புதன், 28 டிசம்பர், 2016

உருக்கும் நெருப்பின் கண்ணீர்



வரலாற்றின் பேராற்றில் லட்சம் கவிஞர்கள் வரலாம் போகலாம் . எஞ்சப்போவது சில வாழ்க்கைகள் தான்  , சில வாழ்க்கைகளிற்கு அர்த்தம் புதிரானது . ஏன் இந்த முட்டாள் வீணாகச்செத்துப்போனான் ? என்று சாதாரண மனத்துக் தோன்றிக்கொண்டேயிருக்கும். சில்வியா பிளாத்தும் , வின்சண்ட் வான்கோவும் சிவரமணியும் சாதாரண மனத்துக்கு  பைத்தியக்காரர்கள்தான். உண்மையில் அவர்கள் தங்களைக்கொன்று கொள்ளவில்லை. தங்களை அவர்கள் ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டார்கள். அவர்களுடைய உயிர்  இந்த உலகத்தின் மடமைகளை எதிர்கொண்டு விட்டது தூரிகைத்   தீற்றலாகவும் , நெருப்பெரியும் வரிகளாகவும்  அவை வாழ்வு பெற்றுவிட்டன.  இதில் இன்னொரு வகை உண்டு . உண்மையில் அவர்கள் கொல்லப் பட்டு  விடுவார்கள் என்று தெரிந்தும் , எதிர்த்து நிற்பது பாரதியைப்போல் ,  எஸ்போசைப்போல். இந்த மனங்களைக் காலம் தான் வாழும் காலத்தில் புரிந்து கொண்டதேயில்லை. இவர்கள் எல்லோரும் மனிதப்பெருக்கின் நெருப்பு நதிகள் .

எஸ்போஸ்


என்னுடைய தலைமுறைக்கும் எனக்கடுத்த தலைமுறைகளுக்கும் இருக்கப்போகின்ற பிரச்சினைகளைப்பற்றி ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன்.  சேரனைப்பற்றிய குறிப்பில்  அதன் பிரச்சாரமான மொழியைப்பற்றி  குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடுகள்  சரியானவையே . எப்பொழுதும் அது யார் செத்தாலும் அழுதது. ஆனால் அது கவிதையா இல்லையா என்பதுதான் பிரச்சினை. அதனை என்னால் தர்க்க ரீதியாக விளங்கப்படுத்த முடியவில்லை . எது கவிதை எது கவிதையில்லை என்பதை . உதாரணங்களால் தான் காட்ட
முடியும். பா. அகிலனும் , எஸ்போசும் , நட்சத்திரன் செவ்விந்தியனும் தான் எனக்கு உதாரணங்கள். வாசித்தே நீங்கள் வேறுபாடுகளை உணர முடியும்.

உலகின் மகத்தான கவிஞர்களில் பலரும் ,  எரிந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமில்லாதது . அவர்களுடைய குரல் எப்பொழுதும் ஒன்றுதான் .  அது அதிகாரத்திற்கு எதிரானது .  எஸ் போஸ் தமிழில் மிகவும் நூதனமான இன்னுமொரு மொழியடுக்கைத்திறந்தவர் .

பிரச்சாரத்திற்கும் கலைக்கும் உள்ள இடைவெளியை அவரது கவிதைகள் கடந்துவிடுகின்றன , .ஒவ்வொரு தடவையும் சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம் என்ற  அந்தக் கவிதையை வாசிக்கும் போதெல்லாம்  , மூச்சு நின்றும்  கண்ணீர் கெட்டித்தும் உறைந்துவிடுவதையும் இப்பொழுதுவரை தடுக்க முடியவில்லை.

சூரியனை கவர்ந்து சென்ற மிருகம்

-----------------------------------

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்ன இழுத்துச்சென்றுவிட்டது
கடைசியாக நான் அவழுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களின் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது
கடைசிவரை நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்கு சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றை காணவில்லை
என்ன ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்.
இனிமேல்
எனது சித்திரவதை காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்த முடியாது
எனவே தோழர்களே
நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவா அஞ்சிய ஒருகாலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கயைற்ற இந்த வார்த்தைகள்
நான் அவளுக்கு பரிசளிப்பது
இதுவே முதற்தடவை எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டர்கள்
மூளைய நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லலை.
_________________________________________

இவ்வளவு உக்கிரமாக  இந்தத்தருணங்களைப் பதிவு செய்த கவிதை தமிழிலேயே இல்லை எனலாம்.  குறிப்பாக ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில்  மொழியை , அதன் காட்சியமைப்பை , உணர்வுத்தளத்தை   இவ்வளவு நேர்த்தியாகக் கையாண்டதோர் கவிதையை நான் படித்ததேயில்லை . அதுதான் எஸ்போசின் தனித்துவம் . நெருங்கிச்செல்ல நெருங்கிச்செல்ல  ”மொழி”,  உறைந்த மெழுகைப்போல  நித்தியமான இரண்டு கண்ணீர்
துளியைப்போல வரலாற்றில் மாறிவிட்டதை இந்தக்கவிதையைப்படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் உணர்கிறேன்.

யுத்தம் அலைச்சலின் வெளி அதில் வாழ்ந்து கொண்டிருப்பதும்  பைத்தியத்தின் உச்சம் . நாளை நானிருப்பேனா ? , நாமிருப்போமா ? , யாருமிருப்போமா ?  என்ற நிச்சயமற்ற அந்த நாட்களின்  உள்ளுணர்வுகளை  எனக்கு ஓரளவு கடத்தியது எஸ்போசின் கவிதை வரிகள். விந்தையான படிமங்களும் இதயத்தை நோக்கி உரையாடும் மொழியும் கண்ணீரைத் தேக்கிவைத்த உடலின் தொடுகையும் எப்படியிருக்குமோ  அப்படி என்முன்  எஸ்போஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

எஸ்போசின் மொழி ஒரு பழஞ்சுரங்கத்தைப்போன்றது , அதற்குளிருந்து  மந்திரம் நிறைந்த வார்த்தைகளை எடுத்துவைத்து  ஓர் பிரமாண்டமான வாழ்க்கையை அவர் நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறார்.

பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல்

அழிவு காலத்தில் நீ புலம்பித் தீர்க்கிறாய்
என்றாலும்
கண்களைக் குருடாக்கிக் கொண்டு
நிலவையும் நட்சத்திரங்களையும்
தனது தீராத வலியால் அணைத்தபடி
அழிவுகாலம் தொடர்கிறது
உனக்கும் எனக்குமாக நாங்கள் விதைத்த
நெல்மணிகளை
உனக்கு மட்டுமே பூர்விகமான குடிசையை
நூறு வருடங்களின் பின்பும் எஞ்சியிருந்த மிகப் பழைய
தங்க வளையல்களை
தீராத எல்லைச் சண்டையில்
யாருக்குமற்றிருந்த நிலத்துண்டை;
எல்லாவற்றையும் நாங்கள் இழந்தோம்
நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும்
அழிவின் துயரம் வன்மத்தோடிருக்கிறது
யாருக்குத் தெரியும்
நீ வாழ்ந்து கொண்டிருந்த கடவுளரின் நம்பிக்கை
உன்னைச் சபித்துவிடுமென்று
நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா?
இப்படியொரு சாபக்கேட்டை
உனது குழந்தைகளுக்கு
நினைவுறுத்த வேண்டியிருக்குமென்று,
என்றாலும் அது நடந்தே விட்டது; நடந்தே விட்டது;
அவர்கள் வந்து விட்டார்கள்
நீயே சொல்
சாத்தானின் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்தலற்று வாழ்தல்
சாத்தியமா?

--------------------------

இது இந்த நிலத்தின் உள்ளூறும் இரத்தப்பெருக்கை  நினைவு ததும்பும் சொல்லடுக்குகளால்  மீளக்கிளறும் இதயத்தின் ஓலம் .  எளிமையாக அன்பு செத்துவிடப்போகிறது என்ற அச்சம் .

அதிகாரம்  எப்பொழுதும் எல்லாவற்றுக்கும் எதிரானதாகவே இருந்து வருகின்றது . நாம் வழங்கிய அதிகாரம்  எம்மை ஆண்டு விடுகின்றது . அதே போன்று எம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அதிகாரமும் எம்மை ஆண்டு விடுகிறது . ஒரு கவிஞரின் குரலென்பது எப்பொழுதும் அடக்கு முறைக்கு எதிரானது  ,எப்பொழுதும்  எந்தவொரு  அப்பாவிகளின் கொல்லப்படுதலையும் ஏற்றுக்கொள்ளாததது.  அதுதான் இலக்கியத்தின் நீதியுணர்ச்சி இரத்தத்தின் விளறை யாரும் ரசிக்க முடியாது .  கொண்டாட முடியாது .  இரத்தம் இரத்தம் தான் . யுத்தம் யுத்தம் தான் .

விடுதலைப்போராட்டம்  ஒரு இராணுவக்கட்டமைப்பாக மாறிய பின் அது தனது சுரத்தை இழந்து விட்டது . விடுதலைப்போராளிகளுக்கு
அதிகாரிகளின் குரல் வாய்த்தது . தலைவர்கள்கடவுள்களானார்கள்.கடவுள்களிடம் எப்பொழுதும் மண்டியிட்டே பிரார்த்திக்க முடியும் எதிர்த்தொரு கேள்வி எப்படியெழுப்புவாய் . உனக்காக நான் செத்துப்போவேன் என்றால் நான் என்ன செய்தாலும் நீ பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் . இது அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது . அதை எதிர்ப்பதில் சாமானியனுக்கு இருக்கும் தைரியம்  கவிஞருக்கும் இருக்க வேண்டும். போர் வெற்றிகளைப் புழுகி , கடவுளை வாழ்த்தி அவர்கள் பாட்டுப்பாட மாட்டார்கள்.  முருகனுக்கு அடுத்தவர் நீர்தான் , எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக  என்று  கால் நக்க மாட்டார்கள். அவர்கள் சாமனியர்கள் : அவர்கள் கவிஞர்கள். ”தப்பிப்பிழைத்தலற்று வாழ்தல் சாத்தியமா  இந்த சாத்தானின்
தோட்டத்தில்” என்ற எஸ்போசின் குரல் அதுதான்.

தமிழ்ச்சமூகமே பெரும்பாலும் சுயநலமும் தாழ்வுச்சிக்கலும் உள்ளதுதான் அதன் மத்திய தர வர்க்கம் , மேல் தட்டு வர்க்கம் அதனது அரசியல் அபிலாசைகளை அதிகார நிறுவுகையை மேற்கொள்வதற்கு சாதாரண மக்கள்தான் பலியாடுகள் . வெகு சாதாரணமாக பார்த்தாலே தெரியும் , யார் எப்பொழுதும் ஆண்டுகொண்டேயிருக்கிறார்கள் ? யார் கவிதை பாடி விட்டு பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளிலும் சொகுசாக
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .

 ஏன்  சிவரமணியும்  எஸ்போசும் செத்துப்போனார்கள்?

ஒன்று தன்னையழித்துக்கொள்ளும் அல்லது தனது சொற்களுக்கு பதில் வேட்டுகளை  வாங்கிக்கொள்ளும்.  எஸ்போஸ் இரண்டாவது வகை .  அவனது குழந்தையின் முன் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது கவிதைகளின் தீர்க்க தரிசனம் வாழ்க்கைக்குமிருந்தது. அதனால் தான் அவன் எழுப்பிய அந்த முடிவற்ற கேள்விதமிழ்ப்பரப்பில்இருந்து கொண்டேயிருக்கப்போகிறது.

“அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
அதிகாரத்திற்கெதிரான நமது இருதயங்களைச்
சிலுவையிலறைவதா”

-கிரிஷாந்-

இணைப்புகள் - http://esposh.blogspot.com/2008/06/blog-post_8231.html  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக