூடியிருந்தது , அப்பா ஒரு காட்டு விலங்கொன்றைப் போல் கதறியழுதுகொண்டிருந்தார். பெண்கள் பலரது அழுகையொலியையும் தாண்டி  ஒரு ஆணின் கதறலிருந்து. அது ஆணின் கதறலா அந்த ஒரு மாதம் நான் பார்த்த தாயின் பேரழுகையா என்று தெரியவில்லை ,ஆனால்  நான் அழவில்லை . அன்று முழுவதும் அழவில்லை.    

அடுத்த நாள் காலையும் முதல் நாளிரவு  அம்மா எனதும் தங்கச்சியினதும் பெயரைச் சொல்லி அழைத்துக் குரல் கேட்டதாக அனைவரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள் , நான் நள்ளிரவு பாடும் தேவாரத்திற்குப் பின் நித்திரைக்குப் போயிருந்தேன் , எனக்கு எதுவும் கேட்கவில்லையென்று சொன்னேன்.

பின் அன்று அம்மாவின் உடலை வீட்டின் முன் வைத்து செய்யும் சடங்கில் சுண்ணத்து இடிக்கும் பாடலை ஒரு கிழட்டுப் பாடகன் பாடிய போது நெருப்புக் கயிற்றினால் உடலை அறுப்பது போன்றதொரு வலியை உணர்ந்தேன். கண்ணீர் வந்தது.

பின் பல வருடங்கள் கடந்து விட்டது. அம்மா பாடிய பாசுரங்களின் நினைவுகள் தான் எனது முதல் கவிதை அனுபவம்.

இதற்கு பல வருடங்களுக்குப் பின் எனது அப்பா மிகவும் மாறி விட்டார், இன்று எனது சுதந்திரம் எந்த ஒரு சாதாரண தமிழ் இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரமல்ல . கட்டற்ற சுதந்திரம் , இலக்கியம் என்று ஊர் சுற்றவும் தெருக்களில் இறங்கிப் போராடவும் எனக்கு எந்தத் தடையுமில்லை , நான் இலக்கியம் எழுதுவதில் அவருக்கு சந்தோசம் தான். அவருக்குள் இருந்த தாய்மை பின்னொருபோதும் இன்று வரை மறையவேயில்லை.

அவருக்கும் , இந்த நினைவுகளுக்கும் சேர்த்து நான் ஒரு கவிதையினை எழுதியிருந்தேன் ,

அப்பாவும் கோவர்த்தனகிரியும்

உனது அன்பு
ஒரு பரிசுத்த மழைக்காடு

உன் நேசம் பற்றிய விரல்களில்
என் குழந்தைக் கால வாசனை

முதல் பரா லைட் பார்த்த போதும்
முதல் சைக்கிளை விடும் போதும்
முதல் துப்பாக்கி வாங்கித் தந்த போதும்
எவ்வளவு நெருக்கமாய் இருந்த நீ .

முதல் சிகரட்டின் பின்னும்
முதல் காதலின் வாசனையின் பின்னும்
எவ்வளவு அந்நியமாகிவிட்டாய்

உனது தோல்வியுற்ற தற்கொலை முயற்சியின் பின்னர்
அந்த  வீட்டுக்கு நஞ்சு தேய்ந்த கழுத்து
அழுத அம்மாவின்  உடலோடு ஒட்டியிருந்தேன் ,
எவ்வளவு விஷமூறிய பாம்பின் சுவாசம் அது .

பின் அவள்
ஒரு முற்றுப் பெறாத பாசுரத்தைப் போல
முடிக்கவே முடியாமல் தொண்டைக்குள்
சிக்கிக் கொண்டாள் ,

அப்பா -
காலம் ,பிம்பங்கள் பெருகும் வெளி

எவ்வளவு எளிமையானவை நாட்கள்
இந்த நாட்களில் ஒரு தாயை
உனக்குள் வளர்த்திருந்தாய் .

உனது அன்போ -
இச் சிறு மழைக்காய்
என் மேல் நீ தூக்கிப் பிடித்திருக்கும்
மலைக் குடை .


இந்த நினைவுகளை எழுதியதன் காரணம் சுகுமாரனின் இன்னொரு கவிதையைப் பற்றி நினைவு கொள்ளத் தான் , அதே நேரம் அவர் ஒரு தந்தையை வெறுப்பவராக இருந்தார். வெறுப்பென்று சொல்ல முடியுமா தெரியவில்லை. அது ஒரு பகையுமற்ற அன்புமற்ற நிலை.

ஆனால் அவர் எழுதிய இன்னொரு கவிதை எனது அம்மாவை தொடர்ந்து நினைவு படுத்திக் கொண்டேயிருப்பது,

முதல் பெண்ணுக்குச் சில வரிகள்

இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்
அல்லது
இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என‌
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதி காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப் பொருட்களுடன் குதூகலமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ, காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்து வைக்கும் கதவுகளில்
வெறுமையின் தாள ஒலி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச் சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப் பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப் பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்க‌ள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப் போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலைந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக மிஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்
இன்னும் நான் நேசிக்கும் முதல் பெண் நீ...


இது வேறொரு தொகுப்பிலிருக்கும் கவிதை , கோடை காலக் குறிப்புகளில் உள்ள குடும்பம் , உறவுகள் , தனிமை என்பன ஒவ்வொரு வார்த்தையையும் எனக்காக எழுதியது போன்று உணர்வளித்தவை , தொகுப்பு வெளியாகி இந்த வருடத்துடன் முப்பது வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் , எரியும் ஒரு நினைவைப் போல் அது என்னுடன் இருந்து வருகிறது,

அவரது குரலில் அன்பு பற்றி வெடித்தெழும் வரிகள் என்றைக்குமிருக்கும் குரலாக இருந்து கொண்டிருக்கிறது , நமது காலத்திலும் அது தொடர்கிறது ,

"இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாதபிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல "

இப்போது அன்பு -
சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனை "

...

இப்படி சுகுமாரனின் வரிகளை எழுதிக் கொண்டேயிருக்கலாம். எனது அனுபவத்தின் படி கவிதையை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடு மினக்கெடுவது வீண். எதையும் அறிதலின் மூலமே உணரலாம். அதனால் தான் எனது வாழ்வின் சில முக்கியமான கால கட்டங்களைக் குறித்து விரிவாக எழுதியிருந்தேன். இனி எனது நண்பர்கள் கோடை காலக் குறிப்புக்களை எடுத்துக் படித்து விட்டு அவர்களின் கதைகளை சொல்லட்டும் , எனக்கு ஒவ்வொரு வரியும் களிம்பாக இருந்தது. ஒவ்வொரு வரியும் ஒரு நினைவாக இருந்தது. இந்தப் பறவை எனது வானத்தைச் சேர்ந்த பறவையென்ற நினைவு தான் எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது.

கிரிஷாந்

சுகுமாரனின் வலைத்தளம் -

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D)

http://vaalnilam.blogspot.com/

சுகுமாரனைப் பற்றிய பிற எழுத்துக்கள் -

http://www.jeyamohan.in/774#.WFolU1N97IV

சில கவிதைகளின் இணைப்புக்கள் -http://thooralkavithai.blogspot.com/2011/04/blog-post_10.html 

மீண்டும் ஒரு கவிதைக் காலம்




 "Touch Screen " என்ற கல்பற்றா நாராயணனின் கவிதையொன்றை குமரகுருபரனின் கவிதை வெளியீட்டில் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். மிக அற்புதமான கவிதையொன்று, அதன் உள்ளடக்கம் இப்படியிருக்குமென்று அவர் சொன்னார்.

"அப்பிடியில்லைத் தாத்தா ,இப்பிடி  என்று சொல்லி  பேரக்குழந்தை எனது செல்பேசியை வாங்குகிறாள் ,தண்ணீரின் மேல் பூச்சிகள் பறந்து செல்வதைப் போல் அவளுடைய விரல்கள் தொட்டு , நான் தொட்டால் எழாத உலகங்கள் அதிலிருந்து வருகிறது , வண்ணங்கள் விரிகின்றன , எழுத்துக்கள் வருகின்றன , போர் வீரர்கள் வாளுடன் அலைகிறார்கள், கொண்டா என்று சொல்லி வாங்கி நான் அழுத்தினால், அது உறைந்து நின்று விடுகிறது , நீங்க அழுத்திறீங்க , மெல்லத் தொட்டாப் போதும் , இப்பிடி மெல்லத் தொட்டாப் போதும் , தொடவே வேண்டாம் அது மாதிரி  காட்டினாலே போதும் என்றாள், அப்ப இது தானா ரகசியம் , இத்தனை வயது வரை மெல்லத் தொட வேண்டிய இடங்களிலெல்லாம் வன்மையாகத் தொட்டது தான் என்னை இங்கு  கொண்டு வந்து  நிறுத்தியிருக்கிறதா? ஓங்கி உதைத்துத் திறந்த கதவுகள், வன்மையாகக் குரல் எழுப்பிய முற்றங்கள் , மிதித்துத் தாண்டிய தொலைவுகள் , இப்படித் தாண்டி வர வேண்டியவை தானா ?"

என்று அக் கவிதையின் உள்ளடக்கத்தை கூறியிருந்தார் , இது போன்றதொரு கவிதையைப் படித்தே நீண்ட காலமாகின்றது. இப்பொழுது உள்ள கவிதைப் போக்குகளை தமிழில் எடுத்துக் கொண்டால் மிகவும் தீவிரமற்ற காலப்பகுதியாகத் தானிருக்கிறது. ஜெயமோகன் அந்த உரையில் குறிப்பிடும் பல விடயங்கள் எனக்கு உடன்பாடானவையே. தமிழில் இன்று உருவாகியிருக்கும் கவிதைப் போக்கென்று அவர் தமிழ் நாட்டின் கவிதைகளையும் ,அதைத் தாண்டி தொகுப்புகள் வழியாக அறிமுகமாகும் ஈழத்துக்கு கவிதைகளையும் வைத்தே அவருடைய மதிப்பீடு அமைந்திருக்கும் என்ற படியால் , ஈழம் சார்ந்து தொடர்ந்து கவிதைகளை வாசித்து வருபவன் என்ற அடிப்படையில் எனது சில அவதானிப்புக்களை முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

கிழக்கில் உருவாகியிருக்கும் போக்குகளையும் வடக்கின் போக்குகளையும் தெளிவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கிழக்கின் போக்குகளை அதிகம் கையாள்பவர்கள் அல்லது புதிய போக்குகள் தொடர்பாக உரையாடக் கூடியவர்கள் ஏதோவொரு வகையில் ரியாஸ் குரானாவின் கவிதை பற்றிய உரையாடல்களை கவனித்து வருபவர்களாகத் தானிருக்கும். கவிதைக்குள் இயங்கும் மொழியின் உளவியல் பற்றியும், "நவீன கவிதை காலாவதியாகி விட்டது"  என்ற அறிவிப்புடன் வெளிவந்த அவருடைய கட்டுரைத் தொடர்களாகட்டும் அவர் தொடர்ந்து உரையாடலை நிகழ்த்தி வருவதாகட்டும் பெருமளவில் கிழக்கின் கவிதைப் போக்கில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி வருகின்றது. வடக்கின் கவிதைப் போக்கில் புதிதாக எழுதி வருபவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுபவர்கள் பெரும்பாலும் இத்தகைய உரையாடல்களில் இருந்து விலத்தியே இருப்பவர்கள் , அவர்களுடைய போக்குகள் வேறு வகையில் உருவானவை , ஆதி பார்த்திபனின் பிரியாந்தி அருமைத்துரையின் யோகியின் கவிதைகள் பற்றித் தான் எனது கரிசனை உள்ளது. ஈழம் அல்லது பொதுவான தமிழ்ச்சூழலில்  இவர்களது குரல் முக்கியமானதென்று நான் கருதுகிறேன்.

கிழக்கைப் பொறுத்த வரையில் ஜம்சித் சமான் , சாஜித் , நஸீஹா முகைதீன் ஆகியோரை எதிர்காலத்தில் பங்களிப்பை வழங்கக் கூடிய  வாய்ப்பிருப்பர்களாக கருதுகிறேன்.

இவர்களை பற்றிய தனிப்பட்ட விரிவான குறிப்புகளை எழுத வேண்டும். இப்பொழுது எனது கவிதை பற்றிய ரசனை, தேர்வு எப்படி உருவாக்குகிறது என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

நீண்ட நாட்களின் பின் நான் ஆரம்பத்தில் வாசித்த கவிதைத் தொகுப்புக்களை மீண்டும் வாசித்தேன் இன்றும் எனது தேர்வில் , பரிந்துரையில் மாற்றமில்லை. சுகுமாரனின் "கோடைகாலக் குறிப்புகள் " சேரனின் "நீ இப்பொழுது இறங்கும் ஆறு " சிவரமணியின் கவிதைகள் , எஸ்போஸின் கவிதைகள் , அஸ்வகோஷின் "வனத்தின் அழைப்பு " ஆத்மாவின் "மிக அதிகாலை நீல இருள் " , ஊர்வசி , பா.அகிலன், நட்ஷத்திரன் செவ்விந்தியன் ஆகியோரின் கவிதைகள், மனுஷ்ய புத்திரன், அனாரின் "உடல் பச்சை வானம் " ... இவை தான் எனது தமிழ் நவீன கவிதை  வாசிப்பில் நான் கருதும் முக்கியமான வாசிப்பு நிலைகள் . மரபு  என்று பார்த்தால் ஆண்டாள் , கபிலர் , கணியன் பூங்குன்றனாரின் இரண்டு கவிதைகள் , திருவாசகம் இவர்களிலும் இவற்றிலும் தான் எனது வாசிப்பின்  முக்கியமான  திருப்பங்களை ,அனுபவங்களை ஏற்படுத்தியிருப்பவர்கள்.

சேரன்
 சுகுமாரன் 

                 

இவர்களைப் பற்றியும்  இவர்களது கவிதைகளை நான் ஏன் முக்கியமானதென்று கருதுகிறேன் என்பது பற்றியும் விரிவாக எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன்.

இப்பொழுது வடக்கிலிருந்து எழுத ஆரம்பித்த அதன் சூழலிலிருந்து எழுந்த கவிதைகளின் குரல்களையும் அதன் போக்குகளை வடிவமைத்த காரணிகள் பற்றியும் எனது அவதானிப்பை முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை , யோகி ஆகியோரின் காலகட்டம் கிட்டத் தட்ட ஒன்றே. 2009  களின் பின்னர் தான் அதிகமானளவு கவனத்திற்குள் இவர்கள் வந்தார்கள் , ஆனால் ஆச்சர்யமான அளவில் மூன்று பேருமே மூன்று வித்தியாசமான ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத போக்குகளையும் கவிதை முன்வைப்புக்களையும் கொண்டவர்கள்.

ஆதியின் கவிதைகளின் பொதுப்போக்கை பிரிவதும் சேர்வதும் என்றும் ,பிரியாந்தி யுத்தமும் காதலும் , யோகி உள்ளமும் இறையும் என்றும் சுருக்கிக் கொள்ளலாம் . ஏதோவொரு  நிலையில் இவர்களின் முக்கியமான கவிதைகளிலெல்லாம் இந்தப் பொதுப்போக்கை அவதானிக்கலாம். இவர்கள் மூவரையும் ஓரளவு அறிந்தவன் என்று வகையில் எழுத்துக்களுக்கு ஊடாகவும் தனிப்பட்ட உரையாடல்களின் வழியும் இவர்களை  பற்றிய எனது கருத்துக்களை எழுதவிருக்கிறேன். முதலில் ஆதி பார்த்திபனுடைய  கவிதைகளை பற்றி அடுத்த கட்டுரையினை எழுதப் போகிறேன்.

ஆதி பார்த்திபன் 


கிரிஷாந்

திங்கள், 19 டிசம்பர், 2016

ஈழத்தின் இலக்கியத் தேக்கம் - எதிர்வினை

ஈழத்தின் இலக்கியத் தேக்கம் கட்டுரையின் ஆரம்பம் மற்றும் முதலிலிருந்து வருகின்றேன். “படைப்பாக்கம் தான் இருப்பில் நிகழும் மாபெரும் புரட்சி ” இந்தக் கட்டுரையின் மையம் இதை நோக்கியதாக அமைந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். தவறெனில் திருத்தவும். சரி நான் இதை படிக்கும்போது புதிய சொல்லின் இதழ் ஒன்றின் ஆசிரியர் குறிப்புக்கள் அனைத்தும் கண் முன்னே தோன்றின. அதில் ஒன்றைக் குறிப்பிடுகின்றேன்.

படைப்பு- படைப்பு என்ற செயல் அல்லது தருணம் இல்லையென்றே நாங்கள் கருதுகின்றோம். இந்தச் சொல் பிரதிக்கு கூடிய சுமையையும் பிம்பத்தையும் கொடுக்கும்.
படைப்பாக்கம் என்பது படைப்புக்களைத்தானே உருவாக்கும்? அப்படியெனில் படைப்பு என்ற ஒன்று இருப்பதாக உணர முடியுமா? இல்லை படைப்பு என்ற ஒன்று இருப்பதாக உன்னரவில்லை எனில் படைப்பாக்கத்தின் மூலமான புரடசி சாத்தியா?
மற்றொன்று "வாசிக்கவும் எழுதவும் வருபவர்கள் இந்த கோடிக்கணக்கான கும்பல்களிலிருந்து அவற்றின் சிந்தனைகளிலிருந்து அறுபட்டு , வாழ்க்கையை வேறு விதமாக அணுகக் கூடியவர்கள். அவர்களையிட்டே இந்த உரையாடல் .அதை விட்டுவிட்டு அந்த கோடிக்கணக்கான மந்தைகளை மேய்ப்பதல்ல இதன் நோக்கம்" இந்தக் குறிப்பிடலில் எனக்கு உடன்பாடற்ற தன்மையே காணப்படுகின்றது. ஏனெனில் அந்தக் கோடிக்கணக்கான கும்பலில் ஆயிரக்கணக்கான கதை மாந்தர்கள் உள்ளனர்.

எழுத்தாளர்கள் அவர்களிடமிருந்தே கதைகளையும் காலங்களையும் எடுக்கின்றார். அவர்களின் காலத்திலிருந்துதான் தன் எழுத்தின் நுட்பத்தைப் புலப்படுத்துகின்றார். எனவே அந்த மனதைகளை மேய்ப்பதுவும் எழுத்தாளன் மற்றும் வாசகனின் பொறுப்பாகவே கருதுகின்றேன். குறைந்தபட்ஷம் கருத்துருவாக்குநர்களையாவது உருவாக்கும் செயல் அங்கு நிகழும்.

வாசிப்பில் நான் எழுத்தாளரை என் மனக்கண்முன்னே நிறுத்தி வைத்துக் கொண்டுதான் வாசிப்பேன். நன்றாக இருந்தால் மனத்தால் தழுவிக் கொள்வேன். எனக்கு திருப்தியைத் தரவில்லையென்றால் திட்டிக் கொள்வேன். ஏனென்றால் நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன் என்றால் அங்கு என்னுடைய நேரம் , பார்வைத் திறன், கிரகித்தல் திறன், புரிந்துகொள்ளும் தன்மை, விமர்சனத்தனமிலா, கருத்துவாக்கவியல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து அங்கு செலவழிக்கப்படுகின்றது.

ஆனால் உரையாடல் என்பதை பொறுத்த வரை மிக்க குறைவு என்றுதான் சொல்வேன். நான் பல்கலைக் கழகத்தில் 4 ஆம் ஆண்டில் படிக்கின்றேன். இந்த நான்கு வருடங்களில் இலக்கியம் பற்றி உரையாடுவதற்கான ஒரு தளமோ அல்லது இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களோ கிடைக்கவில்லை. இந்த ஆண்டில்தான் கபிலை நான் கண்டுபிடித்தேன். எப்போதாவது அவசரச் சந்திப்பில் இலக்கியம் பற்றியும் வாசிப்புப் பற்றியும் அவனுடன் கதைக்கும்போதும் நான் இவ்வாறே குறைபாட்டுக்கு கொண்டேன். பல்கலைக்கழகம் போன்ற அறிவார்ந்த தளத்திலிருந்து என்னால் இலக்கியம் பற்றிய உரையாடலை முன்னெடுக்க முடியவில்லை என்பதுவே எனக்கு பெரும் குறையாகவே உள்ளது.
போகட்டும்
ஈழ வரலாற்றில் இருக்கின்ற இடைவேளியைப் போன்ற இலக்கியத்திலும் ஒரு இடைவெளி என் வெற்றிடம் என்றே கூறும்படியான ஒரு நிலை இருப்பதாகவே தோன்றுகின்றது. நம்மிடம் இலக்கியச் சண்டைகள் அதிகரித்த அளவுக்கு இலக்கிய முயற்சிகள் நிகழவில்லை. வாசகனின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத நிலையில் வாசகன் அந்த இலக்கிய முயற்சியை வலிந்து தன மீது திணித்துக் கொண்ட நிலைமையே இங்கு காணப்படுகின்றது. ஆங்காங்கே நடைபெறுகின்ற புத்தக வெளியீடுகள் , விருதுகள் இவையனைத்தும் அதன் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.

எம்முடைய கடந்த தலைமுறையினர் இலக்கியம் பற்றிய சரியான புரிதலை எமக்கு ஏற்படுத்தியிருக்கவில்லை. அதன் வெளிப்பாடே இந்த உரையாடல்.
//தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கை பொறுத்தவரையில் பல்கலைக் கழகத்தின் செயல்பாடு பூச்சியம். அதனை அவ்வாறு நாம் எதிர்பார்க்காத தேவையில்லைத் தான். அதன் கும்பல் மன நிலைக்குள்ளிருந்து யதார்த்தனும் கௌதமியும் இயங்கும் பாட்டை தனிப்பட்ட ரீதியில் நானறிவேன். அறிவுத் துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமேயில்லை//

அறிவுத்துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இயங்கு நிலையில் இருக்கின்ற பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒரு கல்விச்சாலை மீது திணிப்பதில் உள்ள இடர்பாடுகளையும் சிந்திக்க வேண்டும் . நான் பல்கலைக் கழகத்தின் மீதான ஒட்டுமொத்த பிரியத்தையும் இழந்து விட்டேன். அங்கிருந்துகொண்டு குரல் எழுப்புவது என்பது வெற்றுக் கனவு என்பதையும் கண்டுகொண்டேன். அந்த இயந்திரத்தனமான ஆதிக்க மனநிலை மண்டிக்கிடக்கும் வெளியில் இலக்கியம் என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றுதான். புத்தகம் படிப்பவர்களை ஒரு காலத்தில் அறிவார்ந்தவர்களாகக் கருதிய கதைகள் பல நான் அறிவேன். உதாரணமாக ஏஜே வை குறிப்பிடுவேன். ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது தோழர்களே. அங்கிருந்துகொண்டு புத்தகம் படிப்பவர்கள் மொக்கைகள், மொன்னைகள் அல்லது சீன் பார்ட்டிகள். (இதிலும் நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்) அய்யோ அதை பற்றிக் கதைக்க நினைத்தாலே என் மனமும் அறிவும் சோர்ந்து விடுகின்றது.

சரி இப்போதாவது இந்த உரையாடலைத் தொடங்கினோமே. வெளியில் இருக்கும் வாசகர்கள் என்பவர்களிற்கு இலக்கியம் என்பதை ஏதோ தொட முடியாத சிகரமாக காட்டுகின்ற செயலைத் தவிர்த்து விட்டாலே பொது. இங்கு ரமணிச்சந்திரன் வாசகர்களை எப்படி லியோ டால்ஸ்டாயையைப் படிக்க வைப்பது என்பது பற்றியும் வைரமுத்துவின் ரசிகர்களை மஃமூத் தர்வீஸை எப்படி படிக்க வைப்பது என்பது பற்றியும் சிந்திக்க தலைப்படுவோமாக.

(இந்தப் பதிவில், பதிலில், பகிர்வில் தவறேதும் இருப்பின் சுட்டிக்காட்டவும்)

//


//

1 - மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் தான் அது , கிரியேட்டிவிட்டி என்று ஓஷோ சொல்லும் விடயம் தமிழில் கொண்டு வரும் போது படைப்பு கொஞ்சம் நெருக்கமான மொழிபெயரப்பாக இருக்கும் என்று கருதினேன் . ஏனெனில் அவர் கூறும் அர்த்தத்தில் "புத்தாக்கம் " என்றும் மொழிபெயர்க்க முடியவில்லை . அதற்காகத் தான் ஆங்கிலத்திலும் மேலே அதனைக் குறிப்பிட்டிருந்தேன் . தவிர புதிய சொல்லின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு . அதே நேரம் அது ஒரு உரையாடலுக்கான தொடக்கப் புள்ளியும். இந்த உள்ளடக்கத்தில் நாம் அவதானிக்க வேண்டியது "கலையாக்கம் " தொடர்பான அவரது பார்வையை என்று தான் நான் கருதுகிறேன்

2 - மந்தை என்பது "கும்பல் மன நிலையை " குறித்தே நான் பயன்படுத்தியிருந்தேன். வாசிக்கதர்களெல்லாம் முட்டாள்கள் என்று நான் கூறவில்லை . ஆனால் ஏதோ ஒரு வகையில் மக்களிடம் இலக்கியம் சென்று சேர்க்கிறது , கதை , கவிதை என்று வாழ்க்கையின் ஒரு நாளில் எத்தனையோ கவிதை வரிகளை எளிமையாகக் கடந்து கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்த "மாஸ் மென்டாலிட்டியை " நாம் கடப்பதற்கு இலக்கியம் நமது காலத்தின் முக்கிய வடிவம் . மந்தை என்பது கீழானது என்ற அர்த்தத்தில் அல்ல . கும்பல் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தியிருக்கிறேன் .

ஆகவே கும்பலில் இருப்பவர்களை நோக்கிப் பேசினாலும் எழுதுபவர்கள் அதிலிருந்து வெளியே நிற்பவர்கள் தான் , வாசிப்பவர்களுக்கு உண்மையில் அவர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களுக்கு வெளியே தான் அவர்களின் உலகம் இயங்கி கொண்டிருக்கும் . அது தான் இலக்கியம் என்று நான் நம்புகின்றேன் .

//அறிவுத்துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இயங்கு நிலையில் இருக்கின்ற பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒரு கல்விச்சாலை மீது திணிப்பதில் உள்ள இடர்பாடுகளையும் சிந்திக்க வேண்டும் . நான் பல்கலைக் கழகத்தின் மீதான ஒட்டுமொத்த பிரியத்தையும் இழந்து விட்டேன். அங்கிருந்துகொண்டு குரல் எழுப்புவது என்பது வெற்றுக் கனவு என்பதையும் கண்டுகொண்டேன். அந்த இயந்திரத்தனமான ஆதிக்க மனநிலை மண்டிக்கிடக்கும் வெளியில் இலக்கியம் என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றுதான். புத்தகம் படிப்பவர்களை ஒரு காலத்தில் அறிவார்ந்தவர்களாகக் கருதிய கதைகள் பல நான் அறிவேன். உதாரணமாக ஏஜே வை குறிப்பிடுவேன். ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது தோழர்களே. அங்கிருந்துகொண்டு புத்தகம் படிப்பவர்கள் மொக்கைகள், மொன்னைகள் அல்லது சீன் பார்ட்டிகள். (இதிலும் நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்) அய்யோ அதை பற்றிக் கதைக்க நினைத்தாலே என் மனமும் அறிவும் சோர்ந்து விடுகின்றது. //

இந்தப் பத்தியிலேயே கேள்வியும் பதிலும் உள்ளது . நீங்களே முன்னுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதென்று விட்டு பின்னுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள் . இது தான் எனது வாதமும் இப்பொழுது இருக்கும் நிலவரத்தை மாற்ற வேண்டும் என்பது தான் எனது குரல் . அதன் செயல்பாடு பூச்சியம் என்று நான் சொன்னால் , இல்லை அதை மாற்றி விட்டோம் என்று குரல் எழுவதையே விரும்புகிறேன் . நான் முயற்சி செய்தேன் தோற்று விட்டேன் என்பதையல்ல . பல்கலைக் கழகம் மீது தீர்க்கமான விமர்சனங்களை நீங்கள் வைக்க வேண்டும் . இலக்கியம் வாசிப்பவரை , எழுதுபவரைத் தவிர வேறெவருக்கும் அந்த guts இருக்காதென்பது எனது நம்பிக்கை . நீங்கள் வடிவாக அதை யோசித்துப் பார்க்கலாம் . இன்று பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் மீது மாற்றுக கருத்துக்களை அதில் படிக்கும் போதே வெளியிடுபவர்கள் யார் ? யதார்த்தன் , நீ , கபில் என்று மிகக் குறைந்தவர்களே எனது அவதானிப்பில் , வேறு யாரும் இருக்கவும் கூடும் . நீங்கள் எல்லாம் எங்கிருந்து இதற்கான வலிமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நான் இலக்கியம் என்று தான் சொல்வேன் .

Kirishanth-

ஈழத்தின் இலக்கியத் தேக்கம்


Creativity Is the Greatest Rebellion In Existence – ஓஷோ

osho
osho

அன்றாட கும்பல் மன நிலைகளிலிருந்து வெளியேற வேண்டுமென்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இலக்கியமோ அல்லது வேறெந்த கலைவடிவமோ தேவையானது. வெற்றுக் கோஷங்களுக்காக இலக்கியம் செய்வதென்பது காலம்தோறும் எண்ணுக்கணக்கற்று உருவாக்கி வந்திருக்கின்றன.அவற்றுக்கு ஆயிரக்கணக்கில் வாசகர்களும் விருதுகளும் அங்கீகாரங்களும் கூட கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்தக் கும்பல் மன நிலையை ஒரு நல்ல வாசகர் எளிமையாக கடந்து விடுகிறார். இன்றைய சம கால இலக்கிய போக்குகளில் பல் வேறு உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை அரைகுறையாக இருக்கலாம் , ஆனால் தேவையுள்ளது.
நான் ஆரம்பித்த உரையாடலை பற்றி கொஞ்சம் தெளிவு படுத்த விரும்புகிறேன். இன்றைய இந்த அன்றாட இலக்கிய விவகார நிலவரங்களையிட்டு புதிதாக வாசிக்க வருபவர் , அல்லது இந்த உரையாடலில் தொடர்ந்து கலந்து கொள்ள விரும்புபவர்கள் சில புரிதல்களுடன் இருப்பது நல்லது.
வாசிக்கவும் எழுதவும் வருபவர்கள் இந்த கோடிக்கணக்கான கும்பல்களிலிருந்து அவற்றின் சிந்தனைகளிலிருந்து அறுபட்டு , வாழ்க்கையை வேறு விதமாக அணுகக் கூடியவர்கள். அவர்களையிட்டே இந்த உரையாடல் .அதை விட்டுவிட்டு  அந்த கோடிக்கணக்கான மந்தைகளை மேய்ப்பதல்ல இதன் நோக்கம்.
வாசிப்பது , உரையாடுவது என்ற இரண்டு பெரும் நிலைகளை பார்த்தால் இரண்டிலுமே ஒரு ஒத்த தன்மையுள்ளது. வாசிப்பதும் ஒரு உரையாடல் தான் குறித்த எழுத்தாளரும் வாசகரும் உரையாடிக் கொள்ளும் அக உரையாடல்.மற்றைய  உரையாடல் என்பது கூட்டாக நிகழ்வது.
எட்வினின் கருத்துக்கள் கடந்த காலத்திலிருந்து ஒலிப்பவை , நான் சம கால உரையாடல்களை மையமாகக் கொண்டே இருவரின் பெயரைக் குறிப்பிட்டேன். அதனைக் கூட இன்னும் விரிவாக எழுதலாம், ஆனால் எட்வின் இலக்கிய வாசிப்பை நிறுத்தி இன்னொருவகையான வாசிப்பு தளத்திற்கு நகர்ந்து விட்டார். இது இயல்பாகவே இப்படி ஆகின்ற சூழ்நிலை தான் தமிழ்ச்சூழலில் இருக்கிறது. அந்த கால கட்டத்து விமர்சன முறை மற்றும் விடுதலைப் போராட்டம் சார் பிரச்சார இலக்கியங்களின் தீவிர வருகை என்பனவும் இந்த இலக்கிய போக்குகளை தீர்மானித்திருக்கலாம். அத்தகைய பிரச்சார எழுத்துக்கள் அதன் தேவை முடிந்ததும் காலாவதியாகிவிடும். நமது சூழலில் நடந்திருப்பது அது தான்.
சிவத்தம்பி கைலாசபதி போன்றோரையே “முடிசூடா மன்னர்கள்” என்று குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. அவர்களுடைய பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. ஆனால் அவர்கள் உருவாக்கியதை தொடர்ந்து வளர்த்துச் செல்ல யாருமில்லாது போனதும் துர திருஷ்டம் தான் ,
இவர்களுக்கு மாற்றாக பல்கலைக் கழகத்திற்கு வெளியில் இயங்கியவர்களில் அ.யேசுராஜாவின் பங்களிப்பை பெரிதும் மதிப்பிடும் அவர்களது தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் உரையாடியிருக்கிறேன், அவரது பங்களிப்பையும் குரலையும் கூட நாம் கால கட்டத்துடன் இணைத்தே மதிப்பிட முடியும்.

கடந்த காலத்தை மதிப்பிடுவதற்கு நம்மிடம் எந்த முறையுமில்லை . அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த அத்தனையையும் படித்து விட்டு விமர்சனம் செய்து அதிலிருந்து எழுந்து வரக் கூடிய நம் இலக்கிய வரலாற்றைக் கட்டியெழுப்ப நம்மிடம் அந்த கால கட்ட எழுத்துக்களும் விமர்சனங்களும் தானிருக்கின்றன. அவை கூட மிகவும் கேள்விக்குள்ளாக்கப் படக் கூடிய ரசனைகள் .
அவர்களில் பெரும்பாலானவர்கள் வாசகர்களா? என்பதே திகிலூட்டும் கேள்வி. இலக்கியங்களிலிருந்து அவர்கள் எடுத்துக் கொண்டது பெரும்பாலும் அரசியல் சித்தாந்தங்கள் , அல்லது சில எளிமையான கருத்துக்கள் .விடுதலைப் போராட்டம் எழுச்சிபெற்ற காலத்தில் அவர்கள் இலக்கியத்தைப் பற்றி குறைவாக எழுதியதால் இலக்கியம் தப்பித்தது. அதைத் தாண்டி அவர்களிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்றியது விடுதலைப் போராட்டத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று. ஆனாலும் இன்று உருவாகியிருக்கும் “ஈழத்து இலக்கிய போக்கு ” என்ற சொல்லாடல் கூறி நிற்கும் வரலாற்றை சிவத்தம்பி கைலாசபதி போன்றோர் இருந்த மையங்கள் அதிகார பூர்வமாக நிறுவின. நிறுவிக்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றன.ஆகவே இது போன்ற அரை குறை வரலாற்று நிலையிலிருந்து இன்று நாம் தொல்லை பட்டுக் கொண்டிருப்பது ஒரு மதிப்பீடு சார்ந்த எழுத்துத் தளத்தை நமது தலைமுறையில் உருவாக்குவது பற்றித் தான். அதற்கு வாசிப்பை விட்டால் வேறு வழிகளும் இல்லை.
இப்பொழுது இருக்கும் இலக்கியச் சூழலில்  யார் வாசகர் ? யார் எழுத்தாளர் ? எது புத்தகம் ? யார் விமர்சகர் ? போன்று எண்ணற்ற கேள்விகளுடன் நிற்கிறோம் ,
ஒரு பொது விவாத தளத்தையோ அல்லது வித்தியாசமான தீவிரமாக இயங்கும் தளங்களையோ நாம் உருவாக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களில் ‘யாழ் . இலக்கிய குவியம் “இயங்கிய அளவு கூட இலக்கியத்திற்காக இயங்குதல் என்ற நிலைமை தோன்றவேயில்லை.
தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கை பொறுத்தவரையில் பல்கலைக் கழகத்தின் செயல்பாடு  பூச்சியம். அதனை அவ்வாறு நாம் எதிர்பார்க்காத தேவையில்லைத் தான். அதன் கும்பல் மன நிலைக்குள்ளிருந்து யதார்த்தனும் கௌதமியும்  இயங்கும் பாட்டை தனிப்பட்ட ரீதியில் நானறிவேன். அறிவுத் துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமேயில்லை,
ஆக வெளியிலிருக்கும் வாசகர் இலக்கியத்தை நோக்கி எப்படி நகர்வது என்பது தான் இங்குள்ள சிக்கலென்று நான் கருதுகிறேன் , எட்வின் கௌதமி யாதார்த்தன் ஆகியோரின் உரையாடலில் இந்த கேள்வி அடியாழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்னும் சில நண்பர்களும் உட் பெட்டியில் உரையாடியது இதைத் தான் , ஆகவே நாம் சில நடைமுறை சாத்தியமான வழிகளில் இலக்கியத்தை உரையாடவும் பரவலாக்கவும் வேண்டும். முதலில் இலக்கியத்தை நாம் புரிந்து கொள்ளவும் அதை பற்றி விவாதிக்கவும் பழக வேண்டும் , இந்த இணைய வெளி நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு.  வெட்கமற்று ஈவிரக்கமற்று தமக்கு சரியென்று படுவதை தமக்கான நியாயங்களுடன் முன்வைக்கப் பழக வேண்டும்.
அது தான் எது கவிதை என்பதை நோக்கி நம்மை நகர்த்தும் எது இலக்கியம் எவர் எழுத்தாளர் இலக்கியம் எதற்குப் போன்ற குடைந்தெடுக்கும் ஆயிரம் கேள்விகளை தீர்த்து வைக்கும். வெற்று அடையாள அரசியலைக் காவும் இலக்கிய மொண்ணைத் தனங்களிலிருந்து வாழ்க்கையை நோக்கித் தன் கண்களைத் திறக்கும்.


-கிரிஷாந்-

எலக்கிய கொசிப்


இலக்கியத்தைப் பற்றி கதைக்கத் தொடங்கியதும் பல்வேறு கேள்விகள் பல்வேறு சந்தேகங்கள் முன் பல நண்பர்களால் எழுதப்பட்டிருக்கின்றது , பிரதானமாக அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதியிருப்பவர்கள் விஜயரட்ன எட்வினும் கௌதமியும் .
அவர்களின் கருத்துக்கள் ,
எட்வின் ,
இணையத்தில் – முகநூல்-மின்னிதழ்-வலைத்தளம்-புளொக்ஸ் – என்பவற்றில் விடயத்தைப் பார்த்தவுடன் எழுத வேண்டும் என்பது கடினகரியங்களில் ஒன்று.
அச்சுப்பதிவு போல வைத்துப் பார்த்து பார்த்து – அடிக்கோடிட்டு – குறிப்பெழுதி, எழுத முடியாத நிலை. மறுபுறம் பதிவிறக்கி வைத்து – ஆறுதலாக வாசித்துப் பின்னர் எழுதலாம் என்றால், அது இதுவரைக்கும் எனக்குச் சாத்தியமாகாத கலையாகவே இருந்து வருகிறது. எனவே, அவசர அவசரமாக எழுத வேண்டிய துர்ப்பாக்கியம். அதுவும் நன்று…
கவிதை பற்றி இரண்டே இரண்டுபெயரைக் குறிப்பிட்டு கட்டுயின் போக்கை சிதறியடித்திருக்கிறீர்கள். நிற்கட்டும்…1985 களில், தமிழல் இலக்கிய விமர்சமனம் பெரும் அறிவியல் துறையாக மட்டுமன்றி, படைப்பிலக்கியங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய துறையாகவும் இருந்தது. படைப்பிலக்கியகாரர் விமர்சகர்களை மையமாகக் கொண்டே இயங்கினார்கள். விமர்சனமே ஒரு படைப்பாகப் பார்க்கப்பட்டது!
ஈழத்தில்-யாழில், இலக்கிய விமர்சகர்கள் ஒரிருவர்தான் இருந்தனரெனினும் அவர்கள் முடிசூடா மன்னர்களாக இருந்தார்கள். கடும் கறாரான இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு, படைப்பிலக்கியகாரர்களை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தார்கள். மறுபுறம் ‘கோபுரத்தில்’ வைத்துப் போற்றியதும் உண்டு. முற்போக்கு-பிற்போக்கு என இரண்டு அணியாக இலக்கியம் – இலக்கியவிமர்சன உலகம் இயங்கியது. அதற்கப்பால் நற்போக்கு அணியும் உருவாகியது என்றால் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
இலக்கிய வாசிப்பு-இலக்கியத் தேடல்-இலக்கிய விமர்சனங்கள்-கலந்துரையாடல்கள் எனக் கொஞ்சப் பேராவது அப்போதிருந்தார்கள். எங்கள் சிலரின் குறிப்பிடத்தக்களவு காலம் அதற்காகவே செலவிடப்பட்டது. சிலர் மிகத்தீவிரமாக – அதுதான் வாழ்வு என ஈடுபட்டார்கள். நாங்கள் கற்றுக்குட்டிகள். அனால் நாங்கள் இலக்கியங்கள் – இலக்கிய விமர்சனங்கள் குறித்து ஈடுபாட்டுடன் இருந்தோம். இலக்கியங்கள் எங்களை ஈர்த்தது. இலக்கியங்கள் எங்களை ஈர்க்கும் வகையில் புதுமைகளை செய்துகொண்டிருந்தது அப்போது.
தற்போது நிலைமை மாறியிருக்கிறது. கடும் கறாரான விமர்சனக் கோட்பாடுகள் – விமர்சனத்தில் முடிசூடா மன்னர்கள்-அதற்குள் சிக்கப்பட்டு உழலும் படைப்பாளிகள் என எதுவும் இல்லை! படைப்பிலக்கியம் எல்லாவற்றையும் பிய்த்துதறிக் கொண்டு – வெளிவந்து கொண்டிருக்கிறது. இது எழுத்துக் காரர்களின் காலம் போலும். விமர்சகர்களின காலமல்ல. வாசகர்களின் காலமுமல்ல என்பதுவும் கவலைதரும் உண்மையே.
என்ன நடக்கிறது என்பதை நின்று நிதானித்து செல்லக்கூடிய காலமல்ல இது. எழுதுவுதும் – வெளியிடுவதும் என்பதற்கான காலம். மீறிச் சிலர் படைக்கிறார்கள். அவை பேசப்படுகிறது – அவதானிக்கப்படுகிறது.
தற்போது பொதுவில் இலக்கியங்கள் என்று எதனையும் வாசிப்பதில்லை. நிலைமை மாறிப்போய்விட்டது. இலக்கியம் புதிதாகப் படைப்பதில்லை என்னும் போது, இலக்கியப் படைப்பில் புதுமை இல்லை என்கிற போது, இலக்கியம் நீண்ட காலமாக ஒரே அச்சில் சுழல்கிறதாகத் தெரிகிற போது, இலக்கியம் மனதைத் தொடாத போது, இலக்கியம் ஒரு புது அனுபமாக இல்லாத போது, இலக்கிய அக்கறை குறைந்து – இல்லாமலே போய்விட்டிருக்கிறது.
அப்போது இலக்கிய வாசிப்பும் மனக்கிளர்ச்சியை ஊட்டிய இலக்கியங்கள் இன்று மீள வாசிக்கிற போதில், அவ்வாறான உணர்வை தரவுமில்லை!
இளமைக் காலத்திற்கும் – முதிர்ச்சி – முதுமைக் காலத்திற்கும் இடையில் வேறுபாடகள் எறப்படுவதுமுண்டோ தெரியிவில்லை. இதற்;கு மேலாக திரைப்படங்கள் – குறுப்படங்கள் – விடீயோ கிளிப்புக்கள் என்பவற்றின் வருகை மாற்றத்தையும் ஏற்படுத்தியிமிருக்கிறது.
இலக்கியம் சமூக மாற்றத்திற்கானது என்ற கோட்பாடு இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிற நிலையில் இலக்கியங்கள் மீதான அக்கறையும் குறைந்து போய்விட்டுள்ளது! மாறாக நாம் அறிவியல் அதுவும் அரசியல் – அரசியலைத் தீர்மானிக்கிற சமூக-பொருளாதாரம் குறித்த அறிவியலின் பால் ஈடுபாடு காட்ட வேண்டியிருக்கிறது. சமூக அக்கறையானது, ஒரு கட்டுரையில் இலக்கியம் தருகிற உணர்வை-மனக்கிளர்ச்சியை தரும்போலுள்ளது. கூடவே தெளிந்த பார்வையையும் தருகிறது
விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிற சில இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்ற உணர்வுண்டு. ஆனால் பழைய காலத்து இலக்கிய வாசிப்பிலிருந்த அவா தற்போதில்லை. வாசிக்காது விட்டால் வருகிற பெருங்கவலை-தேடியோடி வாங்கிப்-பெற்று வாசிக்கிற அவதி எதுவும் தற்போதில்லை.
எல்லாவற்றையும் மீறி, மனதை நெகிழ வைக்கிற – மனக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிற படைப்புக்கள் படைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள் படைப்பாளிகள்..
எனினும் இலக்கியத்தின் மூலம் சொர்க்கத்துக்குப் போவதெப்படி என்ற கேள்வியை தொடர்வோம்.
விஜய்..
//
கௌதமி ,



கிரிஷாந்த் இலக்கியம் பற்றிய உரையாடல் ஒன்றைத் தொடங்கியிருக்கின்றார். அது பற்றி இன்றுதான் படிக்க முடிந்தது. கவிதை பற்றிய கேள்விகளோடு அந்த உரையாடல் தொடங்கியிருக்கின்றது. நல்லது. என்னிடமும் இது பற்றிய கேள்விகள் நிறைய உண்டு. சில மாதங்களுக்கு முன்னால் எங்களுடைய துறை சார்ந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ஒரு பெண் கவிஞர் (அப்படித்தான் சொன்னார்கள்) அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வை நானே தொகுத்து வழங்கியதால் என் கருத்து நிலையை அந்த இடத்தில் வெளிப்படுத்த முடியாது போனது. அவருடைய 2 கவிதைத் தொகுப்புக்களை அதற்கு முன்பு படித்தேன். அநேகமான வரிகள் தமிழ் சினிமா பாடல்களின் சாயலில் எஞ்சியவை படைப்பு நிலையில் மிகப் பலவீனமானவையாகவும் மொழிநடை சார்ந்தோ கருத்தியல் சார்ந்தோ எந்த வித அழகியலும் இல்லாத வரிகளாகவே இருந்தன. அந்த நிகழ்விற்கு முதல் வாரம் அவருடைய கவிதை நூல் எங்கள் துறை சார்ந்த மாணவர்களுக்கு விலைக்கு வழங்கப்பட்டிருந்தது. அநேகமானவர்கள் அதை படித்திருந்தனர். அங்கு இடம்பெற்ற விமர்சன உரையிலும் அந்த கவிதை நூல் பற்றிய புகழ் மாலைகள் அநேகமாக இடம்பெற்றன. இறுதியாக ஒரு மாணவன் மட்டும் எழுந்து ‘உங்கள் கவிதைகளில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் எழுதியவை எல்லாம் ஏற்கனவே தமிழில் நிறையவே உள்ளன. என் உங்களால் ஒரு படைப்பு நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை.. என்னால் அவற்றை கவிதைகளாகவே ஏற்க முடியாது.” இவ்வாறு கூறினான். இதற்கு அந்தப் பெண் கவிஞர் இறுதியாகப் பதில் அளிக்கையில் “நான் எழுதுவது சாதாரண மக்களுக்கானது. அது அவர்களுக்கு விளங்குகின்ற மொழியிலேயே எழுதப்பட வே்ண்டும். புரியாமல் எழுதுவதன் மூலம் நாம் எதை சாதித்து விட முடியும்? சாதாரண மக்களின் பிரச்சனைகளை சொல்வதற்கு சாதாரணமான மொழிநடையை போதுமானது. மிகைப் படுத்திய வார்த்தைகள் எதற்கு?”
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம். இந்த நிகழ்விற்கு முன்னும் பின்னும் எனக்கு இலக்கியம், கவிதை தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படாமல்தான் இருக்கின்றது.
1.எது கவிதை?
2.கவிதைக்கென்று இலக்கணங்கள் உள்ளதா?
3.சாதாரண மக்கள் எனப்படுவோர் யார்? அவர்கள் இலக்கியம் படிக்கின்றார்களா?
4.அச்சு ஊடகமான பத்திரிகைகளில் கவிதைக்கென ஒதுக்கப்படும் பக்கத்தில் எழுதப்படுபவை அனைத்தும் கவிதைகளா?
5.கவிதையெனில் தொடர்ந்தும் கவிதைகளின் தரம் பற்றிய மக்கள்(பத்திரிக்கை வாசகர்) மன நிலை என்ன?அது கவிதை இல்லையெனில் என் இதுவரை அது பற்றிய கேள்விகளையோ உரையாடல்களையோ தொடங்கவில்லை.?
6.ஒரு படைப்பை புத்தக வடிவில் கொண்டுவந்த பிறகு அது சாதாரண மக்களுக்கானது என்னும் வாதம் எவ்வளவு தூரம் பொருத்தமானது?
7.எத்தனை கவிதைகள் மறு வாசிப்புச் செய்யப்படுகின்றன?
8.முகப்புத்தகத்தில் இடப்படும் ஒன்றன்கீழ் ஒன்றான வரிகள் அடங்கிய பதிவுகள் அனைத்தும் கவிதையெனப்படுமா? (என்னையே நான் கேள்விக்குட்படுத்துகின்றேன்)
கொஞ்ச நாளைக்கு முன்பு பழைய பேப்பர் கட்டிங்குகளை படித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பான மித்திரன் பேப்பரில் கவிதையென்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டிருந்தவற்றை படித்துப் பார்த்தேன். அதை ஒரே வரியில் தூக்கிப்போட்டால் சாதாரண உரையாடலைப் போல் இருக்கும். அதே பேப்பரில் சிறுகதை என்ற அடையாளப்படுத்தலுடன் ஒரு கதை. அதன் ம் உடைவு இவ்வாறு இருந்தது
‘உண்மைதான் மீனாவைப் போல் எத்தனையோ பெண்கள் கண்மூடித்தனமாகக் காதலுக்காக உயிரையே விடுகின்றனர்.பெண்களே மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்யாதீர்கள். உங்கள் மனதை நீங்களே மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.’
சின்ன வயசில படிச்ச நீதிக்கதைகளில் கூட ஒரு படைப்பாக்கம் இருக்கும். கதைகளைக் கேட்டே வளர்ந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாம். நம்மால் ஒரு பத்திரிகைக்கு அனுப்பும் கதையை கதைப்போக்கில் எழுதமுடியவில்லை என்பது வருந்தத் தக்கது.
இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம். 5 வருடத்துக்கு முன்பு படித்த அதே கவிதைப்பக்க வரிகளின் பாணியே இப்பொழுதும் கூட பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றது என்பது என்னமாதிரியானதொரு நிலை?
நீயென் இதையெல்லாம் கேட்கின்றாய் என்று எவராவது கேட்பீர்களேயானால் ‘நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன். காசு கொடுத்து பேப்பர்களை சிற்றிதழ்களும் வாங்கி அதில் இப்படியான எழுத்துக்களை படித்து சலிப்படைந்து நானே எழுதிவிடலாம் என்ற விஷப் பரீடசையில் இறங்குமளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றேன்.
இன்னும் சாதாரணமாக வரிவரியாகக் கவிதைகளும் வெறும் ஒரு ஊரிலே கதைகளைத்தான் எழுதுவோம் என்பவர்கள் நல்ல டயரியையோ அல்லது முகப்புத்தகத்திலோ பரீட்ச்சார்த்த முயற்சிகளையோ மேற்கொள்ளலாம். அதை விடுத்து புத்தகங்களை அச்சேற்றி அதை காசு கொடுத்து வாங்கி படிக்கும் என் போன்ற வாசகர்களை ஏமாற்றுவது பெரும் பாவம் என்பதைக் கவனத்தில் கொள்க.
அண்டைக்கொருநாள் கவிதை பற்றிய உரையாடல் வந்தபோது கபில் கிரியினுடைய கவிதை வரியான
“வீடென்பது பேறு” என்பதை விடுமுறைகளில் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் நினைத்துக் கொள்வதாகக் கூறினான். என்ன ஆச்சர்யம் நானும் அதே வரிகளை அம்பனைச் சந்தியைக் கடக்கும் இரவுகளில் முணுமுணுத்து கொண்டுதான் செல்வேன்(அதன் அர்த்தம் வேறாக இருப்பினும் இரு வேறுபட்ட வாசகருக்கு ஒரே அர்த்தத்தை கொடுத்திருக்கின்றது.
). அதைவிட எந்த யார் என்னை விட்டுப் பிரிந்தாலும் உடனே ஆதியின் “பறவைகளே கூடிழத்தலே ஞானம்’ வரிகள் மனதுக்குள் ஓடும். அப்போதெல்லாம் எனக்கு அந்த வரிகள் பெரும் ஆறுதலாய் இருக்கும். அதுபோல்தான் பிரமிளின் அத்தனை கவிதைகளும் எனக்கு மயிலிறகுகள். மனுஷ்யப்புத்திர்னின் சம்மதம் என்று சொல் கவிதையை என் தோழியொருத்திக்கு படித்துக் காட்டினேன் அழுதே விட்டாள். அந்தக் கவிதைக்காக மட்டும் அவரை வெகுவாகப் பிடித்துப் போனது. அதற்குப் பின் நான் பதிந்த பதிவுகள் அனைத்திலும் மனுஷ் இருந்தார். நான் அதைக் கூச்சமின்றிக் கூறுவேன்அவருடைய ஒரு கவிதை என்னைப் பலவித கோணங்களில் சிந்திக்க வைத்தது. அது ஒரு சாதாரண கவிதை தான். அதன் வாசகர்களும் என்னைப்போன்ற சாதாரண இளைஞர், யுவதிகள்தான். இருப்பினும் அந்தக் கவிதை என் மனதை பிசைந்தது. அது போல் சேரனுடைய
போ”ய் வா,
உடைந்த கண்ணாடி துண்டே
உனது அச்சம் வேறு
எனது அச்சம் வேறு”
இந்த வரிகளும் அடிக்கடி வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கும் வரிகள்.
இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன்.
கவுதமி .
இது
போக விருதுகள் பற்றியும் யதார்த்தன் எழுதியிருக்கும் துக்கக் குறிப்பு .
யதார்த்தன் ,

( யதார்த்தன் )
சமீபத்தில் மெலிஞ்சி முத்தன (Melinchi Muthan) சந்திச்சம் . மனுஷன் கூத்து பற்றி அற்புதமான விசயங்கள் சொன்னார். அவரும் அவருடைய தமயனும் கூத்து பாடல்களை பாடிக்காட்டிச்சினம். சிலிர்த்து போய் உட்கார்ந்திருந்தோம். அவர்களுக்குள்ள இருந்த கலையின் உம்மத்தமும் ஆன்மாவும் அத்தனை அற்புதமாக இருந்தது.
கதைச்சுக்கொண்டு இருக்கும் போதே ‘ இலக்கியம்’ (இலக்கு +இயம்) எண்ட சொல்லில உங்களுக்கு உடன் பாடிருக்கான்னு கேட்டார். தமிழ்ல்ல உந்த சொல் எப்ப புழக்கத்தில வந்ததுன்னு தெரியேல்ல, அனேகமா 19 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வந்திருக்கணும்ன்னு நினைக்கிறன்.
அதென்ன மசிர் இதுக்கு மட்டும் ‘இலக்கு ‘ வேண்டி கிடக்கு எல்லாக்கலைக்கும் அன்புதானே இலக்கு.
‘ஓநாய் குலச்சின்னம்’ மாதிரி ஒரு அற்புதத்த நிகழ்திட்டு ஜியாங்ரோங் எண்டுற மனுஷப் எங்க போனார் என்ன ஆனார்ந்னு கூட தெரியேல்ல. சீனால சிவப்பு புத்தகத்துக்கு பிறகு அதிக பிரதிகள் போன ஒரு பிரதி அதுதான் . உலகம் முழுக்க அவரை கொண்டாடிட்டு இருக்கு ஆனா அந்த மனுஷன்ர ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான் கிடைக்குது. மனுஷன் தனக்கான வாழ்க்கைய எங்கையோ போய்ட்டுது.
நான் எல்லாம் சின்ன கதைய எழுதிட்டு பிக்சன் ரைட்டர்ன்னு சொல்லிட்டு திரியிறன் . வெக்கமே இல்லாம. கிரிஷாந்அடிக்கடி கேப்பான் நீ எல்லாம் என்ன எழுதிக்கிழிச்ச ? எழுத்தாளன்னு சொல்ல ந்னு! பகீர்ன்னு இருக்கும். ஏன்னா எங்க சுட்டு எத சொருகி நாம எழுத்தாளன் ந்னு காட்டிக்கிட்டம்ன்னு நமக்கு மட்டும் தானே தெரியும்.
இண்டைக்கு பாத்தா தமிழ் எலக்கிய பரப்பு விருதுக்கு அடிபடுது . த்தா என்ன மயிர எழுதி கிழிச்சிட்டம்ன்னு விருது நமக்கு ?
ஒரு வேளை எலக்கியத்தில ‘இலக்கு’ மசிர் எண்டுறது இந்த விருது மாதிரி அங்கீகாரம் தானோ ? விஜய் டீவிக்காரன் மாதிரி கூப்டு எல்லாருக்கும் விருது குடுங்கடா வாங்கி பெட்ரூம்ல வைச்சுக்கிறம்.
இமையம் ஒருக்கா சொன்ன மாதிரி ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ந்னு ஒருத்தன் 2000 வருஷத்துக்கு முதல் பாடினது இண்டைக்கு வரைக்கும் நிக்குதடா, அழிக்கவே முடியாத ஒரு சொல்ல கண்டு பிடிச்ச அவனும் கவிஞன் , முட்டா பயலே நீயும் கவிஞனாடா?
-ய-
இன்னொரு உட் பெட்டிக் கேள்வித் தொகுப்பு .
இலக்கியம் இன்னும் உயிரோட இருக்கா??இறந்தால் மறு ஜன்மம் அதுக்கு உண்டா?
இருந்தால் எது இலக்கியம்?
கவிதைகளின் பணி என்ன?
—–
இப்படியா நீண்டு கொண்டிருக்கும் இலக்கிய உரையாடலே எமது காலத்தில் குறைவென்பது நமது இலக்கிய ரசனையை அறிவை கொண்டாட்டத்தை மட்டுப் படுத்தும் செயல். இது எவ்வளவு குதூகலமாயிருக்கிறது. தெளிவாக உள்ள போதும் போதையிலும் கூட இலக்கியத்தையே உரையாடும் நமக்கு வேறென்ன வேண்டும் . கேவலமாக திட்டிக் கொண்டிருந்தாலும் , இலக்கியத்தில் அது ஒரு வகை உரையாடல் தான். நாம் நாம் நம்பும் விஷயத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
மேலே எழுந்த உரையாடல்களுக்கு யாரும் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் , அவற்றையும் தொகுத்துப் போடுவோம் . எவ்வளவோ அரை குறை விடயங்களுக்காக நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கும் நாம், இலக்கியத்திற்கு நேரமொதுக்கி உரையாடுவோமே . என்ன கெட்டு விடப் போகிறது
கிரிஷாந்