புதன், 19 ஜூலை, 2017

கண்ணீரில் விளக்கெரியும் தேசம்கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம்.
ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் உயிர்களைக் கொடுத்து உருவாக்கிய பெருங்கனவு சிதைந்து இரத்தச் சகதியில் கடற்கரை உப்பில் முடிவுற்றிருக்கிறது. போராட்டத்தில் ஏராளம் விமர்சனங்கள் இருப்பினும், மனிதர்களின் பேரிழப்பென்பது பெருந்துயர். அதனை வெளிப்படுத்த உலகெங்கும் ஏராளம் வடிவங்களிருக்கின்றன.

மனிதத் துயரங்களை அவர்களின் இதயத்துள் ஆழ ஊடுவியிருக்கும் வேரிலிருந்து கொண்டுவருவதென்பது கலையில் முக்கியமானதொரு பண்பு. "முல்லைத்தீவு சகா" என்ற, சோமீதரனின் ஆவணப்படம் அந்த வகையில் முக்கியமானது. ஈழப்போராட்டத்தின் மைய இழையிலிருந்து உருவாகி வரும் ஒரு கதை தான் அடக்குமுறையின் வடிவங்களும் நாடு துறத்தலின் வலியும். 

ஆவணப்படம், முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் கடைசியாக இடம்பெற்ற கூத்திலிருந்து ஆரம்பிக்கிறது. பாட்டின் வரிகள் இழப்பையும் மரணத்தையும் கூவுகிறது. உலகெங்கும் நடந்த யுத்தப்  பேரழிவுகளையும், விடுதலைக்கும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் நடந்த யுத்தங்களில் இடம்பெற்ற 'இனப்படுகொலையை' காட்டியபடி, உலகம் முழுவதும் ஆயுதங்களால் நிகழ்த்தப்படும் அழிவுகளை ஒன்று மாறி ஒன்றாக திரை மாற்றுகிறது. ஈழத்தில் நடந்த போரின், யுத்த சாட்சியங்களின் குரலுடனும் யுத்தக் குற்றவாளிகளின் குரலுடனும் மரணங்களினதும் யுத்த விமானங்களின் இரைச்சலுடன் விரியும் யுத்தத்தின் அசலான ஒளிப்பதிவுகளுடனும் தொகுக்கப்பட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ச, கோத்தபாய, சரத் பொன்சேகா என்று யுத்தத்தை முன்னின்று நடத்திய கொலைகாரர்களின் குரலை அப்படியே காட்டியபடி இடையிடையில் யுத்தத்தின் காட்சிகளையும் ஓடவிட்டிருக்கிறார். @இந்த நாட்டில் எந்த விசாரணையும் தேவையில்லை. நான் எவையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற கோத்தபாயவின் குரலை அதில் பதிவு செய்திருக்கிறார், இன்று வரைக்கும் ஆட்சியில் யார் மாறினாலும் கோத்தபாயவின் அதே குரலைத் தான் கேட்க முடிகிறது. யுத்த சாட்சியான ஒரு வயதானவரின் சாட்சி, சொல்லப்பட்ட பின் வைத்தியசாலையில் வேலை செய்த பெண்ணின் சாட்சியம் முன்வைக்கப்படுகிறது. 'வன்னி ஒரு சுதந்திர பூமியா, சந்தோசமான ஒரு இடமா, நான் நினைச்சுப்பார்க்க முடியாத அளவுக்கு சந்தோசமான உலகமா இருந்தது. அதே வன்னியை அதே இடத்தை சுடுகாடா பார்த்திட்டு வரேக்க, எங்கு பார்த்தாலும் பிணங்களும், உடல்கள் சிதறிய படியும் .. எரிஞ்சு கொண்டிருந்த ஒரு சுடுகாடு மாதிரித் தானிருந்தது' என்ற அவர் தொடர்ந்தும் கதைகளைச் சொல்கிறார், நீதி கேட்கப்படுகிறது. யாரிடமும் பதிலில்லை.  

முல்லைத்தீவு எப்படியானதொரு நிலமாகவிருந்தது, பின்னர் அது எப்படியொன்றானதாக மாறியது. எது மாற்றியது என்பது தான் ஆவணப்படம் பேசும் அரசியல்.இன்றுள்ள வடக்கு கிழக்கு, யுத்தத்தின் நினைவுகளடங்கிய ஒரு வாழும் அருங்காட்சியகம். இன்னும் முடிவுறாத, மறந்து முடிக்காத பேரிழப்பைச் சந்தித்த ஒரு இனம் தன்னை ஆவணப்படுத்துவதென்பது, அதனூடாக சர்வேதசத்தில் தனது குரலைப் பதிவுசெய்வதென்பது  அவசியமானது. இன்று வரைக்கும் ஈழத்தமிழர்கள் எடுத்த ஆவணப்படங்கள் என்பவை சொச்சமே. அது தனியே படங்களில் மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் ஈழத்தமிழர்கள் தங்களது ஆவணங்களை இழந்தவர்களாகவே அலைகிறார்கள். காலடி நிலத்தில் அவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது, கொல்லப்பட்ட மக்களுக்கு என்ன நீதியிருக்கிறது. அதற்காக, எங்களிடமுள்ள ஆவணங்களை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம். நாம் நமது இழப்புக்களை எப்படி எதிர்காலத்திற்கான மூலமாக பயன்படுத்தப்போகிறோம். அவர்களின் தியாகங்களுக்கு எங்களின் பதிலென்ன?

கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டன, நட்ட மரங்கள் சரித்து வீழ்த்தப்பட்டன, கல்லறைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன, நினைவிடங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன, புதிய நினைவிடங்களையும் வெற்றிச்சின்னங்களையும்  அரசு எழுப்பிக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் வாழ்ந்த மன்னர்களையும், நம் ஆளுமைகளையும் கேவலமான முறையில் சிலை வைத்துக்கொண்டிருக்கும் நாம் இந்த அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையில் அழிந்து தான் போகப்போகிறோம். முல்லைத்தீவில் உள்ள வித்தியானந்தா கல்லூரிக்கு முன்னர் ஒரு பாரதியார் சிலை இன்னமும் திறக்கப்படாமலிருக்கிறது. திறப்பார்கள் என்று தான் படுகிறது.அந்த சிலை  பாரதியார் இருப்பதைப்போன்று  வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பாரதியாரை 'கொமட்டில்' இருப்பதைப்போன்ற போஸில் சிலை வைப்பது ஈழத்தமிழர்களாய்த் தானிருக்கும். மக்களுக்காக எழுந்தது நின்று போதும் மிஸ்ட்டர் பாரதியார் கொஞ்சம் இருங்கள் என்பது போலிருக்கிறது அந்தச் சிலை. 

இன்றைய அடையாளங்கள் தான் நாளைய சொத்துக்கள். நீண்ட பண்பாட்டுத்தொடர்ச்சி கொண்ட இனத்தில் இன்னமும் ஆவணங்களையும் புதிய அடையாளங்களையும் நினைவு படுத்துவதென்பது பற்றிய கரிசனை கொஞ்சமுமில்லை. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பார்த்தால் இதைச் செய்தவர்களின் கன்னத்திலறையவேண்டும் போலுள்ளது. எவ்வளவு மோசமான வடிவமைப்பு அது. இது தான் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தும் அஞ்சலியா? நினைவிடமா?

இந்தப் பின்னணியில் நினைவு கூர்தலின் அரசியல் பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஞாபகம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். எங்களின் மேலான அழிப்புகள், அடக்குமுறைகள் போன்றவற்றின் எல்லாவகையான ஞாபகங்களையும் நாம் திரட்டி வைத்திருக்க வேண்டும். அதனூடாகத் தான் நாம் நம்மை ஒடுக்குபவர்களின் தரப்பிலிருக்கும் மக்களுடனும் நமது மறதியுடனும் உரையாட முடியும். 

சோமீதரனின் இன்னொரு முக்கியமான ஆவணப்படமான 'எரியும் நினைவுகள்'  யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பானது. அதனை கொழும்பில் திரையிட்ட போது, சிங்களப் பார்வையாளர்கள் மிகையாக உணர்ச்சிவசப்பட்டார்களாம். இப்படியெல்லாமா செய்தார்கள் இராணுவம் என்று, இது ஒரு ஆழமான உண்மை. நாம் நமது துயரங்களை நாமே ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பதல்ல ஆவணத்தின் வேலை, அதனூடாக உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளையும் மனிதர்களையும்  நம் எதிர்த்தரப்பையும் கேள்விக்குட்படுத்துவது.அந்தக் கேள்வியைத் தான் முல்லைத்தீவு சகா எழுப்புகிறது. இத்தனை இழப்புக்களையும் கொடூரங்களையும் நடத்திய அரசு நாம் மனிதாபிமான யுத்தத்தை செய்தோம் என்று சொல்கிறது. நமது அரசியல்வாதிகளோ தங்கள் பிரச்சினைகள் பார்க்கவே நேரமில்லாமல் திரிகிறார்கள். இந்த இடத்தில் சிங்கள அரசின் வெற்றிச் சின்னங்கள் மிகுந்த கலைநேர்த்தியுடன் வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போதெல்லாம், தோற்கடிக்கப்பட்ட தரப்பு இதனை விடவும் அதிகமான இழப்புக்களை சந்தித்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலைகளும் குரல்களும் ஓங்கி ஒலிக்க வேண்டும். 

ஆனால், இந்த வகையான ஆவணப்படங்களை இலங்கையில் சுதந்திரமாக திரையிட முடியுமா? யாழ்ப்பாணத்தில், 'எரியும் நினைவுகள்' என்ற நூலக எரிப்பு பற்றிய ஆவணப்படமே இன்னமும் நூலகத்தில் திரையிடப்பட முடியாதுள்ளது. கேட்டால் நூலகத்திற்கு பிரச்சினை வரும் என்று நிர்வாகத்திலிருப்பவர்கள் பயப்படுகிறார்கள். வாசலில் விளக்கு வைத்துக்கொளுத்தவும் அஞ்சலிக்கூட்டம் நடத்தவுமுள்ள அனுமதி, ஆவணப்படத்தை திரையிட இல்லை. ஏனென்றால் எந்தவொரு அஞ்சலிக்கூட்டத்தையும் விட ஒரு ஆவணத்திற்கு அதிக சக்தியுள்ளது. நூலக எரிப்பு பற்றிய படம் வேறு இடங்களில் திரையிடப்பட்டிருந்தாலும், அந்த அழிப்பு நடந்த நூலகத்தில் அது இன்னமும் முடியவில்லை. 

அதற்கே அந்த நிலமையென்றால்    முல்லைத்தீவு சகா திரையிடல் நிகழ்ந்தால் அவ்வளவு தான். இவ்வாறிருக்க 'முல்லைத்தீவு சகாவிற்கு' கேரள மாநிலத்தில்,சிறந்த சர்வதேசஆவணப்படத்திற்கான விருது 2010 இல் பெறப்பட்டது . அதன் போது ஆவணப்பட இயக்குனர் சோமீதரனை விடுதலைப்புலிகளை மீள இணைக்கிறார் என்ற பேரில் புலனாய்வு விசாரணை வந்தது.       

இந்த ஆவணப்படத்தினை செய்திருப்பதினூடாக யுத்தத்தின் இரக்கமின்மையை, அரசின் இனப்படுகொலையை சர்வதேசத்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார் சோமீதரன். அவருடைய குரல் இந்த சமூகத்தின் அழிக்கப்பட்ட மக்களினதும் நினைவுகளினதும் ஆவணமாயிருக்கும். கண்ணகியம்மன் நீதி கேட்ட குரல் அது. கடல் நீரில் விளக்கெரியும் அம்மனுடன் சேர்ந்து கண்ணீரில் எரிந்த தேசத்தின் குரல் அது.

கிரிஷாந்

Thanks - Quick news tamil 

http://www.quicknewstamil.com/2017/07/03/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக