ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஆழத்தில் மலர்ந்த தாமரைகள்

மாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அதிவேகப் பாடல்களால் உடம்பை நிறைத்தபடி ஏறக்குறைய முப்பத்தைந்து நிமிடத்தில் சாவகச்சேரி வந்தோம் நானும் மதுரனும். 

பனியும் மெல்லக் கலையும் இருட்டும் சேர்ந்து நாங்கள் வந்து சேர்ந்தபோது பின்னாலேயே  ஸ்டான்லி வந்து சேர்ந்தான் பைக்கில். "டேய் உங்கள காணேல்ல எண்டு தேடிக்கொண்டு வந்தன். நீங்கள் வந்து சேர்ந்திட்டியள்" எண்டு மெய்சிலிர்த்தான்.   நாங்கள் சாவகச்சேரி வரைக்கும் கூட தாக்குப்பிடிக்க மாட்டோம் என்று நினைத்துக்கொண்டு பின்னால் வந்து பாடியை எடுத்துச் செல்ல வந்திருந்தான். இந்த மாதிரியான ஊகங்களுக்கெல்லாம் காரணம் என்னையும் மதுரனையும் போல வடித்தெடுத்த சோம்பேறிகளை நாங்களே கூட கண்டதில்லை என்பது தான்.

பின், அங்கிருக்கும் யாரோ ஒரு 'பாய் ' நண்பரின் கடையில் காலம சாப்பிடலாம் என்று ஸ்டான்லி கூட்டிக்கொண்டு போனான்.

 குமணன் அண்ட் கோ வருகைக்காக பழைய மீன் மார்க்கெட்  முன்னால் காத்திருந்தோம். பிறகு கச்சாய் வழியில் காத்திருந்த குமணன் அண்ட் கோவருகே நாங்கள் சென்று சேர்ந்த போது ஸ்டான்லி வீட்டுக்கு போனான். நானும் மதுரனும் வெளிக்கிட்ட கோலத்தை பார்த்தால் அச்சு அசல் மேசன் வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் தான். பின்னால் ஒரு பையும், தண்ணிப்போத்தலும். நூறு கிலோமீட்டர் பயணத்துக்கு டெனிம் ஜீன்சும் போட்டுக் கொண்டு வலு ஆத்தலாத் தான் போனோம். இதில மதுரன் ஒரு பம்மும் கொண்டு வந்தான். எனக்கும் அவனுக்கும் ஒரே தயக்கம், என்னடா இது நாங்கள் இப்பிடி போறம், அவங்கள் சைக்கிளிங் போறது மாதிரி கெத்தா வந்த நம்ம கோலம் அலங்கோலம், ஆனால் எந்த ஆச்சரியமுமில்லாமல் இன்னொரு ஐந்து மேசன் தொழிலாளிகள் அந்த கச்சாய் வீதியில் நிற்க கண் குளிர்ந்தோம்,இதில் துருத்திக்கொண்டு நின்ற சூப்பர் மான், 'வாட்டப்பா' மட்டும் தான். அசலாக ஏதோ வருடக்கணக்காக சைக்கிளிங் செல்பவர்கள் போல் கூலிங் கிளாஸ், தொப்பி, கையில் க்ளவுஸ் எல்லாம் போட்டு பின்னால பாக் கட்டி இடுப்பில ஒரு சேட் கட்டி, வெறித்தனமான ஒரு சைக்கிளிஸ்ட் போல நின்றார். சரி, பின்னர் பார்த்துக்கொள்வோம் என்று ஓட்டத்தை ஆரம்பித்தோம்.கச்சாய் வீதியால் மிதிச்சுக்கொண்டு போனோம். பாதையெங்கும் நிழல். ஒரு மனிதர் போவதற்கென்றே போட்ட பாதைகள் போல. பல கிலோமீட்டருக்கு களைப்பே தெரியவில்லை. இடையில் ஒரு காட்டுப்பகுதியில் கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்தார்கள் அவர்களின் கூடாரம் ஒன்றின் முன் அமர்ந்திருக்க, கூகிள் மப்பில் கள்ளுத்தவறணைகளை இணைக்கமையினையிட்டு வாட்டப்பா கடும் கண்டனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். பனை வெளிகளை நிறைத்தது. மணல் வழிகளில் கருக்கு மட்டைகளும் ஓலைகளும் விழுந்து டயர் செல்ல உடல் தந்தன. கதையை மேற் கொண்டு சொல்லும் முன், சில தகவல்கள். குமணன் கொஞ்ச நாளைக்கு முதல் போட்ட ஒரு முகநூல் நிலைத்தகவலை வைத்துக்கொண்டு விசுவமடுவுக்கு சைக்கிளிங் போக நானும் மதுரனும் கிளம்பினோம். மொத்தமா ஏழு பேர். குமணன் (கப்பல்), பச்சன், கோகுல், வாட்டப்பா ( வாட்டப்பம். Water pump ), பராஜ், சுபிந்தன், மதுரன் மற்றும் நான் , இவ்வளவு பேரும் தான் பயணிகள் தகவல் திரட்டு. 

மேற்கொண்டு, கச்சாய் வீதியால் நாங்கள் சென்று கொண்டிருந்தோம் இடையில் ஏதேதோ இடங்கள் வந்தன. மண் பாதைகள், ஊரிப்பதைகள், காட்டுப்பாதைகள்.. எல்லாம் வந்தன. நாவல் மரங்கள் பழுத்து நிலத்தில் வீழ்ந்தபடியிருக்க காற்று குளிர்ந்து வீசிக்கொண்டிருந்தது. அப்படியே பளை. காற்றாடிகள் இருக்குமிடத்திற்கருகில் வந்து நின்றோம். ஒரு அம்மா வந்தார். நாங்கள் வந்த கோலத்தையும் சொன்ன கதையையும் கேட்ட  அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் யாழ்ப்பாணத்திலேயிருந்து இந்த காத்தாடிகள் பார்க்கவே வந்தனியள் என்றார். சைக், நாங்கள் விசுவமடுவுக்குப் போகிறோம் என்று யாரோ பெருமை பொங்கச் சொன்னார்கள். அந்த அம்மா, நேரே போய் காத்தாடியோட ஒட்டின பாதையால் போகலாம் எண்டு சொன்னா. நாங்கள் காத்தடிக்கு நேர் கீழே போய் நின்றோம். அங்காலே பாதையே இல்லை மண்ணும் காடும் தான். போனால் செத்துவிடுவீர்கள் என்று பயமுறுத்தினார்கள் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டியும் இன்னொருவரும் . நாங்கள் சாகத்தான் போறம் என்பதை அவர்களுக்குச் சொல்லியவுடன். மிக்க மகிழ்ச்சியுடன் இரண்டு கைகளையும் விரித்து கைகாட்டி போய்ச் சாகுங்கடா என்று அனுப்பி வைத்தார்கள்.

மொத்தம் பதினாறு காத்தாடிகள் ஆறு கிலோமீட்டர் தூரம். இடையில் சன்சிகனும் தனுசும் வந்து கொஞ்சம் சாப்பாடு தந்துவிட்டு போனார்கள். பின்னர் பதினாறு காத்தாடியும் முடிய  குறிஞ்சாத்தீவின் உப்புவயல் தொடங்கியது. கண் தெறிக்கும் வெள்ளை மண். எறிந்த வெப்பத்தில் கண்கள்  அனலெடுத்தது. சுத்தியும் பத்தைக்காடு. ஒரு வெள்ளைப் பாதை போய்க்கொண்டிருந்தது. சுத்திச் சுத்தி ஓடினோம். பிறகு ஓரிடத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்தோம். வெந்து நூடில்ஸாய் போயிருந்த வாட்டப்பா, கூகிள் மப்பை பார்த்து இந்த பக்கம் போனா நீரேரியால போகலாம் எண்டு மூக்குச் சாத்திரம் பார்த்தார். வெறுப்பிலிருந்த சுற்றியிருந்த மக்கள். அதற்கு எதிர்ப்பக்கமாக நடந்து செல்லத் தொடங்கினோம். ஒரு அரைமணி நேரத்திற்குப் பின் நானும் குமணனும் இன்னொருவரும் தான் முன்னே சென்றோம். நான்கு உருப்படிகளை கண்ணுக்கெட்டியவரை காணவில்லை. அதுவோ மணற் பாதை. ஒரு ஐந்து மிதி நிம்மதியாக மிதிக்கக் கூட இடமேயில்லை, கிட்டத்தட்ட  ஒரு பத்துக் கிலோமீட்டர் அப்படித்தான். மதுரனும் வாட்டப்பாவும் தான் பின்னர் வந்த அணியின் தலைமைக் காவலர்கள். அங்கங்கே நாவற் பழங்கள் விழுந்து சாப்பிட யாருமின்றி / எதுவுமின்றி தரை நிறைத்துக் கிடந்தன. காய்ந்த புற்கள், ஆளை விடக் கொஞ்சம் உயர்ந்த பற்றைச் செடிகளும், எங்கோ கொஞ்சக் கொஞ்ச இடைவெளியில் நீல நிறத்தில் குட்டைகளும் கிடந்தன. முன்னால் வந்த நாங்கள் முக்கித்தக்கி  A9 வந்து விட்டோம். அப்பொழுது மீட்பு படையினரான சன்சிகனும் தனுசும் வந்தனர். குறிஞ்சாத் தீவு உப்பு வயல் என்றொரு பெயர்ப்பலகை அந்த நெடுஞ்சாலையில்  உண்டு. ரெயில் பாதையோடு ஒட்டி உள்ள மரத்திற்கடியில் நாங்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தோம். வெய்யில் வெளுத்து வாங்கியது. கொஞ்ச நேரத்தில் மதுரன் போன் செய்தான். மச்சான் தண்ணி வேணும் Dead கண்டிஷன் என்றான். நானும் தனுசும் தண்ணீர் வாங்கிவிட்டு வரும்வழியில் அடேய் ஒரு குளுக்கோசும் வாங்கு என்று மறுபடியும் போன் செய்தான். அதெல்லாம் அங்கு இல்லை இரு வாறம் எண்டு சொல்லிப்போட்டு போய்க்கொண்டிருக்கும் போது ஆட்டோ பிடி மச்சான் என்றான், நான் 'பாடியை ' ஆம்புலன்சில் ஏற்றலாம் எண்டு சொல்லி விட்டு தண்ணீரை சன்சிகனிடம் கொடுத்தேன். நாங்கள்  படுத்துக்கிடந்ததிலிருந்து ஒரு  முன்னூறு மீட்டரில் இரண்டு தலையில்லாத உடல்கள் மட்டும் கிடந்திருக்கின்றன. சன்சிகன்  போய்ப் பார்த்தபோது சாட்சாத் அது மதுரனும் வாட்டப்பாவும் தான். தலையை ஒரு பற்றைக்குள் நுழைத்துவிட்டு வெயிலுக்கும் உடம்பை விட்டபடி குற்றுயிரும் குறையுயிருமாக இருந்த இரண்டு காவல் தெய்வங்களையும் சன்சிகன் காப்பாற்றினான். 

நான்கு பேரையும் நாங்களிருந்த இடத்திற்கு சன்சிகன் கூட்டி வந்தான். பிறகு அதில் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, படுத்திருந்தபோது பராஜ் தான் வைத்திருந்த வத்தாகைப் பழத்தை எடுத்தான். மதுரனின் கண்களிரண்டும் வத்தாகைப்பழம்  போல் சிவந்தன. தானும் வாட்டப்பாவும் உயிர்போகும் தறுவாயில் கிடந்தபோது ஏன் இந்தப் பழங்களைத் தரவில்லை என்று கேட்ட போது எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம் எண்டு வச்சிருந்தனான் என்று பராஜ் முகத்தில் பால்வடியச் சொன்னான், வாட்டப்பாவின் கண்களிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. பிறகு அருகிலிருந்த பழக்கடையொன்றில் ஜூஸ் குடித்தோம். எல்லோருக்கும் உயிர் வந்து திரும்பிப்பார்த்தபோது ஆனையிறவு வெளியும் பன்னிரண்டு மணி வெய்யிலும் எங்களைப் பார்த்து சிரித்தது. நாக்குத்தள்ள உழக்கிக்கொண்டு போனோம். இடையில் ஓரிடத்தில் மதுரன் இருந்து விட்டான். இதற்கு மேல் நான் வரவில்லை. சன்சிகனை ஓடி வரச் சொல்லுங்கள் என்றான். நாங்கள் நீ வராமல் செல்லப்போவதில்லை என்று ஆறுபேரும் கெஞ்சியதை அடுத்து வேறு வழியில்லாமல் உழக்கிக்கொண்டு வந்தான். இடையில் ஒரு பஸ் நிலையத்தில் பத்து நிமிடம் படுத்திருந்தோம். பிறகு பரந்தன் சந்திக்கு மிதித்துக்கொண்டு போனோம். காற்று எதிராய் அடித்துக்கொண்டிருக்க வெயில் தலைமேல் பொழிந்துகொண்டிருக்க.

இதனிடையில் மீட்பு படையினரின் நடவடிக்கைகளால் நொந்தபடி போய்க்கொண்டிருந்தோம். எங்களை விட சில நூறு மீட்டர்கள் முன்னுக்குச் சென்று ஏதாவது மரத்தடி நிழலிலிருக்கும் வாங்கில் படுத்திருந்தபடி கைகாட்டி நேர்சரிப் பிள்ளைகள் போல் எங்களை வெறுப்பேற்றுவார்கள். நாங்களும் பதிலுக்கு கையசைத்துக் கொண்டு செல்வோம். ஆனாலும் மீட்பு படையணி மட்டுமில்லையென்றால், ஆனையிறவு உப்பு வயலுக்குள் மதுரனும் வாட்டப்பாவும் டெட் பாடி தான். கடைசி வரை சென்று நாம் பயணத்தை முடித்தது அந்த இரண்டு ஜீவன்களாலும் தான். ரெட் சலூட் சகாக்களே.   பின், பரந்தன் சந்தியில் ஒரு மரத்தின் கீழே மதுரன் விழுந்து படுத்து விட்டான், மற்றவர்களும் குந்தினார்கள். ஊரே வேடிக்கை பார்த்தது. கவலையில்லை. 

அங்கு சாப்பிட்டு விட்டு கிளிநொச்சி போய், அங்கிருந்து உடைந்த தண்ணீர் டாங்கிக்கு அருகே செல்லும் வட்டக்கச்சி பாதையால் அப்படியே இராமநாதபுரம் புளியம்பொக்கணை போய் விசுவமடு செல்வது திட்டம். தண்ணீர் டாங் வரை நானும் மதுரனும் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னால் மீட்பு படையணி காத்திருந்தது. பின்னாலயே மற்றவர்களும் வர வெளிக்கிட்டோம். வட்டக்கச்சி தொடங்கவே ஒரு பிரமாண்டக்  குளம் விரிந்து கிடந்தது. தாமரையிலைகளும் கொக்குகளும் பருந்துகளும் பறந்து அலைய அந்த வீதியால் செல்வது அற்புதமாயிருந்தது. வளைந்து வளைந்து போகும் பாதைகளும் அதனருகே நீர் வராமல் காத்திருக்கும்  வாய்க்கால்களும், அதன் கரைகளில் முளைத்து வளர்ந்து காற்றெறியும் மரங்களும் புதுவகை உற்சாகத்தை ஏற்படுத்தியது. எல்லோரும் படுவேகமாக சைக்கிள் ஓடி வட்டக்கச்சி வந்து சேர்ந்தோம். இடையில் இயற்கை தனது மகத்துவங்களை விசிறியெறிந்திருந்தது.  

சூரியன் சாய்ந்து விழுந்துகொண்டிருக்கையில் ஒரு கடையின் முன்னாலிருந்த மரத்தினடியிருந்து பீடி புகைத்துக்கொண்டிருந்தோம் சிலர். அந்த நேரத்தில் தான் வாட்டப்பாவைக் காணவில்லை என்ற செய்தி கிடைத்தது. ஓய்வெடுப்பதற்கு மரத்தினடியில் சைக்கிளை சாத்தி விட்டு படுத்திருந்த வாட்டப்பாவின் சைக்கிள் வழுக்கி விழுந்து செயின் இறுக்கி விட்டது. பின்னர் தனுஷ் வாட்டப்பாவைக் காப்பாற்றச் சென்றான். நேரமாகுதென்று தெரிய சன்சிகன் என்னை ஏற்றிக்கொள்ள மதுரனும் வந்தான். புளியம்பொக்கணை சந்தி வரைக்கும் காற்றைப் போல் நகர்ந்தோம்.

இரண்டு பக்கமும் மரங்கள் பாதை விளிம்புகளாய் முளைத்திருந்தது. விதைக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் அந்த சாம்பல் மண்ணிற நிலத்தினை ஒரு தாளைப்போல நேர்த்தியாக வைத்திருந்தார்கள். மாடுகள் அலைந்தபடியிருக்க  சூரியன் மரங்களுக்குப் பின்னே இறங்கிக் கொண்டிருந்தான். எங்கோ காய்ந்த செடிகளைப் போட்டு கொழுத்தியிருந்தார்கள். புகை படர்ந்தது. மூன்று சைக்கிள் ஒரே நேரத்தில் போகுமளவுக்கிருந்த அந்த வீதியின் தார், இரண்டாயிரமாண்டுகளின் யாழ்ப்பாண வீதிகளை ஞாபகப்படுத்தியது. சரிந்து மெல்லச் செல்லும் அதன் நடுவே போய்க்கொண்டிருப்பது வாய்க்காலில் மிதப்பதுபோலிருந்து. இடையில் ஒரு அம்மாவிடம் தண்ணீர் கேட்டோம். கையால் அடிக்கும் அந்த பம்பில் அவர் நீர் நிரப்பிக்கொண்டிருந்தார். அருகிலொரு சிறுமி எங்களை வேற்றுக்கிரகவாசிகளைப் போல் பார்த்தாள். தாங்கோம்மா இவன் அடிப்பான் என்று சொல்ல, சீ, தம்பியவை களைச்சுப் போயிருக்கிறியள் எண்டு தானே தண்ணீர் அடித்தார். நான் ஏந்திக்கொண்டு வந்து கொடுக்க தண்ணீர் குடித்த ஆசுவாசத்தில் எங்கள் பயணத்தின் போக்கை சன்சிகன் சொன்னான். அவா கையை நாடிக்குக் குடுத்து, சீ ஆங் ... என்று எங்களை பார்த்துச் சிரித்தார். உழைப்பவர்களின் சிரிப்பு அது.           

இடையில் இன்னுமொரிடத்தில் பனங்காய் பொறுக்கியபடி இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் நின்றார்கள், அந்த சிறுமிக்கு கையசைத்தேன். அதிலிருந்த ஒரு பெண் எங்களைப் பார்த்ததும்  என்ன நினைத்தாளோ, சும்மா போனா பனங்காய் பொறுக்கித் தாங்கோவன் என்று  நக்கலடித்தாள். அது சரி நாங்கள் சும்மா தான் போகிறோம் என்பதை அவள் எப்படிக் கண்டுபிடித்தாள். சத்தியமாக நாங்கள் எதிலும் எழுதி ஒட்டியிருக்கவில்லை. அநேகமாக மூன்று பேரின் நெற்றியிலும் இருந்திருக்கும், அவளுக்கு அதை வாசிக்கத் தெரிந்திருக்கும். 

பின், புளியம்பொக்கணைச் சந்திக்கு வந்து சேர்ந்தோம். பத்து பிளேன்டீ  குடித்தோம். ஒரு பிளேன் டீ பத்து ரூபாய் தான். அமிர்தமாயிருந்தது. அங்கிருந்து விசுவமடு போனதெல்லாம் சின்னக்கதை. ஆனால் வரவே மாட்டேன் என்று மண்டியிட்டுக் கதறிய மதுரன் தான் விசுவமடுவுக்கு முதல் வந்து சேர்ந்தான். ஆனாலும்  சைக்கிளை கொஞ்சம் ஸ்லொவ் பண்ணி  இருவரும் கைகளை பிடித்து உயர்த்தி விசுவமடு என்ற பெயர்ப்பலகையைக் கடந்தோம். வழக்கம் போல ஊரே வேடிக்கை பார்த்தது. நாங்கள் உல்லாசமாகச்  சிரித்தோம். 

விசுவமடுச் சந்தியிலிருந்து வலப்பக்கம் திரும்பும் ஒரு பாதையால் போனால் குமணனின் நண்பர் வீட்டுக்கு செல்லலாம். சென்ற போது அங்கு விஜயதர்சன்  என்ற குமணனின் நண்பர் கடைசி வரை  மாறவே மாறாமலிருந்த  அந்த சிரிப்புடன்   எங்களை வரவேற்றார். எல்லோரும் குளித்துவிட்டு வந்து ஒருவருக்கொருவர் சிறிய மசாஜ்களை செய்தோம்.  பாட்டு, கதை , நாட்டுக்கோழிக்குழம்புடன் ஒரு சாப்பாடு, நித்திரை.

நள்ளிரவில் திடீர் திடீரென்று எழும்பிப் பார்த்தால் பேய்ப்படங்களில் வருவது போல் மதுரன் அங்கங்கே தெரிந்தான். முதல் தடவை கண்திறந்த போது சுவற்றில் ஒரு உருவம் அமர்ந்திருந்தது, அது மதுரனே தான். பிறகு கட்டிலின் காலடியில் இருந்தான். கடைசியாக கண்விழித்த போது உடம்பு உழட்டுது என்றான். சரியென்று எனது போனைக் கொடுத்து யூ டியூப் பார் என்று விட்டேன். கொஞ்சம் கழித்து வெளிக்கிடடி விசுவமடுக்கெண்டா என்ன மச்சான் என்றான். சொன்னேன். பிறகு கடும் நித்திரை. 

விடிய வெள்ளண எழும்பி கதைத்துக்கொண்டிருந்தோம், ஒன்பதுமணியளவில் அதே சிரிப்புடன் விஜயதர்சன்  வந்து சேர்ந்தார் வீட்ட போய் சாப்பிடலாம் என்றார். 

விசுவமடுவில் உள் வீதியொன்றை இப்பொழுது தான் பார்க்கிறேன், என்னவொரு அளவுக்கணக்கிலாத அற்புதமது. கரையில் பச்சையாய் நீரோடும்  வாய்க்கால். பெருத்து விரிந்த தேக்கிலைகளும் அதன் பூக்களும், தாழை, கமுகு, தென்னை, வாழை, பெரிய புற்கள், வாய்க்காலை கடந்துள்ள வீடுகளுக்கு வீதியிருந்து ஒரு மரப்பாலம். தனது நாஸ்டொல்ஜிக் மெமரியிலிருந்த விசுவமடுவை கிளறி, இளமையில் பார்த்த மதுரன் உணர்ச்சி பொங்க, விசுவமடு வன்னியின் ஆலப்புழா டா என்றான். சிறிய வயதில் அவனிருந்த வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளியொரு  குளமிருந்திருக்கிறது. அதனருகே ஒரு மண் மேடு. அதன் மேலே ஒரேயொரு மரம். அதன் நுனிகளெங்கும் தூக்கணாங் குருவிக்கூடுகள். நோஸ்டால்ஜிக் தன்மைக்கு ஒரு ஞாபகத்துண்டு தான் எப்பொழுதும் இருக்கும். மதுரனுக்கொரு தூக்கணாங் குருவிகளின் மரம். எத்தனை  வீடுகள் , மண்பாதை... என்னவொரு நிலமும் வாழ்க்கையும். விஜயதர்சன்  வீட்டுக்குச் சென்றோம், டீ போட்டுத் தந்தார்கள், பிறகு இடிச்ச சாம்பலும் பருப்பும் பொரிச்ச நெத்தலிக்கருவாடும் அரிசிமாப் புட்டும் காலையுணவு. ஏற்கனவே வாங்கிய டீயில் பாதி மிச்சம் வைத்திருந்தேன். சாப்பிட்டு முடிய அந்த உறைச்ச வாயில இளம் சூட்டு டீ இறங்கியதை என்னவென்று சொல்ல. அற்புதம்.  சுற்றியும் வாழைத் தோட்டமும்... மரங்களும். வாட்டப்பா தான் விமானத்தையும் கப்பலையும் தவிர மிச்ச  எல்லாவற்றிலும் எப்படி விபத்துக்குள்ளானேன் என்பதை சிரிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தார், அவருக்கு இருப்பது ஒரு குழந்தை முகமும் குழந்தைச் சிரிப்பும். அதைத் தான் நாங்கள் பயணம் முடியும் வரை பார்த்தோம். விஜயதர்சனிடமும் ஒரு சிரிப்பிருந்தது. அளவாய் மலர்ந்த சிவப்புத்தாமரைச் சிரிப்பு. மாறாத அழகுள்ளது. விஜயதர்சனின்  அம்மாவிடம் சொல்லிவிட்டு திரும்பினோம். அவரும் சிரித்தார். இன்னும் ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து சோர்ந்து வரும் போதும் நமக்கு கிடைக்கவேண்டிய வேண்டிய சிரிப்புகள் அவை. மனிதரின் ஆழத்திலிருந்து மலர்ந்து வரும்  தாமரைகள்.  

கிரிஷாந்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக