புதன், 11 அக்டோபர், 2017

மூளையின் நெசவுத் தொழிற்சாலை

நான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து  ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் எல்லாக் கலைவடிவங்களுக்குமிருக்கும் வேலை தான். கூவிக் கூவிப்  பிரச்சாரம் செய்வது, மண்டையை உடைத்தால் தான் திறக்கமுடியும் என்பது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குவது போன்று இன்னுமின்னும் பல வேலைகள் உண்டு. அதெல்லாம் தேவையான வேலை தான். இருந்தாலும் கவிதை,  போதை மயக்கமாய் மட்டுமே நிகழ வேண்டியது. அது வெறுங் காலையில்  தானே மலரும் சிரிப்பாகவிருக்கும். இல்லை,  துயரத்தின் படிக்கட்டருகே புகைந்து மிதக்கும் முகங்களாயுமிருக்கும்.  எல்லாக் கலைவடிவங்களையும் போல மனிதர் கொண்டாட  நிகழ்ந்தது தான் இந்த மொழியின் கொண்டாட்டமும்.  ஆகாவே கவிதை  போதையாயிருக்கிறது.








ஏதோவொரு திருப்பத்தில் நின்று பிளேன் - டீ குடித்தபடி சுகுமாரன் கையைக் காட்டி மச்சான்,

"சொல்லித் தந்ததோ
கற்றுக் கொண்டதோ போல இல்லை
வாழ்க்கை - அது
குழந்தைக் கதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த
உயிர்"

என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார். நான் உடனே, என்ன மச்சான் செய்வது? இந்த வாழ்க்கை நம்முன் கற்களால் எழும்புகிறது. அதனாலென்ன ஆழக் கிணற்றின் அடியாழத்தில் நமக்குள் தானே கதவுகளில்லை என்றேன். போடா விசரா,

"இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாதபிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல "

இப்போது அன்பு -
சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனை "

என்றார். அடப்போடா பிளேன்டீயை கையில் வைத்தபடியே பீடியொன்றை எடுத்து பற்ற வைத்தேன். வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஹமீதிடம் உங்களின் கால்களின் ஆல்பம் படித்தேன். உருக்கமாக இருந்தது, ஆனால் கொஞ்சம் நீண்டு விட்டது என்றேன். கவிதையிலிருந்ததை  விடவும் அதிகமான கால்களை நான் பார்த்திருக்கிறேன். நான் எப்பொழுதும் கால்களையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே கொஞ்சம் நீண்டு விட்டது. அதனாலென்ன இப்போது, நமக்குத் தான் இன்னும் நேரமிருக்கிறதே என்றார். சரி மச்சான் நீங்கள் கதைச்சுக்கொண்டிருங்கோ, எங்கட ஊர்ப் பெடியன் ஒருத்தன் நிக்கிறான். அவன் தவறணைக்குப் போயிருப்பான் கூட்டிக்கொண்டு வாறன்  என்று சொல்லிவிட்டுப் போனான். கவிதை எழுதிய தொண்னூறு வீதம் பேர் அங்கிருந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் முகத்தில் இன்னொருவர் ஓங்கிக்குத்துவார். இரத்தம் வழியும், உதாரணத்திற்கு, கணியன் பூங்குன்றனார் கள்ளுக்குடித்துக்கொண்டிருந்த அவ்வையாரின் முகத்தில் குத்திவிடுவார். மனுஷியை நிப்பாட்டேலாது. பிறகு  அன்னா அக்மதேவா ஒருபக்கம் நிண்டு இழுக்க இன்னொரு பக்கம் பாரதி மச்சான் இழுத்துக்கொண்டு நிற்பான். இதற்கிடையில் நட்சத்திரன் செவ்விந்தியனின் நாஸ்டால்ஜியாப் படகில் எல்லோரும் வந்து நாம் முன்னரிருந்த ஆற்றங்கரையில் புற்களுக்கும் காய்ந்த இலைகளுக்கும் உதிர்ந்த மலர்களுக்கும் மேலே உருண்டு புரண்டு சிரிப்பார்கள்.         

"பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது" என்று நட்சத்திரன் சொன்னான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

பிறகு எங்கிருந்தோ வந்த ஆண்டாளும் இணைந்து கொண்டாள். ஆண்டாளுக்கு குடிப்பழக்கம் இல்லை. கண்ணன் தான் போதையே. காதலும் காமமும் ஏற ஏற மொழியைக் குழைத்து மாலை நேரத்துக்கான போதையை அவள் செய்வாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

நாங்கள் கிறங்கிக் கேட்டுவிட்டு பாரதியைப் பார்த்தோம். பேயா, இங்க பார் அவள் எப்பிடி எழுதியிருக்கிறாள் என்று. நீயும் எழுதியிருக்கிறியே. எங்க ஒண்டு சொல்லு பார்ப்பம் என்றோம்.

உடனே மெல்லக் கம்மிவிட்டு பாடத் தொடங்கினான். திறமான பாட்டுக்காரன்.

"ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ"

அடேய் வரியில கொஞ்சமும் அந்த சங்கீதத்தில் மிச்சமும் இருக்கு, ஆனா இது அவ்வளவு தேறாது என்றேன். போடா லூசா உனக்கு எல்லாம் இப்பிடித்தான் என்று கெக்கட்டம் போட்டுச் சிரிச்சான். உடனே ஹமீது சொன்னான்,

'
வேறொன்றும் வேண்டியதில்லை

கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்

வேறொன்றும் வேண்டியதில்லை

இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம் "

மச்சான், இவங்களுக்கு சொல்லிச் சொல்லி மாளாது நாங்கள் கொஞ்சம் நடந்துவிட்டு வருவமா என்று பாரதியைக் கேட்டான். சரி மச்சான் போவம் என்று ஹமீதின் வண்டியைத் தள்ளியபடி பாரதி போனான். பின்னேரத்துக்கும் இரவுக்குமிடையில் நட்சத்திரங்கள் தெரியத் தொடங்கின.

போனார்கள் இரவுணவுக்குத் திருப்பினார்கள். நானும் கணியனும் நாச்சியாரும் சேர்ந்து விறகுகளை எடுத்து வந்து அடுக்கினோம். பட்டினத்தார் போய் தீப்பெட்டியெடுத்துக்கொண்டு வந்து கொழுத்தினார். தீ மூண்டெரிந்தது. காட்டுக்குப் பக்கமாயிருந்த குடிசைகள் என்பதால் கொஞ்சம் குளிர் கூட. நடுங்கிக் கொண்டிருந்த தீச் சுடர் போல் கண்களெரிய பாரதி கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தான். புகை, சுற்றி மிதந்து இடமெங்கும் போதை இருட்டைப்போல ஆகியது. எனக்குத்தெரிந்து போதைக்கெதிரான கவிஞர்கள் இந்த மானுடவரலாற்றிலேயே கிடையாது என்று தான் நினைக்கிறேன்.





நித்திய போதை, அதுவொன்று தான் எங்களை வாழ வைக்கிறதென்று நம்பினோம்.

எங்கேயோ போன எஸ் போஸ் கோபமாக திரும்பி வந்திருந்தான். கவிதையெழுதும் கொப்பியைத் தூக்கிப் போட்டான். இவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லை மச்சான். சாத்தானுக்கும் தேவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் நிக்கிறாங்கள், என்று கத்தினான். புகையை நன்றாக உள்ளே இழுத்து தொண்டையில் மெல்லிய நோவுடன் புகை போவதை ரசித்துக்கொண்டு திரும்பிய பாரதி. நீ என்ன மச்சான் சொல்லுறாய் நானும் இவங்கள நம்பித்தான் பத்தாயிரம் புத்தகம் அடிச்சு வெளியிடலாம் என்று நினைச்சன். கடைசி வரைக்கும் சோத்துக்கு வழியில்லாமல் அலைஞ்சது தான் மிச்சம் என்று கஞ்சா அடித்த ஆத்தலில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பாரதி உளற ஆரம்பித்தான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருளின் உலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இருட்டில் ஆடும் மரங்கள். மிதந்து செல்லும் ஆறு. அலைகளின் வெண் வரி. சிறிது நேரத்தின் பின்  ரமேஷ் - பிரேம் நிற்க, அழுதுகொண்டிருந்த பாரதி, மெல்லிய இடைவெளிவிட்டு," திரும்பச் சொல்லுங்க டா அந்த வரிகளை" என்றான்.

உன்னைக் கொல்ல
எனக்குப் பல வழிகள் தெரியும்
இருந்தாலும் எனக்குப்
பிடித்த வழி
உன் முன்னே என்னைப்
பிணமாகக் கிடத்துவது.””

*

கையில் பிளேன் டீ க்ளாஸ்களைக் கொண்டு மாணிக்கவாசகர்  வந்தான். மச்சான் இரு இரு என்று கையைப்பிடித்து இழுத்த கம்பன், மச்சான் அந்த பாட்ட ஒருக்கா சொல்லிக்காட்டடா என்றான். உனக்கு இதே வேலையாய் போச்சு என்று சலித்தபடியே  பிளேன்டீயை கொடுத்தபடி சொல்லத் தொடங்கினான் மாணிக்கம்,

"முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்"

... என்ற படி போனான். எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த விக்கிரமாதித்யனும் தேவதேவனும் வந்து சேர்ந்தார்கள்.

தேவதேவன் கண்கள் புன்னகைக்க எல்லாவற்றையும் பற்றி உருகிக்கொண்டிருந்தான். பிறகு அந்தப் பறந்து போகாத இரண்டு வண்டுகளை பற்றி கதைத்தான். அதை ஏதோ A ஜோக் கேட்டது போன்று யாரோ சிரிக்கத் தொடங்கினார்கள். பிறகு விக்கிரமாதித்தியனை தனியே ரோட்டில் விட்டுவிடு போவதற்கு தான் பயந்ததை பற்றிச் சொன்னான். நிறை வெறியிலிருந்தரை கூட்டி வர குமரகுருபரனையும் இன்னும் சில இளம் கவிஞர்களையும் கூட்டி வர போவதற்கு முன் தான் இது நடந்திருக்கிறது.

அந்தக் கவிதையைச் சொன்னான்.

ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

*

இப்படியேன் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்றால், இந்தப் பைத்தியக்காரர்கள் எழுதுவதைத் தான் நான் கவிதையென்று உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் வைத்து எழுதுவது கஷ்டமாகவிருக்கிறது. நீண்டுவிடும் ஆகவே இனி எழுத ஆரம்பித்த நோக்கத்தைப் பார்ப்போம்.

இமாம் அதனானையும் மச்சான் என்று தான் கூப்பிடுவேன். அவன் கவிதைப் புத்தகம் எழுதியிருக்கிறான். எல்லாமே ஒரு சின்ன ஐடியாவை வைத்து செய்திருக்கும் வேறு வேறு பிரதிகள். பிரதிக்குள்  கருத்தியல் எல்லாம் நன்றாகவிருக்கிறது ஆனால்  கவிதை என்று நான் வாசிப்பது கொடுக்கும், அனுபவங்களுக்கும் போதைக்கும் நெருங்கக் கூட முடியாத வித்தியாசமான வெளியில் நிற்கிறது அவன் எழுதுபவை.



என்ன செய்ய, நான் வாழும் உலகத்தைத் தான் மேலே சொல்லியிருக்கிறேனே, யோசித்துப் பாருங்கள் நாங்கள் யாருக்கெல்லாம் பிறகு தோன்றியிருக்கிறோம். நமது மச்சான்களும் மச்சிகளும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் நாம் எழுதுவதென்றால் அவர்களைத் தாண்டி எழுதுவதென்றே நினைக்கிறேன். பாரதி மச்சானுக்கும் ஆண்டாள் மச்சிக்கும் இருந்த பிரச்சினை வேறு. நமது வேறு. ஆனால் கலையின் உணர்வு ஆழமானது தானே. அதனை எந்த வரிகளாலும் கொண்டு வர முடியவில்லை என்பது தான் மொழியின் மீது சத்தியமாக என்ற தொகுப்பின் மீதான எனது வாசிப்பு. 

மோக்லி பதிப்பகம் புத்தகத்தைக் கொன்று சடலத்தை விற்பனைக்கு வைத்திருக்கிறது. கவிதைகளில் எண்பது வீதமானவற்றில் ஏராளமான எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கூட அக்கறையில்லாத வடிவமைப்பு.

சரி, மச்சான்களும் மச்சிகளும் அழைக்கிறார்கள், நகரும் படகில்  செல்கிறேன். எனக்கு மூளையால் நெசவு செய்யும் கவிதைகளை ரசிக்கத் தெரியவில்லை. சடங்கில் தெறிக்கும் மந்திர உச்சாடனத்தை எழுதும் பைத்திய ஆவிகளுடன் தான் நான் வாழப்போகிறேன். என் டி ராஜ்குமார் மச்சான் வார்த்தைகளில் சொல்வதானால், " ஓதி எறிந்த சொற்களில்".

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஆழத்தில் மலர்ந்த தாமரைகள்

மாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அதிவேகப் பாடல்களால் உடம்பை நிறைத்தபடி ஏறக்குறைய முப்பத்தைந்து நிமிடத்தில் சாவகச்சேரி வந்தோம் நானும் மதுரனும்.