புதன், 28 செப்டம்பர், 2016

மாற்றுக் குரல்



யாழ்பாணத்தைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட உரையாடல்களை கடந்த காலத்தில் இரண்டு முறை விதை குழுமம் ஊடாக நிகழ்த்தியிருந்தோம் , முதலாவதாக அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உரையாடுவது நிகழ்ந்தது. அதில் பல விவாதங்களை நிகழ்த்தி சில முடிவுகளுக்கு வந்திருந்தோம் . ஒரு பொது தளத்தை இதன் பொருட்டு உருவாக்குவதென்பது அவற்றுள் முக்கியமான ஒரு முடிவு .

பிறகு சில மாதங்களின் பின் மறுபடியும் கூடி அதற்கான அமைப்பு கட்டமைப்பை உருவாக்குவது பற்றி கலந்துரையாடி , அந்த அமைப்பிற்கு "மாற்றுக் குரல் " என்றும் பிறகு அதற்கு ஒரு நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்கினோம் . அதனை சுதந்திரமான ஒரு அமைப்பாக உருவாக்குவதே எங்கள் எண்ணம் . எந்த ஒரு அமைப்பினதும் துணை நிறுவனமாகவோ ,அவர்களின் பிரச்சினைகளுக்கு போய் நின்று கதைத்துக் கொண்டிருப்பதுமோ அன்றி , இந்த புதிய அமைப்புக்கு ஏராளம் வேலைகள் இருக்கின்றன . அதன் சுதந்திரம் மற்றும் எல்லைகளை சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டும் . மாற்றுப் பாலினத்தவர்கள் பற்றிய எந்த அடிப்படை அறிவுமற்ற பெரும்பான்மை சமூகத்தில் , முதலாவதாக இவர்களின் குரல் ஒலிப்பதே மாற்றானது தான் . பாலியலை ஒரு திருட்டுப் பண்டமாக அல்லது பால் நிலையை வெறும் இருமையில் மட்டுமே பார்த்து பழகிய சமூகத்திற்கு இவர்களின் குரல் கேலிக்குரியதாக இருக்கலாம் , ஆனால் ஒட்டுமொத்தமான இந்த சமூகத்தின் பல புரிதல்களுக்கு இவர்களின் குரல் வேறு பல அர்த்தங்களையும் கேள்விகளையும் உருவாக்கும்.

இன்று ஈழ நிலா பதிவு செய்த ஒரு பதிவை கீழே தருகிறேன் .

//ஏனோ இவர்கள் வாழ்க்கையில் குருதில் குளிப்பிற்கு பஞ்சமே இராது. கடந்த இரு நாட்களுக்கு முன் என் தோழி எனக்கு அலை பேசி எடுத்திருந்தாள் அவள் ஒரு மாற்றுப்பாலின பெண். ஒரு வருட இரு வருட நட்பல்ல பதினாறு வருட நட்பு. கனகாலம் தொடர்பில் இல்லை தீடீரென வந்த அலைபேசிக்கு இசைவடைய என் கை பதறிற்று ஆர்வத்தோடு எடுத்து வணக்கம் சொன்னேன் சத்தேமே இல்லை ஓ என்ன புலம்பலுடன் அழ தொடங்கினாள். ஓர் இரு நிமிடங்கள் பேச்சே இல்லை விம்மலும் விக்கலுமான அழுகையே நிறைந்திருந்தது.
அதன் பின் மெல்ல மெல்ல குரலை வெளியில் கொணர்ந்தாள். "எனக்கு வாழ பிடிக்கலடி சாகப் போறன் இவயலோட இருக்கிறத்துக்கு சாகிறான் நிம்மதி" என்ன நடந்தது என்பதை தீர விசாரிக்க ஆரம்பித்தேன்
சாதரண ஒரு மாற்றுப்பாலின பெண் ஆரம்பத்தில் பாடசாலை சமூகம் வீடு இவற்றில் சந்திக்கும் பிரச்சினைக்கு ஒரு படி இவளுக்கு மேலே போய்விட்டதை அறிந்தேன்.

இவளின் குடும்பத்தினர் எல்லாரும் நன்கு படித்தவர்கள். தாய் யாழ் போதனா வைத்தியசாலையில் சிரேஷ்ட அறுவை சிகிச்சை அறை தாதியாக இருந்து ஓய்வு பெற்றவர். அது போல் சொந்தங்கள் எல்லாருமே ஆரியர் பணியிலும் கிராம சேவகர் அலுவலர்களாகவும் உள்ளனர். இப்படி கல்வி அறிவு கொண்டவர்களுக்கு பகுத்தறிவு என்பது அறவே இல்லை.
2012 தனது பெண்மை குறித்த விடயங்களை வீட்டில் சொன்னதிலிருந்து இன்று வரை மனஉளைச்சலில்தான் கிடக்கிறாள். இதில் என்ன கொடுமைகள் என்றால் ஆரம்பத்தில் இவளுக்கு மனநோய் பிடித்துள்ளதாக எண்ணி யாழ் பிரபல மனநல வைத்தியரை சந்திக்க ஏற்பாடுகள் நடை பெற்றன. பிறகு வேறு ஒரு உள ஆரோக்கிய நிபுணரை நாடி வைத்தியம் மேற்கொண்டுள்ளனர் இதில் என்ன நாசம் என்றால் மனநல மருத்தும் படித்தவர்களுக்கு பாலினதேர்வு ( Sexual orientation) பாலின அடையாளம் ( Sexual identi) இடையிலான வேறு பாடு தெரியாமல். இவளை ஓர்பால் ஈர்புள்ள நபராக காட்டி இரவில் நன்றாக தூங்கி எழும்ப நித்திரை குளிசைகளை கொடுத்துள்ளார்கள்.
சிறிது நாட்களில் அவர்களின் அந்த முயர்ச்சி தோற்றுப்போகவே. யாரோ ஒருதி வீட்ட வந்து இவளுக்கு பெண் பேயை யாரோ செய்வினை செய்து ஏவி விட்டதாக கூறியுள்ளார்கள். அதற்காக யாழ்ப்பாணம் சுன்னாகம் பக்கம் உள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்து இவளுக்கு பேய்விரட்ட ஏற்பாடு நடந்துள்ளது. அதுக்கும் இவள் போயிருக்கிறாள். அதிலும் பயனில்லை பின் பாசையூர் போகும் வழியில் தியான இல்லத்தில் அருட்தந்தை லோறன்ஸ் நன்றாக பேயோட்டுவார் என்று யாரோ கூற அங்கேயும் பல முறை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கும் சென்று பயனில்லை அவள் பிறப்பில் கொண்ட பெண்மையை மனநோய் என்னனும் பேய் பிசாசு என்றும் கூறி அறிவியல் ரீதியாக சிந்திக்க மறந்த படிப்பறிவாளிகளை நினைத்தால் ஆத்திரம் மூண்டது எனக்கு. ஈற்றில் வெளியூர் சென்று யாரோ வாங்கி கொடுத்த மத்திரித்த வீபூதியை அவள் உண்ணும் உணவில் கொடுத்த வண்ணம் இருந்துள்ளனர். இதை அறிந்த பின்னே இனியும் பொறுக்க முடியாதென என்னை அழைத்தாள்.
நான் என்ன பொலிசா இல்லை ஐ நா மனித உரிமை ஆணை குழு செயலாளரா. என்னால் ஒரு உதவி செய்ய முடியும் என்றேன் நீ யாழ்பாணத்தை விட்டு போய் வேறொரு இடத்தில் இருக்க உதவுவேன் என்றேன். கொழும்பில் தோழி ஒருதியை தொடர்பு கொண்டு இவளை பற்றி கூறினேன் உடனே தன்னிடம் அனுப்பு என்றாள். அந்த இரவே புதிய பறவையாய் புறப்பட்டு போனாள்.
பெற்றவர் பாசமும் வேசம் போடும் மாற்றுப்பாலினத்தவர் விடாயத்தில் அவர்களின் சுய கௌரவத்தால்.

திருநங்கையரின் பெண்மை நிராகரிக்க படுமிடாத்து தம்முயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு போய்விடுவர்.//

இதற்கு காரணம் இவர்களுக்கிடையிலான அல்லது இவர்கள் பொருட்டு உண்மையான அக்கறை கொள்ளும் ஒரு கூட்டு அமைப்பை நாம் வலிமையாக உருவாக்கவில்லை என்பது தான்.

ஊடகங்கள் இவர்களின் கதைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. அவை புதினம் பார்க்கும் இந்த சமூகத்திற்கு நொறுக்குத் தீனி போல் தான்இ ருக்கும் . ஆனால் நாம் சிந்திக்க வேண்டியதும் உழைக்க வேண்டியதும் இப்படி தன்னுடைய கூட்டிலேயே தன்னால் வாழமுடியாமல் பறந்து தப்ப நினைக்கும் பறவைகளைப் பற்றியது தான் . அவர்களுக்கான கூட்டு பலத்தை , பாதுகாப்பை நாம் உருவாக்க வேண்டும் , இந்த முறை நாம் சிந்திக்க வேண்டும் எப்பொழுதையும் போல உருக்கமான பதிவு என்று கடந்து கொண்டிருக்க கூடாது . இது ஈழ நிலாவுக்கு தெரிந்தது ,எழுதி விட்டாள். ஆனால் இன்னும் இப்படி எத்தனை கதைகள் நம் குருட்டுக் கண்களுக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ தெரியாது .

அவர்களின் மாற்றுக் குரல் இப்பொழுது ஒலித்தேயாக வேண்டும் , நமது காலத்தில் நம்மோடு வாழும் அனைவரதும் சுய கவுரவத்தையும் , மரியாதையையும் அவர்களுடைய தேர்வு செய்யும் உரிமையையும் , பாதுகாப்பையும் நாம் காப்பாற்ற வேண்டும் , அது தான் இந்த இனத்தையும் அறிவையும் விடுதலை செய்யும் .

00

முகம் ,
கழன்று உறையும் வெயில் மலர்
உடல்.
சிறகுதைக்கும் இரவிலை விளிம்புருளும் நீல ஒளி
பித்தேறும் முத்தம்
பிரிந்துறங்கும் நீள் இராப்பகல்களில்
ஞாபகத்தின் கொடுங்கனா
பிறகோ
நீ நகரும் பாதைக் கனவுகள்
சூரிய நிறத்திலொரு சதைகளின் பைத்திய வளைவுகள்
நிலைபெயரா நினைவுகள்
அடியாழத்தில் அலையும் கடல்களில்
கொதித்தும் குளிர்ந்தும்
வானம் எறியும் அலைகள்
சங்கீதத்தின் குவளை வளர வளர
முற்றிய விழிகளில்
கசிந்திறங்கும் நதிகளின் வெள்வரி
நரம்புகளிலிருந்து சுக்கிலம்
மூழ்கிய கடல்
நிலம் தொடும்.

ஆளில்லாத காடுகளை காதலிக்கும் வனதேவதைக்கு



உனது எல்லைகளுக்குள்
மரங்கள் குழநதைகளாயிருக்கின்றனர்-அதனால்
மனிதர்கள் வெட்கத்துடன் 
உள்ளே நுழைவதில்லை

உனது தாய்மையின் தகிப்பில் -காடு
நிம்மதியாக உறங்குகிறது
அதன் சப்தங்கள் அதன் எல்லையைத்
தொடுகின்றன
அதன் பனிப் பொழிவுகள்
மலர்களை அவிழ்க்கின்றன .

உனது காட்டில் மட்டும் -
ஆறுகளின் கதவுகள் எங்கும்
அடைத்துக் கொள்வதில்லை
பூக்களின் மகரந்தங்கள்
எதிலும் சிதறுவதில்லை .

நீ பறவைகளின் சரணாலயமாய்
கிடக்கின்றாய்
உனது காடே ,காதலில் மிதக்கின்றது
அதன் வாசல்களை
யாரும் கடந்தால் ,செல்தலுமில்லை
திரும்புதலுமில்லை.

published on -kalaimukam

இருண்ட காலங்களின் கவிதைப் புத்தகம்



ஆஸ்க்விச் வதை முகாமிற்கு சென்று திரும்பும் ஒரு யூதச் சிறுவனின் சுயசரிதை தான் " இரவு " .(எலி வீசல் )

பக்கத்திற்கு பக்கம் யாழ்ப்பாணத்தின் ஒரு காலத்தை கண் முன் விரியச் செய்திருக்கிறது புத்தகம் .நான் இடப்பெயர்வை அறிந்தவனல்ல ,அது பற்றிய கதைகளை மட்டுமே கேட்டவன் , சம்பவங்களை சதையும் இரத்தமுமாக வீசலின் கைகள் என்னிடம் நீட்டின .

ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை போல் தான் .ஆனால் இரத்தமும் பனியும் உருகி ஓடும் ஒரு பனிக்காலத்து கவிதை ,துயரமான எல்லாக் காலங்களினதும் கவிதை ,கடைசியில் ஒரு இடத்தில் ,எல்லோரும் நசிந்து வெளி வர முடியாத ஒரு இரவில் குரல்களைத் தவிர வேறெதுவும் நிறைந்திருக்காத அறையில் ,யாரோ ஒருவனின் வயலின் ஒலிக்கிறது ,அதில் எல்லோரும் உறங்கிப் போகிறார்கள் ,காலையில் அவன் இறந்து போய்விடுகிறான் ,அந்த வயலின் ஒரு வித்தியாசமான மிருகத்தைப் போல் சிதைந்து போய்க் கிடக்கிறது ,

விபரிக்க முடியாத எதுவோ ஒன்று அந்த ஜெர்மன் வதைமுகாம்களுக்கு இருக்கும் ,அது இறந்த குழந்தைகளின் அப்பழுக்கற்ற அழுகையொலியால் கரி படிந்திருக்கிறது .வீசலின் வார்த்தைகளில் சொன்னால் ,"நட்சத்திரங்கள் எங்களை விழுங்கிய நெருப்பின் பொறிகளாய் இருந்தன .ஒரு நாள் அந்த நெருப்பு அணைந்தால் ஆகாயத்தில் எதுவும் எஞ்சியிருக்காது .இறந்த நட்சத்திரங்களையும் இறந்த விழிகளையும் தவிர ."
கட்டுரை புத்தகங்களை பரிந்துரை செய்யலாம் என்றால் ,அது இனம் வாரியாய் வகை வாரியாய் பிரிக்க வேண்டும் ,அது ஒரு நீண்ட வேலை .இப்போது  முக்கியமானவற்றை பதிகிறேன் .

தாஸ்தவேஸ்கியின் நினைவுக் குறிப்புகள் அன்னா எழுதியது .நல்ல மற்றும் சிறிய புத்தகம் 

நினைவின் நதியில் -சுந்தர ராமசாமி பற்றி ஜெயமோகன் எழுதியது .எனக்கு மிக பிடித்த நினைவுக் குறிப்பு புத்தகம் ,ஒரு நாவல் மாதிரியே இருக்கும் .

சேகுவராவின் மோட்டார் சைக்கிள் டயரிக் குறிப்புகள் .ரொம்ப நல்ல நடை ,மற்றும் அனுபவ பகிர்வு ,படிக்க சுவாரசியமா இருக்கும் .

வான்கா -நல்ல சுவாரசியமான புத்தகம்

அன்புள்ள தியோவுக்கு -வான்கா எழுதிய கடிதங்கள்

...

நேற்று விடுபட்ட சில முக்கிய நாவல்கள்

1-பசித்த மானிடம் -கரிச்சான் குஞ்சு -மிக நல்ல நாவல் ,எல்லோரும் படிக்கலாம்

2-புதியதோர் உலகம் -கோவிந்தன் ,ஈழத்தின் மிக முக்கியமான நாவல் .

3-போர் உலா -மலரவன் ,எனக்கு பிடித்திருந்தது ,காரணம் அதன் உண்மை .உண்மையான போராளியின் மனம்

4-இரண்டாம் இடம் -எம் .டி ,வாசுதேவன் நாயர் .பீமனின் பார்வையில் மகாபாரதம் ,ரொம்ப சுவாரசியமான முக்கியமான புத்தகம் .

5-இது தான் என் பெயர் -சக்கரியா

6-ம் -ஷோபா சக்தி -நல்ல புனைவு .

7-பசி -நாட் ஹம்சன் -எனக்கு ரொம்ப பிடித்த நாவல் .

8-கொலம்பஸின் வரைபடங்கள் -யோ .கர்ணன் -எனக்கு பிடித்த கதை சொல்லி

9-அ .இரவி -காலமாகி வந்த கதை -முக்கியமான பதிவு ,எனக்கு பிடித்த நாவல் .

10-நினைவுப் பாதை -நகுலன் -முக்கியமான நாவல் 

காதலின் சங்கீதம்





மலைகளின் பாதையை நதிகள் உருவாக்குகிறது, நனைந்து அலையும் இந்த உயிர் உன்னை அணைக்க ஓடி வருகிறது , சங்கீதத்தின் புலம்பல், காற்றின் நடு நடுங்குதலுடன் கண்ணீரைப் பெய்கிறது, வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், சிறகுகள், இலைகளின் பச்சை வாசம், பறக்கும் இதயம், எனினும் குளிரின் பற்கள்- கால்களை விரட்டுகிறது, கரைந்து ஒழுகும் பாதையை வானம் அடைகிறது. வெண்ணிற உயிரைப் பறித்துக் கொண்டு மழைக் கதவு, கடல்களின் வெளியை உடலுக்குள் விடுகிறது. சங்கீதம், நரம்பென விரிந்த மௌனத்தைப் பரப்புகிறது, காலம் வெடித்து மீண்டும் சேருமிடத்தில், நானோ நீயோ தோன்றிக் கொண்டேயிருக்கிறோம்.


பாலைவனம்

மரணத்தைக் கொண்டாடவென இருவரும் நதியின் இருளில், பாலைவனம் -கால்களின் கீழே அலைந்து கொண்டிருக்கிறது. நட்சத்திரங்களை திரும்பவும் நீருக்குள் விடுகிறாய், கால காலக் கடல் சேருமிடத்தில், வெளிகளை நிரப்பினோம், இந்த ஒட்டகத்தை, பனி பெய்யும் நகரங்களுக்கு இழுத்துச் செல்லாதே, அதன் கண்களைப் பார், முதுகில் மணல் வளர்ந்து மலைகளாய் முளைத்திருக்கிறது, மலைகளின் இடையில் நீயும் நானும் பயணிக்கிறோம். நம்மைப் பின் தொடரும் இவன் என்றும் திரும்ப வராத பறவைகளை நமக்குள் மிதக்க விடுகிறான்.

அலையும் கலைஞனே பார் - வெளியோ கண்களின் எல்லை, எல்லாமே நீ வாசித்து முடித்த பறையின் அதிர்வு. எனினும் - பாலைவனத்தை விபரித்து விட முடிவதில்லை. அதன் மணல் இந்த எழுத்துகளில் ஒட்டியிருக்கிறது, இதோ உனது கண் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுப் போகிறது.

பாடிக் கொண்டிருப்பவனின் குரல்

அழ அழ ஊறும் குறிப்புகளை உனது நரம்புகள் வாசித்துக் கொண்டிருக்கிறது. கனவின் ஒற்றைக் கைப்பிடியை நழுவவிட்டு இந்தப் பரந்த இருளில் முதலாவது கண்ணீரை ஒளிர விடுகிறேன். சுவடுகளில் வெப்பம் தளும்பிக் கொண்டிருக்கிறது. கரையில் இரண்டு சித்தார் வாசிப்பவர்கள் இந்த மணல் நதியை நெய்கின்றனர். நிலவை நிரப்பிக் கொண்டுவந்து கைகளில் தருகிறாய், போதை ஊறிடும் திராட்சைக் குலைகளை உன் குரல் ஞாபகப்படுத்துகிறது. அதோ - ஒரு பெண் இந்தப் பூமியில் வந்து கொண்டிருக்கிறாள், கனவே, திறந்துவிடு உன் கதவை.

மலரும் அறை

ஊதா நிறத்தில் ஒரு அறையைப் பரிசளித்தேன் .மஞ்சள் நிற மலர்களை அதற்குள் வளர்த்தாள்.அறைக்குள் நுழையும் கருப்பும் வெள்ளையுமான பூனைக் குட்டிகளைக் கண்டு பயந்தாள். வெண்ணிறப் படுக்கையில் இரண்டு மண்ணிறத் தடங்களைக் கால்கள் பரவுகிறது, கோபத்தில் சிவந்து முறைக்கிறாள். நிறங்கள் இருள்கிறது . சூரியனின் திசையில் பச்சை வாழைகள் குலையீனுகின்றன, போதை பொங்கும் பியரை வார்த்துக் கொண்டிருக்கிறேன்,சிகரெட் வெண்ணிறப் புகையையும் சாம்பலையும் கக்குகிறது .சிறிது சிவப்புக் கரைந்த பின், மயில் பற்றிய பாடலொன்றைப் பாடுகிறாள், நனைந்து ஒட்டியிருக்கும் பறவைக் குஞ்சின் சிறகை உலர்த்தி விடுகிறது அவளது குரல் - காலங்களைத் திறக்கும் வர்ணத்தைத் தேர்வு செய்யச் சொன்னேன். கண்களைப் பொத்திக் கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு மலரை எனக்குத் தருகிறாள். அந்த மலரை வளரவைக்கிறாள். கால
த்தின் கடலில் நுரைக்கும் மலர், நீல இதழ்.


நன்றி - ஆக்கட்டி (09)

முத்தத்தை உயிர்ப்பித்தல்



காமமில்லாத முத்தத்தைப் பகிர்வதைப்பற்றி 
நான் அலட்டிக் கொள்வதில்லை
கற்களிலிருந்து நீர்மையைத் துடைப்பது போன்றது அது.

காலம் தான் தட்டைக் கழுவி ஊற்றுவது
போல பெருத்த முத்தம்
ஒரு டயரியின் அந்தரங்கம்
அதன் கற்பு
கன்னத்தில் இறுகிய உதடுகளைப் பெயர்க்காமல்
அவளுடன் ஏழாவது காதலைப்
பகிர்ந்து கொண்டேன்
மரங்களிலிருந்து வரும் வாசனையை
குளிர்விப்பதிலிருந்து தொடங்குகிறது அதன் கிளர்ச்சி
பேரலையிலிருந்து அவிழும்
அலைகளின் நீட் சியை ஒத்தது அதன் பரிமாணம்
இரத்தம் தோய்ந்த காதலை எடுத்து
உயிர்ப்பிப்பதைப் போன்றது அதன் ரகசியம்

ஒரு முத்தம் கன்னத்தை இதயத்திலிருந்து
எடுத்து வருகிறது
பின் உதடுகளால் தைப்பதுடன் முடிகிறது
ஏழாவது முத்தமும்
மீதமான காலத்தின் பற்களற்ற வாயும்

கிரிஷாந்த்
நன்றி - கலைமுகம்
(2012)

வன்முறையும் ஆணியமும் பெண்ணியமும்


(யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரும்பான்மை ஆண்களின் நிலை பற்றி சில பதிவுகள் இதில் உண்டு .. எனது கதையை விட்டு விடுங்கள் ,சக பெண்கள் எப்படி அதை பார்த்தார்கள் என்று பாருங்கள் )

ஒரே ஒரு பெண்ணை கூட இந்த உலகத்தில் சந்தோசமாக வைத்திருக்க தெரியாதவன் தான் நான். ஆணின் உளவியலில் ஆழமான பகுதி வன்முறையானது , அது வன்முறையை விரும்பும் அல்லது கொண்டாடும் பகுதி ,ஆகவே எனது இதயத்தின் மூலமாக வன்முறை , ஆணியம் , பெண்ணியம் என்பவற்றை விளங்கிக் கொள்ளும் முயற்சி தான் இந்தப் பத்தி .

அண்மையில் நடந்த ஒரு வன்புணர்வுச் சம்பவம் யாழ்பாணத்தில் பல்வேறு மாற்றங்களை ஒவ்வொரு மனிதனிலும் ஏற்படுத்தியிருக்கிறது , ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரிலும் அது எதிரொலித்திருக்கிறது . இது ஒரு மாற்றம் . வழமையான வன்செயல்கள் இவ்வளவு எதிரொலியை ஏற்படுத்துவதில்லை ,ஆகவே இது ஒரு மாற்றம் தான் , ஆனால் எந்த வகையான மாற்றம் ? , ஆணின் பெண்ணின் மனதில் இது ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்பது என்ன ?

சம்பவம் நடந்த பின்பு சில பெண்களிடம் நான் உரையாடியவற்றை தருகிறேன் .

1 - ஒரு இரண்டு சிறிய பாடசாலை செல்லும் பெண்களின் தாய் சொன்னார் ," நான் இவையளை பள்ளிக்கூட பாத் ரூமுக்கு கூட போக விடுறேல்ல , கொஞ்ச நாளைக்கு முதல் நடந்தது தெரியும் தானே , ஒரு வோச் மென் பண்ணினது '

2- இன்னொரு பெண் - "இண்டைக்கு யுனில என்ன தூசணத்தால பேசினவங்கள் , இந்த ....... தான் அண்டைக்கு வித்தியாவுக்காக போராட்டம் பண்ணினதுகள் . இதுகள் எல்லாம் எதுக்காக போராடினதுகள் "

3- ஒரு நண்பியின் நிலைத் தகவல் - "மிக மோசமான மனநிலையுடன் இதை பதிகின்றேன்
இன்று யாழ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற வெனூரி பெரேரா வின் 'எதிரிடை' எனும் தலைபிலான ஆற்றுகையில் மிக ஆழமான மிக காத்திரமான நகர்வு.. என்னை பொறுத்தவரையில் இன்றை பெண்கள் மீதான ஆண்களின் எதிரொலிகள் சார்ந்தவை என்றே கூறுவேன்...வெனூரி யின் ஆற்றுகையின் போது பல்கலைகழக மாணவர்களின் செயற்பாடுகள் ஒரு விதத்தில் எதிரிடை என்ற கருத்துநிலைக்கு சார்பாகவே அமைந்தது...

பெண்ணின் சுகந்திரமான ஆற்றுகை போக்கை கூட மௌனமாக ரசிக்கதெரியாத நீங்களா நேற்றய போராட்டத்தில் பெண்களுக்கு எதிராக , வன்முறைகளுக்கு எதிராக ,குரல் கொடுத்தீர்கள் "

இவை வேறு வேறு மன நிலைகள் வேறு வேறு சந்தர்ப்பங்கள் , ஆனால் ,இவை எல்லாமே போராட்டங்களிற்கு பின்னரான பெண்களின் ஆழமான நம்பிக்கையின்மை மற்றும் வெறுப்பைக் காட்டுகிறது .இதே மன நிலையையே நான் பொதுவாக அவதானிக்கிறேன் . அப்படியென்றால் இந்த போராட்டங்கள் சாதிப்பது என்ன ?

இவை ஒரு புறநிலையான பயத்தை ஏற்ப்படுத்த நினைக்கின்றன . புற நிலையான சமூக கட்டுமானத்தை இவை உருவாக்க முனைகின்றன . ஆனால் இவற்றின் சாத்தியமான தூரம் எவ்வளவு ?

"விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் இருக்காது " என்று மாணவர்கள் முதல் மக்கள் வரை கருத்து தெரிவித்திருந்தனர் . ஆனால் அவர்கள் தான் இல்லையே . அவர்கள் உருவாக்கியதும் ஒரு புறநிலையான பாதுகாப்பை தான் , பயத்தை தான் . அதனால் தான் அவர்கள் இல்லையென்ற பின் அவர்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களே இதை செய்கின்றனர் . ஆகவே தான் புற நிலை பாதுகாப்பு கவசங்கள் நிலையானவையா ? என்ற கேள்வி எழுகின்றது . அப்படி என்றால் இந்த சமூகச் சிக்கலை எப்படித் தீர்ப்பது ?

எனது அறிவுக்கு எட்டியவரை சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன் .
முதலில் புற நிலை மாற்றம் என்பது முக்கியமானது , ஆனால் அது சம காலத்திலேயே அக நிலை மாற்றதுக்குமாக செயற்பட வேண்டும் , பால் நிலை சமத்துவம் பற்றிய புரிதல்கள் பல் ஊடகங்களையும் பயன்படுத்தி அனைத்து தரப்பினருக்கும் போய் சேர வேண்டும் .

இப்படியான நிலையில் எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பின் மேலும் பழியைப் போடாமல் , சிந்திக்கும் மக்கள் ஆங்காங்கே பரவலாக செயற்பட வேண்டும் , சினிமா , கலை இலக்கியம் . நாடகம் போன்றவற்றின் மூலம் மக்களை ஒத்த அலைவரிசையில் சிந்திக்க வைக்க வேண்டும் .

ஆனால் இவற்றின் சாத்தியங்களை காலம் தான் சொல்ல வேண்டும் .ஏனெனில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறேன் .
பல்கலைக் கழகத்தில் ஒரு ஆற்றுகைக் கலை நிகழ்வில் வெனூரி பெரேராவின் ,ஆண் வன்முறை சார்ந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த வேளை மிக மோசமாக எதிர்வினையாற்றப் பட்டார் . ஒரு பல்கலைக் கழக சமூகத்திடம் இதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே நினைத்தேன் , ஆனால் அவர் சிரித்துக் கொண்டே இதனால் நான் நிலை தவற மாட்டேன் , இது இயல்பு தான் என்று சொன்னார் . ஒரு ஆண்மைய சமூகத்திடம் இருந்து வேறு என்ன தான் எதிர்பார்க்க முடியும் .

இந்தளவு கலை உணர்வுடன் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றுகையை நான் இதற்க்கு முன் பார்த்ததில்லை . அதன் மௌன இடைவெளிகளில் எதுவும் செய்ய முடியாமல் அழுது கொண்டிருந்தவர்களை நான் பார்த்தேன் , ஆனால் இரண்டு கால்களையும் போட்டு அடித்து துடித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் உடலைப் பார்த்து முனகல் சத்தங்கள் எழுப்பியதற்கு என்ன செய்வது , தனிப்பட்ட பதிவில் எழுதினால் என்னோடு மல்லுக்கு நிற்பார்கள் , ஆகவே தான் பதிகிறேன் , ஆற்றுகையின் ஒரு கட்டத்தில் (முடியும் தருவாயிலில் என்று நினைக்கிறேன் ) அந்த பெண் - பார்வையாளர்களைப் பார்த்து வாய் விட்டு தொடர்ந்து சிரித்தார் , அதை நிறைய ஆண்கள் மிமிக்கிரி செய்தார்கள் , அடக் கடவுளே எனக்குள் இருந்த ஆண் அந்த சிரிப்பின் முன் கூனிக் குறுகி நின்றான் ,ஒட்டுமொத்த ஆணின் வன்முறையின் பின்னும் சிரித்துக் கொண்டு திரியும் எல்லாப் பெண்களின் முகமும் என் கண்ணீரின் ஊடே தெரிந்து கொண்டிருந்தது .

ஆகவே தான் சொல்கிறேன் மாற்றத்தை ,இந்த சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் தான் தொடங்க வேண்டும் , உண்மையில் போராட்டம் என்பது ஒரு நாள் நாங்கள் செய்வது அல்ல ,தனித் தனியாக நாம் ஒவ்வொருவரும் எங்களுக்குள் இருக்கின்ற ஆணை எதிர்த்தும் எங்களைப் போன்ற ஆண்களை எதிர்த்தும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது .
( 24.05.2015)

காற்றாலயம்



ஓ இதுவொரு மகா அழுகை
ஒரு துளி கண்ணீரின் முன்
இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை .

ஆனால் அம்மா ,
எப்போதும் எழாத வெளியினில்
தீரா தாகத்துடன்
காத்திருப்பர் ,
ஒரு மகா யுகத்தின் தலைப் பிள்ளைகள்
ஒரு மகா யுகத்தின் வீர புருஷர்கள்  
ஒரு மகா யுகத்தின் மகா தாகிகள்

காற்றில் தாங்காது வழிகிறது  பாடல்

கற்பூரத் தீயில் ஒழுகும் கண்ணீர் .

மிக அந்தரக் கணம்



பரிவகலாப் பார்வை.
தொடுகையின்
கடைசிக் கணம் வரை
எஞ்சும் அன்பு .

முடிவில்லாத மூன்று முத்தங்கள்

முன் நின்ற நீ
ஒரு கணம் தாய்
அதே கணம் குழந்தை

உயிரூறிய வார்த்தைகளையும்
சில உருண்டைச் சோற்றையும்
எனக்களித்தாய்

மலரரும்பிய பொழுதில்

நான் வழங்கிய சோற்றில்
மிகுதி சொல்லாத வார்த்தைகளையும்
சொல்ல முடியாத பரிவையும்
குழைத்து உனக்களித்தேன்

பின்
கணங்கள் நம்மைப் பிரித்தன

நீளச் செல்லும் வாழ்வு
"பின் தொடரும் ..." என்ற
வார்த்தையில் வாழ்கிறது

இனி எப்போதும்
மனிதக் குட்டியொன்றுக்குக் கிடைக்கும்
அரிதான முத்தங்களில் சிலதை
ஈரம் காயாத கன்னங்கள்
மறக்கப் போவதில்லை

என்னருஞ் சுடரே ,
காமத்தில் காதலிருக்கிறது
அன்பில் முத்தமிருக்கிறது .

நன்றி - தள வாசல் 



கவ்வாலி, இசை எனும் பாற்கடல்





கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், கடல் ஒரு வசீகரம், அது என்னை, உங்களை ஏன் மற்ற எல்லாவற்றையுமே கூட உள்ளே இழுத்து விடும் வசீகரம் கொண்டது. கழுத்தளவு வரை உள்ளே சென்றால் நீங்கள் எஞ்சியிருப்பீர்கள், பின்தான் கடல் தொடங்குகின்றது. ஓரடி உள்ளே வைத்தால் கடல். அந்தக் கடலில்தான் எனக்குப் பயம். உங்களில் பலருக்கும் கூட அந்தப் பயம் இருக்கலாம். ஏனென்றால், அதுவரை உங்கள் கண்ணுக்குத் தெரிந்த எதுவும் அதற்கு அப்பால் இருக்கப்போவதில்லை, அதற்கு அப்பால் எல்லாமே அமானுஷ்யம். கடல் தன்னுள்ளே கோடி கோடி ரகசியங்களை ஒளித்தபடியும் உயிர்ப்பத்தபடியும் ஒவ்வொரு தடவையும் மனிதனை உள்ளே இழுத்துக் கொண்டே இருக்கிறது.

இசையும் ஒரு கடல் தான். அதன் அமானுஷ்யங்களை நீங்கள் கரையிலிருந்து கொண்டு உணரமுடியாது. வெறுமனே ரசிக்கலாம். ஆனால், இசை என்பது வாழ்வும் மரணமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி. அங்கு நீங்கள் இசை மட்டும் தான், உங்களின் மொத்த உடலையும் ஏன் உயிரையும் கூட இசைக்காக கொடுக்க முடிந்தால் மட்டுமே, இசை என்பது அனுபவம், இல்லையென்றால், பரபரப்பு நிறைந்த வீதியின் இரைச்சல்தான் உங்களின் ரசனையின் அளவு. மௌனத்திற்கும் இசைக்கும் இடையே மின்னற்பொழுதே தூரம். அதனுள் நீங்கள் கரைந்து விட்டால் எஞ்சுவதென்ன?

ஓஷோ சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பாரசீக மன்னன், மாபெரும் இசை ரசிகன், அவனது சபையில் வாசிக்காத மேதைகளே இல்லையெனும் அளவுக்கு அவனொரு ரசிகன். ஒரு நாள் தனது மந்திரிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது கேட்டான், “எனது இசை தாகம் மேலும் மேலும் பொங்கி வழிகிறது. ஏதோ ஒன்று இன்னும் எஞ்சியிருக்கிறது, என்ன அது? இன்னும் யாரோ ஒரு மேதையை நான் கேட்கவில்லை போலும்?” என்றான். அதற்கு மந்திரிகளில் ஒருவன், “அரசே, எல்லோரும் வாசித்துவிட்டார்கள். ஆனால், இன்னுமொருவர் இருக்கிறார்தான். ஆனால்… அவர் பல நிபந்தனைகள் விதிக்கிறார்! அவை ரொம்பவும் அதிகம் அதான்…” என்று இழுத்தார். மன்னனின் கண்கள் விரிந்தன, உடனே அந்த மேதை அழைத்து வரப்பட்டார். “உமது நிபந்தனைகளைக் கூறும்?” என்றான் மன்னன். “நான் யாழை வாசிக்கும் போது உடலின் எந்தப் பாகத்தையாவது யாராவது அசைத்தால் அந்தப் பாகம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட வேண்டும். அவ்வளவுதான் நிபந்தனை” என்றார் மேதை. மன்னன் சிரித்தான், “அவ்வாறே ஆகுக” என்றான். ஊர் முழுவதும் இசைக் கச்சேரி தொடர்பாக அறிவிக்கப்பட்டது. நிபந்தனைகளும் பெரிய பதாகைகளில் தொங்கவிடப்படன. பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர். மன்னனும் வந்தான். அவனோ வாக்குத் தவறாதவன். ஆகவே, ஐநூறு வீரர்களை ஆயுதம் தாங்கியபடி நிற்க வைத்தான். நிகழ்ச்சி முடியும் வரை கண்காணித்து பின்னரே தண்டனை நிறைவேற்றப்படும் என்பது ஏற்பாடு. நிகழ்ச்சியும் தொடங்கியது, மேதை வாசிக்கத் தொடங்கினார். இசைக் கடவுளே மண்ணில் இறங்கியது போல் வாசித்தார். “அற்புதம்” என்றுதான் சொல்ல வேண்டும். பின்னர், நள்ளிரவில் நிறுத்தி, “யாராவது உடலை அசைத்தர்களா?” என்று மன்னரிடம் கேட்டார். மன்னன் விசாரித்தான். “பன்னிரண்டு பேர் தலையை அசைத்தும் சிலர் கால்களால் தாளமும் போட்டிருக்கின்றனர் தங்களை மறந்து” என்றான் மன்னன். “முடிவு உங்கள் கையில்தான் இவர்களை என்ன செய்வது?” என்று கேட்டான். அந்த மேதை, “இவர்கள் பன்னிரண்டு பேரைத் தவிர மீதி அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். இவர்கள் இசையை கேட்பதற்கே லாயக்கற்றவர்கள். மூடர்கள். எந்த ஒருவன் இசைக்கு தன்னை மறக்கவில்லையோ, அவனுக்கு வாசிப்பது இசைக்கே அவமானம். உயிரே போய்விடும் எனும்போது கூட இசையில் தங்களை மறந்த இவர்களுக்காக மட்டுமே நான் வாசிப்பேன். இனித்தான், எனது உண்மையான இசையை வாசிக்கப் போகிறேன்” என்றார்.

இந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பது ஒரு மாபெரும் உண்மை. இனி கவ்வாலி இசைக்கு வருவோம். இது கிட்டத்தட்ட எங்களூர் வில்லுப்பாட்டு மாதிரி தான். ஆனால், இது முழுதும் பாடல், மீண்டும் மீண்டும் சில வரிகளை பாடி, ஒரு சரடாக ஏதோ ஒரு விஷயத்தை கதை சொல்லும் பாணியில் சொல்லுவார்கள். நான் சொல்லப் போவது, கவ்வாலி இசையின் அரசர்களின் அரசன் என்று அழைக்கப்படும். ‘நஸ்ரத் பாத் அலிகான்’ பற்றி. இவரின் கவ்வாலிகளையே நான் முதலில் கேட்டேன். “அற்புதம்” என்ற வார்த்தைக்கு அது தான் பொருள். காதலை பற்றிய அவரது பாடல்கள் மீது எனக்கு பெரும் மோகம். அப்படியிருக்கும், அவர் பாடும் போது. குரல் ஒரு ஆளாக மாறி அசைந்து கொண்டிருப்பது போல் தோன்றும். உடலே குரலாகி கதறிக் கொண்டிருப்பார் காதலில். நிரம்பி வழியும் கண்ணீரை மட்டும் தான் என்னால் பதிலுக்கு அவருக்கு தர முடியும். அவ்வளவு பரிசுத்தமான குரல், “அக்கியான் உடீக் தியான்” என்ற பாடல் எனக்கு மிகப் பிடித்தது. அதன் சில வரிகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.

ஒரு பக்திக் கவிதை போல் நீளும் அவ் வரிகள் காதலின் தனிமை, தனித்திருக்கும் ஒரு மனிதனின் துயர் என கண்கள் பனிக்க வைக்கும் அற்புதம்.

“நீயில்லாமல்

எனது இதயத்தின் ஆசைகள் நீயில்லாமல்

எந்த அர்த்தமுமில்லை வாழ்வில் நீயில்லாமல்

ஒவ்வொரு நாளமும் நரம்பும் உனது பெயரைப் பாடுகின்றது

எனது கண்கள் நீ வருவதற்காக காத்திருக்கின்றன

எனது இருதயம் ஏங்குகின்றது

உன்னை அழைக்கின்றது

திரும்பி வா, உனது காதலின் மீது ஆணையாக

திரும்பி விடு, எனது இருதயம் ஏங்குகின்றது

உன்னை அழைக்கின்றது…



நீ என்னை விட்டு விலகியதிலிருந்து

நான் முழுவதும் தனிமையை உணர்கிறேன்

எனது வீட்டின் பறவைகள் கூட என்னை விட்டு

பறந்து சென்றுவிட்டன

எனது கண்கள் நீ வருவதற்காக ஏங்குகின்றது

எனது இருதயம் உன்னை அழைக்கின்றது

என்னால் இந்தத் தனிமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை

திரும்பி விடு, எனது காதலே திரும்பி விடு

வசந்தம் வரும் போகும்

ஆனால் நான் இப்பொழுதும் உனக்காக காத்திருக்கிறேன்

இப்பொழுது இல்லையென்றால், நீ எப்பொழுது வருவாய்?

எனது கண்கள் உனது வருகையின் அறிவிப்பிற்காக காத்திருக்கின்றன

வசந்தத்தின் பறவைகள் இங்கே மறுபடியும் வந்து விட்டன

ஆனால் நீயும் கூட ஏன் வரவில்லை…”

என்று நீளும் அப்பாடல் ஒரு மாபெரும் இசை மனத்தின் கதறல். மன்னிக்கவும், இப்பொழுது தான் இக் கட்டுரையின் கரையில் நிற்கிறோம், அடுத்த பத்தியில் கவ்வாலி இசையையும் சூபி இசையையும் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன். முதலில் அலிகானை கேட்டுப் பாருங்கள், யூ டியூபில் இப்பொழுது அனைத்துப் பாடல்களும் கிடைக்கின்றன. இணையமும் ஒரு கடல் தானே! ஆகவே, இனி இசையின் அனுபவத்திற்குள் நுழைய தயாராக இருங்கள். இன்னும் பல கடல்களுக்கு உங்களைக் கூட்டிச் செல்லப் போகிறேன். வழிதெரியாத புதிய தீவுகளைக் கண்டுபிடிக்கும் இந்த ஆச்சரியமான கடல் பயணத்தைத் தொடங்க முன் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இசை என்பது கடல், தன்னுள் அமானுஷ்யங்களை ஒளித்து வைத்திருக்கும். ஆனால், அது ஒரு பரிசுத்தமான பாற்கடல். பயமின்றி உள்ளே நுழையுங்கள், அலைகளில் யாரோ நடந்து செல்கிறார்கள்? யார் அது, அலிகானா! இதோ நானும் வருகிறேன்.

எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம் ?

யாழ்ப்பாணத்தின் சிறுதெய்வ வழிபாட்டு முறையில் நிலவி வந்த ‘பலியிடும்’ வழக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பலியிடும் வழக்கம் தொடர்பாகவும், அதன் வரலாற்றுப் பின்புலங்கள் சமூக நம்பிக்கைகள் பற்றியும், மேலும் இதன் எதிர்ப்பின் பின்னாலுள்ள நியாயங்களையும் அரசியலையும் பற்றி விவாதிக்கும் பத்தியே இது .

நிறுவனச் சமயம் (பெருந் தெய்வங்கள்)

இயற்கைச் சக்திகளின் ஆற்றலைப் புரிந்து கொள்ள இயலாத நிலையிலும் ஆவிகளைக் குறித்த அச்ச உணர்வின் அடிப்படையிலும் குலக்குறி குறித்த நம்பிக்கையின் அடிப்படையிலும் உருவான தொல் சமயமானது சற்று விலகி சில விதி முறைகளையும் இறையியர் கோட்பாடுகளையும் புனித நூல்களையும் வரையறுக்கப்பட்ட வழிபாட்டு முறைகளையும், நிரந்தரமான கட்டடங்களையும் கொண்ட ஒரு நிறுவனமாக காலப் போக்கில் உருப்பெற்றது. இது நிறுவனச் சமயம் என்று அழைக்கப்படுகின்றது. இறுக்கமான விதி முறைகளையும் சமயத் தலைவர்களையும் கொண்ட நிறுவனச் சமயம் தொன்மைச் சமயத்தின் சில கூறுகளை உள் வாங்கிக் கொண்டது. அதே நேரத்தில் தொன்மைச் சமயத்தின் அடிப்படை இயல்புகளிலிருந்து விலகி நிற்பது.

நாட்டார் சமயம் (சிறு தெய்வங்கள்)

தொன்மைச் சமயத்தின் முக்கிய கூறுகளை உள்ளடக்கிக் கொண்டு பெருவாரியான பொதுமக்களால் பின்பற்றப்படும் சமயம் நாட்டார் சமயம் ஆகும். ஆவிகள் குறித்த நம்பிக்கை, மூதாதையர் வழிபாடு, குலக்குறி வழிபாடு போன்றவற்றின் தாக்கம் நாட்டார் சமயத்தில் மிகுந்திருக்கும். நிறுவன சமயங்களைப் பின்பற்றுபவர்களிடம் கூட நாட்டார் சமயத்தின் தாக்கம் காணப்படும்.

(கோபுரத் தற்கொலைகள் – ஆ.சிவசுப்பிரமணியம்)

இந்த இரண்டு விளக்கத்திற்கும் இடையில் ஆதிக்க மனோ நிலை கொண்ட சமூக குழுக்களின் தெய்வங்களாக பெருந் தெய்வங்களான சிவன், விஷ்ணு, அம்மன், முருகன், பிள்ளையார் போன்றோர் உருவானமையும் அதையொட்டிய சமய ‘மேன் நிலையாக்கம்’ பற்றிய கருத்து நிலை வலுவடைந்தமையையும் தமிழ்ச் சமூக பண்பாட்டு நகர்வில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் மூலம் ‘தூய்மைவாதம்’, ‘புனிதப் படுத்தல்’ போன்றன நிகழும்.

அதனூடான சமூக அதிகார கட்டமைப்பில் குறித்த பெருந்தெய்வங்களின் பக்தர்கள் மேனிலை பெறுவர். உதாரணம் – முருகனின் வேலைத் தாங்கியபடியும், கிரீடங்கள் சூடியபடியும் உள்ள அரசியல் தலைவர்களை தமிழ்ச் சமூகம் வழிபாட்டு மனநிலையுடன் அணுகுதல்.

இதற்கு மாறாக வைரவரையும் நரசிங்கரையும் காளிகளையும் தமது காவல் தெய்வங்களாகவும் குல தெய்வங்களுமாகக் கொண்ட சமூகக் குழுக்கள் அதிகார மட்டத்தில் கீழ் நிலையிலும் அதிகாரத்தில் உள்ள சமூகக் குழுக்களின் பார்வையில் ‘தீண்டப்படாதவர்களாகவும்’, ‘காட்டு மிராண்டிகளாகவும்’ உள்ளமை தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மற்றும் வரலாறு தொடர்பான அறிதல் பற்றியுள்ள குறைபாடுகளாகும்.

‘வேள்வி – பலியிடல் ‘ கருகம்பனை கவுனாவத்தை நரசிங்க வைரவரை முன் வைத்து..

2-15

இந்த வழிபாட்டிடம் பண்டத்தரிப்பில் உள்ளது. ஒதுக்குப்புறமான பெரிய வளவில் பெருத்த ஓர் ஆலமரத்தின் முன்னால் அமைந்துள்ளது. வைகாசி விசாகத்திற்கு அடுத்த சனிக்கிழமை இங்கே வேள்விப் பொங்கல் திருவிழா இடம்பெறும். ஆடுகளை வெட்டி பலியிடும் வழக்கம் 300 வருடத்திற்கு மேலாக இங்கே இருப்பதாக கோயிலின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். கோயிலின் முன்னே உள்ள அந்த ஆலமரத்தின் கீழ் தான் வைரவர் சூலம் இருந்தது. பின்னர் இப்பொழுதுள்ள கோயில் வடிவமைக்கப்பட்டது. இங்கே பூசாரிகள், ‘வீரசைவர்கள்’. கோயில் அமைந்திருக்கும் இடம் அந்திரானை மற்றும் கருகம்பனையின் பிரிப்பில் உள்ள ஒரு எல்லை என்று ஊரவர்கள் சொல்கிறார்கள்.

வன்னியிலிருந்து கோழிச் சாவலுடன் வந்து, வேள்வி விழாச் செய்ய வைரவர் கனவில் சொன்னதாகவும் அதனைச் செய்யாமல் மனிதர் தவிர்த்து வந்ததும் பின்னர் பிள்ளைகளை அது காவெடுக்கத் தொடங்கியதாகவும் அதன் பின்னரே இத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஒரு வாய் வழிக் கதை உள்ளது.

இந்த கோயில் சார்ந்த சுற்றாடலில் உள்ள மக்களை இந்தக் கட்டுரையின் பொருட்டு சந்திக்கச் சென்றிருந்தோம்.

அதன் போது மக்களின் மனதில் இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஜனநாயக பூர்வமாக தங்களின் கருத்துக்களும் இதன் பொருட்டு கேட்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். மேலும் தமது வழிபாட்டிடத்தை ‘இறைச்சிக் கடை’ என நீதிமன்றம் விழித்தமையும் தங்களை புண்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.

‘இறைச்சிக்கடை ‘ – சொல்லாடலும் பண்பாட்டு வரலாற்றின் புரிதலும்



முன்னூறு வருடங்களுக்கு மேற்பட்டதாக சொல்லப்படும் ஒரு பண்பாட்டு நடவடிக்கை,’தொட்டுணர முடியாத மரபுரிமை’ எனும் மரபுரிமை பிரிப்பின் கீழ் வரக் கூடியது. சமூகக் குழுக்களில் உள்ள சில பரம்பரைகளின் வழிபாட்டு முறையை அவர்களின் முன்னோர்களின் செயற்பாட்டையும் ‘இறைச்சிக் கடை’ நடத்துபவர்களாக சித்தரிப்பது அல்லது வர்ணிப்பது சரியானதாகுமா?

ஆடு வளர்ப்பில் சாதாரணமாக உள்ள நிலைமைகளிலும் பார்க்க வேள்விக்கென தயாராக்கப்படும் போது அதில் மேற்கொள்ளப்படும் சிரத்தையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

‘கைத்தீன்’ வழங்கல் – ஆட்டின் வளர்ப்பு முறையில் ஆட்டிற்கு உணவூட்டும் முறையை இவ்வாறு அழைப்பர். இது கோயில் சார்ந்த அல்லது சாமி சார்ந்த நம்பிக்கையில் வேர் கொண்டுள்ளது. தமது சாமிகளுக்குப் படைக்கும் படையல் என்ற மனநிலையை வைத்தே அவர்களின் இச் செயற்பாடு நிகழ்கிறது.

மேலும் கிராமியப் பொருளாதாரம் சார்ந்த ஒரு சூழலும் இங்கே கவனிப்பிற்கு உரியது. இந்த ஆடுவளர்க்கும் முறையில் உள்ள கொழுத்த சத்துள்ள ஆடுகள் இனச் சேர்கையில் ஈடுபடும் போது ஆரோக்கியமான வளமான குட்டிகள் கொண்ட ஆட்டுப் பரம்பரையை உருவாக்கும். வேள்வியில் பலியிடும் ஆடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தியே பலியிடப்படுகின்றன. ஆகவே மருத்துவ ரீதியிலும் குறைகள் இருப்பதாக தெரியவில்லை.

அரசியல் மற்றும் விவாதங்கள்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு என்பதால் வழக்காடிகள் தொடர்பில் அல்லாமல், பொதுவாக தமிழகம் மற்றும் இலங்கைச் சூழலில் உள்ள மதத் தூய்மைவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் சிறுதெய்வ வழிபாடுகளை எப்படி கையாளுகின்றன என்பது பற்றி பார்ப்போம் .

நிறுவனமயப்பட்ட சமயங்களில் ஆகம விதி மீறல் உள்ளது.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும், ‘பூசகர் ஊதியம் பெறுவது கூடாது, அதனால் தேவலோகத்து தோஷம் வரும், ஆலயத்தின் புனிதம் கெடும் என்று ஆகமங்கள் விதித்திருக்க (காரணாகமம், பூர்வபாகம், புண்ணியாபிஷேக விதிப்படலம், பக் 309 ) பெரும்பான்மையான பெருங்கோயில்களில் பூசை செய்பவர் சம்பளம் பெறுகிறார். அவை பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை.

குறித்த சுற்றாடலில் வாழும் மக்களில் யாரும் இது தொடர்பில் தம் சுகாதாரம் கெடுவதாகவும் நிம்மதி கெடுவதாகவும் முறைப்பாடுகள் தெரிவித்திருந்தால் அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், பொதுவாக இந்த வழிபாட்டு முறையுடன் தொடர்புபடாத ஒருவர் இதைப் பற்றி பேசினால், அதாவது இதன் மூலம் என் மனம் புண்படுகிறது என்றால், நாங்கள் இப்படிக் கேள்வி கேட்டுப் பார்க்கலாம்.

‘அலகு குத்துதல், தூக்குக் காவடி, தீ மிதித்தல்’ போன்றவை மனதை துன்புறுத்தாதா?

thookku-670x446

நேர்த்திகளை வெளிப்படுத்தவும் ஆற்றவும் மதங்களில் பல வழிகள் உண்டு சில வகையான முறைகள் மனித அறிதலின் மேம்பாட்டில் காலப் போக்கில் மாற வேண்டும் என்றால். அவை தானாகவே இயல்பில் மாற்றமடையும். சமூகக் குழுக்களின் புரிதல் மாறுபட வழிமுறைகளும் மாறும். அதை தடை செய்வதென்பது, ஒடுக்குதல் போல் இருக்கக் கூடாது.

இந்த நிலையில் இணையத்தளங்களில் மற்றும் சமூகவலைத் தளங்களில் இதற்கான உரையாடலை நிகழ்த்துபவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் ‘இந்தக் காட்டுமிராண்டித் தனம் ஒழிய வேண்டும்’. ‘மதம் நாகரீகமடைய வேண்டும்’ என்பது தான்.

சரி, எது காட்டு மிராண்டித் தனம் என்பதன் மட்டுப்பாடுகள் என்ன? அதை யார் உருவாக்குவது? யாரின் பெயரால் உருவாக்குவது? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை நாம் உரையாடலாம்.

நானும் உயிர்களைக் கொல்வதற்கு எதிரானவன் தான். ஆனால் நான் அசைவ உணவை உண்ணக் கூடியவன். என்னை நோக்கி ‘நீ ஒரு காட்டு மிராண்டி இன்னமும் அசைவம் சாபிடுகிறாய்? நாங்கள் எவ்வளவு நாகரீகம் அடைந்து விட்டோம்? ‘ கேட்பது போல் உள்ளது இவர்களின் குரல்.

இவர்களின் பலியெதிர்ப்பு உண்மையான அக்கறையாக இருக்குமா என்பதும் சந்தேகம் தான். அவ்வளவு காருண்யம் கொண்டவர்கள் கோயிலில் வெட்டுவததைத் தான் தடுக்க நினைக்கிறார்கள். இறைச்சிக் கடைகளில் அல்ல!

தமிழ்நாட்டில் ஒரு தடைச் சட்டம் வந்த போது, ஆ.சிவசுப்பிரமணியம் கட்டுரை ஒன்றின் வரிகளை பார்க்கலாம்.

‘மனித மாண்புகளைச் சிதைக்கும் மனித உரிமைகளைப் பறிக்கும் சடங்குகளை மரபு என்ற பெயரால் அல்லது மண்ணின் பாரம்பரியம் என்ற பெயரால் ஆதரிக்க முடியாது . இதனால்த் தான் உடன்கட்டை ஏறலும், குழந்தை மணமும் தீண்டாமையும் சட்டத்தின் வாயிலாகத் தடை செய்யப் பட்டன. இத்தடையை மரபு என்ற பெயரால் சனாதினிகள் மீறாது பார்த்துக் கொள்வது மனிதநேயச் சிந்தனையாளர்களின் கடமை. அதே நேரத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரால் மக்களின் பாரம்பரிய உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் ஓர் ஆணையின் மூலம் பறிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ‘

ஆகவே பெருந் தெய்வங்களுக்கும் சிறு தெய்வங்களுக்கும் இடையில் நடக்கும் இந்த வழிபாட்டு முறைச் சிக்கலில், இப்பொழுது நாம் எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம்?

அதற்கொரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதில் ஒன்றும் ஒவ்வொருவரிடமும் உண்டு.

உசாத்துணை நூல்கள்:

பண்பாட்டு மானிடவியல் – பக்தவச்சல பாரதி
கோபுரத் தற்கொலைகள் – ஆ .சிவசுப்பிரமணியம்
பின்நவீனத்துவ நிலை – அ. மார்க்ஸ்
மாயையும் யதார்த்தமும் -டி.டி.கோசாம்பி

எல்லாமே பார்க்கப் படுகின்றன-எல்லாமே விற்கப் படுகின்றன - எல்லாமே ,எல்லாமே




1.எங்கட அண்ணைய எங்க  வச்சு  வேல  வாங்கிறீங்கள் ? எனக்கு சாப்பாடும் வேண்டாம்  ஒண்டும்  வேணாம் எங்கிட அண்ணைய விடுங்கோ '

2.என்ன சுட்டாலும் பரவாயில்ல நான் தனிய இருந்து என்ன செய்ய ,ஆருக்குத் தெரியும்  இண்டைக்கு இரவே எனக்கு வெடி வைக்கலாம் ,அதுக்குள்ள அம்மாவ  (நவநீதம் பிள்ளையை )  பார்க்கோணும் .

3.என்னட்ட ஆதாரம் இருக்கு  எண்ட மகன்  பூஸாவில தான் இருக்கிறான் இந்தாங்கோ படம் ,இந்த லெட்டர் சனாதிபதி அனுபினது இதுக்கும் பிறகும் காணேல்ல எண்ட பிள்ளைகள,

4.வாப்பா காணாம போய் 8 வருஷம் ,இனியும் கிடைப்பார் எண்டு நம்புறம் (அல்லது அப்படி நம்ப முயற்சிக்கிறார்கள் ) ,எனக்கு 3 பிள்ளையள்.

5.கண்ணீரும் சோறும் தான் சாபிடுரம் ,ஒரு பெண் :-ஆங்கிலத்தில பேசி போட்டு வாய்க்குள்ள தூசனம் வர "இந்த நாயள பத்தி கதைச்சா தூசனம் தான் வருது "

6.அபே கமுவ ,ஓனே ...இப்பிடியும் கொஞ்ச பேர் கத்தினாங்கள் எனக்கு விளங்கேல்ல



யாழ்ப் பாணத்தில் இன்று இடம்பெற்ற  போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் காதில் விழுந்த சொற்கள் ,எனக்கு கவிதை வரி ஒன்று நினைவுக்கு வந்தது

,"யாரும் யாருக்கும் ஆறுதலாயிராத நாள் "

(நிலாந்தன் )

அழ அழ ,அழுவதே மொழி ,அழுவதே மருந்து .என்னை எனது மொழியில் அழ விடுங்கள் ,எனது பாவங்களை எனது கண்ணீர் தான் கழுவ வேண்டும் .

இன்று மீடியாக்கள் நிரம்பிய யாழ் நூலகம் ,துயரத்தால் ,அழுகையால் அடை பட்டிருந்தது . நவநீ அம்மா வாறா எண்டு கிழவிகள் எல்லாம் வீதியில் புரண்டு அழுதனர் .ஒரு சின்ன தங்கச்சி அழுத அழுகைய எப்பிடியெல்லாம் படம் பிடிச்சாங்கள் ,அட அட

,கண்ணீரை  விற்காதீர்கள் ,துடைக்க வேண்டிய நேரத்தில் அதை யாரவது துடைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டு ,அதே கூட்டத்தில் .அதே மந்தையில் ,ஒரு தவிர்க்க முடியாத ஆடாய்,நான்கு தடவைக்கு மேல் அழச் சக்தியற்று வெயிலில் நின்று கொண்டிருந்தன்.

மக்கள் ,எல்லாரிட்டையும் எல்லாத்தையும் சொல்லிச்சினம் ,மிஷனரிகள் இருந்து வந்த சில அருட் சகோதரிகளும் அதை கேட்டு அழுது கொண்டிருந்தனர் ,

நிறைய  வியாபாரிகளும் தங்கள் வேலையை கலை நேர்த்தியோடு செய்து கொண்டிருந்தனர் , எனக்கு அவர்களின் உணர்ச்சி தெரியாது ,எதற்காக செய்கிறார்கள் தெரியாது ,ஆனால் அந்த மக்களின் கண்களை நிமிந்து பார்க்கிற சக்தி எனக்கில்ல ,அவர்கள் தேடியதெல்லாம் ,ஒரு மீட்பர் .

ஒரு அம்மா ஏசுவையே சிலுவையில அறைஞ்சதுக்கு பேர் தான் அரசாங்கம் எண்டா

,இன்னொருத்தர் ,எத்தின பேர செம்மணியில புதைச்சிருப்பாங்கள் ..இன்னொரு அண்ணை சொன்னார் ,இரவு எழும்பி அப்பா எங்க எண்டு கேக்கிற பேரப்பிள்ளைக்கு என்ன சொல்லுறது ,பறை நாயள்.எங்கட பிள்ளை என்ன துவக்கு தூக்கினவனே ஏன் பிடிச்சவங்கள் "

எல்லா  கேள்விகளும் காற்றில் எறிந்து எறிந்து மீண்டும் அவர்களிடமே திரும்பியபடி  இருந்தது .கடைசி வரைக்கும் அம்மா வரேல்ல .பிறகு பார்கிராவாம் அப்பொஇயின்மண்ட் குடுத்திருக்கிரா ,எனக்கு வாயில தூசனம் தான் வந்தது .

(இன்னும் நிறைய  குறைகளையும் இந்த நேரத்தில் பார்க்க முடிந்தது ,முடிந்தால் பின்பு விரிவாக எழுதுகிறேன் )



ஒரு துளி கண்ணீரின் முன்

இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை

ஓ இதுவொரு மகா அழுகை .



-கிரிஷாந்-

மென்னிழைகளால் நெய்யும் பூமி

எந்தவொரு கலைக்கும் ஞாபகத்துக்கும் உள்ள தொடர்பென்பது மிக அந்தரங்கமானது . அது தான் கலையின் வேலை . ஞாபகத்தை ஞாபகத்தின் மூலம் ஞாபகப்படுத்துதல் . அதன் மூலம் அந்தரங்கமான வகையில் அதை அனுபவிப்பவனிடம் ஏற்படுத்துவது .கிளர்த்துவது .
ஈழத்து சிறுகதை வரலாற்றில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களினதும் ஒரு கதையைத் தானும் படித்திருக்கிறேன் . மிகப் பிரபலமானவர்களின் எல்லா தொகுப்புக்களையும் படித்திருக்கிறேன் . ஆனால் முழுமை கூடிய இப்படி ஒரு தொகுப்பை படித்ததில்லை . ஒரு மகத்தான கலைஞனின் கைகளுக்குத் தான் இப்படி எழுதுவது சாத்தியம் . வாழ்வின் எல்லைகளற்ற சாத்தியங்களை தொடராமல் , சாதாரண வாழ்வின் சாத்தியங்களின் விரித்துச் சென்று அகமும் புறமுமாய் விரியும் கதைப் பரப்புக்களை நெய்கிறார் .
இந்த தொகுப்பை பற்றி எதுவும் அதிகம் பேசத் தேவையில்லை . தொகுப்பு தானே தன்னளவில் அதிகம் பேசக் கூடியது . அதன் உள்ளாமைப்பே அதன் எல்லைகளை எந்தவொரு புற வார்த்தையையும் விட விரித்துச் செல்லும் வல்லமை கொண்டது . ஆனாலும் ஒரு வாசக அனுபவ அடிப்படையில் இந்த கதைகளின் போக்கை அது வாசகரை இழுக்கும் பக்கங்களை ஏனைய முக்கிய அம்சங்களை தொகுத்துச் சொல்லலாம் . அதுவே இந்த பத்தியால் ஆகக் கூடிய சாத்தியம் .
முதலாவது இவர் யார் என்பதை ,இவரை எங்கே வைக்கலாம் என்பதை பார்க்கலாம் . ஈழத்தைப் பொறுத்தவரையில் உருவாகியிருக்கும் மிக முக்கியமான இந்த தலைமுறை கதை சொல்லிகளின் படைப்புக்கள் எள்ளலையும் மிக அதீத அரசியல் நிலைப்பாடுகளையும் பேசுவதாக உள்ளது . ஆனால் , இவர்களிடம் இருந்து வெகு சுவாரசியமான படைப்புக்களை அடையாளம் கண்டிருக்கிறோம் . இவர்கள் எல்லோரிலும் இருந்து மாற்றாக உருவாகியிருக்கும் கதை சொல்லல் முறை . வாழ்வை தரிசிக்கும் தளம் என்பவை கெளரிபாலனை தனித்துவப் படுத்துகிறது .
இவர் யாருக்காக கதை சொல்கிறார் ? என்னை பொறுத்தவரையில் யாருக்காகவும் சொல்லவில்லை . கதை தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு எளிமையான இதயத்தை காலம் தேர்வு செய்திருக்கிறது .
கதை சொல்லும் நுட்பத்தில் இவர் தனது முத்திரையை உருவாக்குகிறார் , அதன் மிக நுட்பமான விவரணைகள் . அறுபடாத அல்லது தெறிக்காத நீண்ட காட்சி தொடர் அமைப்புக்கள் , உவமைகள் . படிமங்கள் மூலம் ஒரு காட்சி உலகை அங்குலம் அங்குலமாக நெய்கிறார் . கதையின் மொழி உடைத்துப் பரப்பிய கவிதை வரிகள் . வேறு என்ன சொல்ல ? உவமைகளிற்கு ஒரு உதாரணம் ,
“திசை தப்பிய சமுத்திர வெளியில் படகு அலைந்த போது, வானில் தும்பிக்கை கொண்ட முகில் கூட்டம் சில நாட்கள் பின் தொடர்ந்து வர தாம் கரை தட்டியதாக, அப்பா சொன்ன போது, தான் பிள்ளையாரப்பாவை வேண்டிக் கொண்டதை நினைத்துப் பார்த்தாள்.”
டோர்னாடோ சூறாவளியையும் மனித நம்பிக்கைகள் உலகைப் பார்த்து விரியும் விதத்தையும் இவ்வளவு அழகாக பதிவு செய்த வரிகளை அடையும் தருணங்களில் கலைஞனின் மந்திர விரல்கள் சொற்களை சொற்களால் உருவாக்கிய படி நம்பிக்கையை வாழ்வினால் உருவாக்குகிறது .
ஒவ்வொரு கதையாக விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை மிக நேர்த்தியான படைப்புக்கள் என்று எல்லாவற்றையுமே சொல்கிறேன் , உலகத்தரமான கதைகள் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இந்த கதைகளை பரிந்துரைக்கிறேன் .
மனித வாழ்வின் சிதைவுகளை , மனித மனங்களின் ஒழுங்கமைப்பை , மனித கண்ணீரின் விலைமதிப்பை ஒவ்வொரு கதையும் தனக்கே உரிய ஒழுங்குருவாக்கலுடன் படைக்கிறது . தான் வாழும் பூமியை ஒரு கலைஞன் நேசிக்கிறான் , தனது எளிய வாழ்வை நேசிக்கிறான் , தனது மனிதர்களை . தனது இயற்கையை ,தனது இயலாமைகளை எல்லாவற்றையும் . அதனாலேயே அவன் படைக்கிறான் . அவன் மூலமாக படைப்பும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது .
புத்தகத்தின் ஆரம்பத்தில் சில வரிகள் உண்டு . ” யுத்தத்தின் எச்சங்களாக , மனச் சிதைவுகளுடனும் , உடற்ச் சிதைவுகளுடனும் ,உடல் உறுப்புகளுக்குள் செல்த் துண்டுகளுடனும் ,துப்பாக்கி ரவைகளுடனும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு , இந்த புத்தகத்தை சமர்பிக்கிறார் என்று , அதுவே அவரின் படைப்பு அனுபவங்களின் வெளிப்பாடும் .
யுத்தம் முடிவடைந்த பின் யுத்தத்தின் மக்கள் என்னவானார்கள் ? யார் அவர்களை பராமரிக்கிறார்கள் , யாருக்காக போராடினோம் என்ற கேள்வி எப்படி எழுந்தது . இந்த வாழ்வும் போராடமும் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் இன்றும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான் , அப்படியான மனிதர்களுக்கு இந்த சமூகம் பொருட்படுத்தும் படியாக எதனையும் செய்யவில்லை , மதிக்கக் கூட இல்லை , அதற்குப் பதில் பயப்பிடுகிறது . ஒதுக்கி வைக்கிறது , எளிமையான ஒரு துளிக் கண்ணீர் தான் அவர்களுக்காக நாம் சிந்தியது . கண்ணீரை விட அடர்த்தியானது இரத்தம் . அவர்களுக்கு கொடுக்க இந்த கலைஞனுக்கு இருப்பது இவை தான் . ஞாபகத்துக்கும் வாழ்வுக்குமான மாயப் புதிரிலிருந்து பிறக்கும் இக் கதைகள் , இந்த மனிதர்களின் வாழ்வின் மறக்க முடியாத தழும்புகள் . அலைகளில் சிதறியும் காடுகளில் பதுங்கியும் , வீடுகளில் ஒடுங்கியும் வாழ்ந்த ஒரு சமூகத்தின் கதைகள் தான் இவை , இவர்களுக்கு இக் கதைகள் இருளில் கண்ணீரொளிரும் பத்து மெழுகுவர்த்திகள் .

பல்கலைக்கழக முரண்பாடு – பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு எடுக்க வேண்டும் ?




இந்தக் கட்டுரைக்கு முன் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.


நான் பல்கலைக் கழக மாணவனல்ல, இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் படிக்காதவர்கள், வெளியாட்கள் பல்கலைக் கழகம் தொடர்பில் கருத்தையோ அல்லது அபிப்பிராயத்தையோ எந்த ஒரு விடயத்தில் சொல்லும் போதும், முன்னாள் மற்றும் இந்நாள் பல்கலைக் கழக மாணவர்கள் எதிராகவே பார்ப்பார்கள். தங்கள் வீட்டிற்குள் நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லுவார்கள். படித்தால் தான் உங்களுக்குத் தெரியும் என்பார்கள்.


ஆகவே அதன் நடைமுறைகள் தொடர்பில் பிறர் (தமது மொழிபேசுபவர்கள் கூட) கருத்துச் சொல்ல முடியாது. இது அதன் பொது மனநிலை. இப்படியாக அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இது இனவாதமோ தேசியவாதமோ என்று பார்க்க முன் அவர்கள் தமது பல்கலைக் கழகத்தை என்னவாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து நாம் இந்த சண்டையை அவர்கள் ஏன் பிடித்தார்கள் என்று பார்க்கலாம்.


ஒரு வரலாற்று விளக்கம்


இது ஒரு பல்லின மக்கள் வாழும் சமூகமல்ல. சிறிய வயதிலிருந்தே தமிழர்களை மட்டுமே அதிகம் பார்த்து வளர்ந்த சமூகம். சிங்களவர்களின் பண்பாட்டையோ அல்லது இஸ்லாமிய முறைகளையோ இவ்வளவு ஏன் சைவ மாணவர்கள் பலருக்கு கிறிஸ்தவ வழிபாட்டிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாது. நாம்தான் இதற்குப் பொறுப்பு முப்பது வருடகாலம் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி அனைவரின் பிரதேசங்களுக்கும் இடையில் சுவர்களை எழுப்பி பக்கத்தில் என்ன நடக்கிறதென்று தெரியாமல் செய்து விட்டோம். கிழக்கில் முஸ்லிம் சுவர் வடக்கில் தமிழ்ச்சுவர் மலையகத்தில் இந்தியத்தமிழ்ச்சுவர் தெற்கில் சிங்களச் சுவர் என்று இருந்ததை நாம் மறுக்க முடியாது. இதனால் ஒரு நாட்டிற்குள் பல்வேறு சமூகங்கள் வாழ்ந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாத ஒரு இளைய தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.


முரண்பாடும் மக்களின் நிலைப்பாடும்


18 ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கிடையிலான முரண்பாட்டில் பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.


முதற் காரணம் அவர்கள் மாணவர்கள், இன்னும் சொல்லப் போனால் இளைஞர்கள். அவர்கள் இலகுவாக கோபப்படுவார்கள், சண்டை பிடிப்பார்கள் அது அவர்களின் வயதுப் போக்குகளில் ஒன்றாக நாம் உருவாக்கி விட்டோம். இந்த வயதில் அவர்கள் எல்லோரினாலும் அரசியல் ரீதியில் பயன்படுத்தப் படும் நிலை உள்ளது. யார் முதற் கல்லை எறிந்தது? யார் முதலில் அடித்தது? எத்தனை பேர் எத்தனை பேரை அடித்தது என்பது தொடர்பில் இது வரை ஆயிரம் கதைகள் உலவுகின்றன. அவை எல்லாவற்றிலும் உள்ள வெளிப்படையாகத் தெரியாக் கூடிய விடயங்களை விளங்கி கொள்ள முயற்சிப்போம்.


1 – கண்டிய நடனத்தையும் நிகழ்வில் நடாத்த சிங்கள மாணவர்கள் விரும்பினார்கள்.

2 – மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள்.


1- கண்டிய நடனமும் அரசியல் நடனமும்


அரசியல் ரீதியான பின்புலங்கள் இதில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆனால் வேறு மாதிரி யோசித்துப் பார்ப்போமே, தமிழ் மாணவர்கள் நினைத்திருந்தால் இதை அனுமதித்திருக்கலாம்.கலாசாரம் என்பது நாம் உருவாக்கும் ஒன்று தான். இதில் முடிவெடுக்கும் நிலையிலும் இதை தடுக்கக் கூடிய நிலையிலும் பல்கலைக் கழக நிர்வாகம் இல்லை என்பது தான் அடிப்படையான பிரச்சினை.


இதில் அரசியல் ரீதியிலான குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லையெனில் அவர்களை நிகழ்வை நடாத்த அனுமதித்திருக்கலாம். எதிர்காலத்தில் முன் கூட்டியே இவற்றை ஒழுங்கு செய்து கொண்டால் நல்லது.


2 – மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள்


இது சாதாரணமாக பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஒன்று. ஆனால் நாமும் அவர்களும் இதை ஒரு இனத்துவ பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறோம். இங்கே தான் மாற்றம் வேண்டும்.


நாம் சிலவற்றை யோசித்துப் பார்ப்போம். விரும்பியோ விரும்பாமலோ சிங்களவர்கள் என்பதன் மூலமாக சில சிறப்புரிமைகள் உண்டு. பொலிஸ் அவர்களை ஏற்றிச் சென்றது மற்றும் இதர புலனாய்வு பிரச்சினைகள் என்பவையும் அவர்களை நெருங்குவது குறைவு. ஆனால் இது நிலையானதல்ல. அவர்கள் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்தால் அவர்களுக்கும் தமிழர்களுடைய நிலை தான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் சிங்களவர் என்ற அடையாளம் ஒருவரைக் காப்பாற்றாது. அது அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் தான் உள்ளது. அவர்கள் தமது உரிமைகள் என்று நம்பவைக்கப்படும் விடயங்களுக்காக சண்டை பிடிக்கிறார்கள், முரண்படுகிறார்கள். தமிழ் மாணவர்களும் அப்படித் தான் தங்களுக்கே உரித்தான உரிமையுடைய பல்கலைக் கழகமாக இதை கருதும் மனநிலையில் மற்றவற்றை எதிர்க்கிறார்கள். இயல்பிலேயே தமிழ் மாணவர்களுக்கும் சரி சிங்கள இஸ்லாமிய மற்றும் மலையக மாணவர்களுக்கும் சரி ஒற்றுமை புரிந்துணர்வு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்தல் என்பது குறைவு. இந்த சுயவிமர்சனத்தை நாம் செய்தாக வேண்டும். மற்றவர்களை நோக்கி நாம் இனவாதத்தைக் கக்குகிறார்கள் என்று சொல்லும் போது நாம் எதை செய்கிறோம் நாம் செய்வது இனவாதம் இல்லையா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.


எல்லாவற்றின் பின்னும் இப்போதும் நாம் இன நல்லிணக்கத்தைப் பற்றித் தான் பேச வேண்டும். நம்முடையது என்று நாம் கருதும் தேசியவாதம் இனவாதம் போன்றவை நம்முடையதல்ல. நம்முடையது போன்று அது இருக்கிறது. பல்கலைக் கழகத்தை தேசியவாதத்தைக் காவும் குப்பைத் தொட்டியாகத் தான் இன்னமும் வைத்திருக்கிறார்கள்.


இப்பொழுது அப்பாக்களாக அம்மாக்களாக இருப்பவர்கள் வரலாற்றில் முக்கியமான நிலைப் பாட்டினை எடுக்க வேண்டும். நாங்கள் காட்டாமல் வளர்த்த மற்றைய சமூகங்களை விளங்கி கொள்ள நீங்கள் தான் உதவ வேண்டும். ஏனெனில் பல்கலைக் கழகத்தில் நடக்கும் இது நாளை தெருவிலும் நடக்கலாம், வீடுகளுக்குள்ளும் நடக்கலாம், அதனால் தான் நாம் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்.


இது ஒரு வீட்டுப் பிரச்சினை போல் குறுக்கிவிட முடியாது. நாளை எங்கள் சகோதரிகளும் நண்பர்களும் தந்தையர்களும் உறவினர்களும் தெருவில் தமது இன அடையாளங்களுக்காக தாக்கப்படுவார்கள் அதனை தடுப்பதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம், இனவாதமோ தேசியவாதமோ என்றைக்கும் எதையும் காக்கப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் நிறைய சிங்களவர்களுடன் நாம் உரையாட வேண்டும். சிங்களவர்களும் தமிழர்களுடன் உரையாட வேண்டும். இரண்டு மொழியையும் அனைவரும் கற்க வேண்டும். முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நிலையில் தான் எதிர்காலத்தில் இவை இடம்பெறாது.


ஒரு வரலாற்று உதாரணத்தைப் பார்ப்போம், அண்மையில் நடந்த கலந்துரையாடலில் மகேந்திரன் திருவரங்கன் (நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் இனத்துவமும் அடையாளமும் பற்றி தனது கலாநிதி பட்ட ஆய்வை செய்து கொண்டிருப்பவர்) ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார், ‘அநாகரிக தர்மபாலா மற்றும் ஆறுமுகநாவலர் போன்றோர் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தேசியவாத கோஷத்தைப் பயன்படுத்திய போது காலனித்துவ ஆட்சியாளர்கள் என்ன சொல்லி காலனித்துவத்தைச் செய்தார்களோ அதையே தான் இவர்களும் சொன்னார்கள். காட்டு மிராண்டிகள் என்று இரண்டு பேரும் மாறி மாறி சொல்லிக் கொண்டார்கள்.’ இதையே தான் இன்றைய தேசியவாதமும் சொல்கிறது. நமது சிந்தனையில் மாற்றமே இல்லை என்பது எவ்வளவு மோசமான நிலை?


இந்தப் பல்கலைக்கழக முரண்பாட்டிற்கு பின் நானும் இரண்டு சிங்கள மற்றும் ஒரு முஸ்லிம் பெண் மற்றும் ஒரு மலையாகத் தமிழரும் இணைந்து ஒரு கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்தோம்.


கேள்வி இது தான், ‘ இவ்வளவு கேவலமான இனவாதமும் தேசியவாதமும் எப்படி வெல்கிறது? மக்கள் ஏன் இதனை வெல்ல வைக்கிறார்கள் ? ‘


ஒரே ஒரு விடை தான். ‘சுய லாபம்’


தமது அதிகாரம். தமது பாதுகாப்பு. தமது வாய்ப்புக்கள். தமது சலுகைகள், எல்லாமே தமக்கு வேண்டும் என்பது தான் இதன் அடியில் உள்ளது. மற்றவர்களை மதிக்காத உரிமை, நீதி என்பன கிடைத்தும் எந்த பிரயோசனமும் இல்லை. எல்லோரும் மற்றவர்களை மதித்து நேசித்து வாழ்தல் மட்டுமே பரிந்துரைக்கக் கூடியது. இது சிறுபிள்ளைத் தனமாகத் தெரியலாம். ஆனால் இதை இட்டு வேலை செய்து பாருங்கள் எங்கிருந்து தொடங்கலாம் என்று உரையாடுங்கள். நாம் மனிதர்களுக்கான உறவை பல்கலைக் கழகத்திலிருந்தே கூட தொடங்கலாம் . அப்பொழுது தான் அதன் கடினம் தெரியும். அதை நோக்கி சிந்திப்போம். நமது அரசியல் நிலைப் பாட்டினை எடுப்போம்.

குறிஞ்சிக் குமரன் தாக்குதல் பின்னணி என்ன ?



இதனை உறுதிப்படுத்திய பின்னரே பதிவிடுகிறேன். குறித்த தினத்தில் குறித்த பீட அனைத்து இன மாணவர்களுக்கிடையிலுமான கலந்துரையாடல் ஒன்று நடந்து கொண்டிருந்திருக்கிறது.

அதன் போது சாப்பிட்டு வருகிறோம் என்று சில சிங்கள மாணவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். வழியில் முஸ்லீம் மற்றும் தமிழ் மாணவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று விட்டு திரும்புவதை அவதானித்தவர்கள் சரமாரியாக தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு பின்னணி ஏதும் தெரியவில்லை. திட்டமிட்ட தாக்குதலுமில்லை,  தற்செயலாக வந்த வேளை இதை செய்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

பின்னணி – குறித்த பீடத்தில் மாணவர்கள் தமது ஒன்றியத்தின் சார்பில் உண்டியல் மூல நிதி சேகரிப்பில் ஈடுபடுவார்கள். இதன் போது தமிழ் மாணவிகள் அசொகரியங்கள் காரணமாக பங்கு பற்றுவதில்லை. அங்கே பொது வெளியில் அப்படி ஈடுபட அவர்களுக்கு விருப்பமில்லை என்ற காரணத்தினால் தமிழ் மாணவர்களே அதில் ஈடுபடுவதாக இருந்திருக்கிறது. அதில் கடந்த வருடம் வரை எந்த குழப்பமும் இல்லை. பிறகு வந்திருக்கும் புதிய மாணவர்கள் பலர் தமது மாணவிகள் வருகிறார்கள் ஆனால் தமிழ் மாணவிகள் வருவதில்லை என்று பேசியிருக்கிறார்கள். இது உள்ளே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையாக உள்ளது.

குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்கு சென்ற மாணவிகளுக்கு துணையாகவே குறித்த மாணவர்கள் சென்றிருப்பதாக தெரிய வருகிறது. முஸ்லீம் மாணவர்களும் தமது வழிபாட்டுக்கு சென்று விட்டே திரும்பியிருக்கிறார்கள். இதன் போதான தாக்குதலை நாம் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும்.

எதன் உதவியுடன் ஒருவர் அடக்குமுறையை கட்டவிழ்க்கிறார் என்பதை நாம் பேராதனை விடயத்தில் பார்க்க வேண்டும்.

ஒரு அரசு எப்படி அதன் இராணுவத்தையும் பொலிசையும் கொண்டு அடக்குமுறையை மற்றவர்களை துன்புறுத்துவதை நிகழ்த்துகிறதோஈ அதையே தான் பல்கலைக் கழகங்கள் ராகிங் மூலம் செய்கின்றன.

ராகிங் இல்லையென்றால் இதனை தெளிவான தூலமான முடிவாக ‘இனவாத / இனத்துவேச’ நடவடிக்கையாக நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் நடந்திருக்கும் குறித்த பீடத்தில் ‘பொது ராகிங்’ நடைமுறைகள் இருக்கிறது, பல பீடங்களில் அவ்வாறு இல்லை. குறித்த மொழி பேசும் மாணவர்களே தமது மொழி பேசும் மாணவர்களை ராகிங் செய்வார்கள், மாணவர்கள் தாக்கப்பட்ட குறித்த பீடத்தில் யாரும் யாரையும் ராகிங் செய்யலாம். அது அதன் நடைமுறை. தடை செய்யப்பட்ட ஒரு நடைமுறையில் அனைத்து மாணவர்களும் ஈடுபடும் போது தமது மொழி பேசும் மாணவர்களை அடித்தால் என்ன பிறமொழி பேசும் மாணவர்களை அடித்தால் என்ன? இரண்டுக்கும் பொதுவாயுள்ள கருவி ‘ராகிங்’. அதனை இலங்கை அரசு தற்போது இன்னும் நூதனமாக கையாளப் போவதாக தெரிய வருகிறது. மார்ஷல்களுக்கு இலங்கையின் உயர் பதவி வகித்த இராணவத் தலைமைகளை ‘ராகிங்’ ஐ கட்டுப்படுத்துவதற்கு பரிந்துரை செய்திருக்கிறது . இது அநேகம் நடைமுறைக்கு வரும் சாத்தியங்களும் தெரிகிறது. இதனை இராணுவமயமாதலாக எதிர்க்க வேண்டும் ஆனால் ‘ராகிங்’ நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் இதனை எவ்வாறு எதிர்க்க முடியும்? அவர்களிடம் வலிமையான வாதம் உள்ளது. அதனை எதிர்ப்பதற்கு வெறும் கோஷம் போடுவது மட்டும் போதாது. நாம் ஒன்று பட்டுச் சிந்திக்க வேண்டும்.

சரி, ராகிங் பிரச்சினையாக இருந்தாலும் கூட இதற்கு அப்பால் இங்கே தெளிவான பெரும்பான்மை, சிறுபான்மை அடையாளங்கள் துலக்கமாகத் தெரிகின்றன. இதனை விளங்கி கொள்ள இந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்க்கலாம் ‘இதையே இருபது தமிழ் மாணவர்கள் சேர்ந்து சிங்கள மாணவர்களுக்கு அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ‘

‘இதற்கு முன்னர் தமிழ் மாணவர்கள் இப்படி சிங்கள மாணவர்களை குறித்த பல்கலைக் கழகத்தில் தாக்கியிருக்கிறார்களா? அது முடியுமா ?

இங்கிருந்து தான் நாம் இனவாத உளவியலை புரிந்து கொள்ள முடியும்.

கண்டிய நடன பிரச்சினை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற போதே அதனை நாம் தொடங்கியிருக்க வேண்டும். நாம் இதனை தனிப்பட்ட பல்கலைக்கழக மானப் பிரச்சினையாக கருதி விட்டோம். நாடு தழுவிய ரீதியில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுய மரியாதை தொடர்பிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து அல்லது முடிந்த வரை பொது நோக்கோடு இதற்கான பொது நடைமுறைகளை உருவாகியிருக்கலாம். ஒரு பெரிய பல்கலைக்கழக சமூக உரையாடலை உருவாக்கியிருக்கலாம்.

உதாரணமாக – இந்த பிரச்சினைகளை நாம் இனத்துவ பிரச்சினையாக உணர்ந்தாலும், இதன் வெளிப்பாட்டு முறையில் வேறுபாடுகள் இருப்பதை கவனிக்க வேண்டும். அதன் மூலமே அடக்குமுறையின் வடிவங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

1 – கண்டிய நடன பிரச்சினையின் போது பொலிஸ், அரசியல்வாதிகள் மற்றும்ஊடகங்கள் செயற்பட்ட முறை (தமிழ் அரசியல்வாதிகளும் இதில் உள்ளடக்கம், பலரும் அது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்கள்.)

பொலிஸ் – உடனடியாக சட்டம் தன் கடமையைச் செய்தது. குறித்த மாணவர்களை கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் படுத்தியது. சிங்கள மாணவர்களை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தது. ஆனால் குறிஞ்சிக் குமரனின் சம்பவத்தில் மாணவிகளே அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிய வருகிறது. இவ்வளவு நல்லிணக்கம் பேசும் அரசு இதனை தமிழ் மாணவர்களுக்கும் செய்திருக்க வேண்டும். அது அதன் கடமை. ஆனால் செய்யவில்லை.

அரசியல்வாதிகள், ஊடகங்கள் – கண்டிய நடனத்தின் போது தேசியவாத மைய அரசியலை மட்டுமே கொண்ட இந்த உரையாடல்கள் அல்லது மக்களை தனித் தனியாக கும்பலாக்கி சிந்திக்க வைக்கும் முறைகளையே அவர்களும் அவைகளும் மேற்கொண்டன.

ஆனால் றிஞ்சிக் குமரனிடம் எந்த விளைவுகளும் இல்லை. இது தமிழ் மாணவர்களை அரசியல் பலமற்ற பின்புலமற்ற மாணவர்களாக உணர வைக்குமல்லவா? அவர்களுக்கு தார்மீக ரீதியில் அடிப்படையாக உடனடியான கவனிப்பு செலுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

2 – குறித்த கண்டிய நடன பிரச்சினையின் உரையாடல்களின் போது ஒரு புகைப்படத் தொகுதி பரவலாக பகிரப்பட்டது. அதில் பேராதனை பல்கலைக் கழகத்தில் தமிழ் நடனம் ஆடும் படம் இருந்தது. ஆனால் தற்போது தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள். இதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

எப்பொழுதுமே நல்ல சக்திகளும் பகை சக்திகளும் ஒரே சூழலில் இயங்கி கொண்டிருக்கும். அவற்றை நாம் இனங் காண வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலுமே அனைவருமே இனவாதிகள் அல்ல. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்.

இதற்கு அப்பால் இனவாத அடிப்படையில் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழத் தான் போகின்றன. இதனை எப்படி தீர்ப்பது ? இது தொடர்பில் யார் முடிவெடுப்பது ? யார் உரையாடுவது?

நாம் அதையா செய்கிறோம் ? உரையாடத் தொடங்கிய ஒவ்வொருவரையும் அரசின் கைக்கூலிகள் என்றோம். துரோகிகள் என்றோம்.

உரையாடலுக்கு ஒரு பொதுத்தளம் வேண்டும். அதனை உருவாக்கும் போது சிந்தனைத் தளத்திலானதும் நடைமுறைக்கு பொருந்தக் கூடியதுமான வழி வகைகளை நாம் ஆராய வேண்டும். அது ஒரு நீண்டகாலச் செயன்முறை. அதனை மாணவர் ஜனநாயகச் சூழலற்ற பல்கலைக் கழகங்களில் நாம் முதலில் தொடங்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஒரே மாதிரி முடிவெடுப்பதை தவிர்த்து,  பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் நிகழும் இந்த அடக்குமுறைகளை மற்றும் அதற்கு துணை போகும் கருவிகளை சரியான முறையில் அடையாளம் காண்பது மிக முக்கியமானது.

அவற்றை நாம் நீக்கியாக வேண்டும். ராகிங் அடிப்படையான அடக்குமுறைக் கருவியாக பல்கலைக் கழக மட்டத்தில் செயற்படுகிறது. அதனை அனைவரும் எதிர்க்க வேண்டும். அது உள்ளக ஜனநாயகம் சார்ந்து மாணவர்களே எடுக்கக் கூடிய முடிவு. பிறகு வெளியிலும் உள்ளும் உள்ள இனத்துவேஷங்களை, மதத்துவேஷங்களை,  ஆண் – பெண் அடக்குமுறைகளை நாம் எதிர்க்க முடியும்.

ஒரே நேரத்தில் நாம் ஒடுக்குபவர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருந்து கொண்டு விடுதலையை எதிர்பார்க்க முடியுமா ?

நாம்தான் நமது விடுதலையை சுயமரியாதையை மீட்டு எடுக்க வேண்டும் அது தொடர்பில் நாம் நேரடியான அனுபவங்களில் இருந்து பெற்றுக் கொண்ட அறிவை பகுத்தறிவாக்கி பொது அனுபவமாக / பொதுப் பிரச்சினையாக உணர வைத்து அதனை நாம் தீர்க்க முடியும், நமது காலத்தில் நாம் ஜனநாயக வழியிலான உரையாடல்களை அனைத்து மட்டங்களிலும் உருவாக்க வேண்டிய தேவையினை மீண்டும் மீண்டும் பலமாக உணருகிறோம்.

யாழ்ப்பாணம் போக ரெடியா?




“யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி

யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி

யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி

யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்”

–  நிலாந்தன் –

சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, “நீ கதைக்கிறது ஒரு மெல்லிய ஆங்கிலம் கலந்த, சினிமாப் பாணியான தமிழ்” என்ற தொனிப்படக் கூறியிருந்தார். ஆம். அது சரிதான்.

“தொனி” தான் நாம் இப்போது பேசப்போகும் பிரச்சினை. யாழ்ப்பாணத்தின் தனித்த அடையாளங்களை சொல்லிக்கொண்டே போகும்போது முதலில்  சொல்லத் தொடங்குவது அதன் வித்தியாசமான அழகான தமிழை உச்சரிக்கும் பாணியைத்தான். யாழ்ப்பாணத்து அன்ரிமார் “இஞ்சருங்கோ” என்று அழைப்பதில் தொடங்கி, அதன் காதல் இழைந்து கிடக்கும் தனித் தொனி தன்னை இழந்து வருகிறதா என்று கேட்டுக்கொண்டால், பதில், “ஆம்” என்றுதான் வரும்.

இலகுவான ஒரு சாட்சி, சமீபத்தில் வெளிவரும் குறும்படங்களில் இதன் தாக்கத்தையும், தாக்கத்தை மீறி அதன் இயல்புத் தன்மையை பேணும் பிரயத்தனங்களையும் சொல்லலாம்.

ஆனால், இது சரியாயிருக்குமா? நாம் நமது மொழியை, அது ஏற்கனவே கொண்டிருக்கும் ஒலியமைப்பிற்கு ஏற்ப உச்சரிப்பது ஏன்? அவ்வாறு உச்சரிக்காமல் இருப்பதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது?

முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது, இது சரியோ அல்லது தவறோ, ஆனால் இப்படி நிகழும் மாற்றத்தை தடுப்பதென்பது மிகவும் கடினம். கிட்டத்தட்ட முடியாது. ஆனால், அது அதன் அழகியலை, தொன்மையை, அடையாளத்தை இழந்துவருகிறது என்பதை உணர்த்த முடியும்.

ஒன்று, நாம் நமது ஒலியமைப்பைக் கொண்டு நம்மை வேறுபடுத்துவது சரியாயிருக்குமென்று தோன்றவில்லை. ஆனால், பொதுவாக எல்லா நிலங்களின் வட்டார மொழியும் அதனை உச்சரிக்கும் பாணியும் அவர்களை யாரென்று காட்டிவிடும். மட்டக்களப்பு தமிழ், மலையகத் தமிழ்… என்று மாறுபடும் தொனிகளில் அவர்கள் தமது பின் புலத்தை சொல்லி விடுகிறார்கள். இப்போதுள்ள பிரச்சினை, அது (தொனி ) ஒரு அடையாளமாக பார்க்கப்படுமிடத்து அடையாளமிழத்தல் ஒரு பாதிப்பு என்பதே. இதை ஒரு சீரழிவு என்று கருதுவதை விட பண்பாட்டு பிறழ்வு அல்லது கொஞ்சம் மென்மையாக பண்புரு மாற்றம் என்று கருதலாம் .

இரண்டு, உச்சரிக்காமல் விடுவதால் ஒன்றும் பெரிதாக நேர்ந்துவிடப் போவதில்லை, தொனி மாற்றம் என்பது உலகமயமாதலின் ஒரு விளைவு  தான், தொலைக்காட்சி, பேஸ்புக் என்று வீட்டுக்குள் நுழைந்திருக்கும் உலகமும், அதனால் வெளியில் நாம் புழங்கும் சம வயதினை ஒத்த உலகமும், அதன் மீது கொள்ளும் கவர்ச்சியும், அதை பிரயோகிக்க காட்டும் அக்கறையும்தான் அதன் உடனடி விளைவுகளுக்குக் காரணம். ஒரு குழந்தை தான் வளரும் சூழலில் உச்சரிக்கப்படும் தொனியையே பின்பற்றும். இதை சாதாரணமாக பறவைகளின் தொனி வேறுபாட்டுடன் கூட ஒப்பிடலாம். நகரங்களில் வாழும் பறவைகள் இப்போது அவ்வளவாக அதன் சொந்த அமைப்பில் ஒலிப்பதில்லையென ஆய்வுகள் சொல்லுகின்றன.

சமீபத்தில் ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண், பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஒரு சிறுவனை இன்னொருவன் அடித்ததற்கு “ஏய், எங்க சங்கத்து ஆளு மேல கைய வைச்சா, கொண்டே போடுவன்” என்று சொன்னாள். இன்னொரு சந்தர்ப்பம் சமீபத்தில் நடந்த விழாவொன்றில் (இது குறும்படங்கள் பற்றிய விழா) அதில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வாங்கிய அதன் இளம் வயது இயக்குனர், பேசிய பேச்சில், அப்படியே தென்னிந்திய சினிமா சனல்களின் தாக்கம் தெரிந்தது. இப்படி அவதானித்தால், நாளொன்றுக்கு ஒவ்வொருவரைச் சுற்றியும் தொனி வேறுபாட்டுடன் பேசும் பலரையும் அவதானிக்க முடியும் .

இந்த மாதிரி எழுதி அப்படி பேசுவதை கண்டனம் செய்வதோ புத்தி கூறுவதோ இப்பத்தியின் நோக்கமல்ல. வெகு அழகானதொரு உச்சரிக்கும் தொனி அழிகிறது என்ற கவலைதான் இதற்குக் காரணம். ஆங்கிலத்தில் பேசும்போது கூட ஓஷோவின் உரைகளில் அவரது சொந்த மொழியின் அழகுடனே அதை உச்சரிப்பார். அந்த ஆங்கிலம் கவிதையாவது அப்படித் தான். உலகின் தலை சிறந்த பேச்சாளரான ஹிட்லர், ஜெர்மன் மொழியில் பேசும்போது அதை உச்சரிக்கும் விதம் அந்த அழகு, அதன் பிரயோகம்தான் அந்த நாட்டின் மக்களை அவரை நம்பச் செய்தது. எப்படியோ, தொனி மக்களின் உணர்வுகளை ஒருவித, கண்டுபிடிக்கக் கடினமான இழையில் கோர்த்து வைத்துள்ளது என்பது உண்மை.

இதன் பின் நீங்கள் உச்சரிக்கும் தொனியை கவனித்துப் பாருங்கள். புதிதாக நீங்கள் பேசும் பாணியை அதில் பயன்படுத்தும் சில சொற்களை, உதாரணம் “கலாய்க்கிறது” போன்ற சொற்கள், அதன் அபத்தங்களை உணர்ந்தீர்கள் என்றால், யாழ்ப்பாணத்து தமிழும் ஒரு தனி ருசி என்று நினைத்தீர்கள் என்றால், கஷ்டப்பட்டு இதை டைப் செய்த கைகளுக்கு முத்தம் கொடுத்தது போல் இருக்கும்.