புதன், 5 ஏப்ரல், 2017

பெண் நடந்த பாதை
என்னுடைய இளம் வயது முதல் கோயில்களின் உள்ளே செல்வது மிகவும் குறைவு. அதன் அழகியல் சார்ந்த அம்சங்களை ஒருதடவையிலேயே கிரகித்துக் கொள்வது தான் வழமை. அதற்குப் பின் அங்கு செல்வதற்கோ பார்ப்பதற்கோ எதுவுமில்லை. வெகு ஆழமாக எனக்கும் கோயில்களுக்குமிடையில் இடைவெளியொன்று எப்பொழுதுமே உண்டு. ஆனால் திருவிழாக்களைப் பொறுத்த வரையில் சிறு வயது முதலே அதன் நறுமணம் வீசும் தெருக்களின் மீதும் கண்ணொளிரும் விளக்குகள் மீதும் பல்வேறு அடையாளங்களுடன் விரியும் காட்சிகள் மீதும் ஆயிரக்கணக்கான மனித முகங்கள் மீதும் ஈடுபாடுண்டு. மனித முகங்களும் அதன் உணர்ச்சிப் பெருக்குகளும் சடங்குகளும் தான் திருவிழாவை கொண்டாட்டமாக்குகின்றன. 

அதிலும் குறிப்பாக நகரத்தை அண்டிய கோயில்களும் அவை இப்பொழுது மாறியிருக்கும் விதம் தொடர்பிலும் மீண்டுமொரு அந்நியத்தன்மையையே உணர்கிறேன். உதாரணமாக ஒவ்வொரு முறையையும் பிரிந்தாவை அழைத்துச் செல்லவே நல்லூருக்கு ஒரே ஒரு நாள் போவேன். அதற்கு மேல் அந்தக் கோயிலில் உருவாகியிருக்கும் கோர்ப்பரேட் கலப்பென்பது அதன் மீதான என் இடைவெளியை அதிகப்படுத்தி விட்டது.


இரண்டு நாட்களுக்கு முன் " பொறிக்கடவை கண்ணகி அம்மன் " கோயில் என்ற குஞ்சுப் பரந்தனில் உள்ள கோயிலொன்றுக்குச் செல்ல பிரபா அண்ணை அழைத்திருந்தார். நானும் அவரும் தனுசும் இரவு எட்டுமணியளவில் திருவிழாவுக்கு வெளிக்கிட்டோம். ஒன்பது மணி தாண்டி கோயிலடிக்குச் சென்றோம். கண்ணகி அம்மன் கோயிலென்றதும் ஏதோவொரு சின்னக் கொட்டிலில் இருக்கும் முன்னால் தீ மிதிப்பார்கள் என்று நம்பியபடி போன நான் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு நீண்டிருந்த விளக்கு அலங்கார வீதியில் நுழையும் போதே அதன் பிரமாண்டத்தை கற்பனை செய்யத் தொடங்கினேன். அது கோயிலை நெருங்க நெருங்க இன்னமும் அதிகரித்துச் சென்றது. பெரும் இருள். உழுத வயல் காணிகளெங்கும் டியூப் லைட் வெளிச்சம். ஆயிரக்கணக்கில் மனிதர்கள். 


பெரும்பாலானவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். "ஏன் போகிறார்கள்? திருவிழா முடிஞ்சுதா?" என்று கேட்டேன். " இப்ப தான் சனம் சாப்பிடப் போகுது. இனித் தான் திருவிழாவே. பார், சனங்கள் பாயோட வந்திருக்குதுகள். இனிக் குடும்பம் குடும்பமா இங்க வந்து படுக்குங்கள்" என்றார் பிரபா அண்ணை. 

வாசலில் கொடுத்துக்கொண்டிருந்த தண்ணீர்ப்பந்தலில் ட்ரிங்க்ஸ் வாங்கிக் குடித்தோம். கோயில் மானேஜர் பிரபா அண்ணைக்குத் தெரிந்தவர் என்பதால் அவரின் வீட்டில் சென்று  ஹெல்மட்டையும் பையையும் வைத்து விட்டு சுற்றத் தொடங்கினோம். 

"தொண்ணூறுகளில் திருவிழா இப்படித் தானடா இருக்கும்" என்று பிரபா அண்ணை சொன்னார். பெருமளவில் தொலைபேசிகளைத் தூக்கி வைத்து படமெடுப்பதும் பெரிய பெரிய காமராக்களாலும் புகைப்படம் எடுக்கப்படமால் அந்த இடம்  கொஞ்சம் பழமையானதைப் போலவே இருந்தது.தூக்குக் காவடிகள், தீச் சட்டிகள். பறவைக் காவடிகள், பால் காவடிகள் என்பன வீதியெங்கும் நகர்ந்து கொண்டிருந்தன. படையலுக்கு நிலத்தைக் கிண்டி அதன் உள் நெருப்பை மூட்டி அதன் மேல் பெரிய கிடாரங்களை வைத்து சோறு வைத்துக் கொண்டிருந்தார்கள் ஆண்கள். இன்னொரு பக்கம் பாயில் படுத்திருந்த குடும்பங்கள். அடுப்புகளுக்கு பக்கத்தில் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் பெரிய பூசணிக்காய்களை வெட்டி அரிந்தும் பயிற்றங்காய் கத்தரிக்காய் போன்றவற்றை தயார் செய்து கொண்டுமிருந்தார்கள். 

ஒரு சுற்று சுற்றி விட்டு வர வெளிக்கிட்டோம். தனுசும் நானும் தொலைபேசிக் கமராவில் புகைப்படங்கள் எடுக்க நினைத்தோம். சப்பர வடிவில் செய்யப்பட்ட ஒரு அலங்கார வடிவம் வைக்கப்பட்டிருந்தது. அதில் பெருந்தெய்வங்கள் பறந்து கொண்டிருந்தன. பிறகு கடைவீதியில் இறங்கிப் போனோம். அதற்கு முன் சிறுவர் இல்லங்களிலிருந்து வந்த சில தொகை சிறுவர் குழுக்கள் ஒரே வகை உடையுடன் வந்திருந்தனர். குழந்தைகள் தான் திருவிழாவின் வண்ணங்கள். அவர்கள் கொண்டிருக்கும் 
ஆச்சரியம் நிறைந்த கண்கள் தான் எத்தனை புதிரானவை. குழந்தைகள் இந்த உலகத்தை தொட்டு முகர்ந்து பார்த்து கேட்டு புரிந்து கொள்ளும் காலம் அது. தேன் குழலையும் மஞ்சள் பூந்திரியையும் ஐஸ்க்ரீமையும் வாசனை செய்து விரிந்த கண்களுடன் தொட்டு நாக்கில் வைக்கும் போது குழந்தையின் மனசு வாய்க்க வேண்டும் போலிருக்கிறது.கடை வீதியெங்கும் வழமையான எது எடுத்தாலும் நூற்றி ஐம்பது ரூபா ரக கடைகள் தான். அரிசியில் பெயர் எழுதி காதலிக்கு குடுத்தால் இனிவரும் திருவிழாக்களுக்கும் உன்னை சந்தோசமாக அனுப்பி வைப்பாள் என்று பிரபா அண்ணை அனுபவ ஆலோசனை ஒன்று செய்தார். வழியில் இரண்டு தாய் மார் வேறு வேறு இடங்களில் தோளில் தூங்கும் குழந்தையுடன் யாசித்துக் கொண்டிருந்தார்கள். எங்கும் விளையாட்டுத் துப்பாக்கிகள் தான் நல்ல விற்பனை. இதை தடை செய்ய வேண்டுமென்று நானும் தனுசும் கதைத்துக் கொண்டோம். குழந்தைகள் எவ்வளவு சுலபமாக கொலை செய்வது போல் பாவனை செய்து துப்பாக்கியுடன் விளையாடுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வன்முறைக் குணத்தை இப்படித் தான் வடிகாலில் இறக்கி விடுகிறார்கள் என்றார் பிரபா அண்ணை.

ஐஸ்க்ரீம் குடித்தோம். பின் ஏலம் கூறும் இடத்திற்குச் சென்றோம். வழியில் தீமிதிப்பிற்கான பெரும் மரத்துண்டுகள் எரிந்துகொண்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் நீண்ட பனையோலைப் பாய்களில் சோறு கொட்டப்பட்டிருந்தது. முன்னால்  கண்ணகியம்மன் அலங்காரத்துடனிருந்தாள். 
விளக்கொன்று காற்றுக்கு சுடரை அசைத்தபடி ஒளிர்ந்து   கொண்டிருந்தது.ஏலம் கூறும் இடத்திற்குச் சென்றோம். சேவல்கள் ஏலம் கூறப்பட்டுக்கொண்டிருந்தது.   ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஆயிரத்து ஐநூறு வரை ஏலம் சென்று சேவல்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. பக்கத்தில் ஆடொன்று ஏலத்திற்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் விளையாட்டுத்தனத்துடனும் ஆர்வத்துடனும் ஏலத்தில் பங்கு பற்றினர். ஏலம் நடந்து கொண்டிருந்த இடம் நிர்வாகசபை கூடம், அதற்குள் மஞ்சள் மஞ்சளாய் வாழைக்குலைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். ஒரு பக்கம் நிதி பங்களிப்பு வழங்கக் கூடியவர்கள் செலுத்தியபடியிருந்தார்கள். அப்பா அம்மாவைத் தவற விட்ட குழந்தைகள் அழுத்த படி மைக்கில் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஒரு தொகுதி காவடிகள் பறையுடன் நகர்ந்து கொண்டிருந்தன. பறையிசை உருவேற்ற கால்கள் துள்ளியபடி சிறுவர்கள் காவடியாடினார்கள். 

பறையும் காவடியும் 


பெரிய லவுட் ஸ்பீக்கர்கள் பூட்டிய பறவைக் காவடிகள் பாடிக்கொண்டு வந்தன. அலைந்து அலைந்து களைத்து ஒரு இடத்தில் இருந்தோம். திருவிழாவின் இன்னொரு முக்கியமான பகுதி, அதிலும் குறிப்பாக இரவுத் திருவிழாவில் பெண்களைப் பார்த்தல் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம். பெண்கள் அழகிய உடைகளுடன் பொங்கும் மேக் அப்புடன் வலம் வந்து கொண்டிருந்தார்கள், இளைஞர்கள் இடம் வந்து கொண்டிருந்தார்கள்.

பின்னிரவு தொடங்கி இரண்டு மணியிருக்கும் வெளிக்கிட ஆயத்தமானோம். சிறு தாமரைக் குளம் ஒன்றிருந்தது, அதைக் கடந்து நகர இருள் தொடங்கியது, நூறுநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் நடந்த பாதையின் சுவடுகளில்  இன்னும்வாழ்க்கை  ததும்பிக் கொண்டிருக்கிறது என்று தோன்றியபோது இழுத்த மூச்சுடன் சேர்த்து எத்தனை சுவாசங்கள், கனவுகள், வாழ்க்கைகள் கடந்த நிலம் இது என்று மனசு எண்ணியது. பெருவியப்பின் கீழ் உழலும் வாழ்க்கை ஒரு புன்னகையென படர்ந்தது உதட்டில்.  

கிரிஷாந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக