புதன், 28 செப்டம்பர், 2016

இருண்ட காலங்களின் கவிதைப் புத்தகம்



ஆஸ்க்விச் வதை முகாமிற்கு சென்று திரும்பும் ஒரு யூதச் சிறுவனின் சுயசரிதை தான் " இரவு " .(எலி வீசல் )

பக்கத்திற்கு பக்கம் யாழ்ப்பாணத்தின் ஒரு காலத்தை கண் முன் விரியச் செய்திருக்கிறது புத்தகம் .நான் இடப்பெயர்வை அறிந்தவனல்ல ,அது பற்றிய கதைகளை மட்டுமே கேட்டவன் , சம்பவங்களை சதையும் இரத்தமுமாக வீசலின் கைகள் என்னிடம் நீட்டின .

ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை போல் தான் .ஆனால் இரத்தமும் பனியும் உருகி ஓடும் ஒரு பனிக்காலத்து கவிதை ,துயரமான எல்லாக் காலங்களினதும் கவிதை ,கடைசியில் ஒரு இடத்தில் ,எல்லோரும் நசிந்து வெளி வர முடியாத ஒரு இரவில் குரல்களைத் தவிர வேறெதுவும் நிறைந்திருக்காத அறையில் ,யாரோ ஒருவனின் வயலின் ஒலிக்கிறது ,அதில் எல்லோரும் உறங்கிப் போகிறார்கள் ,காலையில் அவன் இறந்து போய்விடுகிறான் ,அந்த வயலின் ஒரு வித்தியாசமான மிருகத்தைப் போல் சிதைந்து போய்க் கிடக்கிறது ,

விபரிக்க முடியாத எதுவோ ஒன்று அந்த ஜெர்மன் வதைமுகாம்களுக்கு இருக்கும் ,அது இறந்த குழந்தைகளின் அப்பழுக்கற்ற அழுகையொலியால் கரி படிந்திருக்கிறது .வீசலின் வார்த்தைகளில் சொன்னால் ,"நட்சத்திரங்கள் எங்களை விழுங்கிய நெருப்பின் பொறிகளாய் இருந்தன .ஒரு நாள் அந்த நெருப்பு அணைந்தால் ஆகாயத்தில் எதுவும் எஞ்சியிருக்காது .இறந்த நட்சத்திரங்களையும் இறந்த விழிகளையும் தவிர ."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக