செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ ?






முன்னெப்போதுமில்லாத அளவு சமூக வலைத்தளவாசிகளும்  மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது  நாள் மதியத்திலிருந்து அது முடியும் இறுதித் தருணம் வரை அந்த போராட்டப் பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த உண்ணாவிரதிகளுடன் உரையாடுவதும், பகலில் வரும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களின் எண்ணவோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருப்பதுமாக மூண்டு பகல் மூன்று இரவு அங்கு தான் . மக்களின் போராடும் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால் எல்லாப் போராட்டங்களும் அரசியலுள்ளதே. சிலது கட்சி சார் அரசியல் கொண்டது சிலது வெகுஜன அரசியலைக் கொண்டது.

ஆகவே இந்தப் போராட்டத்தின் சாதக பாதகங்களையும் விமர்சனங்களையும் அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

*

முதலில் சாதகமான விடயங்கள் பற்றி பார்க்கலாம்-
 மக்கள் நீதிகோரி தெருவிலிறங்கி ஒரு உச்ச கட்ட அழுத்தத்தை வழங்கக் கூடிய போராட்ட வடிவத்தை தீர்மானித்ததை முக்கியமான ஒரு விடயமாக பார்க்கிறேன். நமது நிலத்திற்கு இதுவொரு  நீண்ட தொடர்ச்சியுடைய மரபே. திலீபன் அதன் உச்சம். ஆனால் அதன் பிறகு நம் வரலாற்றின் பக்கங்கள்அதிகமும் அடையாள உண்ணாவிரதங்களாகவே நிரம்பி வழிந்தது . சமீப வரலாற்றில் சில சாகும் வரையான உண்ணாவிரதங்கள் அறிவிக்கப்பட்டு செய்யப்பட்ட போதும் அனைத்துமே ஏதோ ஒரு வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தவையே. அது ஒரு ஜனநாயக வளர்ச்சியின் கட்டம், இந்தியாவில் இடம்பெற்ற போராட்ட களங்களை காந்தி பயன்படுத்தியது அவ்வாறு தான். அவரது போராட்டங்களில் வளர்ச்சியுண்டு. அவர் உடலைக் கொண்டு மேலாதிக்கத்தின் "தார்மீக நோக்கம்" என்ற பொய்ப் பிரச்சாரத்தை நிர்பந்தித்தார். வேறு வழியின்றி ஏதாவதொரு நிலையினை அல்லது தீர்வினை முன்வைக்க அவர்களை இறங்கி வரச் செய்தார். அது தான் அவரது அரசியல். அவர் இறுதி வரை அதனை வளர்த்தெடுத்து உலகில் புதியதொரு போராட்ட அணுகுமுறையை அரசியல் ரீதியில் திறந்தார்.

அந்த அடிப்படையில் தார்மீக நோக்குடன் இயங்குகிறோம் என்று மார் தட்டிக்கொள்ளும் அரசுகளை நோக்கி மக்கள் தமது உடலை ஆயுதமாக பயன்படுத்துவது அரசை  ஒரு நிர்பந்தத்தின் முன் இறங்கி வரச் செய்வதே.


இரண்டாவது சாதகமான விடயம், இன்றுள்ள சமூகவலைத்தளத்தில் இயங்கும் இளைஞர்கள் மேல் உள்ள விமர்சனமென்பது மாறிவரத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் மெரினாவில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கான இளைஞர் எழுச்சியென்பது பெரியளவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு காலம் முகநூலில் சோகப் பதிவு போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நாடுதழுவிய ரீதியில் பல கவனயீர்ப்புக்களை மேற் கொண்டனர். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் கடுமையான வாதப்  பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. இவர்கள் இங்கிருக்கும் பிரச்சினைகளுக்கு இப்படி ஒன்றுகூடுவார்களா ? என்பது அவர்கள் உள ரீதியாக எதிர்கொண்ட தார்மீக ரீதியான கேள்வி.

அதனைப் பரிசோதிக்கும் களமாக அடுத்தடுத்த நாட்களிலேயே வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்தது. அவர்களின் நேர்மை மீதும் தார்மீகத்தின் மீதும் அதுவொரு தாக்குதலை நிகழ்த்தியது, அவர்கள் மக்களுடன் நின்றார்கள். மக்களின் குரலாக மாறினார்கள். பெருமளவில் இல்லையெனினும் சில நூறு பேராவது மக்களுக்காக வந்து நிற்பது மிக நல்ல அறிகுறியே.

*

இனி பாதகமான விடயங்கள்.
 ஆரம்பித்திலிருந்தே இந்தப் போராட்டம் சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் ஆரம்பிக்கப்பட்டது என்ற சலசலப்பு இருந்தது அதனால் முதல் நாட்களில் இளைஞர்களை சந்தேகத்துடனேயே இந்தப் போராட்டத்தை அணுக வைத்தது. ஏனெனில் உண்ணாவிரதத்தில் பிரதானமாக இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயதானவர்கள், சிலரே மத்திய வயத்தைச் சேர்ந்தவர்கள். மத்தியவயதைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் முடிவெடுப்பவர்களாகவும் மற்றவர்கள் அப்பாவிகளாகவுமே இருந்தார்கள். அதில் மூன்று பேருக்கு சிவசக்தி ஆனந்தனுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலர் கூறுகின்றனர். இதை உறுதி செய்வது போல போராட்டத்துக்கு தலைமையேற்ற சிலர் அடிக்கடி “ ஆனந்தன் அண்ணையோட கதைச்சுத்தான் செய்யிறம். அவைதான் எங்களுக்கு ஆதரவு” என்று மந்திரம் போல உச்சாடனம் செய்து கொண்டிருந்தார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ராஜா என்பவர் சிவசக்தி ஆனந்தன் எம்.பியின் அதி தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர். போராட்டத்தை முடிப்பது பற்றிய தீர்மானத்தை இவரே எடுத்திருந்தார். அந்தத் தீர்மானத்தை மற்றவர்கள் ஏற்கச் செய்வதிலும் மும்முரமாகச் செயற்பட்டார். வடமாகாண சபை உறுப்பினர் மயூரனும் உண்ணாவிரதப் பந்தலைக் கண்காணித்தபடி வளைய வந்து கொண்டிருந்தார். இவரும் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவரே.எனவே இந்தப் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்ததில் சிவசக்தி ஆனந்த எம்.பியின் கரங்கள் இருந்தது என்று சொல்லப்படுவதை மறுக்க முடியவில்லை.


இருந்தும் இந்தப் போராட்டத்திற்கான ஆதரவை வேறு ஒருவகையிலேயே முடிவெடுத்தேன். அதன் ஏற்பாட்டாளர்களுக்கொரு குழு இருந்தது அதில் சமூக மட்ட அமைப்புகளும் இடம்பெறுவதால் அதற்கு வேறொரு பரிமாணம் கிடைத்தது.




மேலும் இத்தகைய போராட்டங்களை மேற்கொள்வதற்கு அரசியல் ரீதியிலானதோ அல்லது அமைப்பு ரீதியிலானதோ பலங்கள்  இல்லையென்றால் ஆபத்து அதிகம். ஆகவே ஒரு பாதுகாப்பிற்காக அவர்கள்  அப்படியானவர்களை அணுகி சில உதவிகளை எடுத்திருக்க வாய்ப்பும் இருந்தது.ஆனால் அவர்கள் உண்ணாவிரத இறுதியில் எடுத்த முடிவு அந்த நம்பிக்கையை குலைப்பதாகவே உள்ளது.

ஆகவே இதன் பின்னாலுள்ள மற்றும் உள்ளோடும் ஒரு சிலரின் அரசியல் பின்புலம் இந்தப் போராட்டத்தின் முடிவின் மீது ஒருவகை நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது நாளிற்குப் பின் ஏற்பட்ட சமூக கவனமும் இளைஞர்களின் வருகையும் ஒருசிலரை அச்சமூட்டுவதாகவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதாகவும் இருக்கும் வாய்ப்பு அதிகரித்ததால் இது வேளைக்கு முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. இல்லையென்றால் இது வேறொரு பரிமாணத்தை எடுத்து எரியும்  பிரச்சினையாக மாறி குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்யக் கூடிய கொதிநிலையும் காலமும் இருந்தது.

ஆகவே தான் அரசியல் பின்புலமுள்ள சிலர் இதில் ஈடுபட்டமை ஒரு பாதகமான விடயம். எந்த அடிப்படையிலென்றால் இப்படியான மக்கள் போராட்டங்கள் மீது ஒரு எதிருணர்வு தோன்றும் வாய்ப்பும் ,இளைஞர்களுக்கு உருவாகியிருக்கும்  அரசியல் உணர்வு வெறுப்பாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

இனி விமர்சனங்களைப் பார்ப்போம். மூன்று பிரதான கோரிக்கைகளை வைத்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் "காணாமல் ஆக்கப்பட்டோர்" தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தப்பட்டது. பிற கோரிக்கைகள் பெயரளவிலேயே உரையாடப்பட்டது . அதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பற்றி அங்கிருந்த மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்த அக்கறையோ புரிதலோ இருக்கவில்லை. ஆகவே மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் வருகை தந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள்.  

மேலும் நான்காவது நாள் இடம்பெற்ற பெருமளவிலான சமூக வருகையையும் மாணவர் மற்றும் இளைஞர் பங்களிப்பையும் அது உருவாக்கியிருக்கக் கூடிய பெரிய அழுத்தத்தையும் உண்ணாவிரதிகள் பயன்படுத்தத் தவறியிருந்தனர்.

உண்ணாவிரதம் முடிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்த சூழல் முற்றிலும் வித்தியாசமானது அது ஒரு வெகுஜனப் போராட்டமாக விரியும் அனைத்து அம்சங்களும் துலக்கமாக இருந்தன. ஆனால் பிரதானமாக உண்ணாவிரதத்தில் ஈடு பட்டவர்கள் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அந்த முடிவை எடுத்தனர், அழுத்தமா? அல்லது நிகழ்ச்சி நிரலா ? தற்செயலா என்பதை மாசி ஒன்பதும் , அதற்குப் பிறகு வரப் போகும் நாட்களுமே  வெளிப்படுத்தும். இதனை நாம் அவதானிக்க வேண்டும்.

நாம் ஏற்கனவே பல போராட்டங்களை இழந்திருக்கிறோம். அதன் கோரிக்கைகளை பலவீனப்படுத்தியிருக்கிறோம். இவற்றிலிருந்து நமது சமூகம் மீண்டு தமிழர்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியில் பலம் வாய்ந்த குரலாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

இப்பொழுது உருவாகியிருக்கும் புதிய சூழலிலும் அச்சங்கள் உண்டு. ஆனால் ஒன்றுதிரண்டு ஒரு சமூகமாக நாம் முடிவுகளை எடுக்கும் போதும் தீவிரமாக சிந்தித்தும் உரையாடியும் போராட்டங்களை முன்னெடுக்கும் போது மாத்திரமே நாம் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். இதில் பல்கலைக் கழகத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் பெரிய பொறுப்பிருக்கிறது. தமது வளாகத்திற்குள் ஒரு பிரச்சினை வந்தால் அதனை சமூகம் கவனிக்க வேண்டும் என்று கோஷமெழுப்பும் அவர்கள், மக்களின் பிரச்சினைகளை மக்களுக்கு முன்னராகவே பிரதானப்படுத்தி அதனை முன்கொண்டு செல்ல வேண்டியவர்கள், அப்படியொரு வரலாறு யாழ் பல்கலைக் கழகத்திற்கு உண்டு. பிற பல்கலைக் கழக மாணவர்களுக்கும் உண்டு. அதே வேளையில் சமூக வலைத்தளங்களில் உரையாடும் பலரும் பொது விடயங்கள் தொடர்பில் மெய்யான அக்கறையுடன் செயல்படும் போது சிறியளவிலான மாற்றத்தையேனும் சமூக அசைவில் ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருக்கிறது.

ஆகவே வவுனியாவில் நான்கு நாட்கள் இடம்பெற்ற போராட்டத்தின் உள் அரசியலைக் கண்டு வெறுப்புக் கொள்வதை விட இது போன்ற நிலைக்கு மக்கள் ஏன் தொடர்ந்தும் வருகிறார்கள் என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தமக்குத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்/ தமது பிள்ளைகளை மீட்டெடுப்பதற்காக யாருக்குப் பின்னால் செல்லவும் யாரின் காலில் விழச் சொன்னாலும் விழவும் தயாராயிருக்கும் மக்களை யார் காப்பாற்றுவது ? அவர்களுக்கு வேறு என்ன தெரிவுண்டு ? வழியுண்டு ? இவற்றையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதே வேளை இந்த மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் ஆட்களை இனங்கண்டு வெளிப்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களைதுடைத்தெறியவும்  வேண்டும்.

அது இளைஞர்களால் தான் முடியும்.

- கிரிஷாந்-


-----------------------------------
 “ நாங்கள் குழப்பவில்லை”

- சிவசக்தி ஆனந்தன்( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்)

என்னைப்பொறுத்தவரை வவுனியாவில் நடந்த உண்ணாவிரதம் என்பது யாரும் தொடக்கியதல்ல. அது தானாகத் தொடங்கியது. ஒரு மக்கள் போராட்டமாகத் தொடங்கியபோது பலர் இணைந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் உந்துதலாக இருக்கவில்லை. மற்றைய சமூக அமைப்புகள் எந்தவிதத்தில் பங்களிப்புச் செய்தனரோ அதேபோலத்தான் நாமும் பங்களிப்புச் செய்தோம்.

அன்று மதியம் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி ஆகியோர் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர். இதற்கு ஒரு குழு நியமிப்பது தொடர்பாக அவர்கள் அங்கிருந்த உண்ணாவிரதப் போராட்ட ஏற்பாட்டார்களுடன் கலந்துரையாடியபோது,  சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் கோபப்பட்டனர்.

இந்த இடத்தில் ஒரு கசப்பான விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அது தமிழரசுக் கட்சி  தொடர்பானது. இது போல தன்னெழுச்சியாக நடைபெற்ற  போராட்டங்களை நேரடியாகவும், மறைமுகவமாகவும் நீர்த்துப்போகச் செய்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் தான். அதேபோலவே அன்றும் வந்து வாக்குறுதிகள் பல கொடுத்ததாகக் கேள்விப்பட்டோம்.

என்னைப் போறுத்தவரை இந்தப் போராட்டத்தை மக்கள் கைவிட்டுவிட்டதாகச் சொல்லமாட்டேன். இது  தற்காலிகமாகக் கைவிடப்பட்டதேயொழிய முற்றுமுழுதாக இதிலிருந்து யாரும் விலகவில்லை. வாக்குறுதி கொடுத்தவர்களால் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் அவர்கள் தொடருவார்களென நான் எண்ணுகிறேன்.

- நன்றி - புதுவிதி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக