வியாழன், 22 டிசம்பர், 2016

கூழாங்கற்கள் மின்னுகின்றனகவிதைகளில் சொற்களை அமர்த்துதலென்பது ஒரு நிகழ்தல். குறைந்தது ஐந்தாயிரம் வருட மொழிப்பரம்பரியம் கொண்ட மொழியில் நாம் எழுதுவதென்பது மிகவும் சிக்கலானது, ஆனால் புத்துயிரளிக்கக் கூடியது. தமிழ்க் கவிதைகளின் சொற்சுருக்கமும் கருத்து விரிவும் ,மொழியடைந்த சிகரம். சங்ககாலக் கவிதைகளோ அல்லது அதற்குப் பிறகான கவிதைகளிலோ சொற்களைக் கையாளுதல் என்பது கூழாங்கற்களை மந்திரம் வாய்ந்த இடங்களில் பொருத்துதல் போன்றது.

இந்த நெடும்பரப்பில் பா.அகிலனின் கவிதைகளுக்கு அதற்கேயுரியதான சொல்லமைப்பும் காட்சிப் படிமங்களும் புதிய உலகங்களையும், பழைய உலகத்தின் நித்திய சித்திரங்களையும் தொடர்ந்து அளித்துக்கொண்டிருப்பவை.  

பா.அகிலன் 


அவருடைய "பதுங்குகுழி நாட்கள்" என்ற தொகுப்பை ரமணன் அண்ணா தான் தந்தார். அகிலனுடைய கவிதைகளை பற்றிச் சொல்லி அதனை வாசிக்கும் படி தூண்டியவரும் அவரே. அகிலனுடைய முதலாவது தொகுப்பு அது. பத்துவருடங்களாக எழுதியவை என்று சொன்னார்கள்.

யுத்தகாலத்து யாழ்ப்பாணத்தின் அல்லது இந்த நிலப்பரப்பின் வாழ்வின் கொடு நாட்களை நினைவுறுத்தும் ஆழமான விபரிப்புகளாலும் நுண்மையான சொல் அடுக்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் அகிலனின் கவிதைகள் , ஞாபகங்களின் புதைகிடங்கு போல் என்னை வசீகரிப்பவை. பல கவிதைகளையும் வரிகளையும்  பல தருணங்களில்  உச்சரித்து வியந்துகொண்டிருப்பேன்.

முதிரா என்னுடைய மனம் எப்பொழுதும் கவிதைகளைக் குடித்துக் கொண்டிருந்த காலம். நான் யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரியில் ஆறாம் வகுப்புக்குப் பின் படித்தேன் , அதற்கு முதல் சென்ட் .ஜோன் பொஸ்கோ. சிறிய வயதில் கிறிஸ்தவ பிரார்தனைகளைக் கேட்டும் கிறிஸ்தவ சூழலிலும் படித்ததால் பைபிளின் படிமங்களை என்னவென்றே தெரியாமல் ஞாபகம் வைத்துக் கொண்டேன்.

"நானே உண்மையும் வழியும் சத்தியமும் ஆனேன் " என்னுள் ஆழமாய் நிகழ்ந்த வாக்கியம்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி  சைவத்தை பின்பற்றும் ஒரு பள்ளி. காலையில் பிரார்த்தனை என்பது ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு இடத்தில் நிகழும். அநேகமாக ஐந்து தேவாரங்கள், ஒரு சிறிய பிரசங்கம் , ஏதாவது தகவலிருந்தால் ஒரு குறிப்பு. இவ்வளவு தான். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பழைய பிரார்த்தனை மண்டபத்தில் பிரார்த்தனைகள் நடக்கும். அப்பொழுது தியானமும் இருந்தது.

தேவாரங்கள் , திருமுறைகள் , கோளறு பதிகம் , சிவபுராணம் என்று சைவம் சார்ந்த பாடல்கள் இசைக்கப்பட்டாலும் என்னவென்றே தெரியாமல் குருட்டுத்தனமாக பாடிக்கொண்டிருந்தாலும் அதன் ஓசை , தமிழ் என்பன ஆழ்மனத்தினடியில் சேர்ந்துவிட்டதொன்று, சிவபுராணத்தின் கவித்துவமும் தேவாரங்களின் நெக்குருகலும் என்னை கவிதையின் மெல்லிய அடுக்குகளுக்குள் நுழைய வைத்தன.

" இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் ... " "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க ".. போன்ற தேவாரங்கள் இது வரை வரிவடிவமாகப் பார்த்ததேயில்லை ஆனால் எல்லா வரிகளும் மனதிலோடும். இன்னும் இந்தப் பாடலும் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.

"ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே"

-அருணகிரிநாதரின் திருப்புகழ்-

இதையெல்லாம் நெஞ்சுருகிப் பாடும் பக்தியுள்ள நண்பர்களிருந்தார்கள். எனக்கு சிறிய வயது முதல் (பத்துவயத்துக்குப் பின் ) கடவுள் நம்பிக்கை துளியும் கிடையாது. ஆனால் மொழியின் அழகினால் அதன் சொல் முறையினால் சொல்வைப்பு ஒழுகினால் இசையினால் இந்தவகையான பாடல்கள் எனக்குள் மொழிசார்ந்த புரிதலில் மாற்றங்களை ஏற்படுத்தின. மொழி கத்தி போல் அறுக்கவும் சிலவேளை நறுங்காற்றுப் போல் வீசவும் செய்யும் என்பதை அப்படித்தானுணர்ந்தேன்.

திருவாசகத்தின் இன்னொரு பாடல் மொழியின் துள்ளலும் கனிவும் கொண்டது ,

" முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்."

இப்படி மொழியின் வசீரகம் நிறைந்த பகுதியை பாடசாலைக்கு காலங்களில் பிரார்த்தனை நேரங்களில் பெற்றுக் கொண்டேன். பத்து , பதினோராம் வகுப்பில் குணசிங்கம் என்ற ஒரு ஆசிரியர் காலையில் கூடப்பிரார்த்தனை நிகழ்த்துவார். பஜனை போல் கைகளைத் தட்டி இசையுடன் சேர்ந்து அனைவரும் பாடும் அந்த நிமிடங்கள் நக்கலும் நளினங்களும் விட்டாலும் ஒருவகை கூட்டுணர்வை சேர்ந்து பாடுதலென்பதினூடாக உருவாக்கமுடிந்தது. அது மொழியின் மன அடுக்குகள் எப்படி உள்ளுறையும் மனிதர்களுக்கிடையிலான தொடுப்பினால் கூட்டு நனவிலி பற்றிய ஒரு பிரக்ஞயை நானே உணரக் கூடியதாகவிருந்தது.

மொழியின் இந்த கூட்டு நனவிலித்தன்மை எல்லோருக்குமானதாக இருக்குமா என்று தெரியவில்லை . ஆனால் சிறிய குழுவுக்கோ அல்லது பெரிய அளவிலென்றாலும் மொழி ரீதியிலான பண்பாட்டு ரீதியிலான தொடர்ச்சிக்குள்ளும் இயங்கக் கூடியதொன்றாகவே உணர்கிறேன்.

என்னால் இந்த உணர்வின் விஞானத் தன்மை தொடர்பாக வரட்டுத் தனமாக தர்க்கிக்க முடியும் , ஆனால் அது இருப்பதை உணரமுடிகிறது. அறிந்த ஒன்றிலிருந்து விலகமுடியாதல்லவா.

அகிலனின் கவிதைச் சம்பவங்கள் சொல்லுபவற்றையும் சொல்லாமல் விடுபவற்றையும் இணைத்துக் கோர்க்கும் நுட்பமான மன உணர்வைக் கோருபவை .

அவர் உருவாக்கும் காட்சிப் படிமங்கள் , ஒருகணம் உறைந்து நின்று, பின்  விடுபட்டு மறையும் காலம் போன்றவை,

..
பதுங்குகுழி நாட்கள் - 3

பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்
அனற்காற்று
கடலுக்கும், தரைக்குமாய் வீசிக்கொண்டிருந்தது,
ஒன்றோ இரண்டோ கடற்காக்கைகள்
நிர்மல வானிற் பறந்தன.
காற்று பனைமரங்களை உரசியவொலி
விவரிக்க முடியாத பீதியைக் கிளப்பிற்று
அன்றைக்குத்தான் ஊரிற் கடைசி நாள்

கரைக்கு வந்தோம்,
அலை மட்டும் திரும்பிப் போயிற்று.
சூரியன் கடலுள் வீழ்ந்தபோது
மண்டியிட்டழுதோம்

ஒரு கரீய ஊளை எழுந்து
இரவென ஆயிற்று.

தொலைவில்
மயான வெளியில் ஒற்றைப் பிணமென
எரிந்து கொண்டிருந்தது எங்களூர்,

பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்.

...

மண்டியிட்டு நிற்கும் இந்தக் கணங்களை சொற்களின் மிகக் கொஞ்ச அளவுடன் உருவாக்கியிருப்பது, வரலாற்றின் கொடும்பக்கங்களை நிரப்பும் எல்லையற்ற துரத்துதல்களதும் விட்டு நீங்குதலினதும் சாட்சியாகவே நான் பார்க்கிறேன்.

மரபிலிருந்து தொன்மங்களையும் படிமங்களையும் மீட்டெடுக்கும் இவரது கவிதை வரிகள் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திக்குமிடையில் ஒரு கையிறென நீண்டு செல்கிறது,

குறிப்பாகக் காதல் கவிதைகளில் சொற்  பாவனையில் உள்ள சங்கக் கவிதைகளின் சொல்லாட்சி,

ஆயர்பாடி

நெடிய
நீல இரவுகளின்
கழிமுகம் வரையிலும்
அழுதிருந்தாள் அவள்,
அசைவற்ற மலைகளிலிருந்து
பாய்ந்தோடுகிறது நித்திய நதி
அவளிற்கு
ஆறுதல் கூறத்தான் யாருமில்லை.

கார்த்திகைப் பிறைபோல
நீ வந்தநாளோ
அவள் நினைவுகளின் தொலைவில்.
மேகம் கறுத்த வானிடை
நட்சத்திரங்கள் விழிமலர
குழலெடுத்து ஊதும் காற்று

இமைப்பொழுதே கண்ணா,
உன் நினைவு நீளப் பொற்கயிற்றின் அந்தத்தில்
கைவிடப்பட்ட பாடலின் பொருளாய்
உணர்வூறுவாள்,
ஒரு தாமரை மொட்டுப்போல
மனம் கூம்பி

மழைபொழியும் புலரியொன்றில்
விழிநீள சாளரத்தண்டை நிற்கின்றாள்,
பொழிமழைப் பெருக்கின்
நூறு கபாடங்கள் தாழ்திறப்ப
அதோ
அங்கு வருவது யார்?

சித்திரை 1992


பெரும்பாலும் காதல் கவிதைகளில் சங்க வரிகளுக்குள் நுழையும் கவிதைகள், மக்களின்  துயரைப் பாடுகையில் பைபிளின் படிமங்களுக்கிடையில் அலைவது ஒருவகையில் நெஞ்சுக்கு நெருக்கமானதாகவே இருக்கிறது.

எப்பொழுதும் துயருறுபவர்களின் பக்கமிருந்த அந்த தச்சனின் மகனின் சொற்களே அவனுக்குப் பின் தோன்றிய துன்பத்திலுள்ளோருக்கு மலை போன்ற ஆறுதலாயும் நதிக் கரை  போன்று குளுமையாகவுமிருக்கிறது.

பைபிளின் தாக்கம் யுத்தத்தின் போது எப்படியிருந்ததென்பதைப் பற்றி தனியான ஒரு ஆய்வு செய்யப்பட வேண்டும், ஒரு கட்டுரை கலைமுகத்தில் படித்ததாக ஞாபகம். ஆனால் இன்னும் ஆழமாக செய்யப்பட வேண்டும். நிலாந்தன், கருணாகரன், எஸ்போஸ் , சித்தாந்தன் ஆகியோர் இதனை வலிமையான அளவில் தமது கவிதைகளில் கொண்டுவந்திருந்தனர்.

ஆறுமுகநாவலர் பற்றிய பல்வேறு விமர்சனங்களில் எனக்கு உடன்பாடிருக்கிறது. ஆனால் பைபிளுக்கு அவர் செய்த தமிழாக்கம் என்பது இன்று எவ்வளவு பெரிய தாக்கத்தினை ஒட்டுமொத்த கவிதைப்பரப்பு மற்றும் புனைவுப்பரப்புக்குச் செய்திருக்கிறதென்பது என்னளவில் மிக முக்கியமானதொன்று.

எளிய மக்களின் பிரார்த்தனையாக வழிந்து நிறையும் மெழுகுவர்த்தியின்  பிசுபிசுப்புடன்  உருவாக்கியிருக்கும் அவரின்  தமிழ் , தமிழின் உரைநடை மரபில் ஒரு சாதனை என்றே கருதுகிறேன்.

அகிலனின் கவிதைகளுக்கு இருக்கும் பிரார்த்தனைக் குணமும் , வாழ்வு அழிதல் பற்றிய பெருந்துக்கமும் எனது தலைமுறைக்கு ஒரு வராலற்றுக் குறிப்பே.

உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்

1
எனக்குத் தெரியாது.
ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ
அல்லது
வனத்தின் புறமொன்றிலோ
உன் கிராமம் இருந்திருக்கும்
பெரிய கூழாமரங்கள் நிற்கின்ற
செம்மண் தெருக்களை,
வஸந்தத்தில் வந்தமர்ந்து பாடும்
உன் கிராமத்துக் குருவிகளை
எனக்குத் தெரியாது.
மாரிகளில்
தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை
நீள இரவுகளில்
உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை
நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்.

2
காற்றும் துயரப்படுத்தும்
இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம்;
ஒரு சிறிய
அல்லது பெரிய
சுடுகாட்டு மேடு போலாயின
எமது கிராமங்கள்.
அலைபாடும் எங்கள் கடலெல்லாம்
மனிதக் குருதி படர்ந்து மூடியது
விண்தொடவென மரமெழுந்த வனமெல்லாம்
மனிதக் குரல்கள் சிதறி அலைய,
சதைகள் தொங்கும் நிலையாயிற்று...
முற்றுகையிடப்பட்ட இரவுகளில்
தனித்து விடப்பட்ட நாய்கள்
ஊளையிட
முந்தையர் ஆயிரம் காலடி பரவிய
தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது,
நானும் நீயும் இவையறிவோம்.
இறந்து போன பூக்களை,
கைவிடப்பட்டுப்போன பாடலடிகளை...
நினைவு கூரப்படாத கணங்களை
அறிவோம்.

3
ஆனால்,
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை.
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்களின் தொன்மைச் சுடர்கள் மோனத்திருப்பதை
நீயும் அறியாது விடின்
இன்றறிக,
'ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்'
ஓர் நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.

மாசி 1993


..............

தேர்ந்தெடுத்த சொற்களின் கைத்தொடுத்தலில் சொற்கள் மந்திரம் பெறுகின்றன. கூழாங்கற்கள் மின்னுகின்றன.

கவிதைகளை பற்றி அதிகம் சொல்வதை விட அவற்றை வாசிப்பதே முக்கியமானதென்று நினைக்கிறேன் , கீழே தொகுப்பின் இணைப்பை இணைக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

பதுங்குகுழி நாட்கள் -http://www.noolaham.net/project/01/22/22.txt -

கிரிஷாந்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக