வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு?




தொடர்ந்து ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களால் இந்தக் கேள்வி முன்வைக்கப் பட்டு வந்துகொண்டிருக்கிறது. மூன்று விதத்தில் ஈழத்திலிருக்கும் கருத்தாளர்கள் அதனை எதிர்ப்பதாக நான் மட்டுக்கட்டுகிறேன்.

1 - இது ஒரு சாதிய விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.
2 - இது ஒரு ஆணாதிக்க விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.
3 - ஈழம் தனக்கான தனிப் பண்பாட்டை உருவாக்க வேண்டும், இங்கேயே 1008  பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாம் இப்பொழுது இதற்காக கவலைப் பட தேவையில்லை.

நல்லது.

1 -நாம் சொல்வது போல் இது சாதி விளையாட்டு இதனைப் பற்றி அறியாமல் நாங்கள் இங்கே கொந்தளிக்கிறோம் என்றால் , குறித்த சாதியைச் சேர்ந்து இத்தனை லட்ஷம் பேர் இருப்பார்கள் என்பது ஆச்சரியமான தகவலே, எங்களை விட அங்கிருப்பவர்களுக்கு தெரியுமே இது. ஏன் இத்தனை பேர் திரளுகின்றனர். பொது அடையாளங்களின் கீழ் இணையும் மக்கள் தொகுதியை நாம் சாதிய வெறியர்களாக சிந்திப்பது பிழையான விடயமாகவே நான் கருதுகிறேன்.

2 - ஆணாதிக்கம் என்றால், அது உரையாடப் படாமல் இல்லை, அது நிகழ்ந்து கொண்டுதானிருந்தது. ஆனால் இப்படியான  வாதங்களை வைத்துத் தான் தொடர்ந்து பன்னட்டுக் கம்பனிகள் மக்களை ஒன்று திரள விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் கருணையில் காசு தான் தெரியும். இதனைக் கூடவா நாம் தெரியாமலிருக்கிறோம். இந்தப் பக்கத்தை நாம் எப்படி தாண்டப் போகிறோம்.

3 - ஈழத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை விட்டுவிட்டு ஏன் இதற்கு குரல் கொடுக்கிறார்கள். முதலில் ஒரு விடயம், ஈழம் தொடர்ந்து வெகுஜன எழுச்சிகளுக்கு பழக்கப்படாத ஒரு மக்கள் திரளாகவே நான் பார்க்கிறேன். மேலும் இவர்களின் தன்னெழுச்சியென்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தை தருவது, மிக வித்தியாசமான நிகழ்வுகளுக்கே அவர்கள் தொடர்ந்தும் துலங்கலைக் காட்டி வருகிறார்கள்.

இப்பொழுது நடந்தது ஒரு கவனயீர்ப்பு மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் நடந்ததைத் தொடர்ந்து வேறு வேறு இடங்களில் யாரென்றே தெரியாதவர்கள் குரல் கொடுக்கவும் வீதிக்கு வரவும் கூடியதாக இருந்திருக்கிறது. நான் சமூகத் தளத்தில் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு ஆறு வருடங்கள் இருக்கும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பத்துப் பேரைத் திரட்டுவதென்பது மிகவும் கடினமான காரியம். அதே நேரம் ஒருவர் குறித்த ஒரு பிரச்சினைக்காக அவர் போராடுகிறார்  அல்லது ஆதரிக்கிறார் என்பதற்கு பல காரணிகள் இருக்கலாம். எல்லோரும் ஒரே நோக்கில் போராடுவதுமில்லை ஆதரிப்பதுமில்லை , ஒரே நோக்கில் எதிர்ப்பதும் மறுப்பதுமில்லை. எதிர்க்கும் போதும் ஆதரிக்கும் போதும் ஏற்படும் ஆபத்துக்களை சீர்தூக்கிப் பார்த்தே எந்த நிலைப்பாட்டையும் நாம் எடுக்க முடியும்.

வெகுஜன எழுச்சி அல்லது இளைஞர் எழுச்சி என்பது கணிதமல்ல.  அது ஒரு தொடக்கம் அல்லது குறிகாட்டி. என்னைப் பொறுத்தவரை கடந்த ஆறு வருடங்களில் நடந்த பெரும்பாலான வெகுஜன எழுச்சிகளிலிருந்து சிறு குழு உரையாடல்கள் வரை சென்றிருக்கிறேன். பங்கு பற்றியிருக்கிறேன். ஒன்றுமே ஒன்றுபோலில்லை. பெரும்பாலான சிறு கூட்டங்கள், ஒரு வகை பலவீனத்தால் மக்களை, இளைஞர்களை வசை பாடிக் கொண்டேயிருக்கும். சில குழுக்கள் அதனை அறிவார்ந்த தளத்தில் நகர்த்தும். இரண்டிலும் நான் பங்குபற்றியிருக்கிறேன். அந்த அடிப்படையில் வெகு ஜன எழுச்சியை அல்லது இளைஞர் தொகுதியின் போராட்டங்களை எனது பாடசாலைக்கு காலங்களிலிருந்தே அவதானித்து வருகிறேன்.



அது முற்றிலும் விசித்திரமானது. நாம் மனதில் நினைப்பதைத் தான் அவர்கள் பேச வேண்டும் கத்த வேண்டும் என்பதெல்லாம் நடக்காது. இடை நடுவே அதிகாரத்தை எதிர்த்து அவர்கள் கெட்ட வார்த்தையை எறிவார்கள். அதனை பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு போராட்டமா என்றெல்லாம் கேட்க முடியாது. குறைந்தது பத்துபேர் செய்த போராட் டத்திலிருந்து ஐந்தாயிரம் பேர் உள்ள போராட்டங்கள் வரை கலந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் ஏராளம் கற்றுக் கொள்ள இருக்கிறது. நான் என்னை ஒரு கவிஞனாகவே மதிக்கிறேன். நான் எனது காலத்தின் மக்கள் திரளின் போராட்டங்கள் உணர்வு வெளிப்பாடுகளின் போதெல்லாம்   முன் வரிசையில் நிற்கவே விரும்புகின்றேன். அது சாமானியர்கள் நிற்கும் வரிசை, அவர்களுக்கிருக்கும் கோபத்தையும் உணர்வையும் நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்காகவே எல்லா நேரங்களிலும் மக்களோடு நிற்கப் பிரியப் படுகிறேன். நான் அதிகமும் எதிர்த்த எழுகதமிழுக்குக் கூட நான் சென்று அங்கிருப்பவர்களுடன் உரையாடியும் அவதானித்தும் வந்தேன். இது ஒரு முக்கியமான இயக்கம் என்று நினைக்கிறேன்.

எல்லாப் போராட்டங்களிலுமே விமர்சனங்கள் உண்டு. அது எல்லோருக்கும் உண்டு, கலந்து கொண்டவருக்கு உண்டு, பார்வையாளருக்கும் உண்டு. அதனை நாம் உரையாட வேண்டும்.

ஆனால் இப்போது என்னைப்  பொறுத்தவரை தமிழக மக்களின் இந்தப் போராட்டத்திற்க்காக என் வாழ்நாளின் இரண்டு மணித்தியாலங்களை சிலவழிப்பது அவ்வளவு பெரிய பாவமாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லா அமைப்பிற்கும் ஒரு கொள்ளளவு இருக்கிறது, அதற்கு அமைவாகவே எதனையும் செய்ய முடியும் அது போக, ஏதோ ஒரு அதிகாரத்திற்கெதிராக  மக்கள் சுருண்டிருக்கும் தமது கால்களை நகர்த்தி ஓரடியை முன்னுக்கு வைத்தும் ஒரு கையை வானுக்கு எறிந்தும் நிலமதிரக் குரலெழுப்பியும் நிற்பார்களெனில்  அவர்களோடு நானும் நிற்பேன். அது ஒரு நம்பிக்கை. அது ஒரு தொடக்கம்.

கிரிஷாந்த்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக