செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?





இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பதினைந்தாவது நாள் இருளத் தொடங்கி விட்டது.

அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மேல் கடந்த ஏழு வருடங்களில் எந்தவொரு ஜனநாயகவழிப் போராட்டங்களும் நீடித்ததில்லை. இந்தப் போராட்டம் அதனை மாற்றி எழுதியிருக்கிறது. இன்றோடு பதினைந்தாவது நாள். தொடரும் உறுதி மட்டும் தான் அந்த மக்களை நோக்கி பலரையும் ஈர்க்கும் வசீகரம். மேலும் அவர்களின் குரலில் உள்ள ஒற்றுமையும் சுரத்தும். முதல் நாள் இருந்ததிலிருந்து இம்மியளவும் மாறாது இன்றும் கூட அதே ஓர்மம். ஒரே கனவு.

இந்தளவு நீளமான பெண்கள் தலைமை தாங்கி நடத்துமொரு போராட்டம் நமது சமீப வரலாற்றுக்கு   மிகவும் புதிது.  அதனாலேயே இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும். அது ஒட்டு மொத்த தமிழ்ச் சூழலில் உள்ள பெண்களுக்கும் சக்தியளிப்பதாய் இருக்கும். இந்தப் பெண்கள் அடையப் போகும் வெற்றி என்பது தனியே காணி பெறுதல் மட்டுமல்ல. உரிமை பெறுதல் மட்டுமல்ல. அது பெண்களின் குரலையும் உறுதியையும் மறுபடியுமொருமுறை இந்த சமூகத்தில் நிலை நாட்டும் வெற்றி.



அடுத்து பதினைந்து நாட்களாக அந்தச் சிறுவர்களுக்குள் உருவாகும் போராட்ட குணம். நான் கதைத்த எந்தச் சிறுவனதோ சிறுமியினதோ வாயிலிருந்தும் தோல்வியென்ற சொல்லை கேட்கமுடியவில்லை. வெற்றி அடைவோம். அதற்குத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று சொன்னார்கள். மற்றவர்களுக்காகப் போராடும் அளவுக்கு அவர்களின் இத்தனை நாள் போராட்ட அனுபவம் அவர்களைக் கனியவைத்திருக்கிறது. எங்களுக்காக வந்தவர்களுக்காக  நாங்களும் போராடுவோம் என்று அனைத்துச் சிறுவர்களும் ஒருவர் மிச்சமில்லாமல் சொல்வார்கள்.

ஆகவே இவர்கள் அடையப் போகிற என்பது  வெற்றி அடுத்த தலைமுறைக்கு மிக முக்கியமான   செய்தியொன்றைச் சொல்லப் போகிறது. ஒரு பெரும் அனுபவம் வாய்ந்த கற்றுக் கொள்ளக் கூடிய போராட்டத்தைச் சொல்லித் தரப் போகின்றது.
இந்த வெற்றி எதிர்காலத்தில் உருவாக்கப் போகும் ஜனநாயகம் மிக்க தலைமுறையின் தொடக்கம்.



மேலும் இவர்கள் அடையப் போகும் வெற்றி எதிர்காலத்தில் பெருமளவிலான ஜனநாயக வழிப் போராட்டங்களின் ஆரம்பமாகவிருக்கப் போகிறது. அடுத்தடுத்து போராட்டங்கள் வெடிக்கும் வாய்ப்பிருக்கிறது. அது அரசை மிகவும் அச்சுறுத்துகின்ற செய்தி. சோர்ந்து கிடக்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சம். இந்த மக்கள் நமக்கொரு கைவிளக்கைத் தரப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இன்று பெருமளவிலான இளைஞர்களையும் பல்வேறு தரப்பினரையும் மக்களை நோக்கி சமீப காலப் போராட்டங்கள் இழுத்திருக்கிறது. பலரும் தெருவுக்கு இறங்கியிருக்கிறார்கள். கைகளில் பதாகைகளைப் பிடித்து அச்சம் தவிர்த்து ஒன்று திரண்டிருக்கிறார்கள்,இந்த மக்கள் அடையப் போகும் வெற்றி இவர்களுக்கு இந்த மக்களின் வெற்றியில் தமக்குமொரு பங்கிருப்பதான உணர்வைத் தோற்றுவிக்கும். அது ஏனைய பிரச்சினைகளுக்குமாக அவர்களை தெருவிலிறங்கத் தூண்டும். நம்பிக்கையை அளிக்கும்.

மேலும் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின் ஒப்பீட்டளவில் கடந்த காலத்திருந்ததைத் தவிர்த்து புதியதொரு அரசியல் கலாசாரம் தோன்றும். மக்களின் அரசியல் அல்லது மக்களின் சக்தி என்னவென்பதை தமிழ் அரசியல் வாதிகளும் சிங்கள அரசும் பார்க்கப் போகிறது. தமிழ் மக்களின் ஏழு வருட ஏமாற்றங்களுக்கு பதில் சொல்லப் போகும் காலம் வரப் போகிறது. ஏனென்றால் இந்த வகையான போராட் டங்களின் போதே ஜனநாயக சக்திகளும் முற்போக்கு சக்திகளும் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கும் ஒரு மீள் நிகழ் காலம் ஆரம்பிக்கும், அது தொடர்ச்சியான சிவில் சமூக வெளியை ஆரோக்கியமானதாக மாற்றும் பல்வேறு அறிமுகங்களும் எதிர்கால நோக்குகளும் இங்கே பரிமாறப் படும்.இது  சக்தி வாய்ந்த அழுத்தக் குழுக்கள் வலையமைப்பாக உருவாகும் தளமாகவும் இயங்கும். அது அடக்குமுறைக்குள்ளாகும் இனமொன்று என்ற அடிப்படையில் தமிழ் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதொன்று. சிங்கள சிவில் அமைப்புகளும் பல்வேறு பிற அமைப்புக்களும் இந்த போராட்டம் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு.


இந்தக் கட்டுரையின் தொனியைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. எந்த இடத்திலும் தோல்வியடைவதற்கான வாய்ப்பை நான் பார்க்கவில்லை. உறுதியும் நம்பிக்கையும் கொப்பளிக்கிறது. எதிர்காலம் என்னவென்பதை எவை தீர்மானிக்கிறதென்பதை என்னால் உணர முடிகிறது. நேற்று இரவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டப் பந்தலின் முன் நானும் நண்பர்களும் உரையாடிய விடயம் ஒன்று தான் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இந்தக் கருத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.அது " இந்த மக்களின் வெற்றியென்பது எதிர்காலத்திற்கான விதை பல போராட்டங்களுக்கான தொடக்கம்."

எனக்கு உறுதியையும் நம்பிக்கையையும் கற்றுத் தந்த பிலவுக் குடியிருப்பின் பெண்களுக்காகவும் சிறுவர்களுக்காகவும் நான் கடைசி வரை உடனிருப்பேன். தனிப்பட்ட வகையில் அதற்காகவும் இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

அவர்கள் காணிக்குச் சென்று கால் வைத்துச் சிரிக்கும் போது அவர்களின் குழந்தைகளை நாம் தூக்கிக் கொள்ள வேண்டும்.

கிரிஷாந்-


சனி, 11 பிப்ரவரி, 2017

ஆமிக்காரனே! எயார் போஸெ! காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா





கேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின்  தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது.

இவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

கேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து வெயிலில் வறண்டு  இராணுவத்தின் அச்சுறுத்தல்களை புறந்தள்ளி இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.

பலர் இந்தப் போராட்டத்திற்கு உரிமை கோரவும் இதனூடாக தமது இருப்பினை உறுதிப் படுத்தவும் அரசியல் லாபம் தேடியும் அந்தக் கொட்டகைக்கு வந்து செல்கிறார்கள்.ஆனால் எந்த அரசியல் வாதியினதும் குரலிலும் சுரத்தில்லை,

அந்தப் பெண்களின் குரலில் ஒரு உக்கிரமிருக்கிறது. கண்ணியமிருக்கிறது. போராட்டத்தின் குணமிருக்கிறது. இப்பொழுது அங்கு நடந்த சில சம்பவங்களினூடாக போராட்டத்தின் நிலைமையையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சம்பவம் 1

கோப்பாபுலவிற்கு முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் உட்பட ஒரு அணி வந்து மக்களுக்கு பேசுவோம் என்று கதைத்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதிக்கு இதனைத் தெரிவிப்பேன் என்று சுதந்திர தினத்தை புறக்கணித்து இங்கு வந்திருக்கிறேன் என்றும் அவர் சொன்னார்.

பின்னர் போகும் போது காரில் இருந்தபடி மக்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிவாஜிலிங்கம் அவர்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொன்னதாக சிறு சலசலப்பு ஏற்பட போராட்டக்காரர்கள் கைகளை மேலே தட்டி பெருத்த சிரிப்புகளை எறிந்து போராட்டத்தைக் கைவிடட்டாம் என்று சொல்லி நக்கலடித்தனர். போராடடத்தை  விட முடியாதென்பது தான் அவர்கள் செய்த அந்த சம்பவத்தின் விளக்கம்.

சம்பவம் 2

"இரவு முழுக்க இராணுவம் பீல் பைக்கில வாசல் மட்டும் வந்து வந்து போகுது, எங்கட ஆம்பிளையள் ரோட்டில தான் படுக்கிறவை, நாங்கள் கீழ இறங்கி தாழ் நிலத்தில படுக்கிறது. இரவொரு பெரிய வாகனமொன்று வந்தது, ஒரு பன்னிரண்டு ஒரு மணியிருக்கும் வந்து எங்களை இடிக்குமாப் போல வெட்டிச்சுது. நாங்கள் துலைஞ்சுதெண்டு தான் நினைச்சம். பிறகு விடிய விடிய முழிச்சிருந்தம்"

-ஒரு பெண் சொன்னது -

சம்பவம் 3    

சுதந்திர தினத்தின் காலையில் சின்னப்  பெடியள் பிள்ளையள்  கலக்கி விட்டாங்கள் அண்ணை. கறுப்புத் துண்டு கட்டி கறுப்புக் கொடியைக் கட்டி ஒரு ஆர்ப்பாட்டமொன்று செய்தாங்கள். அப்பிடி இருந்துச்சுது.

- முதல் நாளிலிருந்து அந்த மக்களோடு நிற்குமொரு இளம் ஊடகவியலாளர் சொன்னது -

இப்படி ஒவ்வொரு நாளும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ பீடமும் சமூக நீதிக்கான வெகுஜன இயக்கமும்  இன்னும் பல அரசியல் கட்சிகளும் இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து தினமும் வந்து செல்கின்றனர்.



இப்பொழுது சில இளைஞர்களினதும் சமூக நலன் விரும்பிகளினதும் முன்னெடுப்பில் போராட்டத்தில் பங்குகொண்டுள்ள  மாணவர்களுக்கு மாலை வகுப்பினை எடுக்கின்றனர். இது போன்ற முன்னெடுப்புகள் போராட்டத்தை சரியான வழியில் கொண்டு செல்ல உதவும். அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மேலும் பல்கலைக் கழகமும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள், இளைஞர் அமைப்புகளும் இதற்கு சிலரால் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் சாயத்தை குறைக்க முடியும். மாற்ற முடியும். முடிந்தளவிலான இளைஞர் பங்களிப்பு போராட்டத்திற்கு புதிய வடிவமும் ஊக்கமும்  கொடுக்கும்.

மக்களின் உறுதியையும் நம்பிக்கையையும் மேலே சொன்ன சம்பவங்களின் மூலம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் நேரில் சென்றால் அதன் உக்கிரம் விளங்கும்.

கேப்பாபுலவு - போராட்டத்தின் மண்.

இது போன்ற ஜனநாயக போராட்ட வடிவங்களை மக்கள் மேற்கொள்ளும் போது அடையாளமாக கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து விலகிச் செல்வது அரசியல்வாதிகளுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ பொருத்தமானதில்லை.

மக்களின் இந்த அரசியல் மாற்றத்திலிருந்தே அடுத்த தலைமைகள் உருவாகும். அதனை சரியாக அடையாளங் காணுவதும் வழிப்படுத்துவதும் அனைவரினதும் கடமை.

ஆகவே மக்களோடு நின்று மக்களுக்கு நிற்க வேண்டிய பொறுப்பை மேற் சொன்ன அனைவரும் எடுக்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மக்களை இரவும் பகலும் அரணாய் நின்று காக்க வேண்டும். அங்குள்ள மக்களின் ஜீவசக்தியாய் நிற்க வேண்டும்.

இந்த அரசியல் மாற்றத்திலிருந்து அரசியல்வாதிகள் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களோடு நிற்க வேண்டும், அவர்களுக்காய் குரல் கொடுக்க வேண்டும். அதனை உணர்த்தியதே கேப்பாபுலவு மக்களின் பெருவெற்றி. அவர்கள் எந்தக் காணிகளுக்காகா போராடுகிறார்களோ அதே நிலங்கள் மீளக் கிடைக்கும் போது போராட்டங்கள் மீதான மதிப்பு மீண்டும் எழுகை பெறும். அதற்காக கட்சி, வர்க்க பேதமின்றி ஒன்றாய் எழட்டும் நம் குரல்கள். இனி நாமும் கேப்பாபுலவுப் பிஞ்சுகள் பாடுவதைப் போல  சொல்வோம் “ ஆமிக்காரனே! எயார் போஸெ! காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா”

கிரிஷாந்த்

நன்றி - புதுவிதி

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஜல்லிக்கட்டு - நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை










இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பொலிஸ் மாணவர்களை நெருக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பெரும் அளவில் அரச இயந்திரத்தினால் ஒடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் பல நாடுகளிலும் கவனயீர்ப்புகள் இடம்பெற்றன.சமூக வலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் இது பற்றி கார சாரமான பல விவாதங்கள் இடம்பெற்றன.

ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதுமான பல விடயங்கள் உள்ளன. அவற்றை தொகுத்துப் பார்ப்போம். 

1 - ஏதோ ஒரு பொது நோக்கில் மக்கள் இவ்வளவு பெரிய அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் வீதிக்கு இறங்கவில்லை. அது தான் இந்தப் போராட்டத்தின் முதல் வெற்றி. முதல் பாடம். தமது அடையாளம் மீதான பொதுப்பிரச்சினையாக இது இருந்தாலும் மத்திய அதிகாரத்தின் மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடே இது. 

2 - தொடர்ந்து சமூக வலைத்தளங்களில்  இயங்கும் இளைய தலைமுறை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் இந்த போராட்டத்தை  அவர்கள் உருவாக்கிய விதத்தில் மறைந்து போய் விட்டன. இவ்வளவு காலமும் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தவர்கள் நிலத்திலும் கால் பதித்து இணையத்தில் போராளிக் குரல் எழுப்பியவர்கள் நிஜத்திலும் குரல் எழுப்பியது மிக முக்கியமான சமூக அசைவு.

3 - இவ்வளவு பெரிய போராட்டத்தை ஆறு நாட்களாக இத்தனை லட்ஷம் மக்கள் இணைந்து நடத்தியதும், அதன் போதான பல படிப்பினைகளும் முக்கியமானவை. பெண்களின் பங்களிப்பு இந்தப் போராட்டத்தில் முன்னெப்போதையும் விட அதிகமாகவிருந்தது. சாதி, வர்க்க, பால் நிலை அடையாளங்களைக் கடந்து ஒரு பொதுப்பிரச்சினைக்காக பொது அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து போராடியதும் ஈழத்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

4 - இந்த வகையான போராட்டங்கள் நடைபெற ஈழத்தைப் பொறுத்தவரை இன்னும் ஜனநாயாகச் சூழல் வளராத நேரத்தில் காலம் எடுக்கும். ஆனால் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும்  போராட்டங்களின் தொடர்ச்சியில் இந்த இளைய தலைமுறையும் இணைந்து கொள்வதற்கு போராட்டமொன்றிற்காக ஜனநாயகரீதியில் வீதியில் இறங்குவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.

5 - அற வழிப் போராட்டங்கள், ஜனநாயகத்தை அதன் உச்ச அளவில் பயன்படுத்துதல் என்பன பற்றி நாம் அதிகமும் உரையாட இது வழியைத் திறந்து விட்டிருக்கிறது.

மேலும் இந்தப் போராட்டம் மிகக் கடுமையான முறையில் அடக்கப் பட்டாலும் கூட தமிழர்கள் உலகத்திற்கொரு பெரிய செய்தியை சொல்லியிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. இது தொடர்பில் பேராசிரியர் அ. மார்க்ஸ் தனது முகநூலில் எழுதிய பதிவை கீழே தருகிறேன்,

"இரண்டு வகைகளில் இந்தப் போராட்டம் எதிர் கொள்ளப்படும் என்பது நேற்றே எதிர்பார்த்ததுதான் அவை: 1. கொஞ்ச ஆட்களைத் தயார் செய்து போராட்டம் பற்றி அச்சமும் அவதூறும் பரப்பி அறிக்கைகள், பிரெஸ் மீட் ... முதலியன. 2. காவல்துறையின் உண்மை முகத்தைக் காட்டி போராட்டத்தை ஒடுக்குவது.இரண்டும் நடந்துகொண்டுள்ளன.

இந்நிலையில் போராடும் இளைஞர்கள் என்ன செய்ய முடியும்?
இது அமைதி வழிப் போராட்டம். ஆனால் இந்த அமைதி வழிப் போராட்டத்தில் பங்கு பெறுவோர் அன்று மகாத்மா காந்தியால் திரட்டப்பட்ட அறப் போராளிகள் அல்ல. எல்லா பின் விளைவுகளையும் சொல்லி தியாகம் செய்வதெற்கெனவே திரட்டப்பட்டவர்கள் அவர்கள்.

இன்று குழுமியுள்ளோர் அப்படியானவர்கள் அல்ல. இந்தநிலையில் கலைய நேர்ந்தால் அது பின் வாங்கலோ இல்லை தோல்வியோ அல்ல. ஏற்கனவே போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் பல உண்மைகள் அடையாளம் காட்டப் பட்டுள்ளன. பல எதார்த்தங்களை இளைஞர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ள இது வாய்ப்பு ஏற்படுத்தியது. எதிரிகளை மாணவர்களும் இளைஞர்களும் அடையாளம் காணவும் காட்டவும் ஒரு அற்புதமான வாய்ப்பாக இது அமைந்தது.

அந்த வகையில் இந்தப் போராட்டம் வெற்றியே.

(23 .௦௧. 2017 )

இந்தப் போராட்டம் ஒரு தன்னெழுச்சி இதற்கு தன்னெழுச்சிகளுக்கேயுண்டான பலவீனங்கள் உண்டு. அவை ஒரு தலைமைக்கு கீழோ கூட்டுத் தலைமைக்கு கீழோ ஒன்று திரளா விட்டால் அது எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க முடிகிறது.

மேலும் ஏனைய சில விவாதங்கள் தொடர்பில் எழுத்தாளர் சயந்தன் தனது முகநூலில் எழுதிய சில குறிப்புகள்,

"1. சல்லிக்கட்டுத் தொடர்பாக நான் அறிந்தவரையில் ஓர் உரையாடலாகவாவது அந்த விளையாட்டில் சாதிக்குழுக்களின் சார்பும் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழகத்தின் அண்மையை போராட்டம், இந்த விளையாட்டில் ஒட்டிக்கொண்டிருந்த சாதியை சிதையைச் செய்திருக்கிறது. அல்லது சாதியிலிருந்து இந்த விளையாட்டை மீட்டெடுத்திருக்கிறது. இதனை குறித்த அந்த சாதியக்குழுக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதுவும் அதற்கு “தமிழ்க் கூட்டம்” எவ்வாறான பதிலடியைக் கொடுக்கும் என்பதையும் -தற்காலிகத் தடை/நிரந்தரத் தடை - தீவிரம் குறைந்தபிறகு காணமுடியும் என நினைக்கிறேன்.

2. இதுவரையிருந்த தலைமைத்துவ வடிவத்தை இப்போராட்டம் முழுவதுமாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. தலைமையென்பது முன்னால் நின்று இழுத்துச்செல்வதல்ல, “குழுச்செயலை” ஊக்குவிப்பது என்பதாக அது மாறிவிட்டிருக்கிறது. தலைத்துவக் குணாதிசயம் என்பது ஓர் அரூபமாகிவிட, பங்கேற்பு என்ற ஒன்று மட்டுமே இப்போராட்டத்தைக் கட்டுக்குலையாமல் வைத்திருக்கிறது.

3. தம்மை ஆளும் அரச இயந்திரத்திற்கு எதிராக, தாம் எதிர்கொள்ளும் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளுக்காக, விவசாயிக்காக, தண்ணீருக்காக, புறக்கணிப்புக்கு எதிராக, மொழிக்காக, இனத்திற்காக, ஈழத்திற்காகவென தம் ஆவேசமான குரலை எழுப்புகிற ஒரு மேடையாக, சல்லிக்கட்டை ஒரு குறியீடாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு பெரும் சனத்திரளைத்தான் நான் காண்கிறேன். அதில், எப்பிடி நான் தண்ணீர்ப் போத்தல்களை விநியோகிப்பதற்கு மட்டுமே வந்தேன் என்று சொன்னாரோ, அப்பிடியே தனியே சல்லிக்கட்டிற்காக மட்டும் வந்தவர்களும் இருந்திருக்கலாம். அவர்களே விலகிச்செல்கிறார்கள்.

4. இந்தப்போராட்டம் அரசுக்கும், ஓட்டரசியல் செய்கிற கட்சிகளுக்கு மட்டும் அச்சத்தைத் தரவில்லை. தமக்கே தமக்கான கருத்தியல்களுக்காக மட்டும் சனம் திரள்வதே போராட்டம் என நம்பப் பிரியப்படும், முற்போக்கான சிந்தனையாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தும், போராட்டம் என்றாலே அது தம்முடைய வேலைதான் எனப் பாரம் சுமக்கும், சிலரையும் அச்சப்படுத்தியிருக்கிறது. கேலி செய்வதைப்போல அவர்கள் பேசிக்கொண்டாலும், உள்ளூரும் அவர்களுடைய அச்சத்தையும் பதறலையும் நான் மனதார ரசிக்கிறேன்.

5. சல்லிக்கட்டுக்கு ஆதரவதாக ஈழத்தில் நடந்த போராட்டங்களின் வழியாக நிகழ்த்த முனையும் ஒரு நடவடிக்கையையை நான் ஏற்புடையதாக விளங்கிக்கொள்கிறேன். வெகுசனப் போராட்டங்களுக்கு “கொலையையே” பதிலாகப் பெற்ற ஒரு நாட்டில், அப்போராட்ட அனுபவம் இல்லாத ஒரு புதிய தலைமுறையிடம், ஒப்பீட்டளவில் ஆபத்துக் குறைந்த ஒரு விடயத்திற்காக தெருவில் இறங்கச்சொல்வதன் ஊடாக “பங்கேற்பின் முக்கியத்துவத்தை” உணர்த்துவதே அது. அதை உணர்த்திவிட்டால், பின்னர் எதில் பங்கேற்பது என்பதை அவரவர் தம் தேடலுக்கூடாக தெரிவுசெய்துகொள்வார்கள் என்ற வாதத்தைப் புரிந்துகொள்கிறேன்."

நன்றி - புதுவிதி 

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ ?






முன்னெப்போதுமில்லாத அளவு சமூக வலைத்தளவாசிகளும்  மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது  நாள் மதியத்திலிருந்து அது முடியும் இறுதித் தருணம் வரை அந்த போராட்டப் பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த உண்ணாவிரதிகளுடன் உரையாடுவதும், பகலில் வரும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களின் எண்ணவோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருப்பதுமாக மூண்டு பகல் மூன்று இரவு அங்கு தான் . மக்களின் போராடும் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால் எல்லாப் போராட்டங்களும் அரசியலுள்ளதே. சிலது கட்சி சார் அரசியல் கொண்டது சிலது வெகுஜன அரசியலைக் கொண்டது.

ஆகவே இந்தப் போராட்டத்தின் சாதக பாதகங்களையும் விமர்சனங்களையும் அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

*

முதலில் சாதகமான விடயங்கள் பற்றி பார்க்கலாம்-
 மக்கள் நீதிகோரி தெருவிலிறங்கி ஒரு உச்ச கட்ட அழுத்தத்தை வழங்கக் கூடிய போராட்ட வடிவத்தை தீர்மானித்ததை முக்கியமான ஒரு விடயமாக பார்க்கிறேன். நமது நிலத்திற்கு இதுவொரு  நீண்ட தொடர்ச்சியுடைய மரபே. திலீபன் அதன் உச்சம். ஆனால் அதன் பிறகு நம் வரலாற்றின் பக்கங்கள்அதிகமும் அடையாள உண்ணாவிரதங்களாகவே நிரம்பி வழிந்தது . சமீப வரலாற்றில் சில சாகும் வரையான உண்ணாவிரதங்கள் அறிவிக்கப்பட்டு செய்யப்பட்ட போதும் அனைத்துமே ஏதோ ஒரு வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தவையே. அது ஒரு ஜனநாயக வளர்ச்சியின் கட்டம், இந்தியாவில் இடம்பெற்ற போராட்ட களங்களை காந்தி பயன்படுத்தியது அவ்வாறு தான். அவரது போராட்டங்களில் வளர்ச்சியுண்டு. அவர் உடலைக் கொண்டு மேலாதிக்கத்தின் "தார்மீக நோக்கம்" என்ற பொய்ப் பிரச்சாரத்தை நிர்பந்தித்தார். வேறு வழியின்றி ஏதாவதொரு நிலையினை அல்லது தீர்வினை முன்வைக்க அவர்களை இறங்கி வரச் செய்தார். அது தான் அவரது அரசியல். அவர் இறுதி வரை அதனை வளர்த்தெடுத்து உலகில் புதியதொரு போராட்ட அணுகுமுறையை அரசியல் ரீதியில் திறந்தார்.

அந்த அடிப்படையில் தார்மீக நோக்குடன் இயங்குகிறோம் என்று மார் தட்டிக்கொள்ளும் அரசுகளை நோக்கி மக்கள் தமது உடலை ஆயுதமாக பயன்படுத்துவது அரசை  ஒரு நிர்பந்தத்தின் முன் இறங்கி வரச் செய்வதே.


இரண்டாவது சாதகமான விடயம், இன்றுள்ள சமூகவலைத்தளத்தில் இயங்கும் இளைஞர்கள் மேல் உள்ள விமர்சனமென்பது மாறிவரத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் மெரினாவில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கான இளைஞர் எழுச்சியென்பது பெரியளவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு காலம் முகநூலில் சோகப் பதிவு போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நாடுதழுவிய ரீதியில் பல கவனயீர்ப்புக்களை மேற் கொண்டனர். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் கடுமையான வாதப்  பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. இவர்கள் இங்கிருக்கும் பிரச்சினைகளுக்கு இப்படி ஒன்றுகூடுவார்களா ? என்பது அவர்கள் உள ரீதியாக எதிர்கொண்ட தார்மீக ரீதியான கேள்வி.

அதனைப் பரிசோதிக்கும் களமாக அடுத்தடுத்த நாட்களிலேயே வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்தது. அவர்களின் நேர்மை மீதும் தார்மீகத்தின் மீதும் அதுவொரு தாக்குதலை நிகழ்த்தியது, அவர்கள் மக்களுடன் நின்றார்கள். மக்களின் குரலாக மாறினார்கள். பெருமளவில் இல்லையெனினும் சில நூறு பேராவது மக்களுக்காக வந்து நிற்பது மிக நல்ல அறிகுறியே.

*

இனி பாதகமான விடயங்கள்.
 ஆரம்பித்திலிருந்தே இந்தப் போராட்டம் சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் ஆரம்பிக்கப்பட்டது என்ற சலசலப்பு இருந்தது அதனால் முதல் நாட்களில் இளைஞர்களை சந்தேகத்துடனேயே இந்தப் போராட்டத்தை அணுக வைத்தது. ஏனெனில் உண்ணாவிரதத்தில் பிரதானமாக இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயதானவர்கள், சிலரே மத்திய வயத்தைச் சேர்ந்தவர்கள். மத்தியவயதைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் முடிவெடுப்பவர்களாகவும் மற்றவர்கள் அப்பாவிகளாகவுமே இருந்தார்கள். அதில் மூன்று பேருக்கு சிவசக்தி ஆனந்தனுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலர் கூறுகின்றனர். இதை உறுதி செய்வது போல போராட்டத்துக்கு தலைமையேற்ற சிலர் அடிக்கடி “ ஆனந்தன் அண்ணையோட கதைச்சுத்தான் செய்யிறம். அவைதான் எங்களுக்கு ஆதரவு” என்று மந்திரம் போல உச்சாடனம் செய்து கொண்டிருந்தார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ராஜா என்பவர் சிவசக்தி ஆனந்தன் எம்.பியின் அதி தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர். போராட்டத்தை முடிப்பது பற்றிய தீர்மானத்தை இவரே எடுத்திருந்தார். அந்தத் தீர்மானத்தை மற்றவர்கள் ஏற்கச் செய்வதிலும் மும்முரமாகச் செயற்பட்டார். வடமாகாண சபை உறுப்பினர் மயூரனும் உண்ணாவிரதப் பந்தலைக் கண்காணித்தபடி வளைய வந்து கொண்டிருந்தார். இவரும் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவரே.எனவே இந்தப் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்ததில் சிவசக்தி ஆனந்த எம்.பியின் கரங்கள் இருந்தது என்று சொல்லப்படுவதை மறுக்க முடியவில்லை.


இருந்தும் இந்தப் போராட்டத்திற்கான ஆதரவை வேறு ஒருவகையிலேயே முடிவெடுத்தேன். அதன் ஏற்பாட்டாளர்களுக்கொரு குழு இருந்தது அதில் சமூக மட்ட அமைப்புகளும் இடம்பெறுவதால் அதற்கு வேறொரு பரிமாணம் கிடைத்தது.




மேலும் இத்தகைய போராட்டங்களை மேற்கொள்வதற்கு அரசியல் ரீதியிலானதோ அல்லது அமைப்பு ரீதியிலானதோ பலங்கள்  இல்லையென்றால் ஆபத்து அதிகம். ஆகவே ஒரு பாதுகாப்பிற்காக அவர்கள்  அப்படியானவர்களை அணுகி சில உதவிகளை எடுத்திருக்க வாய்ப்பும் இருந்தது.ஆனால் அவர்கள் உண்ணாவிரத இறுதியில் எடுத்த முடிவு அந்த நம்பிக்கையை குலைப்பதாகவே உள்ளது.

ஆகவே இதன் பின்னாலுள்ள மற்றும் உள்ளோடும் ஒரு சிலரின் அரசியல் பின்புலம் இந்தப் போராட்டத்தின் முடிவின் மீது ஒருவகை நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது நாளிற்குப் பின் ஏற்பட்ட சமூக கவனமும் இளைஞர்களின் வருகையும் ஒருசிலரை அச்சமூட்டுவதாகவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதாகவும் இருக்கும் வாய்ப்பு அதிகரித்ததால் இது வேளைக்கு முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. இல்லையென்றால் இது வேறொரு பரிமாணத்தை எடுத்து எரியும்  பிரச்சினையாக மாறி குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்யக் கூடிய கொதிநிலையும் காலமும் இருந்தது.

ஆகவே தான் அரசியல் பின்புலமுள்ள சிலர் இதில் ஈடுபட்டமை ஒரு பாதகமான விடயம். எந்த அடிப்படையிலென்றால் இப்படியான மக்கள் போராட்டங்கள் மீது ஒரு எதிருணர்வு தோன்றும் வாய்ப்பும் ,இளைஞர்களுக்கு உருவாகியிருக்கும்  அரசியல் உணர்வு வெறுப்பாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

இனி விமர்சனங்களைப் பார்ப்போம். மூன்று பிரதான கோரிக்கைகளை வைத்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் "காணாமல் ஆக்கப்பட்டோர்" தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தப்பட்டது. பிற கோரிக்கைகள் பெயரளவிலேயே உரையாடப்பட்டது . அதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பற்றி அங்கிருந்த மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்த அக்கறையோ புரிதலோ இருக்கவில்லை. ஆகவே மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் வருகை தந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள்.  

மேலும் நான்காவது நாள் இடம்பெற்ற பெருமளவிலான சமூக வருகையையும் மாணவர் மற்றும் இளைஞர் பங்களிப்பையும் அது உருவாக்கியிருக்கக் கூடிய பெரிய அழுத்தத்தையும் உண்ணாவிரதிகள் பயன்படுத்தத் தவறியிருந்தனர்.

உண்ணாவிரதம் முடிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்த சூழல் முற்றிலும் வித்தியாசமானது அது ஒரு வெகுஜனப் போராட்டமாக விரியும் அனைத்து அம்சங்களும் துலக்கமாக இருந்தன. ஆனால் பிரதானமாக உண்ணாவிரதத்தில் ஈடு பட்டவர்கள் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அந்த முடிவை எடுத்தனர், அழுத்தமா? அல்லது நிகழ்ச்சி நிரலா ? தற்செயலா என்பதை மாசி ஒன்பதும் , அதற்குப் பிறகு வரப் போகும் நாட்களுமே  வெளிப்படுத்தும். இதனை நாம் அவதானிக்க வேண்டும்.

நாம் ஏற்கனவே பல போராட்டங்களை இழந்திருக்கிறோம். அதன் கோரிக்கைகளை பலவீனப்படுத்தியிருக்கிறோம். இவற்றிலிருந்து நமது சமூகம் மீண்டு தமிழர்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியில் பலம் வாய்ந்த குரலாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

இப்பொழுது உருவாகியிருக்கும் புதிய சூழலிலும் அச்சங்கள் உண்டு. ஆனால் ஒன்றுதிரண்டு ஒரு சமூகமாக நாம் முடிவுகளை எடுக்கும் போதும் தீவிரமாக சிந்தித்தும் உரையாடியும் போராட்டங்களை முன்னெடுக்கும் போது மாத்திரமே நாம் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். இதில் பல்கலைக் கழகத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் பெரிய பொறுப்பிருக்கிறது. தமது வளாகத்திற்குள் ஒரு பிரச்சினை வந்தால் அதனை சமூகம் கவனிக்க வேண்டும் என்று கோஷமெழுப்பும் அவர்கள், மக்களின் பிரச்சினைகளை மக்களுக்கு முன்னராகவே பிரதானப்படுத்தி அதனை முன்கொண்டு செல்ல வேண்டியவர்கள், அப்படியொரு வரலாறு யாழ் பல்கலைக் கழகத்திற்கு உண்டு. பிற பல்கலைக் கழக மாணவர்களுக்கும் உண்டு. அதே வேளையில் சமூக வலைத்தளங்களில் உரையாடும் பலரும் பொது விடயங்கள் தொடர்பில் மெய்யான அக்கறையுடன் செயல்படும் போது சிறியளவிலான மாற்றத்தையேனும் சமூக அசைவில் ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருக்கிறது.

ஆகவே வவுனியாவில் நான்கு நாட்கள் இடம்பெற்ற போராட்டத்தின் உள் அரசியலைக் கண்டு வெறுப்புக் கொள்வதை விட இது போன்ற நிலைக்கு மக்கள் ஏன் தொடர்ந்தும் வருகிறார்கள் என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தமக்குத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்/ தமது பிள்ளைகளை மீட்டெடுப்பதற்காக யாருக்குப் பின்னால் செல்லவும் யாரின் காலில் விழச் சொன்னாலும் விழவும் தயாராயிருக்கும் மக்களை யார் காப்பாற்றுவது ? அவர்களுக்கு வேறு என்ன தெரிவுண்டு ? வழியுண்டு ? இவற்றையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதே வேளை இந்த மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் ஆட்களை இனங்கண்டு வெளிப்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களைதுடைத்தெறியவும்  வேண்டும்.

அது இளைஞர்களால் தான் முடியும்.

- கிரிஷாந்-


-----------------------------------
 “ நாங்கள் குழப்பவில்லை”

- சிவசக்தி ஆனந்தன்( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்)

என்னைப்பொறுத்தவரை வவுனியாவில் நடந்த உண்ணாவிரதம் என்பது யாரும் தொடக்கியதல்ல. அது தானாகத் தொடங்கியது. ஒரு மக்கள் போராட்டமாகத் தொடங்கியபோது பலர் இணைந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் உந்துதலாக இருக்கவில்லை. மற்றைய சமூக அமைப்புகள் எந்தவிதத்தில் பங்களிப்புச் செய்தனரோ அதேபோலத்தான் நாமும் பங்களிப்புச் செய்தோம்.

அன்று மதியம் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி ஆகியோர் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர். இதற்கு ஒரு குழு நியமிப்பது தொடர்பாக அவர்கள் அங்கிருந்த உண்ணாவிரதப் போராட்ட ஏற்பாட்டார்களுடன் கலந்துரையாடியபோது,  சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் கோபப்பட்டனர்.

இந்த இடத்தில் ஒரு கசப்பான விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அது தமிழரசுக் கட்சி  தொடர்பானது. இது போல தன்னெழுச்சியாக நடைபெற்ற  போராட்டங்களை நேரடியாகவும், மறைமுகவமாகவும் நீர்த்துப்போகச் செய்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் தான். அதேபோலவே அன்றும் வந்து வாக்குறுதிகள் பல கொடுத்ததாகக் கேள்விப்பட்டோம்.

என்னைப் போறுத்தவரை இந்தப் போராட்டத்தை மக்கள் கைவிட்டுவிட்டதாகச் சொல்லமாட்டேன். இது  தற்காலிகமாகக் கைவிடப்பட்டதேயொழிய முற்றுமுழுதாக இதிலிருந்து யாரும் விலகவில்லை. வாக்குறுதி கொடுத்தவர்களால் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் அவர்கள் தொடருவார்களென நான் எண்ணுகிறேன்.

- நன்றி - புதுவிதி -

புதன், 1 பிப்ரவரி, 2017

போராடுவது என்றால் என்ன ?




(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக )

நமக்கு இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. அடுத்தடுத்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் ஜெனரேட் செய்யப்பட்டோ அல்லது தன்னெழுச்சியாகவோ உருவாகி நீண்ட நாட்களிற்குப் பின்னர் சமூக உரையாடல் ஒன்றை வயது வேறுபாடின்றி மெய் வாழ்க்கையிலும் சைபர் வெளியிலும் உருவாக்கி விட்டிருக்கிறது. எனது கடந்த ஏழு வருட அவதானிப்பில் இவ்வளவு வைரலாக இந்த விடயங்கள் உரையாடப்பட்டதில்லை, புதிய தலைமுறையின் நேர்மையையும் சமூக அக்கறையையும் சீண்டியதில்லை. இது ஒரு தொடக்கம்.

இதனை நாம்  விளங்கிக் கொள்வது அல்லது ஏற்றுக்கொள்வதென்பது சிக்கலான ஒரு விடயம் . நேற்று வரை மீம்ஸ் போட்டுக் கொண்டிருந்தவரும் நயன்தாராவுக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று தலையிலடித்துக் கொண்டிருந்தவர்களும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு குரல் கொடுங்கள், இழந்த காணிகளினை மீளக் கொடுங்கள் என்று  அரசியல்வாதிகள்,அரசின் மேலான  கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அதனை வீதியில் இறங்கி வெளிப்படுத்தவும் தொடங்கி விட்டனர். ஆனால் இந்த வளர்ச்சிகள் மேல் உருவாகக் கூடிய சந்தேகம் என்னவென்றால்,

இது நீடித்து நிலைக்குமா ?

நிச்சயமாக ஆம். என்னுடைய கேள்வி என்னவென்றால் அதனை நீடித்து நிலைக்கச் செய்ய எமது பங்களிப்பு அல்லது உள்ளீடு என்பது என்ன ? என்பது தான்.

ஏனென்றால் இந்த வகையான போராட்டங்களுக்கு அதிகம் பேர் வருவதோ அதனை தொடர்ந்து உரையாடுவது மட்டும் முக்கியமல்ல. இங்குள்ள பிரச்சினை இந்த பல்வேறு பட்ட பிரச்சினைகளின் மூல வேர் எது ? அதனை தீர்ப்பதற்கு நமது தலைமுறையிடமுள்ள அறிவும் அனுபவமும் என்ன? அதனை நாம் எப்படி பெற்றுக்கொள்வது, வளர்த்துக் கொள்வது, உபயோகிப்பது?

பிரதான கேள்வி - அரசியலற்ற அரசியல் செய்யும் நமது தலைமுறை தனது சக்தியை ஒரு பலம் வாய்ந்த அழுத்தக் குழுவுக்குரிய அரசியல் சக்தியாக எப்படி மாற்றப் போகிறது என்பதே.



கடந்த மூன்று வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் செயற்பாடுகளை நான் கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் செய்த விமர்சனங்கள்  சரி என்று நிரூபித்தும் விட்டேன். கடந்த ஆறு வருடத்தில் பல்கலைக் கழகத்தில்  எந்த முக்கியமான அரசியல் பற்றிய உரையாடலும் தானாக உருவாகவில்லை. பல்கலைக் கழகம், "இது படிக்கும் இடம் இதில் அரசியலுக்கு இடமில்லை" எனும் மந்திரத்தை மாணவர்களுக்கு போதித்திருக்கிறது, அதனையே மாணவர்களும் பல இடங்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவோ உதாரணங்களை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறேன், இன்னும் பலரும் இவை தொடர்பில் எழுதியிருக்கிறார்கள், ஆனால் யாருக்கும் அக்கறையில்லை.

இன்று உருவாகியிருக்கும் முக்கியமான அழுத்த சக்தியாக "
'சமூக வலைத்தள இளைஞர்கள்" என்ற தொகுதி செயல்படுகிறது, இதனுடைய ப்ளஸ் அதன் சுதந்திரம், தலைமையற்ற ஒருங்கிணைவு. அதே நேரத்தில் நாம் அவதானிக்க வேண்டியது அதன் தளம் ஆதரவு என்ற அடிப்படையிலானதாகவே இப்பொழுது வரை இருக்கிறது. அது எதனையும் ஜெனரேட் செய்யவில்லை,அல்லது போராடவில்லை.

இங்கே நாம் வலிமை பெறச் செய்யக் கூடிய இன்னொரு அழுத்த சக்தி பல்கலைக் கழகம். அதற்கு மாணவர்கள் கொஞ்சமாவது பொறுப்புடன் செயல்பட வேண்டும். வவுனியா உண்ணாவிரதப் போராட்ட நேரத்தில் நான்காவது நாள் வந்து சேர்ந்தார்கள் ஒரு ஐம்பது மாணவர்கள். அவர்களது அக்கறை நல்லது. ஆனால் ஒரு மாணவர், அரசியல் வாதிகள் வந்து சென்ற பின் ... ஊரில் உள்ள மக்களெல்லாம் வந்து சென்ற பின் இறுதியிலா வருவது? மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதெல்லாம் வெறும் கோஷம் தானா ? முதல் நாளில் நின்றிருக்க வேண்டிய ஆட்கள் அல்லவா? இதற்கான வரலாற்றுப் பின்புலம் , சட்ட நுணுக்கங்கள், ஊடகம், ஆவணம்.. விழிப்புணர்வு என்று தலையில் தூக்கி வைத்து நகர்த்தியிருக்க வேண்டியவர்கள் இவர்களே. இவர்களிடம் அத்தகையதொரு சமூக அங்கீகாரம் நம்பிக்கை என்பன இருக்கிறது,

ஆனால் , மதியம் பன்னிரண்டு  மணிக்கு வந்து விட்டு மாலை நான்கு மணிக்குச் செல்வதா மாணவர் சக்தி ? அமிர்தலிங்கத்திற்கு அடுத்தது சம்பந்தன் ஐயா தான் மேதை என்று சொல்வதா அரசியல் பேச்சு ? மக்களுடன் ரையாடுவது எப்படி என்று தெரியவில்லை, மீடியாக்களுக்கு எப்படி விடயங்களை சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை.

இதையெல்லாம் பார்த்த பின்


எனது பழைய கட்டுரையொன்றின் சில பகுதிகளை இங்கே தருகிறேன்,

//ஏனென்றால் இந்த சமூகத்திற்கு அவ்வளவு தூரம் நீங்கள் முக்கியமானவர்கள் .. விலைமதிப்பற்றவர்கள் . உங்கள் ஒவ்வொருவரையும் அவ்வளவு நம்புகிறது இந்தச் சமூகம் அவ்வளவு மதிக்கிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் கடந்த தினங்களில் நாம் பார்த்தோம்.

சரி , இப்படிப் பட்ட மதிப்பையும் நம்பிக்கையும் உங்கள் மீது கொண்டிருக்கும் சமூகத்திற்கு பல்கலைக் கழகம் யுத்தத்திற்குப் பின்  செய்தது என்ன ? அனர்த்த நிவாரணங்கள் , சில பெரும் பிரச்சினைகளில் கவனயீர்ப்பு , கண்டனம்.

 மலையக தொழிலாளர் தொடர்பில் செய்தது எல்லாம் தமிழ் சினிமாவில் இறுதிக் காட்சியில் வரும் பொலிஸ் போன்ற காட்சி . இவை தானா உங்களால் முடிந்தது . இதற்காகத் தானா சமூகம் இவ்வளவு நம்பிக்கையை உங்கள் மேல் வைத்திருக்கிறது . இல்லை . இல்லவே இல்லை .

நீங்கள் அவர்களை வழிநடத்த வேண்டியவர்கள். நீங்கள் அவர்களின் பிரச்சினைகளை ஆராய வேண்டியவர்கள் . நீங்கள் அவர்களின் பொருட்டு யாரையும் எதிர்த்து போராட வேண்டியவர்கள் ,சுலக்சனைப் போல. அவர் தனது பல்கலைக் கழகத்தை எதிர்த்து தான் போராட்டத்திற்கு வந்தார்.

இதை நாம் எவ்வளவு தூரம் செய்கிறோம் என்பதை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் , அசைன்மென்ட் செய்வதற்கும் , ராகிங் செய்வதற்கும் , மற்ற எல்லாம் செய்வதற்கும் எமக்கிருக்கும் நேரம் நம்மை நம்பும் சமூகத்திற்காக செலவளிக்க இருக்கிறதா ? சுலக்சனிடம்  இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று தான் என்று எனக்குத் தோன்றுகிறது. தான் நம்புவதற்க்காக உண்மையில் களத்தில் நிற்பது . அப்படித் தான் அவர் பிரச்சாரம் செய்ததையும் வீதி நாடகங்கள் போட்டு மக்களை மகிழ்வித்ததையும் பல்வேறு போராட்டங்களில் பங்கு பற்றியதையும் பார்க்கிறேன்.

நாம் செய்யும் ஆய்வுகளில் எத்தனை சமூகத்திற்கு பயன்படுகிறது. நம்மிடமிருக்கும் சட்டத்துறை எவ்வளவு தூரம் சட்டம் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது . நமது சமூகவியல் துறை ? வரலாறுத் துறை  ?




எவ்வளவு தூரம் மக்களை அறிவு மயப்படுத்தியிருக்கிறோம் ? எவ்வளவு நேரம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாடியிருக்கிறோம் . அனைத்து பீட மாணவர்களும் ( வெறும் வகுப்பு பிரதிநிதிகளோ , தலைவர்களோ மட்டுமல்ல ) ஒன்றாக இருந்து பொதுப்பிரச்சினைகளை ஆராய்ந்து பொது முடிவுகளையும் பொது வேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்  ?

அதிகம் வேண்டாம் . நாங்கள் படிக்கின்ற கல்வி முறையிலிருந்து பொருளாதாரம் வரை திட்டமிட்டு இனஒடுக்குதல்  நடந்து கொண்டிருக்கின்ற போது எந்தத் திட்டமிடலும் எந்த முன்னாயத்தமுமின்றி வெறும் கோஷங்களால் இவற்றை எதிர்த்துவிட முடியும் மாற்றிவிட  முடியும் என்று எதிர்பார்கிறீர்களா ? இல்லவே இல்லை .

....

நாங்கள் வந்தது படிப்பதற்கு என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் . நீங்கள் வந்தது இந்த சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இல்லாதொழிக்க . நீங்கள் வந்தது இந்த சமூக சமமின்மைகளை கேள்வி கேட்க, எதிர்க்க . மாற்ற. அப்படி நம்பித் தான் இதையெல்லாம் எழுதுகிறோம் . நண்பன் இறந்தால் மட்டும் தான் போராடுவோம் . நமது எல்லைக்குள் புத்தர் சிலை வந்தால் தான் எதிர்ப்போம் . நமது கம்பஸில் கண்டிய நடனம் ஆடினால் தான் அடிபடுவோம் என்றால் இந்த இனத்தின் தலைவிதி அதன் சந்ததிகளின் போக்கினாலேயே அழிந்து விடும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.

....

உதாரணத்திற்கு . நமது பல்கலைக் கழகம் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடிய பல்கலைக் கழகமென்று நான் கருதுவது JNU  பல்கலைக் கழகத்தை . உதாரணத்திற்கு ரோஹித் வெமுலாவின் மரணத்தை தேசிய பேசுபொருளாக்கி அவர்கள் சிலவாராம் நடாத்திய போராட்டங்கள் அற்புதமானவை . அந்த வழிமுறைகள் அவர்கள் போராடியபோது இருந்த ஒற்றுமை ஒரு நாளில் வந்ததில்லை . அது ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பல்கலைக் கழகம் , அங்கே அரசியல் பேசலாம் ,அவர்கள் " புரட்சி ஓங்குக " என்பதை சொல்வதற்குப் பின்னலொரு வாழ்க்கை இருக்கிறது , அரசியல் சித்தாந்தம் இருக்கிறது . தொடர்ச்சி இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரலாயிருக்கிறார்கள். நாம் நமது வீட்டிற்குள் வரும் பிரச்சினைகளுக்கே பெரும்பாலும் குரலாயிருக்கிறோம். அவர்கள் போடுவது வெறும் கோஷமல்ல . அவர்கள் அதை வாழ்கிறார்கள் . நம்மைப் போல படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கோ அல்லது வேலையில் அமர்ந்து கொண்டு பேப்பரில் வரும் அரசியல்களைப் பற்றி அரட்டை அடிப்பது மட்டுமல்ல அவர்கள் செய்வது . அவர்கள் இந்திய வல்லரசை எதிர்க்குமளவு வளர்ந்ததற்கு வெறும் கோஷம் காரணமல்ல , அவர்களின் உரையாடல்களும் செயற்பாடுகளும் தான்அவர்களை மாற்றியது.

(யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?)

(http://kirisanthworks.blogspot.com/2016/10/blog-post_25.html)



//

இவை தவிர இன்று சமூகவலைத்தளத்தில் இயங்கக் கூடியவர்களுக்கிருக்கும் பெரிய பலம் அவர்களின் பல்வேறுபட்ட அறிவுத் திறன்களையும் துறைகளையும் இணைத்த பெருந்தொகுதி  , அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.



இறுதியாக ஒன்று பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் நியாயமானது தான். மற்றவற்றிற்கு போராடுவதற்கு  அவர்களுக்கு நேரமில்லை தான். ஆனால் நண்பர்களே எர்னஸ்ட் சேகுவாரா என்ற மருத்துவனைத் தான் நான் மதிக்கிறேன். போராடுவது என்றால் அவர் செய்தது தான்.

https://web.facebook.com/profile.php?id=100013740106832

இப்பொழுது தமது நிலமெனும் உரிமைக்காக கார்பெற் வீதியில் உறங்கிக் கொண்டும் ஓங்கிக் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்களின் தைரியத்திற்கும் வாழும் உரிமைக்கும் இவர்களில் யார் தமது முதலாவது காலை எடுத்து வைத்து போராடப் போகிறார்கள்? யாரிடம் அந்தக்  கண்ணியம் மிக்க இதயமிருக்கிறது?

கிரிஷாந்த்.