புதன், 19 ஜூலை, 2017

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் - தேசத்தின் கோயில்

கண் விரித்தால் எங்கும் பச்சையாய்க் கிடக்கும் இயற்கையின் மண். முதுமரங்களும் ஆழமான காடுகளுமாக நிறைந்து கிடக்கும் அவ்வெளியை மனிதர்கள் தங்கள் கைகளால் உழுது விவசாய பூமியாக்கினர். நீண்ட நெடும் வயல்கள் உருவாகின. கால்நடைகள் செறிந்து மனித வாசம் வீசத் தொடங்கியது. குளங்கள் வெட்டியெடுக்கப்பட்டன. விவசாயம் தழைத்தோங்கியது. அரசு எழுச்சி பெற்றது.  இன்றுள்ள வவுனியாவிற்கும் முல்லைத்தீவிற்குமான எல்லைக்கோட்டிலிருக்கும் ஒட்டுசுட்டான் இப்படித்தான் வளர்ந்தது .



இற்றைக்கு ஆயிரத்து ஐநூறு வருட பழமை வாய்ந்த ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தொல்வரலாற்றை அறிவதென்பது நமது நிலத்தின் அசலான வரலாற்றை நம் அடுத்த சந்ததிக்குக் கடத்துவதாகும். நமது மனங்கள் மதத்துடன் ஆழமாக வேரூன்றியது. அதன் நம்பிக்கைகள், சடங்குகளாகவும் குறியீடுகளாகவும் நமது வாழ்க்கையை தொடர்ந்து வருபவை. அதன் மூலமாகவே நாம், நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்கிறோம், வெளிப்படுத்துகிறோம். சைவ சமயத்தைப் பொறுத்த வரையில் அது ஆறு மதங்களின் தொகுப்பான இந்து மதத்தின் ஒரு கிளை. சைவத்தின் பிரதான கடவுளாக சிவனை முன்வைத்தே நமது தொல்கதை ஆரம்பிக்கின்றது. சிவனது குறியீடு லிங்கம். காலம் காலமாக நமது முன்னோர்களின் மனத்திற்குள்ளால் உருவாகி வந்த குறியீடு தான் அது. லிங்க அமைப்பென்பது ஆணுடையதும் பெண்ணுடையதுமான பிறப்புறுப்புக்களை இணைத்து உருவாகும் ஒரு முழுமை. அது  இந்த உலகின் மிக மூத்த நாகரீகங்களின் தொடர்ச்சிகளில் உருவாகி வந்த மனித உயிரின தோற்றத்தின் மூல வித்துக்களான பிறப்புறுப்புக்களை சேர்ப்பதன் மூலம் நிகழும் ஒரு திண்மம் அது. 

சுருக்க வரலாறு   

இலங்கையில் உள்ள மூன்று சுயம்பு லிங்க சிவாலயங்களில் ஒட்டுசுட்டான்  தான்தோன்றீஸ்வரமும் ஒன்று. தோன்றிய காலம் முதல் அந்நியரால் நிகழ்ந்த ஆக்கிரமிப்புகளினால் அழிவடையாமல் எஞ்சியிருக்கும் முதுபெருங் கோயில். சுயம்பு லிங்கத்திற்கு தொடக்கமில்லை என்ற நம்பிக்கையுள்ளது. அதற்கு உற்பாதங்கள் ஏற்படினும் திரும்பவும் பிரதிஷ்ட்டை செய்யப்படக் கூடியது. சிதைவுகளை வெள்ளி மற்றும் பொன்னால் நிரப்பலாம். பூசைகள் நிகழ்த்தப்படாமல் விட்டாலும் சிவன் சாந்நித்தியமாக வாசம் செய்வார் என்று சொல்லப்படுகிறது. 

தற்போது புழங்கி வரும் கர்ண பரம்பரைக் கதைகளின் படி, இவ்வாலயத்தின் திருப்பணி வேலைகளை குளக் கோட்டன் செய்வித்தான் என்றொரு நம்பிக்கையுண்டு. மேலும், மூன்று சித்தர்கள் இவ்வழியால் சென்ற வேளை, ஒட்டுசுட்டானில் பிரிந்து சென்றனராம், முதலாவது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தென் மேற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள வாவெட்டி மலையில் தியானத்திலிருந்து சமாதியடைந்தார், இரண்டாவது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தெற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள காதலியார் சம்மளங்குளத்தில் சமாதியடைந்தார், மூன்றாவது சித்தர் ஒட்டுசுட்டானில் உள்ள கொன்றை மரம் ஒன்றின் கீழ் சமாதியடைந்தார். இவர் பூசித்த சிவலிங்கம் இவருடனேயே புதைந்திருக்க வேண்டும், இவ்விடத்திலேயே பிற்காலத்தில் தற்போதுள்ள சிவலிங்கம் தோன்றியதாகவும் கதையுண்டு. 



பிறிதொரு கதையின் படி, யாழ்ப்பாணம் இடைக் காட்டைச் சேர்ந்த தீரபுத்திரர் என்ற சைவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வன்னிக்கு வந்து குடியேறினார். அவர்களும் அவர்களின் சந்ததியினரும் வாழ்ந்த இடமே தற்போதும் ஒட்டுசுட்டானில் இடைக்காடு என்று அழைக்கப்படுகிறது. தீரபுத்திரர் காடு வெட்டி அந்நிலத்தில் குரக்கன் பயிர் இட்டிருந்தார், குரக்கன் கதிர்களை வெட்டிய பின் அதன் ஓட்டுகளுக்கு தீயிட்டுக் கொளுத்தினார். அப்படிச் செய்த போது ஒரு கொன்றை மரத்தடியில் ஓட்டுக்கள் எரியாமல் இருப்பதைக் கண்டார். எப்படியும் ஓட்டுக்களை வெட்டிவிட வேண்டுமென்று மண்வெட்டியால் வெட்டினார். வெட்டிய இடத்தில் இரத்தம் கசிவதைக் கண்டார். இந்நிகழ்ச்சியின்  மர்மத்தை அறியாத தீரபுத்திரர் அப்பகுதியை ஆண்ட வன்னியனிடம் இதைத் தெரிவித்தார். வன்னி மன்னன் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்ட பின்னர் அவ்விடத்தில் கோயிலமைத்து வழிபாடு செய்யுமாறு கூறினான். கொன்றையடிப்பிள்ளையார் எனும் பெயரில் சிறு ஆலயம் அமைத்து வழிபடப்பட்டது. சில நாட்களின் பின் சிவலிங்கம் சுயமாக தோன்றியதை அம்மக்கள் கண்டனர். தானாக தோன்றிய லிங்கம் என்ற படியால் தான்தோன்றி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டது. எரியாத இடத்தில் தோன்றியதால் வேகாவனேஸ்வரர், வேகாவனப்பெருமான் என்றும் அழைக்கப்பட்டார். ஓட்டுக்களைச் சுட்டதினாலே பிரபலமான அந்த இடம் ஒட்டுசுட்டான் என்று பெயர் பெற்றது. 

அதன் பின்னர் ஏராளமான கால மாற்றங்களையும் கடந்து தானே அதுவாகி நிற்கும் லிங்கம் எத்தனையோ நிகழ்வுகளின்  சாட்சியாக நம்முன்னே நிற்கின்றது.

திருவிழா 

வருடாந்த உற்சவம் ஆனிமாதத்து அமாவாசையில் தொடங்கும்.  

பதின்மூன்றாம் நாள் வேட்டைத் திருவிழா நடைபெறும். தீராத நோயினால் பீடிக்கப்பட்டோர் தாம் வேட்டைத் திருவிழாவின் போது வேடனாக வருவதாக நேர்த்திக்கடன் வைப்பார். வன்னிப்பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பெருமளவான மக்கள் வருகை தருவார்கள்.  உடம்பெங்கும் கரிபூசி வாகங்குழைகளால் உடல் போர்த்தி கையில் வாகந் தளிர் கட்டிய தடியொன்றைப் பிடித்தபடி ஆயிரக்கணக்கானோர் வேடுவ உடையில் ஈஸ்வரர் பறை முழங்க முன் செல்ல பின் தொடர்வர். தலையில் தென்னோலையால் அல்லது   வாகங் குழையால் ஆன தொப்பியை அணிந்திருப்பர். வேடுவர் தலைவர் சுரைக்குடுவையினுள் தேன் வைத்திருப்பார். இத்தலைமைப் பதவி  பரம்பரையானது. தலைமை வேடனின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஏனையோர் நடக்க வேண்டும். ஈஸ்வரர் வேட்டைக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது அம்மனுக்கும் ஈஸ்வரருக்கும் வாதாட்டம் இடம்பெறும். இந்த ஊடலை மணியகாரனே தீர்த்து வைப்பார். பின்னர் ஈஸ்வரர் ஆலயத்திற்குள் நுழைந்ததும் தலைமை வேடர் சமிக்சையைத் தொடர்ந்து  ஒருவர் பின் ஒருவராக விழுந்து வணங்கி, பின்னர் கோயிலை வலம் வந்து ஒட்டுசுட்டான் கட்டைக்காட்டு குளத்துக்குச் சென்று தம் வேடுவ உடைகளை நீக்கிய பின் நீராடுவர். இதுவே பழைய மரபு. விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவும் இது தான்.  



பதினைந்தாம் நாள் தேர்த்திருவிழாவும், பதினாறாம் நாள் தீர்த்தமும் நடக்கும்.

1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட விடுதலைப் போராட்ட காலத்தில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன. அதன் போது முல்லைத்தீவில் உள்ள பல கோயில்களில் பல சிதைவுகளும் சிக்கல்களும் ஏற்பட்டன. 1990 களில் தான்தோன்றீஸ்வரம் வானக்குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டது. 

ஆலயத் திருப்பணி வேலைகள் 

குளக்கோட்ட மன்னன் ஆலயத்திருப்பணி வேலைகளில் ஈடுபட்டிருந்தான். வன்னிக்குறுநில மன்னர்களும் இவ்வாலயத்துக்குத் திருப்பணி வேலை செய்தனர். போர்த்துக்கேயர் காலத்தில்( 1505 - 1658 ) நடைபெற்றதாகக் கூறப்படும் கதையொன்றுண்டு. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பிடித்த பின்னர் வன்னி மீது தமது மேலாண்மையைச் செலுத்த முனைந்தனர். வன்னியர்கள் திறைதருவதாக ஒப்புக்கொண்டு ஆண்டுதோறும் யானைகள் அனுப்பும் வழக்கம் இருந்தது. காட்டில் யானைகளைப் பிடிப்போர் பணிக்கர் என அழைக்கப்பட்டனர். காக்கைப் பணிக்கருக்கு வன்னியரசர்களால் மானியமாக கொடுக்கப்பெற்ற குளமும் அதனைச் சார்ந்த வயல்களும் காக்கைப் பணிக்கன் குளம், காக்கைப் பணிக்கன் வயல் என இன்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவின் முன் யானைகள் பிடித்துத் தருமாறு வன்னியர் பணிக்கன் ஒருவனுக்குக் கட்டளையிட்டார். எங்கு தேடியும் யானைகள் அகப்படவில்லை.  யானைப் பணிக்கன் தான்தோன்றி ஈஸ்வரனிடம் முறையிட்டான். யானைகள் கிடைக்கும் பட்சத்தில் கோயிலை பெருப்பித்துக் காட்டுவதாக நேர்த்திக்கடன் வைத்தான். கனவில் " பெரிய இந்திமடுவிலுள்ள கிளிமடு எனும் இடத்தில் பௌர்ணமி தினத்தில் ஏராளமான யானைகளை காண்பாய்" என்ற குறிப்புக் கிடைத்தது. அதன்படியே தேவையான யானைகள் கிடைத்தன. பணிக்கன் கோயிலைப் பெருப்பித்துக் கட்டினான்.

பிரித்தானியர் காலத்தில் மீண்டும் கோயில் பெருப்பித்துக் கட்டியமைக்கான சான்றுகள் உண்டு. ஜெ. பி. லூயிஸ் எழுதிய வன்னிக் கைநூலில் 1874 ஆம் ஆண்டு வரையில் ஒட்டுசுட்டானுக்கு அண்மையிலுள்ள தட்டயமலை எனும் இடத்தில் இருந்த அழிபாடடைந்த பௌத்த மடாலயத்தின் கற்கள் ஒட்டுசுட்டானில் சைவக் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டது என்ற குறிப்புண்டு.

போன நூற்றாண்டின் முற்பகுதியில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஓவசியர் திரு. த. சின்னத்துரை அவர்கள் சிவன் கோயில் திருப்பணி வேலைகளில் முன்னின்று உழைத்தார். இவரின் முயற்சியாலேயே கோயிலும் திருக்குளமும் சிறப்பாக கட்டடப் பெற்றன. 

1964 ஆம் ஆண்டும் பெரும்புயலினால் ஆலயத்தின் வெளிமண்டபம் முற்றாகச் சேதமடைந்தது. மூன்று தேர்களும் சேதமடைந்தன. சேதமடைந்த வெளிமண்டபத்தை ஆலய பரிபாலன சபையினர் திருத்தியமைத்தனர். 

1989 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி திருப்பணிச் சபையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்திருப்பணிச் சபை ஆலயத்தின் தெற்கு வீதி மண்டபத்தை திருத்தியமைத்தது. அம்மன் ஆலயமும், வைரவர், சண்டேஸ்வரர் ஆலயங்கள் புதிதாக கட்டப்பட்டன.

இதன் பின்னர் இடம்பெற்ற புணருத்தரான வேலைகளைத் தொடர்ந்து இன்றுள்ள வடிவிற்கு ஆலயம் உருமாற்றம் பெற்றது. எதிர்வரும் நாட்களில் 108 அடி கொண்ட ராஜகோபுரம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.            

இலக்கியம் 

தான்தோன்றி ஈஸ்வரர் மீது கொக்குவில் குகதாசர் சு. சபாராத்தின முதலியார் பாடிய ஒட்டுசுட்டான் சிவபெருமான் ஆசிரியர் விருத்தமும் (1833 ) ஓர் ஊஞ்சற் பதிகமும் வேட்டைத் திருவிழாவின் போது படிக்கப்படும் வாதாட்டப்பாடலும் தான்தோன்றி ஈஸ்வரர் பாடலும் உள்ளன. 

ஊஞ்சற் பதிகத்தை சுதுமலைப்பண்டிதர் ஆ. சி. நாகலிங்கமும் பாமாலையை  (1976 ) முல்லைமணியும் பாடியுள்ளனர்.           

நவீன ஆபத்து 

முன்னர் வாவெட்டி மலையிருந்து வேஷங் கட்டி ஆடி வரும் வேட்டைத் திருவிழா, 1983 க்குப் பின், யுத்தத்தின் காரணமாக, கோயிலுக்கு அண்மையிலுள்ள காணியிலிருந்து தான் வேஷம் கட்டி வருவார். தற்போது, தமது நீண்ட மரபை மீளவும் நிகழ்த்த அங்கு சென்றனர். ஆனால் சென்ற மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி தான், வாவெட்டி மலைக்கு அண்மையில் கல் குவாரிகளை அமைத்து பெருமெடுப்பில் கல்லகழ்தல் இடம்பெறுகிறது. இதனால் ஆயிரத்து ஐநூறு வருடம் பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் மரபுரிமைச் சொத்துக்கள் அடங்கிய பிரதேசமும் அவ்விடத்திற்கண்மைய வாழ்வியலும் பாதிக்கப்பட போவது உறுதி. இன்றும் எஞ்சிய கொடித்தம்பத்தையும் கற் தூண்களையும் அந்த இடத்தில் பார்க்கலாம். முப்பத்து மூன்று வருடங்களின் பின் மக்கள் தமது ஆயிரத்தைநூறு வருடச் சடங்கை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த இடத்திற்கு வாவெட்டி ஈஸ்வரர் என்றும் பெயர்ப்பலகை சூட்டியிருக்கிறார்கள்.   

இப்பொழுது ஆலயம் என்பது பக்தி செலுத்தப்பட வேண்டிய இடம் மாத்திரமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய இடமும் ஆகும். நமது மரபை, சடங்குகளை அறிவதென்பது தனியே கும்பிட்டுவிட்டு விலக்குவதற்கானதல்ல. அது நமது முன்னோர்கள் நமக்களித்துள்ள சொத்து. நமக்களித்துள்ள வாழ்வியல் முறை. அதன் குறைபாடுகளை நாம் உரையாடி வளர்த்துச் செல்ல வேண்டும். அறிவு பூர்வமாக நமது மத, கலாசார, பண்பாட்டு விடயங்களை உரையாட வேண்டும். அடையாள அழிப்பை எதிர்ப்பதற்கான மன நிலை அப்பொழுது தான் உருவாகும். வெற்றுக் கோஷங்களால் நம்மால் அதை செய்ய முடியாது. ஆலய மலர்களிலும் ஆக்கபூர்வமான வரலாற்றுப்பின்புலத்தைக் கொண்ட கட்டுரைகள் விவாதங்கள் உள் வாங்கப்பட்ட வேண்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தன்மைகள் உண்டு. அதிலிருந்து தான் அது தனக்கான சொந்த நறுமணத்தை மற்றைய சமூகங்களுக்கிடையில் வெளிப்படுத்த முடியும். 

சைவம் நெகிழ்ச்சியானதொரு மதப் பிரிவு. அதன் வரலாறும் இலக்கியங்களும் அதனூடாக அடைந்த ஞானமும் மிகப்பெரியது. அதே வேளை ஈழத்தில் அதன் அரசியற் பரப்பில் நல்லூர், மாவிட்டபுரம், கீரிமலை, நயினாதீவு, செல்வச்சந்நிதி, வல்லிபுரம், ஒட்டுசுட்டான், வெருகல், சித்தாண்டி, திருக்கோவில், கொக்கட்டிச் சோலைஆகிய இடங்களிலும் பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றிலும்  "தேசத்துக்கோயில்கள்"  என்று கொள்ளத்தக்க வகையைச் சேர்ந்த ஆலயங்கள் அமைந்திருந்தன என்று பேராசிரியர் சி. பத்மநாதன் சொல்கிறார்.  சித்தர் மரபுடனும் உருவ வழிபாட்டுடனும் இணைந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயம்  ஒரு முக்கியமான இணைப்பு.  "நாம் யார்?"   "இந்த வாழ்க்கை எதற்கானது?" போன்ற கேள்விகளுக்கு நமது மரபு நமக்களித்திருக்கும் பல வழிகளை அறியுமொரு வெளியாகவிருக்கும்  ஆன்மீக அமைப்பான  கோயிலை அதன் ஆன்மீக அர்த்தத்திலும் அரசியல் அர்த்தத்திலும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய காலமிது. 

கிரிஷாந்

( இங்கு எடுத்தாளப்பட்டுள்ள வரலாற்றுத்தகவல்கள் எழுத்தாளர் முல்லைமணி  தான்தோன்றீஸ்வரர் ஆலய மலரில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து பெறப்பட்டவை.) 

நன்றி - Quick news tamil  

http://www.quicknewstamil.com/2017/07/07/oddusuddan-thanthondreeswarar-temple/ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக