வியாழன், 15 டிசம்பர், 2016

இலக்கியத்தின் மூலம் சொர்க்கத்துக்கு போவது எப்படி ?
எனது அவதானிப்பின் படி இலங்கையிலோ புலம்பெயர்ந்தோ  சொல்லிக் கொள்ளும்படியாக இலக்கிய விமர்சனமோ அல்லது இலக்கியம் சார்ந்த பிற கட்டுரைகளோ வெளிவருவது மிகவும் குறைவு. அந்நியன் படத்தில் ட்ரெயின் சீன் ஒன்று வரும் , அதில் உணவைப் பற்றி குறைகூறும் விக்கிரமின் குரல் தான் பெரும்பாலான இலக்கியக் கட்டுரைகளைப் படிக்கும் போது வரும் , "சாம்பார்  என்ற பேர்ல மஞ்சத் தண்ணி . ரசம் என்ற பேர்ல கோமியம் ... ஊர்கா தயிர்ல மிக்சாகி ... இதென்ன அப்பளமா? கர்சீவா ? " "விமர்சனம் என்ற பெயரில அறிமுகக் குறிப்பு , அனுபவம் என்ற பெயரில சுய புலம்பல் .... இதென்ன நாவலா ? ஹொலிவூட் படமா ? ....." இப்படித் தான் மைண்ட் வொய்ஸ் ஓடும்.

அதற்காக இவற்றுக்கெல்லாம் வரையறை போட்டு நாவலென்றால் இப்படித் தானிருக்க வேண்டும் . கவிதையென்றால் இது தான் , விமர்சனம் எழுதுவது இப்படித் தான் என்று சொல்ல வரவில்லை . ஆனால் "இரக்கமில்லையா உங்களுக்கு , இலக்கியம் எழுதுகிறீர்களா இல்லை எங்களை கொல்வதற்காகவே எழுதுகிறீர்களா ?", (என்ன செய்தான் என் கட்சிக் காரன் .. என்ற வடிவேலின் பாணியில் வாசித்துப் பாருங்கள் ).

இந்தப் பழி பாவமெல்லாம் எனது கையிலும் இருக்கின்ற படியால் , இனிக் கொஞ்சம் இலக்கியம்  பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன் , முதலாவதாக கவிதையிலிருந்து தொடங்குவது எனக்கு வசதியாயிருக்கும் . நான் அப்படித் தான் இலக்கியத்திற்குள் வந்தேன் , சிறு வயதில் பாரதியார் கவிதைகள் அம்மாவின் கந்த சஷ்டிக் கவசங்களின் உணர்வு பூர்வமான பாடுகைகள் என்பன எனது கவிதையை உணர்ந்து கொள்ளும் நிலையை மாற்றின, பின்னர் வாசிக்க ஆரம்பித்து ஒரு இரண்டு வருடங்கள் தமிழில் வெளிவந்து எனது கைகளுக்கு அம்பிட்ட எல்லாக் கவிதைகளையும் படித்தேன். இப்பொழுது வரை கவிதையின் பெரும் வாசகன் .

இலக்கியத்தை இப்படித் தான் படிக்க வேண்டும் இவர் இவர்களை படி என்று சொல்வதெல்லாம் கருத்துத் திணிப்புத் தான் , ஆனால் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சீரியஸான வாசகர் இதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார். அவருக்கு எந்தப் புத்தகம் எங்கிருக்குமென்று தெரியும் அதன் முதல் வரியிலேயே  அதனை படிக்கலாமா இல்லையா என்று தெரிந்து விடுவார். ஆனால் பிரச்சினை நம் ஆரம்ப வாசகர்களுக்கு அவர்களுக்கு எளிமையாக, சில பெயர்களையாவது நாம் பரீட்சயப்படுத்த வேண்டியிருக்கிறது . ஏனென்றால் புதிதாக எழுத வருபவர்களுக்கு கொஞ்சம் கூட தாம் என்ன எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. எழுதுவோம் முகநூலில் போடுவோம் . அதிலும் பெண் ஒருவர் எழுத ஆரம்பித்து விட்டால் ஐந்தே நாட்களில் கவிஞர் பத்தே நாட்களில் கவிதைப் புத்தகம் வெளிவந்துவிடும் . இந்த மாதிரி "காலம் போற வேகத்தில நீங்க எங்கள தேடி வர வேணாம் சார் , நாங்க உங்களைத் தேடி வாரோம் " என்று பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிட்டு வாசகர்களை கொலையாய் கொன்று கொண்டிருக்கும் போது வாசகர்களுக்கு அதே நேரத்தில் புதிதாய் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் சில அடிப்படையான விடயங்களை நாம் சொல்ல வேண்டியிருக்கிறது .

முதலாவது இலக்கிய என்பது மனதில் வருவதை எழுத்திக் கொண்டு திரிவதல்ல , அதற்கு முதல் அந்த வடிவம் தொடர்பான வாசிப்பு , பொதுவான இலக்கிய போக்குகள் பற்றிய புரிதல் , எதை எழுதுகிறோமோ அதற்கான உழைப்பு இவையெல்லாம் தேவை, இந்த உழைப்பு என்கிற விடயம் எனது தலைமுறையில் யாருக்கும் கிடையாது என்பதை நானறிந்த வகையில் முன் வைக்கிறேன். எழுதினால் சரி , புத்தகம் போட்டால் எழுத்தாளர் என்பதெல்லாம் தான் அவர்களின் ஆகப் பெரிய கனவாயிருக்கிறது. இது போன்ற சில்லறைக் கனவுகளிலிருந்து எழுத்தளார்கள் இலக்கிய வாசகர்கள் மீண்டு வர வேண்டும். இலங்கைச் சூழலைப் பொறுத்தவரை வெகு குறைவானவர்களே இலக்கியத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள் . இவர்களது கருத்துக்களில் எனக்கு மாற்று நிலைப்படுகள்  இருந்தாலும் , ஓரளவு இலக்கியம் பற்றிய புரிதலுடன் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ரியாஸ் குரானாவும் அருண்மொழி வர்மனுமே , அதில் வர்மனை விட ரியாஸ் அதிகமாகவும் ஆழமாகவும் உரையாடி வருகிறார். இவர்களை தொடர்ந்து படிக்க வேண்டியதும் , குறைந்த பட்சம் உரையாட வேண்டியதும் முக்கியமானது.

சரி , மேலே சொன்ன விடாயங்கள் பற்றி விரிவாக எழுதுவேன் , இப்பொழுது கவிதை பற்றிய சில ஆரம்ப விடயங்களை பார்ப்போம் . எனது நண்பர்களில் பலர், புனைவுகளை எழுதிக் கொண்டிருப்பவர்களும் கூட "கவிதை விளங்குதில்லை " என்ற கோஷத்தை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்கள் , இப்படியான குரல்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தான் தரும் , இலக்கியம் படிப்பதென்று வந்து விட்டு , நாவல் விளங்குகிறது சிறுகதை விளங்குகிறது கவிதை விளங்கவில்லை என்பதெல்லாம் சும்மா சப்பைக் கட்டு . யாருக்கும் கவிதை படிக்கும் நோக்கமே இல்லை , அல்லது அதனைப் புரிந்து கொள்ள விருப்பமில்லை . அவர்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்று சொல்வதெல்லாம் ஓகே .ஆனால் கவிதையை விளங்கவில்லை  என்பது அபத்தமான குற்றச் சாட்டு.

கொஞ்சக் காலம் கவிதைகளை வாசித்தும் கவிதை பற்றிய உரையாடல்களை பின் தொடர்ந்தும் ஒரு இலக்கிய வாசகர் அதனைப் புரிந்து கொள்ள , ரசிக்க , சிந்திக்க முடியும் . இலங்கையின் தமிழ்ச் சூழலை பொறுத்த வரையில் கவிதைகளில் ஒரு நீண்ட நெடும் பரப்பு உள்ளது , அதனை கால அடிப்படையில் ,அல்லது பொதுப் போக்குகளின் அடிப்படையில் புரிந்து கொண்டோ அல்லது தொடர்ந்து எழுதியதோ குறைவு , யாராவது எப்போதாவது ஒருவரைப் பற்றியோ அல்லது அவரது தொகுப்பைப் பற்றியோ எழுதியிருப்பார்கள் , ஒருவருடைய கவிதையுலகு பற்றிய பார்வைகள் மிகக் குறைவு , அல்லது அதன் பெயரில் வெளிவந்தவை சாம்பார் என்ற பெயரில மஞ்சத் தண்ணி  தான் .

ஆகவே , இலக்கியம் படிக்க நீங்கள் விரும்புவதால் தான் இவ்வளவு பந்திகளையும் கடந்து இதை வாசித்துக் கொண்டிருப்பீர்கள், ஆகவே நானே கற்பனையிலிருந்து கேள்விகளை எடுத்துக் கொண்டு நகர்வதை விட , நீங்கள் உங்கள் புரிதல் , அல்லது கேள்விகளை எனக்கு முகநூலிலோ அல்லது வலைத் தளத்திலோ பதிவிடுங்கள் , அதனையொட்டி விவாதத்தை நகர்த்தலாம் .

எந்தக் கேள்வியும் வரவில்லையென்றால் , வாயையும் கையையும் சும்மா வைத்துக் கொண்டு வேறு ஏதாவது பிழைப்புக்கு போக வேண்டியது தான் ,

கிரிஷாந்த் ,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக