செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஜல்லிக்கட்டு - நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை










இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பொலிஸ் மாணவர்களை நெருக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பெரும் அளவில் அரச இயந்திரத்தினால் ஒடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் பல நாடுகளிலும் கவனயீர்ப்புகள் இடம்பெற்றன.சமூக வலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் இது பற்றி கார சாரமான பல விவாதங்கள் இடம்பெற்றன.

ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதுமான பல விடயங்கள் உள்ளன. அவற்றை தொகுத்துப் பார்ப்போம். 

1 - ஏதோ ஒரு பொது நோக்கில் மக்கள் இவ்வளவு பெரிய அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் வீதிக்கு இறங்கவில்லை. அது தான் இந்தப் போராட்டத்தின் முதல் வெற்றி. முதல் பாடம். தமது அடையாளம் மீதான பொதுப்பிரச்சினையாக இது இருந்தாலும் மத்திய அதிகாரத்தின் மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடே இது. 

2 - தொடர்ந்து சமூக வலைத்தளங்களில்  இயங்கும் இளைய தலைமுறை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் இந்த போராட்டத்தை  அவர்கள் உருவாக்கிய விதத்தில் மறைந்து போய் விட்டன. இவ்வளவு காலமும் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தவர்கள் நிலத்திலும் கால் பதித்து இணையத்தில் போராளிக் குரல் எழுப்பியவர்கள் நிஜத்திலும் குரல் எழுப்பியது மிக முக்கியமான சமூக அசைவு.

3 - இவ்வளவு பெரிய போராட்டத்தை ஆறு நாட்களாக இத்தனை லட்ஷம் மக்கள் இணைந்து நடத்தியதும், அதன் போதான பல படிப்பினைகளும் முக்கியமானவை. பெண்களின் பங்களிப்பு இந்தப் போராட்டத்தில் முன்னெப்போதையும் விட அதிகமாகவிருந்தது. சாதி, வர்க்க, பால் நிலை அடையாளங்களைக் கடந்து ஒரு பொதுப்பிரச்சினைக்காக பொது அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து போராடியதும் ஈழத்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

4 - இந்த வகையான போராட்டங்கள் நடைபெற ஈழத்தைப் பொறுத்தவரை இன்னும் ஜனநாயாகச் சூழல் வளராத நேரத்தில் காலம் எடுக்கும். ஆனால் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும்  போராட்டங்களின் தொடர்ச்சியில் இந்த இளைய தலைமுறையும் இணைந்து கொள்வதற்கு போராட்டமொன்றிற்காக ஜனநாயகரீதியில் வீதியில் இறங்குவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.

5 - அற வழிப் போராட்டங்கள், ஜனநாயகத்தை அதன் உச்ச அளவில் பயன்படுத்துதல் என்பன பற்றி நாம் அதிகமும் உரையாட இது வழியைத் திறந்து விட்டிருக்கிறது.

மேலும் இந்தப் போராட்டம் மிகக் கடுமையான முறையில் அடக்கப் பட்டாலும் கூட தமிழர்கள் உலகத்திற்கொரு பெரிய செய்தியை சொல்லியிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. இது தொடர்பில் பேராசிரியர் அ. மார்க்ஸ் தனது முகநூலில் எழுதிய பதிவை கீழே தருகிறேன்,

"இரண்டு வகைகளில் இந்தப் போராட்டம் எதிர் கொள்ளப்படும் என்பது நேற்றே எதிர்பார்த்ததுதான் அவை: 1. கொஞ்ச ஆட்களைத் தயார் செய்து போராட்டம் பற்றி அச்சமும் அவதூறும் பரப்பி அறிக்கைகள், பிரெஸ் மீட் ... முதலியன. 2. காவல்துறையின் உண்மை முகத்தைக் காட்டி போராட்டத்தை ஒடுக்குவது.இரண்டும் நடந்துகொண்டுள்ளன.

இந்நிலையில் போராடும் இளைஞர்கள் என்ன செய்ய முடியும்?
இது அமைதி வழிப் போராட்டம். ஆனால் இந்த அமைதி வழிப் போராட்டத்தில் பங்கு பெறுவோர் அன்று மகாத்மா காந்தியால் திரட்டப்பட்ட அறப் போராளிகள் அல்ல. எல்லா பின் விளைவுகளையும் சொல்லி தியாகம் செய்வதெற்கெனவே திரட்டப்பட்டவர்கள் அவர்கள்.

இன்று குழுமியுள்ளோர் அப்படியானவர்கள் அல்ல. இந்தநிலையில் கலைய நேர்ந்தால் அது பின் வாங்கலோ இல்லை தோல்வியோ அல்ல. ஏற்கனவே போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் பல உண்மைகள் அடையாளம் காட்டப் பட்டுள்ளன. பல எதார்த்தங்களை இளைஞர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ள இது வாய்ப்பு ஏற்படுத்தியது. எதிரிகளை மாணவர்களும் இளைஞர்களும் அடையாளம் காணவும் காட்டவும் ஒரு அற்புதமான வாய்ப்பாக இது அமைந்தது.

அந்த வகையில் இந்தப் போராட்டம் வெற்றியே.

(23 .௦௧. 2017 )

இந்தப் போராட்டம் ஒரு தன்னெழுச்சி இதற்கு தன்னெழுச்சிகளுக்கேயுண்டான பலவீனங்கள் உண்டு. அவை ஒரு தலைமைக்கு கீழோ கூட்டுத் தலைமைக்கு கீழோ ஒன்று திரளா விட்டால் அது எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க முடிகிறது.

மேலும் ஏனைய சில விவாதங்கள் தொடர்பில் எழுத்தாளர் சயந்தன் தனது முகநூலில் எழுதிய சில குறிப்புகள்,

"1. சல்லிக்கட்டுத் தொடர்பாக நான் அறிந்தவரையில் ஓர் உரையாடலாகவாவது அந்த விளையாட்டில் சாதிக்குழுக்களின் சார்பும் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழகத்தின் அண்மையை போராட்டம், இந்த விளையாட்டில் ஒட்டிக்கொண்டிருந்த சாதியை சிதையைச் செய்திருக்கிறது. அல்லது சாதியிலிருந்து இந்த விளையாட்டை மீட்டெடுத்திருக்கிறது. இதனை குறித்த அந்த சாதியக்குழுக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதுவும் அதற்கு “தமிழ்க் கூட்டம்” எவ்வாறான பதிலடியைக் கொடுக்கும் என்பதையும் -தற்காலிகத் தடை/நிரந்தரத் தடை - தீவிரம் குறைந்தபிறகு காணமுடியும் என நினைக்கிறேன்.

2. இதுவரையிருந்த தலைமைத்துவ வடிவத்தை இப்போராட்டம் முழுவதுமாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. தலைமையென்பது முன்னால் நின்று இழுத்துச்செல்வதல்ல, “குழுச்செயலை” ஊக்குவிப்பது என்பதாக அது மாறிவிட்டிருக்கிறது. தலைத்துவக் குணாதிசயம் என்பது ஓர் அரூபமாகிவிட, பங்கேற்பு என்ற ஒன்று மட்டுமே இப்போராட்டத்தைக் கட்டுக்குலையாமல் வைத்திருக்கிறது.

3. தம்மை ஆளும் அரச இயந்திரத்திற்கு எதிராக, தாம் எதிர்கொள்ளும் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளுக்காக, விவசாயிக்காக, தண்ணீருக்காக, புறக்கணிப்புக்கு எதிராக, மொழிக்காக, இனத்திற்காக, ஈழத்திற்காகவென தம் ஆவேசமான குரலை எழுப்புகிற ஒரு மேடையாக, சல்லிக்கட்டை ஒரு குறியீடாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு பெரும் சனத்திரளைத்தான் நான் காண்கிறேன். அதில், எப்பிடி நான் தண்ணீர்ப் போத்தல்களை விநியோகிப்பதற்கு மட்டுமே வந்தேன் என்று சொன்னாரோ, அப்பிடியே தனியே சல்லிக்கட்டிற்காக மட்டும் வந்தவர்களும் இருந்திருக்கலாம். அவர்களே விலகிச்செல்கிறார்கள்.

4. இந்தப்போராட்டம் அரசுக்கும், ஓட்டரசியல் செய்கிற கட்சிகளுக்கு மட்டும் அச்சத்தைத் தரவில்லை. தமக்கே தமக்கான கருத்தியல்களுக்காக மட்டும் சனம் திரள்வதே போராட்டம் என நம்பப் பிரியப்படும், முற்போக்கான சிந்தனையாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தும், போராட்டம் என்றாலே அது தம்முடைய வேலைதான் எனப் பாரம் சுமக்கும், சிலரையும் அச்சப்படுத்தியிருக்கிறது. கேலி செய்வதைப்போல அவர்கள் பேசிக்கொண்டாலும், உள்ளூரும் அவர்களுடைய அச்சத்தையும் பதறலையும் நான் மனதார ரசிக்கிறேன்.

5. சல்லிக்கட்டுக்கு ஆதரவதாக ஈழத்தில் நடந்த போராட்டங்களின் வழியாக நிகழ்த்த முனையும் ஒரு நடவடிக்கையையை நான் ஏற்புடையதாக விளங்கிக்கொள்கிறேன். வெகுசனப் போராட்டங்களுக்கு “கொலையையே” பதிலாகப் பெற்ற ஒரு நாட்டில், அப்போராட்ட அனுபவம் இல்லாத ஒரு புதிய தலைமுறையிடம், ஒப்பீட்டளவில் ஆபத்துக் குறைந்த ஒரு விடயத்திற்காக தெருவில் இறங்கச்சொல்வதன் ஊடாக “பங்கேற்பின் முக்கியத்துவத்தை” உணர்த்துவதே அது. அதை உணர்த்திவிட்டால், பின்னர் எதில் பங்கேற்பது என்பதை அவரவர் தம் தேடலுக்கூடாக தெரிவுசெய்துகொள்வார்கள் என்ற வாதத்தைப் புரிந்துகொள்கிறேன்."

நன்றி - புதுவிதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக