திங்கள், 26 டிசம்பர், 2016

ஒரு காட்டுமிராண்டியின் கவிதைகள்நெருக்கமான நண்பனின் பதைபதைப்பைப் போல் எப்பொழுதும் என்னுடன் கதைத்துக் கொண்டும் அவனது அன்றாட வாழ்க்கையை அத்தனை வெளிச்சமாய் திறந்து வைத்துக்கொண்டுமிருக்கிறது மனுஷ்ய புத்திரனது கவிதைகள்.

மனுஷ்யபுத்திரன் 


கவிதையை வாசிக்கின்ற யாருக்கும் மிக எளிமையாக மனுஷ்யபுத்திரன் அணுக்கமாகிவிடுகிறார். ஒரு குழந்தையைப் போல அவரது புத்தகங்களை மடியில் தூக்கி வைத்துக் கொண்டால் அந்தக் குழந்தை சில நேரம் நம்மைக் கிள்ளுகிறது , அழுது நடித்து தனக்கு விரும்பியது எதுவெனக் காட்டுகிறது , சிரித்துக்கொண்டே முத்தமொன்றைத் தருகிறது ,  முத்தமிட்டால் சில நேரம் கன்னத்தைத் துடைத்துக் கொண்டு  உவ்வே என்கிறது, சில நேரம் தேவதைக் கனவுகள் வந்து புன்னகைத்துக் கொண்டே உறங்குவது போலிருக்கிறது , சில நேரங்களில் யாரையோ பற்றி முறையிடுகிறது , சில நேரங்களில் கட்டியணைத்துக் கொண்டு வேறு யாரிடமும் போக மாட்டேன் என்கிறது , சில நேரங்களில் சிறகு முளைத்துப் பறந்து விடுகிறது, நான் அவதானித்த வரை "குழந்தை" தான் மனுஷியபுத்திரன் கவிதைகளின் இயல்பு. அதன் எளிமையான உணர்வாக வாழ்வின் பசி அடிவயிற்றில் கிடக்கிறது. அதற்காகவே அது ஓயாமல் அழுதுகொண்டிருக்கிறது.

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் "பொதுத்தன்மை" மிக முக்கியமான ஒரு அம்சம். அது கால தேசங்களுக்குள் கட்டுப்படுவது குறைவு.ஆனால் சில வேளைகளில்  அப்படி நிகழ்வதுமுண்டு. பெரும்பாலான கவிதைகளுக்கிருக்கின்ற சொற் தேர்வுமுறையும்  வாழ்க்கையின் அன்றாடக் கணங்களின் நுட்பமான அவதானிப்பும் இன்று நாம் அதிகம் பார்க்க மறந்திருக்கும் தருணங்கள்,

யாரோ கவனிக்கும்போது

யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
காதலர்கள் அந்த இடத்திலிருந்து
நகர்கிறார்கள்

ஒரு இளம் பெண் தனது உடலில்
குறுகுறுப்பை உணர்கிறாள்

பேருந்தில் ஒருவன் செல்போனை
அணைத்துவிடுகிறான்

இரண்டு பேர் மிகவும் தாழ்ந்த குரலில்
சண்டையிடத் தொடங்குகிறார்கள்

குழந்தைகளின்  இயல்பு
திடீரென மாறி விடுகிறது

அழகற்ற ஒருத்தி
மனம் உடைந்து அழுகிறாள்

ஒரு சிறு பையன்
சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்

மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்

இளைஞர்கள் மிகவும் உயரமான
இடத்திலிருந்து குதிக்கிறார்கள்

ஒரு மூதாட்டி மீண்டும்
அதே கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்

பூச்சாடியில் மலர்கள்
சரி செய்யப்படுகின்றன

கலைந்த முகங்கள்
நேர்த்தியாக்கப்படுகின்றன

பத்திரிகையில் ஒரு திருத்தம்
வெளியிடப்படுகிறது

மருந்துக்கடையில் ஒருத்தி
எதையோ வாங்க மிகவும் நாணமடைகிறாள்

அரவமற்ற சாலையில்
ஒருவன் வேகமாக நடக்கத் தொடங்குகிறான்

குடிபோதையில் நிராதரவாய் கிடந்த யாரோ
முனகத் தொடங்குகிறான்

மதிய வெயிலில் தியானித்த காகம்
சட்டென எழுந்து பறக்கிறது

ரயிலில் குருட்டுப் பிச்சைக்காரி
இன்னும் உருக்கமாகப் பாடுகிறாள்

யாரோ பாதிப் புணர்ச்சியில்
திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார்கள்

