செவ்வாய், 20 டிசம்பர், 2016

கடலின் கைப்பிடியளவு உப்பு( சுகுமாரனும் எனது வாழ்க்கையின் சில பக்கங்களும்)

"சொல்லித் தந்ததோ
கற்றுக் கொண்டதோ போல இல்லை
வாழ்க்கை - அது
குழந்தைக் கதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த
உயிர்"

வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஒரே கவிதை வரிகள் வேறு வேறு அர்த்தங்களை நிகழ்த்துகின்றன. விரிந்து கொண்டே செல்கின்றன. சொற்களின் பளிங்கு மலையிலிருந்து கிளர்ந்து பறக்கின்றன பறவைகள் போன்ற கவிதைகள் , சில தனிமையில் அலைந்து கொண்டிருக்கும் , சில உயர்ந்து மிதந்து கொண்டே செல்லும் , சில நம்முடன் உரையாடும் .. இப்படி அலைந்து கொண்டிருக்கும் பறவைகளில் சுகுமாரனை இன்றைய கிளையில் அமர்த்தினேன்.

"எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல."

*

இந்தப் பறவையின் தனிமை பெரியது. அதன் வானம் என்பது எப்பொழுதும் சிறுத்துக் கொண்டே சென்ற காலத்தில் வெளிவந்த "கோடை காலக் குறிப்புகள் ' எனது தனிமைகளின் போது அருகே இருந்து அழும் ஒரு குரலை எனக்கு தந்துகொண்டே இருந்த காலமொன்றுண்டு. எனது பதினைந்து வயதில் எனது அம்மா இறந்த பின் எனது இருபது வயது வரை ஒரு பெருந்தனிமை என்னுடன் நிழல் போல் குடியிருந்தது. அப்பொழுது தான் கவிதைகளின் பறவைகள் எனக்குத் துணையிருந்தன.சுகுமாரனின் வார்த்தைகளில் சொல்வதானால் "சரணாலயத்துக்கு வரும் பறவை போல ". பிறகு. எனது காதலியை சந்திக்கும் வரை இது பெரிய அலைச்சலாகவே இருந்தது.

சுகுமாரன் 


கவிதைகளை ஒரு "கடப்பு நிலை" என்றே நான் கருதுகிறேன். துக்கங்களை சொற்களின் "சவரக்கத்தி" முனையில் அணுகும் சுகுமாரனின் குரல் எனக்குள் இன்று வரை ஒலித்துக் கொண்டேயிருக்கும் குரல். வாழ்வில் சில கால கட்டங்களில் ஏற்படும் பெருந் தனிமைக் காலங்கள் இலக்கியத்தை விட்டால் எனக்கு ஆறுதல் தர வேறு யாருமில்லை என்ற நிலையை உருவாக்கின . நான் அலைந்து திரிந்தவனல்ல. எப்பொழுதும் வீட்டுக்குள் அல்லது அறைகளுக்குள் மோதி மோதித் திரும்பும் கிளி.

சுகுமாரனின்,
" பூக்களில்  வழியும் ரத்தத்துக்கு
துடைக்க நீளும் சுட்டுவிரலுக்கும்
இடையில்
பறந்து தடுமாறுகிறது கிளி "அந்தக் கிளியாகவே நானிருந்தேன் , இன்னொரு கவிதையில்,

சுவர்கள்

"வந்த வழிகளெல்லாம் அடைபட்டன
புறங்கள் நிமிர்ந்து சுவர்களாயின
விவரங்களற்று
அகப்பட்டேன் நான்

வானம் சதுரமாய்ச் சிறுத்தது
இரண்டு எட்டில் கால்கள் திரும்ப
என் உலகம்
நொடியில் சுருங்கியது
மீண்டும் மீண்டும் நானே சுவாசித்துக்
காற்று விஷமாயிற்று

வெளியேற வழியற்றுத் திகைத்தேன்
பறவை நிழல் தரையைக் கடக்க
அண்ணாந்தால்
நீல வெறுமை  

ஆதரவுக்காய் அனுப்பிய குரல்
சுவர்களில் மோதிச் சரியும்
வீணாகும் யத்தனங்கள்

தளிர்ப்பச்சைக்கோ
சிரிப்பொலிக்கோ
மழைத்துளிக்கோ
பூக்களுக்கோ ஏங்கும் புலன்கள்

நாள்தோறும் சுவர்கள் வளரக்
கையளவாகும் வானம்
சுதந்திரம் நகர்ந்து போகும்

கதவுகள் இல்லையெனினும்
வெளியைக் காண
சுவருக்கொரு ஜன்னலாவது அனுமதி-
நிச்சயம் வெளியேறிவிடுவேன்."

எனது ஜன்னலாக இருந்தவை இந்தக் கவிதைகளும் , இலக்கியங்களும் தான். எனது அம்மாவின் மரணம் நோயினால் நிகழ்ந்தது. பொதுவாக ஈழத்தின் பிள்ளைகள் என்று கூறிக் கொண்டு வரும் வாழ்க்கையில் , இலக்கியங்களில் வெளியிலிருப்பவர்களின் பார்வை ." யுத்தம் யுத்தம் யுத்தம் " அவ்வளவு தான் , ஏதோ ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சண்டை நடந்து கொண்டிருந்ததாகத் தான் இங்கிருக்கும் சிலர் உருவாக்கியிருக்கும் சித்திரம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவ்வளவு யுத்தத்திற்குள்ளும் எனது வாழ்க்கை வேறொன்றாய் இருந்தது. அது உறவின் சுழல்களுக்குள் சிக்கிக் கொண்டும் , மரணத்தின் மெல்லிய வலியை இரவின் தடிப்பளவிற்கு காவிக்கொண்டும் திரிந்த காலங்களாய் இருந்தது.

எனக்கு நினைவு தெரிந்தது முதல் அம்மா மட்டும் தான் ஆழமான படிமமாக உள்ளாள். அம்மாவின் வாசனை, கருணை நிறைந்த புன்னகை , மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு அலையும் குணம் , தான் நேசிப்பவர்களுக்கான அவரின் பரிவு என்பது எனது இரத்தத்தின் ஒவ்வொரு துளியின் இடையிலும் கலந்திருப்பது, அந்தக் குங்கும முகமும் வீபூதி வாசமும் நிலைத்து நெஞ்சுக்குள் மிதந்து  கொண்டிருப்பது. அவரின் கதையில் சில பகுதிகளை இப்போது உங்களுக்குத் சொல்கிறேன்.

அப்பாவும் அம்மாவும் (எங்களுடைய வீட்டிற்கு முன் உள்ள வெறுங் காணியில் உள்ள கிணற்றுக்கு கட்டில் )


அம்மா எங்களுக்காகத் தான் செத்துப்போனார்,கிட்டத் தட்ட  அது ஒரு தற்கொலை. அப்பாவிற்கு கிட்டத் தட்ட முப்பத்தைந்து லட்ஷம் கடன் இருந்திருக்கும். யாரோ நண்பர்கள் வெளிநாடு செல்வதற்கு பிணைக்கு நின்று ஒரு தொகை ,சண்டைக்காலத்தில் பல குடும்பங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தன , பக்கத்து வீட்டில் கணவன் குடித்து விட்டு அடித்தால் ஆறு மாத்திற்கு அந்த அம்மாவும் ஐந்து பிள்ளைகளும் எங்கள் வீட்டில் தான் வாழ்வார்கள் , இப்படி பல செலவுகள் , எங்கள் அப்பாவிற்கே உரிய கண்டபடி செலவழிக்கும் தனம் என்பவை அந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டன. பன்னிரண்டு வயது அல்லது அதற்கு முன் என்று நினைக்கிறேன், நாங்கள் ரீவியில் சக்திமான் பார்த்துக் கொண்டிருக்கும் போது கடன்காரர்கள் வந்து ரீவியை கழற்றிக் கொண்டு போனார்கள் , இன்னொரு நாள் தொடர்ந்து வீட்டுக்கு வந்து பேசும் கடன்காரர்களில் ஒருவர் , மிகக் கடுமையாக பேசியிருக்கிறார் , நான் அப்போது வீட்டிலில்லை , ஊரே திரண்டு நின்று அதை பார்த்தது. அப்பா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொன்னார்கள். தடுத்து விட்டார்கள்.நான் வீட்டிற்குத் திரும்பிய போது அம்மா பாயில் படுத்திருந்தார், அப்பா உள்ளே பொலித்தீன் பைகளை ஒட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது  மிக்சர்  செய்யும் தொழிலை செய்துகொண்டிருந்தோம். அம்மாவின் உடலோடு ஒட்டி நான் அவரைப் பார்த்தேன் , அழுதுகொண்டிருந்தார் சத்தம் வெளியே வரவில்லை , மூச்சு மட்டும் ஒரு கொடும் வேதனையில் சுருண்டிருக்கும் பாம்பின் சீறலைப் போலிருந்தது. அதன் சூட்டை என்னுடல் உணர்ந்தது.

அதன் பின்னர் , காலை முதல் இரவு பன்னிரண்டு மணி வரை அம்மா நின்று கொண்டோ இருந்து கொண்டோ வேலை செய்தபடியே இருந்தாள். மிக்ஸர் ,மரவள்ளிப் பொரியல், பால்கோவா, மஸ்கற் , பூந்திலட்டு என்று ஒரு பெரிய தொழிற் சாலை  போல் வெறும் ஐந்து பேரை வைத்துக் கொண்டு இயங்கிய அந்த வேளையில் அம்மா ஒரு இயந்திரம் போலிருந்தாள். சமையல் வேலை , பக்கிங் வேலை , சீட்டுப் போடுதல் அது இதென்று அவள் அத்தனை வேலைகளையும் செய்வதற்கு எங்கிருந்து சக்தி கிடைத்ததென்று தெரியவில்லை . சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு , அது பெண்ணுக்குரிய சக்தி.

இப்படி மூன்று வருடங்கள் உழைத்து ஆறு லட்ஷம் மட்டும் தெரிந்த ஒரு உறவினருக்கு கொடுக்க வேண்டியிருக்க , நிம்மதியாய் மூச்சு விட கொஞ்சக்காலமிருக்க , அம்மா நோயில் விழுந்தாள் , நேற்று ஆஸ்பத்திரிக்குச் சென்றது போலிருக்கும் , 2009  இறுதிக் கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்தது ,யுத்தம் தொடர்பில்  எனக்கு எந்த அக்கறையுமிருக்கவில்லை , அம்மா நோயாளியாய் ஒரு மாதமிருந்தாள் . அந்த ஒரு மாதம் நான் பிறப்பதற்கு முன்பிருந்த அப்பாவையும் அம்மாவையும் நான் பார்த்தேன் , அம்மாவால் எழவே முடியாது. குளிக்க வார்ப்பதிலிருந்து அனைத்து வேலைகளும் அப்பா தான் செய்தார் , அம்மாவை விட்டு அவர் எங்கும் சென்றதாக ஞாபகமில்லை. ஒரு தாயைப் போலவிருந்தார்.

திடீரன்று ஒரு நாள் , மிகச் சாதாரணமாக அம்மா செத்துப் போனாள் , நான் பள்ளிக்கூடம்  விட்டு வந்துகொண்டிருந்தேன்," அம்மாவுக்கு சீரியஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிட்டினம்" என்று பக்கத்து வீட்டு அங்கிள் ஒரு ஆட்டோவில் வந்து சொன்னார் , எங்களது வீட்டின் ஒழுங்கைக்குள் நுழைந்ததும் எல்லாம் தெளிவாயிற்று நீளத்திற்கு வாகனங்கள் , ஊரே கூடியிருந்தது , அப்பா ஒரு காட்டு விலங்கொன்றைப் போல் கதறியழுதுகொண்டிருந்தார். பெண்கள் பலரது அழுகையொலியையும் தாண்டி  ஒரு ஆணின் கதறலிருந்து. அது ஆணின் கதறலா அந்த ஒரு மாதம் நான் பார்த்த தாயின் பேரழுகையா என்று தெரியவில்லை ,ஆனால்  நான் அழவில்லை . அன்று முழுவதும் அழவில்லை.    

அடுத்த நாள் காலையும் முதல் நாளிரவு  அம்மா எனதும் தங்கச்சியினதும் பெயரைச் சொல்லி அழைத்துக் குரல் கேட்டதாக அனைவரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள் , நான் நள்ளிரவு பாடும் தேவாரத்திற்குப் பின் நித்திரைக்குப் போயிருந்தேன் , எனக்கு எதுவும் கேட்கவில்லையென்று சொன்னேன்.

பின் அன்று அம்மாவின் உடலை வீட்டின் முன் வைத்து செய்யும் சடங்கில் சுண்ணத்து இடிக்கும் பாடலை ஒரு கிழட்டுப் பாடகன் பாடிய போது நெருப்புக் கயிற்றினால் உடலை அறுப்பது போன்றதொரு வலியை உணர்ந்தேன். கண்ணீர் வந்தது.

பின் பல வருடங்கள் கடந்து விட்டது. அம்மா பாடிய பாசுரங்களின் நினைவுகள் தான் எனது முதல் கவிதை அனுபவம்.

இதற்கு பல வருடங்களுக்குப் பின் எனது அப்பா மிகவும் மாறி விட்டார், இன்று எனது சுதந்திரம் எந்த ஒரு சாதாரண தமிழ் இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரமல்ல . கட்டற்ற சுதந்திரம் , இலக்கியம் என்று ஊர் சுற்றவும் தெருக்களில் இறங்கிப் போராடவும் எனக்கு எந்தத் தடையுமில்லை , நான் இலக்கியம் எழுதுவதில் அவருக்கு சந்தோசம் தான். அவருக்குள் இருந்த தாய்மை பின்னொருபோதும் இன்று வரை மறையவேயில்லை.

அவருக்கும் , இந்த நினைவுகளுக்கும் சேர்த்து நான் ஒரு கவிதையினை எழுதியிருந்தேன் ,

அப்பாவும் கோவர்த்தனகிரியும்

உனது அன்பு
ஒரு பரிசுத்த மழைக்காடு

உன் நேசம் பற்றிய விரல்களில்
என் குழந்தைக் கால வாசனை

முதல் பரா லைட் பார்த்த போதும்
முதல் சைக்கிளை விடும் போதும்
முதல் துப்பாக்கி வாங்கித் தந்த போதும்
எவ்வளவு நெருக்கமாய் இருந்த நீ .

முதல் சிகரட்டின் பின்னும்
முதல் காதலின் வாசனையின் பின்னும்
எவ்வளவு அந்நியமாகிவிட்டாய்

உனது தோல்வியுற்ற தற்கொலை முயற்சியின் பின்னர்
அந்த  வீட்டுக்கு நஞ்சு தேய்ந்த கழுத்து
அழுத அம்மாவின்  உடலோடு ஒட்டியிருந்தேன் ,
எவ்வளவு விஷமூறிய பாம்பின் சுவாசம் அது .

பின் அவள்
ஒரு முற்றுப் பெறாத பாசுரத்தைப் போல
முடிக்கவே முடியாமல் தொண்டைக்குள்
சிக்கிக் கொண்டாள் ,

அப்பா -
காலம் ,பிம்பங்கள் பெருகும் வெளி

எவ்வளவு எளிமையானவை நாட்கள்
இந்த நாட்களில் ஒரு தாயை
உனக்குள் வளர்த்திருந்தாய் .

உனது அன்போ -
இச் சிறு மழைக்காய்
என் மேல் நீ தூக்கிப் பிடித்திருக்கும்
மலைக் குடை .


இந்த நினைவுகளை எழுதியதன் காரணம் சுகுமாரனின் இன்னொரு கவிதையைப் பற்றி நினைவு கொள்ளத் தான் , அதே நேரம் அவர் ஒரு தந்தையை வெறுப்பவராக இருந்தார். வெறுப்பென்று சொல்ல முடியுமா தெரியவில்லை. அது ஒரு பகையுமற்ற அன்புமற்ற நிலை.

ஆனால் அவர் எழுதிய இன்னொரு கவிதை எனது அம்மாவை தொடர்ந்து நினைவு படுத்திக் கொண்டேயிருப்பது,

முதல் பெண்ணுக்குச் சில வரிகள்

இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்
அல்லது
இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என‌
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதி காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப் பொருட்களுடன் குதூகலமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ, காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்து வைக்கும் கதவுகளில்
வெறுமையின் தாள ஒலி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச் சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப் பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப் பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்க‌ள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப் போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலைந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக மிஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்
இன்னும் நான் நேசிக்கும் முதல் பெண் நீ...


இது வேறொரு தொகுப்பிலிருக்கும் கவிதை , கோடை காலக் குறிப்புகளில் உள்ள குடும்பம் , உறவுகள் , தனிமை என்பன ஒவ்வொரு வார்த்தையையும் எனக்காக எழுதியது போன்று உணர்வளித்தவை , தொகுப்பு வெளியாகி இந்த வருடத்துடன் முப்பது வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் , எரியும் ஒரு நினைவைப் போல் அது என்னுடன் இருந்து வருகிறது,

அவரது குரலில் அன்பு பற்றி வெடித்தெழும் வரிகள் என்றைக்குமிருக்கும் குரலாக இருந்து கொண்டிருக்கிறது , நமது காலத்திலும் அது தொடர்கிறது ,

"இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாதபிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல "

இப்போது அன்பு -
சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனை "

...

இப்படி சுகுமாரனின் வரிகளை எழுதிக் கொண்டேயிருக்கலாம். எனது அனுபவத்தின் படி கவிதையை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடு மினக்கெடுவது வீண். எதையும் அறிதலின் மூலமே உணரலாம். அதனால் தான் எனது வாழ்வின் சில முக்கியமான கால கட்டங்களைக் குறித்து விரிவாக எழுதியிருந்தேன். இனி எனது நண்பர்கள் கோடை காலக் குறிப்புக்களை எடுத்துக் படித்து விட்டு அவர்களின் கதைகளை சொல்லட்டும் , எனக்கு ஒவ்வொரு வரியும் களிம்பாக இருந்தது. ஒவ்வொரு வரியும் ஒரு நினைவாக இருந்தது. இந்தப் பறவை எனது வானத்தைச் சேர்ந்த பறவையென்ற நினைவு தான் எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது.

கிரிஷாந்

சுகுமாரனின் வலைத்தளம் -

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D)

http://vaalnilam.blogspot.com/

சுகுமாரனைப் பற்றிய பிற எழுத்துக்கள் -

http://www.jeyamohan.in/774#.WFolU1N97IV

சில கவிதைகளின் இணைப்புக்கள் -http://thooralkavithai.blogspot.com/2011/04/blog-post_10.html 

4 கருத்துகள்:

 1. எதையும் எண்ணி அழுவதற்கில்லையினி என்றிருந்தேன். தோற்கடித்துவிட்டது இந்த எழுத்து. தொண்டையடைத்து எச்சிலைக்கூட விழுங்க முடியாதளவு மனம் துயரத்தால் நிறைந்தது. அத்தனை கவிதைகளிலும் நான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்வின் துயரமே சுவை. துயரே ஞானம் --கிரி உன்னை நானறிவேன்---

  பதிலளிநீக்கு
 3. கிரி...

  என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்ன என்னவெல்லாமோ சொல்ல வேண்டும், எழுதவேண்டும், பேசவேண்டும் என்று தோன்றுகின்றது....

  எனது அப்பாவின் இறப்புப் பற்றி எழுதுவது என்பதை நான் உடைந்துவிடுவேன் என்ற கோழைத்தனத்துடன் தள்ளிப்போட்டே வந்தேன். என்றேனும் ஒருநாள் எழுதவேண்டும்....

  மனசைக் கனக்கவும், மெல்லியதாய் பறக்கவைக்கவும் ஒருங்கே செய்கின்றது இந்தப் பதிவு

  பதிலளிநீக்கு