வெள்ளி, 31 மார்ச், 2017

கள்ளும் கடலும்காலையில் எட்டுமணிக்கு வெளிக்கிடுவதாய் தான் கதை. எங்கட பெடியளைத் தெரியும் தானே. எட்டென்றால் அவங்களுக்கு காதில பத்தென்று தான் கேட்கும். அப்பிடியொரு விசித்திரக் காதுகள். ஆதி, ஸ்டான்லி, கபில் ஸ்டனிஸ்லெஸ், யதார்த்தன், அனோஜன் பாலகிருஷ்ணன், காண்டீ, விபிஷன், சன்சிகன், தமயந்தி சைமன் இவர்களுடன் நானும். நமக்கு வழிகாட்டிகளாகவும் தோழர்களாகவும் மேலும்  இரண்டு பேர்.

திரும்பும் போது 


ஒன்பது மணி, பஸ் ஸ்டான்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள் பாதிப் பேர், மீதி மக்கள் கொழும்புத்துறை ஜெட்டியடியில சந்திக்கிறதா' தான் ப்ளான். ஆனால் விண்ணனுகள் எல்லோருமாய்ச் சேர்ந்து 'கள்' வாங்குவதற்கு போத்தல் கொண்டு வர மறந்து போனோம். பிறகு போத்தலும் எடுத்து பீடிக் கட்டுகளையும் வாங்கிக் கொண்டு ஜெட்டியடிக்கு பஸ்ஸில போனோம். போற வழியெல்லாம் இலக்கியம் பஸ்ஸால பாய்ஞ்சு ஓடியிருக்குமெண்டது உங்களுக்கே தெரியும். எப்பொழுதையும் போலவே, நடு ரோட்டில் பாம்பு, குரங்கு போன்ற விலங்குகளை வைத்து ஷோ காட்டிக் கொண்டிருக்கும் போது பயத்துடன் மக்கள் அதை பார்ப்பதை போல  இப்பொழுதும் எங்கள் கூட்டத்தை மக்கள் பார்த்தபடி வந்தனர். இவங்கள் வேற மெல்லமாக் கதைக்கவே மாட்டாங்கள். கதைக்கிறது வேற அப்பிடி இப்பிடி கதை தான், சோ, மக்கள் பாடு அவ்வளவு தான்.

கொழும்புத்துறை ஜெட்டியடியில இறங்கி கள் வாங்க நாங்கள் கொஞ்சப் பேர் போனோம், அவங்கள் வேற பதினொருமணிக்குத் தான் திறப்பாங்கள் எண்டு சொல்ல, கடுப்பாகிப் போன நான், ப்ளாக்கில ஒரு போத்தல் கள்ளை இரண்டு மடக்கில் குடித்து விட்டு வெற்றிலையைப் போட்டு துப்பிக் கொண்டிருந்தேன், இலக்கியம் எழுதுபவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து அவர்களை உருப்படியாக எழுத வைப்பது என்பது தொடர்பில் நானும் சன்சிகனும் ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அனோஜன் பாலகிருஷ்ணன் ஒரு கொடும் ராட்சதனைப் போல் என்னைப் பார்த்து மண்டையை ஆட்டியபடியிருந்தார். ஒருமாதிரித் தென்னங் கள் தான் கிடைச்சுது வாங்கினம். முதலில நான் குடிச்சது பனங் கள், அற்புதமான இனிப்புச் சுவையுடன் கூடியது.


 கள் வாங்கியாச்சு வெளிக்கிட வேண்டியது தானே என்று போட்டடிக்கு போனோம். பாணும் வாழைப்பழமும் வாங்கி வைத்திருந்தார்கள், பிடிச்ச மீனும் நண்டும் றாலும் போட்டுக்கை கிடந்தது, ஏறின உடனே கடலைவடையும் ரோல்சும் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டு தான் ஒரு மாதிரி பயணம் களை கட்டத்  தொடங்கியது. பாட்டுத் தான் பயணத்துக்கு சிறகு குடுக்கிற சாமான். பின்ன, போட்டுல தட்டி பழைய எம்ஜிஆர் பாட்டுக்களை அவிட்டு விடத்  தொடங்கினான் கபில், நாங்களும் சேர்ந்து கொண்டு மாறி மாறி பாட்டுகள் மிதக்க, போட்டும் பறந்துச்சுது. தமயந்தி சில டேஸ்டானா பாட்டுகளை எடுத்துக் குடுத்தார், அவர் அந்தக் காலத்தில பாடினதுகளா இருக்கும், உதாரணத்துக்கு " ஆத்தாடி பாவாடை காத்தாட ..." வகை பாட்டுக்கள்.

சங்கீதச் சக்கரவர்த்திகள் 


கபிலும் சன்சிகனும் எஞ்சின் பக்கத்தில இருந்து பாட, நானும் ஆதியும் காண்டியும் முன் பக்கத்தில நிண்டு பாடினம்.  தமயந்தி  நடுவில.

காண்டியை விடுங்கள் அவன் ஏதோ உச்சத்தில் கத்துகிறான், சன்சிகனின் எக்ஸ்ப்ரஷன் தான் என்னை திகிலூட்டுகிறது.


 இடையில ஒருக்கா இறங்கி ஏற்கனவே போட்டு வைச்ச வலையளில மீன் ஏதும் அம்பிட்டதா எண்டு பார்த்தம். சரி வரேல்ல. பின்ன கரை போய்ச் சேர்ந்து ஆளுக்கொரு சாமான் சக்கட்டையள தூக்கிக் கொண்டு நடந்தம்.

நிலக் கரையெல்லாம் கண்டல் தாவரங்கள் முளைச்சிருந்துச்சுது. நிலத்தில ஆரோ  கோடிக்கணக்கான ஓட்டைகளைப் போட்டது மாதிரி கரையின் உடல்  கிடந்துச்சுது. மெல்லப் போய் ஒரு பனைமரக் கூடலுக்குள்ள இடத்தைப் பிடிச்சம், கல்வேலி எண்டு ஏன் தான் பேர் வச்சாங்களோ தெரியேல்ல, பெரிய பெரிய மணல் குன்றுகள் தான் இருந்துச்சு, நிறயப் பனைகளும்.சட்டியை வச்சு அடுப்பை ஒருத்தர் மூட்ட, கள்ளுப்போத்தலைத் திறந்து குடிக்கத் தொடங்கினோம், வந்தவர்களில் சிலர் சுத்தமான பெடியள் கள்ளு குடிக்க மாட்டாங்கள்,ஆனா அவை ஆரெண்டது சஸ்பென்ஸ் . கடைசிவரைக்கும்  சொல்ல மாட்டன்.

எங்கும் ஒரு சமையல்காரனாய் மாறி விடும் சன்சிகனுக்கு இன்டைக்கு மட்டுமென்ன ஹோலிடேயா, இறங்கினார் சமையல் சக்கரவர்த்தி, ஆனால் அவருக்கு கொடுத்ததோ பயற்றங்காய் நுள்ளுவது, மரவள்ளிக்கிழங்கு உரிக்கிறது போன்ற சில்லறை வேலைகள் தான், ஆதியும் இந்த நுள்ளுற விளையாட்டுகளில கெட்டிக்காரன் என்பதால் சேர்ந்து நுள்ளிக்கொண்டு நின்றான். கபிலும் ஸ்டான்லியும் சேர்ந்து உதவினார்கள். எங்கோ கிடந்த கொய்யாக்காய் பாக்கை கண்டு பிடித்த யதார்த்தன் அதனை எடுத்து கொறித்துக்  கொண்டு கீரையை ஆய்ந்து கொண்டிருந்தார். இந்த சீனில் அனோஜன் பாலகிருஷ்ணன் மற்றும் விபிஷன் மிஸ்ஸிங், அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, அப்ப தான் எனக்கு மெதுவாக கள் ஊறத் தொடங்கியது. காண்டி மகானும் என்னக்கு கள்ளு ஊற்றித் தந்து பீடியை மூட்டினார்.தமயந்தியும் மற்றவரும் மீன் நண்டு றால் கணவாய் எல்லாம் கழுவியெடுத்துக் கொண்டு வந்து கொத்திக்கிற தண்ணிய முதல்ல பார்த்தினம் , பிறகு தண்ணியளவக் கொஞ்சம் கூட்டினா நல்லது எண்டு ஒருத்தர் சொல்ல எனக்கு என்ன விளங்கிச்சுதோ  தெரியேல்ல இன்னொரு கோப்பை கள்ளை வாய்க்குள் ஊற்றி தண்ணியளவைக் கூட்டிக் கொண்டேன்.பிறகு மரக்கறிகளை கழுவியெடுத்து, ஒடியல் மாவை தண்ணியில ஊற வச்சு வேலைகளை தொடங்கினோம். எனக்கு இந்த வைபர் போன்ற அதிநவீன தொழில் நுட்பங்களிலெல்லாம் அவ்வளவு பரீட்சயம் கிடையாது, ஆனால் நண்பரொருவர் அறிமுகப்படுத்திய " ஜில் ஜுங்க் ஜக் " என்ற குரூப்பில் ஏதோ புதினமாய் இருக்கிறதென்று அண்மையில் வந்த "டங்காமாரி ஊதாரி" என்ற பாடலின் நடன வீடியோவை கண்டு களித்தோம்.கூழ் ரெடியாகத் தொடங்க நாங்கள் கடலுக்கை போவமெண்டு வெளிக்கிட்டம். தமயந்தி அண்ணையும் விடாமல் படமெடுத்துக் கொண்டு நின்றார். எல்லாரும் கடலுக்கை இறங்கினோம், விபிஷன் மட்டும், சந்திரமுகியில் ஒரு கட்டம் வரும் கடைசியாய் சந்திரமுகியை விரட்ட வரும் சாமியார் , மாடியில இருந்து ரஜினிகாந்த் இறங்கி வரும் போது எதையோ சாதிச்ச ஒரு தேஜஸ்ஸை முகத்தில் கண்டதாகச் சொல்லுவார், அப்பிடி ஒரு தேஜஸுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.கடல் அடியில கடும் சேறு, கால் புதையப்  புதைய நடந்தம், அவ்வளவு வழுக்கலா இருந்தது கடலினடி. குளிச்சிட்டு கரையேறி கூழ் குடிக்க நடந்தம், கொண்டு வந்த கோப்பைகளில றாலும் கணவாயும் சுழியோட நண்டு மிதக்க ஒரு உறைப்படிக்கிற செத்தல் மிளகாய் வாசத்தோட கூழ் ஊற்றினம். உறைக்க  உறைக்க கூழ் ருசியையும் இந்த வாழ்க்கையையும் மெச்சி மெச்சிக் கொண்டாடினோம். இரண்டு கோப்பை கூழ் குடித்து விட்டு சரி இன்னும் கொஞ்சம் இடமிருக்கென்று கள்ளை கொஞ்சம் குடித்தேன், பீடியைப் பற்ற வைத்து இழுத்தேன், மொத்த வாழ்க்கையும் ஒரு "பூ" வில் வெளிவந்த மாதிரி வாயில இருந்து பீடிப் புகை வெளியில போச்சுது.

தமயந்தி அண்ணை எடுத்த படம் 
அந்த நிலத்தின் காட்சியமைப்பு அற்புதமானது, முழுக்க விதம் விதமான தாவரங்கள்.  மணல் குன்றுகள் , கடலின் பாசிக் கரை, மணல் நிறத்தை என்ன சொல்லுறது , சரியாத் தென்னங்கள்ளின் நிறம் தான், கொஞ்ச நேரம் கரையில படுத்திருந்து பக்கத்தில கள்ளுப் போத்தலையும் வச்சிட்டுப் பார்த்தன், மணல் கள்ளின் நிறத்திலையும் கரையில வந்து ஒதுங்குகிற நுரை கள்ளு நுரை மாதிரியும் கிடந்துது, பூமியும் கடலும் தளும்பிற இடத்தில கள்ளுப் போத்தலை வைத்து விட்டு மறுபடியும் குடிக்க ஆரம்பித்தேன், உறைச்ச வாய்க்கு கள்ளு அட்டகாசம்.மறுபடியும் திரிந்து விட்டு நானும் காண்டியும் தமயந்தி அண்ணையோட போட்டில ஏறி கொஞ்சம் சுத்தினம். பிறகு வந்து தமயந்தி அண்ணையை கொஞ்சம் படம் எடுத்தேன் கடலில வச்சு, பின்ன கொண்டு வந்த கொஞ்ச மீனையும் றாலையும் நண்டையும் சுட்டு , பாணோடையும் தனியாவும் சாப்பிட்டம். முடிச்சுக் கொண்டு படகேறி, மீண்டும் பாட்டேறி , கரையேறினோம்.

- மிச்சக் கதைகளை மற்றவர்களும் சொல்ல விட்டு வைக்கிறேன்-

குறிப்பு - எப்பொழுதுமே பயணக் குறிப்பில்  உள்ள அலுப்பென்னவென்றால் நிறைய விடயங்கள் சென்சார் பண்ண வேண்டியிருக்கும் என்பது தான். நீங்கள் இப்பொழுது வாசித்தது கூட  வெறும் ஒரு உப்புத் துண்டு தான், அனுபவம் எப்பவும் கடல் .

 


  

1 கருத்து:

  1. அருமையான கடல் பயணக் கட்டுரை...............கடல் கன்னி ஏதும் சந்திக்கேல்லையோ?

    பதிலளிநீக்கு