ஒரு கொலைகாரன் தன்கத்தியை
மறைத்து வைக்கிறான்

கோமாளிகள் இன்னும் சிரிக்கவைக்கப்
போராடுகிறார்கள்

சொற்பொழிவாளன் மேலும்
குரலை உயர்த்துகிறான்

ஒரு தவம்
கலைகிறது

குடியரசு தின அணிவகுப்பில்
நாட்டின் தலைவர்
கொட்டாவியை அடக்கிக்கொள்கிறார்

ஒரு வேசி
மெலிதாகப் புன்னகைக்கிறாள்

ஏழ்மையை மறைக்க
ஒருவன் வீணே  பொய் சொல்கிறான்

மைதானத்தில் அவசர அவசரமாக
ரத்தக்கறைகள் கழுவப்படுகின்றன

கடையில் அவ்வளவு மெலிதான
ஆடையை ஒருத்தி தேர்ந்தெடுக்கிறாள்

சிலர் பணத்தைப்
பத்திரப்படுத்துகிறார்கள்

சரித்திரத்தில் இடம்பெறுவதற்கான
தீவிரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன

முற்றாக நம்பிக்கையிழந்தவர்கள்
ஏதேனும் உதவி கிடைக்கலாம்
என்று மீண்டும் நம்பத் தொடங்குகிறார்கள்

யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
எல்லோருமே தங்கள் சுதந்திரத்தைக்
கொஞ்சம் இழக்கிறார்கள்.

இந்தக் கவிதையின் நேரடியாக உரையாடும் தன்மையிலும் கூட அதிகளவான கவனிப்பின் தருணங்கள் தோன்றி ஒருவரை ஒருவர் எப்படி அணுகுகிறோம் வெளிப்படுத்துகிறோம் என்பதை இந்தக்  கவிதை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது , மேலும் அதைப் பார் இதைப் பார் என்று நடந்து சென்று ஊரைச் சுற்றும் போது ஒரு நண்பர் காட்டும் உலகத்தைப் போல் அது இந்த உலகத்தின் பல காட்சிகளையும் காட்டிக் கொண்டிருக்கிறது, கேள்வி கேட்கிறது.

 மனுஷ்யபுத்திரன்  உலகத்தின் மீது எழுப்பும் எளிமையான கேள்விகள் முக்கியமானது. ஒரு உரையில் அவர் கேட்கிறார் " என்னைப் பற்றிச் சொல்லும் போது இந்த மேடையில் சொன்னார்கள் , மனுஷ்யபுத்திரன் மிகவும் துணிச்சலானவர் என்று , எனக்கு ஒரு கேள்வி மனதில் வருகிறது , துணிச்சலாக இருப்பது தானே மனிதனுடைய இயல்பு.மனுஷ்ய புத்திரன் ரொம்ப நேர்மையாய் பேசுகிறார் என்று , நேர்மையாக இருப்பது தானே மனிதனுடைய இயல்பு. அது எப்படி ஒருவருடைய பாராட்டுக்குரிய இயல்பாக மாறிவிடுகிறது.  அப்படியென்றால் எங்கே  நாம் செல்கிறோம்  , ஒட்டுமொத்தமாக  நாம் இழக்கிறோமா? எனக்கு அது மிக மிக இயல்பான ஒன்று , ஒரு மனுஷனுக்கு கோபம் வந்தால் ஒரு கல்லெடுத்து ஏறியிறாங்க , அந்த மாதிரியானது தான் எழுத்து. ஆனால் நாம் ஏன் கல்லை எடுத்து எறியத் தயங்குகிறோம். நமக்கு கோபம் வந்தால் அதிகாரத்தைப் பார்த்து திட்டுகிறோமே, நாம் ஏன் கெட்ட வார்த்தைகளை மறைத்துக் கொண்டு அவ்வளவு நாகரீகமாகப் பேசக் கற்றுக் கொண்டோம் . இது தான் என்னுடைய கேள்வி "

இது தான் அடிப்படையான இன்றைய உலகப் போக்கின் அபத்தங்களில் ஒன்றாகப் பார்க்கிறேன். அன்பு மறைந்து அந்த இடத்தில் ஒரு சடங்கான புன்னகையும் நலன் விசாரிப்பும் கிடக்கிறது, இருவருக்குமே தெரிகிறது அது போலியானதென்று , ஆனால் செய்கிறோம் , திரும்பத் திரும்ப, ஒவ்வொரு நாளும். இதன் மீது தான் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் கேள்விகளை எழுப்புகின்றன. அதன் தார்மீகம் அது தான் , ஒரு காட்டுமிராண்டியாக நின்று கொண்டு அது  கேள்வியெழுப்புகிறது  . ஒரு கைவிடப் பட்டவனாக , ஒடுக்கப்பட்டவனாக.

அது தான் உண்மையாகவுமிருக்கிறது, தமிழ்க் கவிதைகளின் நேரடியான உரையாடல் தன்மையின் சாதனைகளில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உருவாக்கியிருக்கும் உரையாடல் தான் ஆகப்பெரியது.

அது எல்லவற்றையும் உரையாடுகிறது. மொழியடுக்குகளுக்குள் ஒளிந்திருந்த ஒரு சொல் முறையை மனுஷ்யபுத்திரன் தீண்டியிருக்கிறார், அதன் தொடுகை ஒவ்வொரு கவிதையிலும் இடைவிடாது தொடர்கிறது. ஒரு நெருக்கமானவனின் குரல் போல.

காதலில், அன்பில் இருந்து தான் இந்த வாழ்வை மீட்டெடுக்கமுடியுமென்பது  இந்தக் கவிதைகளின் நம்பிக்கையாயிருக்கிறது. ஆனால் அது நம்மை நேரடியாக வெறுப்பை நோக்கி நம்பிக்கையின்மையை நோக்கி அழைத்துச் செல்வது போல் சென்று  ஏமாற்றி விட்டு இன்னொரு வாசலால் நம்மை அன்பிடமே அழைத்துவந்துகொண்டிருக்கிறது.

...

நீ எப்போது  வருவாய்


*
நீ எப்போது
வருவாய்?

அந்தப் பெண்
கண்களில் நீர் தளும்ப
யாரிடமோ
தொலைபேசியில்
இந்தக் கேள்வியைத்
திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்

நான் கவனிப்பதைப் பற்றி
கவலைப்பட அவளுக்கு
எந்த அவகாசமும் இல்லை

எப்போது வருவாய்
என்பதைக் கேட்பதைத் தவிர
அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவும் இல்லை

அவள் பிடிவாதமாக இருந்தாள்
மன்றாடுதலுடன் இருந்தாள்
தனிமையாக இருந்தாள்
எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்

எத்தனை யுகங்களாய்
இதே குரலில்
இதே கண்ணீருடன்
இதே கேள்வி கேட்கப்படும்
என்று தெரியவில்லை

வர வேண்டிய யாரோ ஒருவர்
இன்னும் வராமலேயே
இருந்துகொண்டிருக்கிறார்
 

இந்தக் கவிதை எனது வாழ்வின் நிழல் போல என்னுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நான் எனது காதலியைக் கண்டது நான்கு வருடங்களுக்கு முன், அதற்குப் பின் "நீ எப்போது வருவாய் " என்ற வாக்கியத்தை எனது காதுகளும் கண்களும் எத்தனை தடவை கேட்டிருக்கும் படித்திருக்கும் என்பதற்கு எந்தக் கணக்குமில்லை. அவளின் ஆழமான ஒரு கேள்வி அது , இடைவிடாமல் அவள் அந்தக் கேள்வியுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறாள், எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாள்.

அவளது சந்திப்பு ஒரு வகுப்பில் நிகழ்ந்தது, இரவுகளில் அவளை வீடுவரை அழைத்துச் சென்று விடுவேன். எப்பொழுதும் "வெண்ணிற  இரவுகள் " குறுநாவலின் இரவுகள் தான் ஞாபகம் வந்து கொண்டிருக்கும். அவளது அருகாமை ஒரு தாமரைக்குளத்தின் அருகிருந்து முடிவற்று போதையிலும் கவிதையிலும் மூழ்குவதை போன்றிருக்கும்.

பின்னர் , அவளை காதலிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய நாளாகவே திறக்கவேண்டியிருக்கிறது. இன்று மறைத்துவைத்திருக்கும் சண்டைகளை நேசங்களை கோபங்களை முத்தங்களை என்றைக்குமே நான்கண்டுபிடித்ததில்லை. அதனை கண்டுபிடிப்பதில் நேரத்தை செலவிடுவதை இப்பொழுது கைவிட்டு விட்டேன் .

இன்று எப்படிக் காதலிப்பதென்பது தான் எனது ஆதாரமான தீவிரம்.

இந்தப் பைத்தியக்காரக் கவிஞன் அதனை எப்படி சொல்கிறான் என்றால் ,

திசையறிதல்

எல்லா நன்றியறிதல்களும்
பதிலுபசாரங்களும்
உன்னைக் கொஞ்சம்
சிறுமைப்படுத்தவே செய்கின்றன

இன்றிலிருந்து உனது
எல்லாப் பரிசுகளையும்
நான் தரையில் விட்டுவிடுகிறேன்
ஈரம் காயாத நாய்குட்டிகளைப்போல
தம் திசைகளை
தாமே அறியட்டுமென்று

அப்படித் தான் நாட்கள் இவ்வளவு வண்ணங்களாகி விட்டன. மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைப் படித்துத் தான் அவளிடம் கோபம் கொள்ள சண்டை பிடிக்கக் கற்றுக் கொண்டேன், அதே போல் திரும்பிப் போய் அவளிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவும் , நீ தான் எனது காதல் என்றும் சத்தமாகச் சொல்லவும்.

அறியும் வழி

உன்னைப்
பற்றிக்கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக்கொண்டிருந்தேன்
என்பது

இழக்கவே முடியாதது
எதுவென தெரிந்துகொள்ள
அதை
இவ்வளவு
இழக்க வேண்டுமா?

இன்னும் நான் உடைக்க வேண்டிய எனது அகங்காரம் மீதமிருக்கிறது. அது ஒரு கவிதைக்காக காத்திருக்கிறது.
 ஒவ்வொரு தடவையும் கவிதை என்னை ஏசுகிறது . மடையா உனக்கு காதலிக்கத் தெரியாதா என்று கன்னத்திலறைந்து கேட்கிறது, சில நேரம் எவ்வளவு சொன்னாலும் உனக்கு விளங்கவில்லையா என்று ஆறுதலாக தனது மடியில்  படுக்க வைத்து நெற்றியில் தடவிக் கொடுத்த படி கேட்கிறது.

...

வேறொன்றும் வேண்டியதில்லை

கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்

வேறொன்றும் வேண்டியதில்லை

இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம்

...

என்று என்னை அது ஆறுதல்படுத்துகிறது. நீ தைரியமாகச் சென்று காதலி ,இவர்கள் இப்படித் தான் என்று எனக்குச் சொல்லித் தருகிறது.

நான் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் கவிஞர்கள் இரண்டு பேர் தான் ஒன்று நட்சத்திரன் செவ்விந்தியன் இன்னொன்று மனுஷ்ய புத்திரன். இந்த இரண்டு பேரிடம் மட்டும் தான் என்னால் சாதாரணமாக உரையாட முடியும் போல் தோன்றுகிறது , அவ்வளவு அறிவுரீதியாகப் பேச வேண்டியதில்லை. அவ்வளவு இறுக்கமாக கவிதை பற்றி வாழ்க்கையின் தத்துவங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. கள்ளோ அல்லது மதுவோ அருந்திவிட்டு நாம்  வானத்தை நோக்கி இறக்கைகளைச் செய்துகொண்டிருக்கும்  போது இவர்கள் ஏன் நமக்கு சங்கிலிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேட்க வேண்டும்போலுள்ளது.

கிரிஷாந்-

ஒளிப்படம் - பிரபு காளிதாஸ்

சில இணைப்புகள் - http://uyirmmai.blogspot.com/2005/02/8.html
                                                 http://maruthanayagamboyz.blogspot.com/2010/10/blog-post.html
                                                 http://visumbi.blogspot.com/2012/01/blog-post.html
                                                 http://andhimazhai.com/news/view/selvaraj-jegadesan.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக