திங்கள், 22 ஜனவரி, 2018

இலக்கியம் எனும் இயக்கம்

இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக இருப்பர். 2012  ஆம் ஆண்டு நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் வேலணையூர் தாஸ் முகநூல் ஊடாக சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் படித்த பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் தான் அவரது வீடிருந்தது. பின் பல காலம் பிள்ளைகளின் படிப்பிற்காக அந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றி வாடகை வீடுகளில் தாங்கினார். ஒரு சித்தாயுர்வேத வைத்தியர். சரியென்று, ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிய  அவரைச் சந்திக்கச் சென்றேன். "நீங்கள் கவிதை எழுதிறத்தை பார்த்தனான்... என்று ஆரம்பித்து கன விஷயங்களைக் கதைத்து. நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு அமைப்பா இயங்குவம்" என்று சொன்னார். நானும் ஒத்துக்கொண்டு அதற்குப் பின் நடந்த கூட்டமொன்றிற்குப் போனேன். அங்கு இளம் தலைமுறையில் எழுதிக்கொண்டிருந்த சிலரும் மூத்த தலைமுறையினர் சிலரும் வந்திருக்க புத்தக அறிமுகம், கவிதை வாசிப்பு என்று போய்க்கொண்டிருந்தது. நான் பேசிய முதல் இலக்கியக் கூட்டங்களை அந்த அமைப்புத் தான் ஏற்பாடு செய்தது. பின் அடுத்த மூன்று வருடங்கள்  யுத்தத்திற்குப் பிறகான ஒரு தலைமுறை இலக்கிய இடைவெளியைத் தொடுத்த அமைப்பாக வேலணையூர் தாஸ் முழுமூச்சாக நின்று உருவாக்கிய யாழ் இலக்கியக் குவியம் இயங்கியது. ஏராளமான கலந்துரையாடால்கள், இலக்கிய வெளியீடுகள், புத்தக அறிமுகங்கள் என்று நீண்டதொரு இலக்கிய செயல்பாட்டை நெருக்கடியான காலகட்டத்தில் இலக்கியக் குவியம் ஆற்றியது.அந்தக் கால கட்டமென்பது மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலம். பெரும்பாலான கூட்டங்களிற்கு அரச புலனாய்வுத்துறை வந்திருக்கும். இருந்தும் தொடர்ச்சியாக இயங்கி வந்தோம். 2015 அளவில் எங்களுக்குள் முரண்பாடுகள் வந்து இளமை வேகத்தில் அமைப்பை விட்டு சில நண்பர்கள் விலகினோம்.

இலக்கியக் குவியமென்பதை ஒரு அமைப்பாகவும் தாஸ் என்ற தனிமனிதரை அதன் மைய இயங்கு விசையாகவும் பார்த்தால், ஈழத்தமிழ்ப்பரப்பில் இன்று ஏற்பட்டிருக்கும் இலக்கிய மற்றும் அறிவுத்துறை சார்ந்த செயல்பாடுகளில் ஒரு தலைமுறையினரை இணைத்தமை தொடர்பில் அமைப்புக்கும் தாசிற்கும் பெரும்பங்குண்டு. அது ஒரு வரலாற்றுப் பாத்திரம்.

வேலணையூர் தாஸ் 


அண்மையில் லெ. முருகபூபதி பற்றி எஸ். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய "ரஸஞானி" ஆவணப்படத்தை நிகழ்படத்தில் திரையிட்டிருந்தார்கள். அதன் மைய இழையாக, முருகபூபதியின் பங்களிப்பாக நான் பார்த்தது ஒரு இயக்கமாக தனிமனிதர் இயங்குவதும் அதனூடாக ஒரு சூழலின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பதும்.

ஜே கே அந்த ஆவணப்படத்தில் முருகபூபதியைப் பற்றிச் சொல்லுமொரு  படிமம் வழிகாட்டிமரமென்பது. வழிகாட்டி மரத்தை கடந்து செல்பவர்களுண்டு. அதன் நிழலிலமர்ப்பவர்களுண்டு. அதனைச் சொறிபவர்களுமுண்டு. என்று அவரின் பாத்திரத்தை அவரின் வார்த்தைகளிலிருந்தே சொல்லியிருந்தார். அதுவொரு முக்கிய அவதானிப்பு.

எங்களுக்கு முந்தைய தலைமுறையில் இவ்வாறு தனிமனித இயக்கமாக இயங்கியவர், இயங்குபவர் அ. யேசுராசா.

எல்லோருடைய பங்களிப்பையும் மதித்தும் மதிப்பிடடுமே அடுத்த தலைமுறை நகர முடியும். நான் குறிப்பிட்டது சிலரையே. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் இப்படி மனிதர்களுண்டு. அவர்கள் தான் அந்தச் சூழலை அடுத்த தலைமுறைகளுக்கு கையளிப்பவர்கள்.

முருகபூபதியின் ஆவணப்படம் குறித்து சில அவதானிப்புகள்.

லெ. முருகபூபதி 


ஒன்று, ஈழத்தமிழர்கள் ஆவணப்படங்கள் உருவாக்கம் சார்ந்து மிகவும் குறைவான புரிதலுள்ள சமூகம். வெகு சிலரே அதில் இயங்கிவருகிறார்கள். அதே நேரம் நிதிவசதிகளும் குறைவு. மேலும் காமெராவுக்கு முன் நெளியும் ஈழத்தமிழர்களைப் பார்க்கும் போது சின்ன வயதில் முதல்முறையாக மேடையில் நின்று மலங்க மலங்க விழித்து, பேச்சுப் போட்டிக்கு பேசுபவர்கள் போலேயே உடல்மொழியை வைத்திருப்பார்கள். இயல்பாக கதைக்கவோ தங்களை வெளிப்படுத்தவோ  முடிவதில்லை. இந்தப் பின்னணிகளை விளங்கிக் கொண்டு தான் ஆவணப்படத்தினைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.

ஆவணப்படத்தின் மிக முக்கியமான விடயம், எஸ். கிருஷ்ணமூர்த்தி  எடுத்துக்கொண்ட திசை. ஆளுமைகளை ஆவணப்படுத்தலென்பது மிக முக்கியமான புள்ளி. அந்தக் கரிசனைக்கு அவருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். அதே போல் அவுஸ்திரேலியச் சூழலில் உள்ள குறைபாடுகளுடன் ஒருவருடம் உழைத்து ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியமையும் கவனிக்கப்படவேண்டியது.

மேலும் படத்தில் முக்கியமான கதை சொல்லிகள், முருகபூபதி, அவரது மனைவி, கௌசி, ஜே கே போன்றவர்கள் தான். அதற்கு அவர்களது இயல்பும் ஒரு காரணம். குறிப்பாக முருகபூபதியின்  மனைவி ஒரு கட் அண்ட் ரைட்டான ஆசிரியராக தனது கணவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார். அவர் ஒரு ரோபோ மனிதர். எப்ப பார்த்தாலும் போனில் ஒரே இலக்கியம். எனக்கு அதைக் கேட்க சில நேரங்களில் சலிப்பாக இருக்கும். அவரது பெரிய பலவீனம் எழுத்துப்பிழை என்று.முருகபூபதியின் வாழ்க்கையை ஒரு சின்னக் கணத்திற்குள் படமாக விரியவைத்துக் கதை சொல்லும் தன்மை முக்கியமானது.

பெரும்பாலானவர்கள் சலிப்பூட்டும் மேடைப் பேச்சை நிகழ்த்துகிறார்கள். இன்னும் கொஞ்சம் சில முன்னாயத்தங்களைச் செய்திருக்கலாம். இன்னுமொன்று, சங்கங்கள், கழகங்கள் அதன் தலைவர்கள் என்று அலைந்திருக்காமல் முருகபூபதியின் வாசகர்கள் அல்லது அவருக்கு நெருக்கமான நண்பர்களுக்குள்ளால் கதையை விரித்திருந்தால் முருகபூபதியைப் பற்றிய முழுமையான சுயசித்திரமொன்று கிடைத்திருக்கும். 

எஸ். கிருஷ்ணமூர்த்தி

மற்றது முருகபூபதியை படமாக்கியிருக்கும் விதம். முதலாவது புரிதல், ஒரு கலைஞன் அல்லது எழுத்தாளர் எப்பொழுது தன்னை இயல்பாக வெளிப்படுத்துவார் என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னால் கமெரா நகர்ந்திருக்க வேண்டும். கமெரா அவரை இயக்கியிருக்கக் கூடாது. அதில் ஒரு இயல்பு இருந்திருக்கும், ஒரு சுதந்திரம், அப்பொழுது  காமெராவுக்குப் பின்னாலிருக்கும் கண்களை மறந்து அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்க முடியும்.


இறுதியாக, தொழிநுட்பம் சார்ந்தும் உள்ள குறைபாடுகளையும் கவனத்திலெடுத்தாலும் கூட. இதுவொரு முக்கியமான முயற்சியே. இலக்கியத்தினையும் அதன் இயக்கத்தினையும் நகர்த்தும் மனிதர்களிலொருவராக முருகபூபதியை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் செயலுக்கு வாழ்த்துக்கள்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக